சீர்திருத்தக் காந்தி
சமரஸமே காந்தியாரின் பாலிஸி. காந்தியாரை சர்வாதிகாரியாகக் கொண்டு காங்கிரஸ் பெருமையடித்துக் கொள்கிறது. காந்தியாரின் தலைமையில் காங்கிரஸ் விவசாயிக்கும் ஜமீன்தாருக்கும், தொழிலாளிக்கும், முதலாளிக்கும், ஒடுக்கப்பட்டவனுக்கும், உயர்ஜாதிக்காரனுக்கும் ஒரே சமயத்தில் ஒத்தாசை செய்ய முயல்கிறது. தற்கால பொருளாதார, சமூக ஸ்தாபனங்களை மாற்றியமைக்காது விவசாயிக்கும், தொழிலாளிக்கும் ஒடுக்கப்பட்டவனுக்கும் நீதி செலுத்த முடியுமென்று காந்தியார் கனவு காண்கிறார். ஏன்? அவர் சீர்திருத்தவாதி; சமதர்மியல்ல.
காந்தியாரின் சீர்திருத்தம் பலிக்காது. அவரைப் போல் முயன்ற அநேகர் முடிவில் தோல்வியடைந்ததாகச் சரித்திரம் கூறுகிறது. எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக நடப்பது உலகத்தில் முடியாத காரியம். காந்தியார் முடியாத காரியத்தை முடிக்க முயன்று காலத்தை வியர்த்தமாக்குகிறார். “எலியையும் பூனையையும்’ “ஆட்டுக் குட்டியையும் ஓநாயையும், “தவளையையும் பாம்பையும்’ ஒரே பொழுதில் ஆதரிக்க முடியாது. முதலாளி, ஜமீன்தார், உயர் ஜாதிக்காரர்களைப் பூரணமாய் ஆமோதிக்கவும் காந்தியாருக்கு முடியவில்லை. அவர்களை எதிர்த்து உழைப்பாளிகளோடு சேர்ந்து கொள்ளவும் காந்தியாருக்குத் துணிச்சல் இல்லை. முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் ஊஞ்சலாடுகிறார். வாலிபர்களே! சீர்திருத்தக் காந்தியின் மாய வலையிலிருந்து வெளிவந்து சமதர்மத் தொண்டாற்றுங்கள்.
புரட்சி கட்டுரை 22.04.1934