காந்தியின்  புதிய  திட்டம்

 

மக்களைக்  காட்டுமிராண்டி  வாழ்க்கைக்குத்   திருப்புதல்

தோழர்  காந்தி  காங்கிரசை விட்டு  விலகியது  பொது  ஜனங்களுக்கும்,  தேசத்துக்கும்  பெரியதொரு  லாபகரமான  காரியமானாலும், வேறு  வழியில்  அவர்  செய்யப்  புகுந்திருக்கும்  காரியம்  மனித  சமூகத்துக்கே  மிகவும்  பிற்போக்கான  காரியமே  ஆகும்.

எப்படி  எனில்  தனது  கொள்கையில்  காங்கிரசில்  இருப்பவர்களுக்கு  நம்பிக்கையில்லை  என்பது  ஒரு  புறமிருக்க,  தான்  (காந்தியார்)  இனி  செய்யப்போகும்  காரியங்களை  அவர்கள்  தடை செய்யக்கூடும்  என்கின்ற  எண்ணத்தின் மீதே  விலகினாரானாலும்  இனி  அவர்  விலகிச் செய்யப் போகும்  காரியம்  என்பது பெயர் மாத்திரத்தில்  காதுக்கு  இனிமையானதாக  இருக்கின்றதே  ஒழிய,  காரியத்தில்  முழு  மோசமானதென்றே  சொல்ல வேண்டி இருக்கிறது.

அதாவது,  கிராம  புனருத்தாரணம்  என்றும்,  கிராம  கைத்தொழில்  சங்கமென்றும் சொல்லிக் கொண்டு  பணம்  வசூல்  செய்ய ஆரம்பித்து  விட்டார்.  டில்லியில் ஏதோ  ஒரு கோடீஸ்வரர்  20  லட்சம்  ரூபாய்  கொடுத்ததாக  பத்திரிகைகளில் சேதி  வெளியாய்  இருக்கின்றது. ஆனால்  காந்தியார்  அதை  மறுக்கிறார்  என்றாலும்.  ஏதோ  சில  ஆயிரக்கணக்கில்  தான்  வசூலாயிருக்கிறதென்றும்,  பின்னால்  வசூலாகுமென்ற  நம்பிக்கை  இருக்கிறதென்றும்,  தொண்டர்கள் தான் அதிகம்  வேண்டுமென்றும்,  தொண்டர்கள்  சேர்ந்தால்  பணம்  தாராளமாய் கிடைக்குமென்றும்  சொல்லுகிறார்.

இந்தச்  சேதியைப்  பார்த்த  சோம்பேரிக்  கூட்டத்தாருக்கு  நாக்கில்  தண்ணீர்  சொட்ட  ஆரம்பித்துவிட்டது.  வேலை  இல்லாமல்  திண்டாடி  ஒரு  வேளைச்  சோற்றுக்கு  எதையும்  விற்கும்  மனோ  தைரியமுடைய  “”வீரர்”களுக்கு  அந்தப்படி செய்ய  தைரியமும்  உற்சாகமும்  ஏற்பட்டுவிட்டது.

எலக்ஷன்  சமயத்தில்  இப்படி  ஒரு  சேதியைப்  பரப்பிவிட்டால்  வயிற்றுச்  சோற்றுத்  தொண்டர்கள் ஏராளமாய் வந்து  சொன்னபடி கேட்பார்கள்  என்கின்ற  எண்ணத்தின்  மீதே  “”20  லக்ஷ  ரூபாய்  வசூலாகி  விட்டது.  அதற்கு  தொண்டர்கள் வேண்டும்”  என்று  ஒரு  சேதியும்  “”ரூபாய் வேண்டிய  அளவு  கிடைத்துவிடும்.  ஆட்கள்  தான் வேண்டும்”  என்று  ஒரு  சேதியும்  கட்டி  விடப்பட்டுவிட்டதால்  தேர்தலுக்கு  தொண்டர்கள்  ஏராளமாய்  கிடைத்து  விட்டார்கள்.  என்றாலும் இதனால் சாதித்துக் கொள்ளக் கூடியது  இன்னது  என்பது நமக்கு  விளங்கவில்லை.

இந்தத்  தந்திரங்களால்  தேர்தல்  வெற்றி தோல்வி  ஒரு  புறமிருந்தாலும்  பொது  ஜனங்களுக்குள்  இவ்வித  தந்திரங்களையும்  சூட்சிகளையும்  வெளியாக்க  நல்லதொரு  சமயமும்,  தேவையும்  அதற்கான  சவுகரியமும்,  சரக்கும்  ஏராளமாய்  கிடைத்தது  என்கின்ற  அளவில்  நாம்  சந்தோஷப்  படாமல் இருக்க  முடியவில்லை.

அரசியல்  கக்ஷியானாலும்,  வகுப்புக்  கக்ஷியானாலும்,  பெயரளவில்  வித்தியாசமே  ஒழிய  கொள்கையளவில்  வித்தியாசமில்லை  என்பதோடு  தேசீயக்  கக்ஷியானாலும்  சரி,  தேசத்துரோகக்  கக்ஷியானாலும்  சரி,  அல்லது  சத்தியம்  நீதி இவைகளை அடிப்படையாகக்  கொண்ட  கட்சியானாலும்  அவை  இல்லாத  கட்சியானாலும்  சரி,  எல்லாம்  பெயர்கள் மாத்திரம்  வித்தியாசமே  ஒழிய  கொள்கையில் வித்தியாசமே இல்லை  என்றும்  பல  தடவை  சொல்லி  வந்ததை  இந்தத்  தந்திரங்களும்  சூட்சிகளும்  உறுதிப்படுத்துகின்றன  என்றுதான்  சொல்ல வேண்டும்.

மதத்தின்  மூலமாகவும்,  ஜாதிகள்  மூலமாகவும்,  உத்தியோகத்தின்  மூலமாகவும்  பார்ப்பனர்களுக்கு  இந்திய  நாட்டில்  இருந்த  செல்வாக்கானது  ஜஸ்டிஸ்  கட்சி  சுயமரியாதைக்  கட்சி  என்பவை  ஏற்பட்ட  காலம் முதல்  கொண்டு  சிறிது  சிறிதாய்  குறைந்து  வந்ததுடன்  பார்ப்பனர்கள்  என்றாலே  அவர்கள்மீது  ஒரு  வித  அசூயை  தோன்றும்படியான அளவுக்கு  அவர்களது  விஷயம்  வெளியாகிவிட்டதனால்,  உடனே  அவர்கள்  தேசியம்,  தேசபக்தி  என்கின்ற  ஒரு  புது  மதத்தைச்  சிருஷ்டித்து  அதற்கு  காந்தி  என்கின்ற  ஒரு மனிதரைத் தெய்வத்தன்மை  உடையவராக  ஏன்?  தெய்வ  அவதாரமாகவே  ஆக்கி  அவருக்குப்  பூஜை  புனஸ்காரம்  நைவேத்தியம்  உற்சவம்  பஜனை  செய்வதன்  மூலமாகவே  பஜனை  செய்து  பிழைக்க  முடியுமான  நிலைமைக்கு  வந்துவிட  வேண்டியவர்களாகி  விட்டார்கள்.

இன்று  இந்தியாவில்  குறிப்பாக  தென்னாட்டில்  சிறப்பாகத்  தமிழ்நாட்டில்  காந்தி,  காங்கிரஸ்  என்று  சொல்லாமல்  பார்ப்பனர்களால்  பிழைக்க முடியவில்லை  என்பதோடு  பார்ப்பனர்கள் போல்  நோகாமல்  பாடுபடாமல்  வயிறு  வளர்க்கலாம்  எனக் கருதிப்  படித்துவிட்டுத்  திண்டாடும்  மற்ற  ஆட்களுடைய  நிலைமையும்  அது போலவே  வந்து சேர்ந்துவிட்டது.

இந்தக்  கூட்டத்தார் இந்த  நாட்டில்  உள்ளவரை  சோம்பேரி  மடமான  காங்கிரசுக்கும்  அதன்  மடாதிபதியான  காந்தியாருக்கும்  பெருமை  இல்லாமல் போக  முடியாது.  காங்கிரசும்  காந்தியாரும் இதுவரை  எப்படி  நடந்து  வந்திருந்த போதிலும்  எவ்வளவு  தவறுதல்  மாறுதல்  புரட்டுகள் தந்திரங்கள்  முதலிய  குணங்கள்  நிறைந்தவர்களாய்  இருந்தாலும்  அவை  வெளியாகவோ  மக்களால்  வெறுக்கப்படவோ  கூடிய  நிலைமை  சுலபத்தில்  ஏற்படுவதென்பது  மிகவும்  கஷ்டமாகவே  இருக்கலாம்.

ஆனாலும்  இன்று  உலகில்  பொதுவாக  தோன்றியிருக்கும்  ஒருவித  புத்துணர்ச்சியானது  சுலபத்தில்  வெளியாக்கி  வெறுக்கப்படச் செய்யச்  செய்யும்  என்பதில்  சந்தேகமில்லை.

சுயராஜ்யத்திற்கு  புதிய  வழி

நிற்க,  காந்தியாரின்  புதிய  கொள்கையாகிய  “கிராம  சீர்த்திருத்தத்தின்  மூலம்  சுயராஜ்யம்  சம்பாதிக்கப் போகிறேன்”  என்னும்  விஷயத்தைப்   பற்றி சிறிது  யோசிப்போம்.  இதைத்தான்  சுயராஜ்யம்  என்று  காந்தியார் இதுவரை  சொல்லி  வந்த  மார்க்கங்களை  விட  மோசமான  மார்க்கமென்று  நாம்  சொன்னோம்.

ஏனென்றால்  கிராம  புனருத்தாரணத்துக்கு  தோழர்  காந்தியார்  4  திட்டங்கள்  சொல்லுகிறார்.  அவற்றில்

ஒன்று:  ஆதரவற்று  அழிந்து போகக் கூடிய  நிலைமையில்  இருக்கும் கைத்தொழில்களை  ஆதரித்துப்  புனருத்தாரணம் செய்வது.

இரண்டு:   அந்த  கைத்தொழில்கள்  மூலம்  செய்யப்பட்ட  சாமான்களை  ஜனங்கள்  வாங்கும்படி  செய்வது  என்பனவாகும்.

இந்த  இரண்டு  காரியங்களினுடையவும்  முடிவு  என்ன  ஆகும்  என்பதை  ஒரு  வார்த்தையில்  சொல்ல வேண்டுமானால்  இந்த  20வது  நூற்றாண்டில்  உள்ள  மக்களைக்  காட்டுமிராண்டிப்  பருவத்துக்கு  அழைத்துச் செல்வது  என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.

ஏழைகள்  ரக்ஷிப்பு  என்கின்ற  பெயரால்  எப்படி  ஒன்றுக்கு  மூன்று  பங்கு  பஞ்சைப்  பாழாக்கி  பெலமற்றதும்,  பார்வையற்றதும்  பிடித்த மில்லாததுமான  துணியை  உண்டாக்கி  அதை  ஒன்றுக்கு  மூன்று  பங்கு  விலை  கொடுத்து  மக்களை  வாங்கும்படிச்  செய்து  நூற்ற  ஆட்களுக்கு  மணிக்கு  ஒரு  காசு  கொடுத்துவிட்டு  பிரசாரத்துக்காக  என்று  பொதுமக்களிடம்  பல  லட்சக்கணக்கில்  வசூலித்த  பணத்தில்  ஆள்  ஒன்றுக்கு  50, 60,  100, 200  என்பது  போன்ற  மாதச்  சம்பளமும்  காங்கிரஸ்  ஆட்களுக்கு  கதர்  இலாக்காவின்  பேரால்  கொடுத்தும்  வருவது  போலவே, இந்த கிராம  புனருத்தாரணத்தில்  சீமை  ஊசிக்குப்  பதிலாக  கையினால் செய்த  ஊசியும்  அதுவும்  காசுக்கு  மூன்று  ஊசி  வாங்குவதற்குப்  பதிலாக  ஏழைகள்  பிழைக்க  என்ற  பிரசாரத்தால்  ஊசி  ஒன்று  காலணா  வீதம்  வாங்கும்படியாகவும்  நேரிடலாம்.

மற்றும்  இது  போலவே  காஸ்  லைட்டுக்குப்  பதிலாக  குத்து  விளக்கும்,  கடிதாசிக்குப்  பதிலாக  ஓலையும்,  பவுண்டன்  பேனாவுக்குப்  பதிலாக  நாணல்  தட்டுப்  பேனாவும்  ஆகியவை  போன்ற  காரியங்களைச் செய்யும்படி  மக்களைத்  தூண்டலாம்.  அதை  வாங்கும்படி  பிரசாரம்  செய்யலாம்.  இதற்கும்  அதாவது  இந்த  இலாக்கா  நிர்வாகத்துக்கும்  ஆயிரக்கணக்கான  மக்களை  50, 60,  100, 200  ரூபாய்  சம்பளங்களில்  பார்ப்பனர்களையும்  அவர்கள்  அடிமைகளையும்  நியமித்து  அவர்களைக் கொண்டு  பார்ப்பனப்  பிரசாரமும்  செய்யலாம்.

இதிலிருந்து  தோழர்  காந்தி  இப்போதுள்ள  மகாத்மா  காந்தி  என்னும்  பட்டத்திற்கு  மேல்  அவதார  புருஷர்  காந்தி  என்கின்ற  பட்டத்தையும்  அடையலாம்.  அறிவில்லாத  ஜனங்களும் ஆலோசனை இல்லாத ஜனங்களும்   காந்தியார்  படத்தை  வீட்டில்  வைத்து  பூஜை  செய்வதோடல்லாமல் கோவில்  கட்டி  கல் விக்கிரகம்  வைத்துப்  பூஜையும்  செய்யலாம்.

ஆனால்  இவற்றால்  எல்லாம்  ஏற்படும்  பயன்,  முன் சொன்னது  போல்  நாகரிக  உலகம்  என்பதில் இருந்து  காட்டுமிராண்டி  உலக  வாழ்க்கைக்குப்  போவது  என்பதைத்  தவிர வேறு  ஒன்றும்  ஏற்படப்  போவதில்லை  என்பது  மாத்திரம்  உறுதி.

இந்த  யோக்கியதையில்  தோழர்  காந்தியார்  கிராமப்  புனருத்தாரண  வேலைக்கு  நிதி  வசூலிக்கச்  சுற்றுப்பிரயாணம்  புறப்படப்  போகிறாரென்றும்,  அதற்காக  அந்தந்த  மாகாணத்தில்  சுற்றுப்  பிரயாணத்  திட்டம்  போடப்படுகிறது  என்றும் சொல்லிக் கொள்ளப்படுகிறது.  இதுவும்  ஒரு  சமயம்  “”இன்று”  ஆதாரமற்ற  வதந்தியாக  இருந்தாலும்  கூடிய  சீக்கிரத்தில்  நடக்கப்  போகின்றது  என்பதில்  நமக்குச் சிறிதும்  சந்தேகமில்லை.  இந்த நிலையில்  உள்ள  தலைவர்களையும்,  கொள்கைகளையும்,  அதைப்பின்பற்றும்  மக்களையும்  வைத்துக் கொண்டு இந்தியாவில்  முற்போக்கும்,  மாறுதலும்,  விடுதலையும்,  சுதந்திரமும்,  கவலையற்ற  தன்மையும்,  இன்பமும்  ஏற்பட  வேண்டுமென்று  ஆசைப்பட்டால் அது  எப்படி  முடியுமென்று  நமக்கு  விளங்கவில்லை.

தோழர்  காந்தியவர்கள்  இந்தக்  கிராமப்புனருத்தாரணத்துக்கு  தற்காலீகமாக  ஒரு  வேலைத்  திட்டம்  ஏற்படுத்தியிருக்கிறார்.  அதாவது

“மில்லில்  நெல்  அரைக்காமல் கையால்  அரிசி  குத்தி  உமி  போக்குவது,

இயந்திரமின்றிக்  கோதுமையை  மாவாக்குவது,

நாட்டுச்  சர்க்கரையை  உபயோகிப்பது  ஆகிய  இந்த  மூன்று  காரியங்கள்  இப்போது  செய்வதற்குத்  தொண்டர்கள்  வேண்டுமென்றும் தெரிவித்து  மறுபடியும்  வார்தாவில் இருந்து  நவம்பர்  8ம்  தேதி  ஒரு  அறிக்கை  வெளியிட்டிருக்கிறார்.

இது  சாத்தியமாகுமா?  அப்படிச்  சாத்தியமானாலும் மக்களுக்குக்  கஷ்டம்  ஒழிவதோ அல்லது  பொருளாதார  நிலைமை  சமரசமடைவதோ  அல்லது  மேம்பாடடைவதோ  ஆகிய  காரியங்கள்  ஏற்படுமா  என்று  கேட்கின்றோம்.

அரிசி  கையினால்  குத்துவது  என்பதைத்  தோழர்  காந்தியார்  ஆரஞ்சிப்  பழம்  ரசமாகப் பிழிந்து  2 கிளாஸ்  சாப்பிடுவது  போலவும்,  நல்ல  வெள்ளாட்டுப்பால்  1  படியை  லீ  படியாகக்  காய்ச்சி  பனங்  கல்கண்டு  போட்டுச்  சாப்பிடுவது  போலவும்,  இரட்டை  மெத்தையில்  துயிலுவது  போலவும்  அவ்வளவு  சுலபமான  காரியம்  என்று  கருதிக்  கொண்டிருக்கிறாரா  என்பது  நமக்கு  விளங்கவில்லை.

நெல்லுக்  குத்துவது  என்றால்  ஒரு  பெண்  காலை  5 மணிக்கு  உலக்கை  எடுத்தால்  பகல்  10  மணி  வரை  இயந்திரம்  குத்துவது  போல் நின்று  உலக்கை  பிடித்து  உகூ., உகூ என்று  குத்தினால்  பட்டணம்  படியில் காலே  அரைக்கால்படி  அல்லது  அரைப்படி  அரிசி  அதுவும்  குறு  நொய்யும்  பதரரிசியும்  கொண்டதாகக்  கிடைக்கும்.  அவ்வளவு   மோசமான  கூலி  கொடுத்தாலும் கூட  யந்திரத்தில்  அரைக்கின்ற  அரிசியுடன்  போட்டி போட்டு  விற்க முடியாது  என்பதோடு  பெருத்த நட்டம்  ஏற்படும்  என்றும்  சொல்லித்தான்  ஆக  வேண்டும்.  இது  ஒரு  புறமிருந்தாலும்  பெண்மக்களிடம்  இப்படிப்பட்ட  வேலை  வாங்குவதும்,  அவர்களை  இந்தப்படி  இம்சிப்பதும்  ஜீவகாருண்ய   வேலையாகுமா  என்று  கேட்கின்றோம்.

நூல்  நூற்கும்  விஷயத்திலேயும்  பெண்களை  மணிக்கு ஒரு   காசு  கூலி  பெறும்  இயந்திரங்களாக  ஆக்குவதோடு  இப்போது  நெல்லுக்குத்துகின்ற  வேலைக்கு  மறுபடியும்  அவர்களை  அனுப்புவது  என்றால்  இது  எவ்வளவு  தூரம்  கைத்தொழில்  அபிவிருத்தி  என்பதை  நாம்  மக்களுக்கு  எடுத்துக்காட்ட  வேண்டியதில்லை.

அன்றியும்  இன்று  ஒவ்வொரு  முக்கிய  கிராமத்திலும்  ஒவ்வொரு   நெல்  அரைக்கும்  மிஷின்  ஏற்பட்டிருப்பதும்,  ஒவ்வொரு  முக்கிய  டவுனிலும்  4,5  மிஷின்கள்  ஏற்பட்டிருப்பதும்  எவரும்  அறியாததல்ல.  இந்தியாவில் வெளிநாடுகளிலிருந்து  கோடிக்கணக்கான மூட்டைகள்  நெல்லாகவோ,  அரிசியாகவோ  வந்து  குவிந்து  இந்திய  விவசாயிகளுக்குக்  கட்டுபடி  இல்லாமல்  வரிகொடுக்க  முடியாமல்  திண்டாடிக்  கொண்டிருக்கும்  போதும்,  நெல்  அழியாமல்  இருக்கும் போதும்  கையில்  குத்த வேண்டும்  என்று  ஆரம்பித்தால்,  கட்டுபடி விஷயம்  மாத்திரமல்லாமல்  நமது  பெண்கள்  இனி  பழைய படி  நெல்  குத்தும்  வேலைக்குப் போகவும்  கையில்  உலக்கை  எடுக்கவும்  சம்மதிப்பார்களா  என்றும்  கேட்கின்றோம்.

பெண்கள்  படிக்க வேண்டும்;  குழந்தைகளைப்  படிப்பிக்க  வேண்டும்;  சுகாதாரமாய்  வாழத்  தெரிந்து  கொள்ள வேண்டும்; அவர்கள்  ஆண்களைப் போலவே  சகல  துறைகளிலும்  முன்னேற்றம்  அடைய  வேண்டும்;  உத்தியோகங்கள்  பார்க்க  வேண்டும்;  புருஷர்களிடம்  தங்களை  சரிசமத்துவமாக  நடத்துதலை   எதிர்பார்க்க வேண்டும்  என்றெல்லாம்  சொல்லிக்   கொண்டிருக்கின்ற  இக்காலத்தில்  மற்ற  நாடுகளில்  பெண்கள்  மோட்டார்  ஓட்டுவது, ஆகாய  விமானம்  ஓட்டுவது,  ரயில்  டிராம்  ஓட்டுவது,  ஜட்ஜி  வேலை  வக்கீல் வேலை  பார்ப்பது  முதலிய  பல  காரியங்களில்  ஆண்களுடன்  போட்டி  போடுவதும்  சில  விஷயங்களில்  ஆண்களுக்கு   மேலாகவும்   சக்தியும்  அறிவும்  உடையவர்களாக இருக்கும்  விஷயமும்  தெரிந்திருந்தும்  இந்தியப்  பெண்களை  நெல்லுக்குத்தவும்  மாவரைக்கவும்  திட்டம் போட்டுக்  கொண்டு  அதிலிருந்து  “”சுயராஜ்யம்  சம்பாதித்துக்  கொடுக்கிறேன்  பணம்  கொடுங்கள்,  தொண்டர்கள்  வாருங்கள்”  என்றால்  இது  அறிவுடைமையான  காரியமா அல்லது  பயித்தியக்கார  ஆஸ்பத்திரிக்குக் கொண்டு  போகத்  தகுதியான  காரியமா  என்று  கேட்கின்றோம்.

இவை  ஒரு  புறமிருக்க  இன்று  நெல்லுக்  குத்துவதும்  மாவு  அரைப்பதும் போன்ற  காரியங்களையெல்லாம்  கையினால்  செய்ய வேண்டும்  என்றும்,  நூல்களையெல்லாம் கையினால்  நூற்க  வேண்டும்  என்றும்  தீர்மானம் செய்து, கையினால்  குத்திய   அரிசியையும்  கையினால்  அரைத்த  மாவையும்  தான்  சாப்பிட   வேண்டும்  என்றும்,  கையினால்  நெய்த  துணியைத் தான்  கட்ட வேண்டும்  என்றும்  உத்தரவு  போட்டு  விடுவோமேயானால் இந்திய மக்களுக்கு  வேண்டிய  அரிசியும்  மாவும்  துணியும்  மாத்திரம் தயார்  செய்ய இந்திய  மக்கள்  முழுவதும்  அவர்கள்  ஆயுள்  காலம்  முழுவதும்  ஈடுபட்டிருக்க வேண்டியதோடு  வெளிநாட்டிலிருந்தும்  மக்கள்  வந்து  நெல்லுக்குத்தி  மாவரைத்து  நூல்  நூற்றுக்  கொடுத்து  விட்டுப் போக வேண்டி  வரும்  என்பதைப்  புள்ளி  விவரங்களோடு  நிரூபிக்கத்  தயாராயிருக்கிறோம்.

பிறகு  நெல்லு,  பஞ்சுக்கான  பருத்தி  விவசாயம்  செய்யவும்,  வீடுவாசல்  கட்டவும்,  நிர்வாகம்  செய்யவுமான  பல  காரியம்  பார்க்க ஆட்களுக்கு  எங்கு  போவது  என்று  தோழர்  காந்தியாரை   வணக்கத்துடன்  கேட்கின்றோம்.

குழந்தை  குட்டி  கிழடு  கிண்டு  ஆகியவர்களை  நீக்கிவிட்டு வேலை  செய்யத்  தகுதியுள்ள   மக்களை  மாத்திரம்  எடுத்துக் கொண்டால்மொத்த  ஜனத்  தொகையில் 3ல்  ஒரு  பாகம்  மக்கள்  கூட வேலை செய்ய  லாயக்குள்ளவர்கள் இருக்கமாட்டார்கள்.  இவர்களில்   “”பாடுபடுவது  பாவம்”  என்று  இருக்கிற  பார்ப்பனர்கள்  அவர்களைப் போல்  காப்பி  அடிக்கும்  “”இந்து  சட்டைக்காரர்”  (வெள்ளையர்  கலப்பால்  பிறந்தவர்களை  வெள்ளைச்  சட்டைக்காரர்கள்  என்பது  போலப்  பார்ப்பனர்களின்  நடையுடை  பாவனைகளைக் கொண்ட  பார்ப்பன  தாசர்கள்)  என்கின்ற  கூட்டத்தாரையும்  நீக்கி  விட்டால்  மீதி இருப்பவர்களிடமிருந்து  செய்யப்படும் கைக்குத்து  அரிசியும்  கை  ராட்டினத்  துணியும்  கிடைக்காமல்  வெகுபேர்   பட்டினியாயும்  நிர்வாணமாயும்தான்   இருக்க நேரிடும்  என்பது  கல்லுப் போன்ற  உறுதியாகும்.

ஆகவே  தோழர்  காந்தியார்,  தான்  ஒருவர்  உயிருடன்  இருக்கிறார்  என்பதை  உலகம்  அறியும்படியாக  ஏதாவது  ஒரு  காரியமும்,  ஒருவித விளம்பரமும்  இருக்க வேண்டும்  என்பதைத் தவிர  மற்றபடி  இந்தத்  திட்டங்களால்  மக்களுக்கு  எவ்வித  நன்மையும்  ஏற்பட்டு  விடப் போவதில்லை.

ஆகவே,  “”தகுதியுள்ளவன்தான்  அடைவான்”  என்கின்ற  ஞான  மொழிக்கு  ஏற்ப  இந்திய  மக்களுக்கு  என்றைய  தினம்  இம்மாதிரி  சூட்சி களையும்,  அறியாமையையும்  அறியும்படியான  பகுத்தறிவு  ஏற்படுகின்றதோ  அன்றுதான்  அவர்கள்  மனிதத் தன்மையை அடைய  முடியும்  என்பதோடு  அதுவரையில்  தகுதி  உள்ளவனுக்கு  அடிமையாய்  இருக்க வேண்டியது  தான்  இயற்கை  விதி  என்பதையும்  தெரிவித்துக் கொள்ளுகிறாம்.

பகுத்தறிவு  தலையங்கம்  11.11.1934

You may also like...