யாருக்கு?  பாதுகாப்பு ?மன்னர்களுக்கா?  பட்டினிகளுக்கா?

 

 

நமது  இந்திய  சட்டசபையான  எங்  பார்லிமெண்டில்  மாமூல்  கூட்டங்கள்  நடக்கும்.  இக்கூட்டகாலங்களில்  பல  தீர்மானங்களைப்  பற்றி  விவாதிக்கப்படும்.  சில  தீர்மானம்  கொண்டு  வரப்பட  அனுமதி கோரப்படும்.  பல  தீர்மானங்கள்  நீண்ட  நேரம்  பேசி  ஓட்  எடுக்க  நேரமில்லை  என்ற  காரணம்  காட்டி  விட்டு  விடப்படுவதுமுண்டு.  இதில்  சில  சமயங்களில்  தப்பித்  தவறி  பொது  மக்களுக்கு  நல்ல  பலனை  விளைவிக்கக்கூடிய  தீர்மானங்களைப்  பற்றியும்  பேசப்படுவதுண்டு.  இவைகளில்  இரண்டொன்று  அதன்  ஆதி  உருவைவிடப்  பலமற்றதாகச்  செய்யப்பட்டு,  பெயருக்கு  நன்மையானதென்றும்  கவனிக்கப்படுகின்றதென்றும்  சொல்லுகிற  நிலைமையிலாவது  நிறைவேற்றி  வைக்கப்படும்.  ஆனால்  இதுவரையில்  மில்  தொழிலுக்குப்  பாதுகாப்பு, “”கமிட்டி  மெம்பர்களுக்குச்  செலவுக்குப்  பணம்”  ஜமீன்தார்கள்  உரிமைகளுக்கு  வேலி,  ராஜாக்களின்  அந்தஸ்துக்குப்  பாதுகாப்பு  என்பது  போன்றவைகளுக்கு  வரும்  தீர்மானங்கள்  நிராகரிக்கப் பட்டதாகவோ,  நீண்ட  காலம்  வீண்  கால  தாமதம்  செய்யப்பட்டதாகவோ  யாரும்  கூற  முடியாது.

இந்த  முறையிலேதான்  இப்பொழுது  நடைபெறும்  கூட்டத்திலும்  முக்கியமான  பல  தீர்மானங்கள்  பிரேரேபணை  செய்ய  வேண்டியவர்கள்  ஆசனத்தில்  இல்லாததால்  ஒத்தி  வைக்கப்பட்டது.  இவ்வாபத்துகளில்  தவறி  ஓர்  தீர்மானம்  நிறைவேற்றப்  பட்டிருக்கிறது.  அது  வேலையில்லாதவர்களுக்குப்  பரிகாரம்  தேடப்படுதல்  என்பதேயாகும்.  இதற்கடுத்தாற்போல்  இந்திய  மன்னர்களுக்குப்  பாதுகாப்பளிக்க  ஓர்  தீர்மானம்  கொண்டு  வரப்பட்டு  நிறைவேற  வேண்டிய  நிலையில்  இருக்கிறது.  இவ்விரண்டு  தீர்மானங்களும்  முறையில்  ஒன்றேயாயினும்,  போக்கிலும்,  லட்சியத்திலும்  மலைக்கும்  மடுவுக்குமுள்ள  வித்தியாச  முடையதாகும்.  இவ்விரு  தீர்மானங்களும்  விவாதத்திற்கு  வந்த  காலத்தில்  மன்னர்  பாதுகாப்பு  மசோதாவைப்பற்றி  விவாதம்  நடந்தபோது  காட்டப்பட்ட  உற்சாகமும்,  ஆர்ப்பாட்டமும்  வேலையற்றவர்களுக்குப்  பாதுகாப்பளிக்க  விவாதம்  நடந்த  காலத்தில்  காட்டப்படவில்லை.  பெயருக்கு  ஓர்  சட்டமென்கிற  முறையிலேயே  வேலையற்றவர்கள்  பாதுகாப்புச்  சட்டம்  நிறைவேற்றப்  பட்டிருக்கிறது.

இந்திய  மன்னர்களுக்குப்  பாதுகாப்பளிக்கப்பட  வேண்டுமென்று  இன்று  பத்து  வருடங்களுக்கு  முன்பு  கூறப்பட்டது.  அதே  காலத்தில்  தான்  இந்நாட்டில்  வேலையில்லாமல்  மடியும்  தொழிலாளிகளுக்குப்  பாதுகாப்பளிக்கப்பட  வேண்டுமென்பதற்கு  ஓர்  கமிட்டியும்  நியமித்து  மாகாண  வாரியாக  இதற்கு  மார்க்கம்  கண்டுபிடிக்குமாறும்  கேட்டுக்  கொள்ளப்பட்டது.

மாகாணச்  சர்க்கார்களோ  மத்திய  சர்க்காரிடம்  பழி  போட்டார்கள்.  கடைசியாக  தீர்மானம் மூலியமாக  வரும்போது  அதன்  பெயருக்கும்  அத்தீர்மானத்தின்  வார்த்தைகளுக்கும்  வெகு  தாரதம்மியம்  உண்டாகிவிட்டது.  ஆனால்  இந்திய  மன்னர்களுக்குப்  பாதுகாப்பு  அல்லது  இந்திய  மன்னர்களின்  அந்தஸ்துக்குப்  பாதுகாப்பு  பரிபூரணமாகக்  காட்டப்பட்டிருக்கிறது.  இந்திய  மன்னர்கள்  எத்தகையவர்கள்  என்பது  பற்றியும்  அவர்களுக்கு  அவர்கள்  அந்தஸ்துக்குப்  பாதுகாப்பு  என்றதின்  பேரால்  இந்திய  சமஸ்தானக்  குடிகள்  இன்னம்  எவ்வளவு  காலத்துக்கு  கொடுமையாக  நடத்தப்படப்  போகிறார்கள்  என்பது  பற்றியும்  பன்முறை  எடுத்துக்  கூறியிருக்கிறோம்.  இப்பாதுகாப்பை  காட்டி  இந்திய  மன்னர்கள்  பரிபூரணமாக  தங்களை  நம்பும்படி  செய்வதற்காகவே  இந்திய  சர்க்கார்  இதைச்  செய்தாலும்  செய்திருக்கலாம்.

சமஷ்டி  அரசியல்  முறையை  காந்தி  ஆதரித்த  போதிலும்  அவர்  சிஷ்யர்கள்  ஆதரித்த  போதிலும்  இந்திய  சமஸ்தானத்தில்  உள்ள  8  கோடி  மக்களும்  அப்படியே  கண்டிக்கிறார்கள்  என்பது  சர்க்காருக்கும்  மன்னர்களுக்கும்  நன்கு  தெரியாததல்ல.  அதைப்  போன்றே  பிரிட்டீஷ்  இந்தியாவில்  உள்ள  பொதுமக்கள்,  ராஜாக்களின்  கூட்டுறவை  கொண்டதாக  உள்ள  சீர்திருத்தத்தை  வெருக்கிறார்கள்  என்றும்,  இங்குள்ள  குட்டிப்பணக்காரர்கள்  ஜமீன்தார்கள்  இவர்களின்  கொடுமையிலிருந்து  தப்பமுடியாது  தவிக்கிறார்கள்  என்றும்,  எந்த  ஸ்தாபனங்களும்  அவர்களாலேயே  பெரிதும்  பணச் செல்வாக்கால்  கைப்பற்றப்படுகிறது  என்றும்  ஓலமிடுகிறார்களென்பதும்  தெரியாததல்ல.  இச்சிறு  பிரபுக்களின்  எதேச்சாதிகாரமே  இப்படி  இருக்கும்போது,  இவர்கள்  அண்ணனான  பெரிய  பணக்காரர்கள்  மகாராஜாக்கள்  இவர்கள்  கொடுமையில்  சிக்க  தாமே  சம்மதிப்பது  மகத்தான  ஆபத்தென்பதை  உணர்ந்திருப்பதும்  சமஷ்டி  முறையை  மறுப்பதும்  சர்க்கார்  உணராததல்ல.

இந்திய  சர்க்கார்,  மன்னர்கள்  தங்களைப்  பரிபூரணமாக  நம்பியிருக்கச்  செய்ய  இச்சட்டம்  அவசியமென்று  கருதி  கொண்டு  வந்திருக்கலாம்.  இத்தீர்மானம்  நிறைவேற்றப்பட்டால்  பிரிட்டீஷ்  இந்திய  பிரஜைகளின்   உரிமைக்கும்  சமஸ்தான  இந்திய  பிரஜைகளின்  உரிமைக்கும், தடை  ஏற்படுமேயாயினும்  ஒரு  முறையில்  இது  நிறைவேற்றப்படுவதால்  கொடுமை  முதிர்ந்து  பொங்கிப்  பெரிதாகுமென்றும்,  அதனால்  பரிகாரம்  கிடைக்கப்  புது  நிலமை  ஏற்படுமென்றும்கூட  சிலர்  நம்பலாம்.  எப்படியாயினும்  இதைப்பற்றி  நமக்குக்  கவலையில்லை.  ஆனால்  இந்திய  சர்க்காரும்  சட்டசபை  மெம்பர்களும்  ஏழைப்பட்டவர்கள்  பாதுகாப்பில்  ஊக்கம்  காட்டாது  போனதைக்  கண்டுதான்  நாம் வருந்த  வேண்டியவர்களாக  இருக்கிறோம்.

“”வேலை  இல்லாத  கஷ்டத்திலிருந்தும்,  சம்பளக்  குறைவிலிருந்தும்  தொழிலாளர்களைப்  பாதுகாப்பதற்கு  அநுபவ  சாத்தியமான  நடவடிக்கைகளை  எடுத்துக்  கொள்ள  வேண்டும்”

என்று  ஓர்  தீர்மானம்  தோழர்  ஜோஷியால்  கொண்டு  வரப்பட்டு  நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  இத்தீர்மானம்  நிறைவேற்றப்பட்டதிலிருந்தே  இந்நாட்டிலுள்ள  ஏழை  எளியவர்கள்  பரிபூரண  காப்பு  பெற்று  விடுவார்கள்  என்று  நாம்  நம்பவில்லை.  ஆனால்  இவ்விரு  தீர்மானங்களும்  சட்டசபையில்  விவாதிக்கப்பட்ட  நடைமுறையிலிருந்து  இந்நாட்டுப்  பொது  மக்கள்  சட்டசபைக்கு  யார்  யார்  எதிர்காலத்தில்  சென்றால்  பயனுண்டு  என்பதை  உணரவும்,  வாசாகோசரமாகப்  பேசிவிட்டு  தீர்மானங்களின்  உயிர்  வாங்கப்பட்டு  செத்த  நிலையிலாவது  அத்தீர்மானத்தை  நிறைவேற்றி  ஓர்  விளம்பரம்  பெற  பெரிதாக  எண்ணமுடையவர்கள்  செல்வதால்  யாருக்காவது  பலனுண்டா  என்பதையும்  உணர  இடமேற்படுமென்று  நம்புகிறோம்.

இதனால்  சட்டசபைக்குதான்  மதிப்புண்டா? அல்லது அவர்களைத்  தேர்ந்தெடுத்து  அனுப்பிய  மக்களுக்குத்தான்  பலனுண்டா?  அல்லது  இவர்கள்  யாவரும்  வாழும்  நாட்டுக்காவது  கௌரவம்  உண்டா  என்பதை  வாசகர்கள்  யோசித்துப்  பார்க்க  வேண்டுமென்பதற்காகவே  இதை  விளக்கிக்  கூற  விரும்புகிறோம்.

இந்நாட்டில்  எதிர்கால   சுயராஜ்ய  ஆட்சிக்குப்  பூர்வாங்கமானது  இந்திய  சட்டசபையென்று  சொல்லப்படுகிறது.  அதாவது  எங்  பார்லிமெண்டு  என்கிறார்கள்.  இந்த  எங்  பார்லிமெண்டில்  பத்து  வருட  காலமாகப்  பட்டினி  கிடந்து  மாள்பவர்களுக்குப்  பரிகாரம் கிடைக்க  வேண்டுமென்று  தொடர்ச்சியாய்க்  கத்தப்பட்டு  பத்தாவது  வருடத்தில்  பதில்  கிடைத்தது  என்ன?

அனுபவ  சாத்தியமான  நடவடிக்கைகளை  எடுத்துக்  கொள்ள  வேண்டும்  என்று  பதில்  கிட்டியிருக்கிறது.

ஆனால்  எங்  பார்லிமெண்டின்  தலைமை  இடமான  தாய்ப்பீடமான  இங்கிலாந்து  பார்லிமெண்டிலோ?

பட்டினி  கிடக்கிறார்கள்  மடிகிறார்கள்  என்ற  சப்தம்  உண்டாகி  இருக்குமேயானால்  இதற்குப் பரிகாரம்  பத்து  நிமிடத்தில்  கிடைக்கிறதேயன்றி  பத்து  வருடங்  கழித்து  சாத்தியமான  நடவடிக்கைகள்  எடுத்துக்  கொள்வதாகக்  கூறியிருக்க  முடியுமா?

இந்தியப்  பார்லிமெண்டான  இந்தியா  சட்டசபையில்  தோழர்  ராமகிருஷ்ணன்  (ரெட்டியார்)  இந்தியாவில்  400  லக்ஷம்  பேருக்கு  ஒருவேளைச்  சாப்பாட்டுக்குத்  தகராறாக  இருக்கிறது  என்று  கூறியபோது  அது  அங்குள்ளவர்களில்  எவரையும்  திடுக்கிடச்  செய்யவில்லை.  உலகில்  எந்த  நாட்டிலும்  வேலையற்றவர்கள்  தொகை  பத்து  அல்லது  இருபது  லட்சத்துக்கு  மேல்  இல்லையே.  இங்கு நானூறு  லக்ஷம்  பேர்  பட்டினி  ஜாதியாராக  இருக்க  வேண்டுமாவென்று  கேட்கப்பட்ட  போதுகூட  எந்த  மெம்பரும்  இதற்காக  வெட்கப்படவில்லை.  அவர்கள்  பிறந்து  வளர்ந்த  நாட்டின்  மக்கள்.  அவர்கள்  யார்  பேரால்  பிரதிநிதித்துவம்  பெற்று  சட்டசபையை  அலங்கரித்து  உட்கார்ந்து  கொண்டு  இருக்கிறார்களோ  அவர்களைப்  பற்றி  ஒரு  நிமிடம்  கூட  சிந்திக்க  அவர்களுக்கு  அவகாசமில்லை.  இதற்குக்  காரணம்  என்ன?

பட்டினி  என்பதை  இன்னதெனத்  தெரியாதவர்கள்,  பட்டினியைப்  பற்றி  பேசப்படும்  போது  பதறி  எழவில்லை  என்று  கூறுவது  ஆச்சரியமல்ல.  இங்கிலாந்தில்  உள்ள  வேலையற்றவர்களுக்கு  உணவளிக்கச்  செலவிடப்படும்  தொகை  இந்நாட்டில்  தினமும்  வரியின்  பேரால்  இங்கு  வசூலிக்கப்படுகிறது.  ஆனால்  இந்நாட்டின்  ஜன  சங்கையில்  8ல்  ஒரு பகுதியினர்  வேலையற்று,  உணவற்று,  இடமற்றுத்  தவிக்கிறார்கள்  என்றால்  இதற்கு  “”அநுபவ  சாத்தியமான”  என்று  பதில்  கூறப்படுகிறது.  நமது  சட்டசபை  தோழர்கள்  இந்நாட்டில்  உள்ள  260  மன்னர்களின்  மதிப்பை,  கௌரவத்தை  காப்பாற்றுவதில்  செலவிடப்படும்  ஊக்கத்தையும்  உற்சாகத்தையும்  4கோடி  மக்கள்  பட்டினியால்  மடிகிறார்கள்  என்பதில்  காட்ட  முடியாமற்  போனது  உண்மையில்  மிக்கக்  கேடானதாகவே  தோன்றுகிறது.

இச்சட்டசபையில்  பட்டினி  கிடக்கும்  ஜாதியில்  4  பேர்  பிரதிநிதியாக  இருந்திருப்பார்களேயானால்  “”அனுபவ  சாத்தியமான”  என்று  சொல்லியிருக்க  முடியுமா?

இந்நாட்டில்  வேலையற்றவர்கள்  என்பவர்கள்  கோடிக்கணக்கானவர்கள்  என்று  சட்டசபை  மெம்பர்களே  கூறியிருக்கிறார்கள்.  இவர்களில்  நூற்றுக்கு  72  பேர்கள்  விவசாயத்  தொழிலாளர்கள்  என்று  கூறப்படுகின்றது.  இவர்களை  மாகாண  விகிதம்  கணக்கெடுத்து  அவர்களின்  பட்டினிக்குப்  பரிகாரம்  தேட  வேண்டிய  பொறுப்பு  இந்திய சட்டசபையினுடையதாகும்.  ஆனால்  இந்திய  நாட்டில்  விவசாயிகளைப்  பற்றி  கவனிப்பவர்கள்  எத்தனை  பேர்?  இவர்களின்  அன்றாடக்  கஞ்சிக்கு  வழியென்ன?  என்பதில்  கவனம்  செலுத்த  சட்டசபை  மெம்பர்களும்,  சட்டசபையும்  முற்படாவிட்டாலும்,  எதிர்  காலத்தில்  வேலை  செய்யவாவது  வழிவிட்டதற்கு  நாம்  பாராட்டாமல்  இருக்க  முடியவில்லை.  ஏனெனில்  இந்நாட்டில்  விவசாயத்  தொழிலாளர்கள்  சங்கம்  சேர்ப்பதோ  பட்டினி  கிடப்பவர்களுக்கு  பரிகாரம்  தேடுவதோ  அல்லது  பட்டினி  கிடக்கிறார்களே என்று  சொல்வதே  சட்ட  விரோதமானதாகுமென்று  அஞ்சுகிறார்கள்.  இப்பயம்  நீங்க  பம்பாய்  உத்தியோக  மெம்பர்  மிஸ்டர்  செ.பி.சிலேடன்  அவர்கள்  “”விவசாயத்தில்  ஈடுபட்ட  தொழிலாளர்களுக்கு  சங்கமோ,  கட்டுப்பாடோ  இல்லை”  என்றும்,  சட்டசபையிலும்  அவர்களுக்கென்று  பிரதிநிதித்துவம்  கிடையாதென்றும்,  இவைகள்  உண்டாக  முயல  வேண்டுமென்றும்  கூறியிருக்கிறார்.  எங்கும்  விவசாய  தொழிலாள  சங்கங்களை  ஏற்படுத்தி  வேலையற்றவர்களுக்கு  பரிகாரம்  தேடுவதில்  சகலரும்  முயலுதல்  இன்றியமையாதனவாகும்.

அடுத்தார்போல்  பட்டினி  கிடப்பவர்களைப்  பற்றி  எங்கும்  எடுத்துச்  சொல்லலும்,  அதற்கு  பரிகாரம்  தேடுதலும்  அதுவும்  சாத்தியமான  பரிகாரம்  தேடுவதிலும்  சர்க்காருக்கு  கோபமிருக்குமோ  என்ற  பயத்தில்  பலர்  இன்று  இங்கிருக்கிறார்கள்.  அதைப்  போலவே  பட்டினி  கிடப்பவர்களும்  தாங்கள்  எலும்பும்  தோலுமாய்  ஆகிவருவதற்குப்  பட்டினியே  காரணமென்றும்,  இப்பட்டினியை  எடுத்துச்  சொல்லி  அதற்கு  அவர்கள்  சாத்தியமான  பரிகாரம்  தேடிக்  கொள்வது  தப்பல்ல  என்றும்  பட்டினி  கிடப்பவர்கள்  உணரவும்  இடமேற்பட்டுவிட்டது.  இனி  அவர்கள்  பட்டினி  கிடப்போர்  பரிகாரமடைய  முயல  இச்சட்டம்  இடம்  கொடுத்ததற்குத்தான்  நாம்  இதைப்  பாராட்டுகிறோம்.

சமஸ்தானப்  பாதுகாப்பு  மசோதா  சர்க்காராலேயே  கொண்டு  வரப்பட்டதாகும்.  இந்திய  மன்னர்களில்  ஹத்து  மீறிப்  போகின்றவர்களை  அவ்வப்போது  சர்க்கார்  தலையிட்டு  மன்னர்களுக்கு  ஓய்வு  கொடுத்து  விட்டு  ஸ்பெஷல்  உத்தியோகஸ்தர்கள்  மூலம்  பரிபாலித்து  வருவதை  நாம்  மறந்துவிடவில்லை.  சில  எதேச்சாதிகார  மன்னர்கள்  சர்க்காரின்  நல்லெண்ணத்தில்  சந்தேகம்  கொண்டிருக்கிறார்கள்  என்பதற்கும்;  அச்சந்தேகத்தை  நிவர்த்திக்கவே  சர்க்காரார்  பாதுகாப்புச்  சட்டத்தைக்  கொண்டு  வருகிறார்கள்  என்றும்  கூட  நாம்  நினைக்க  ஏதுவிருக்கிறதேயாயினும்  இவ்விருவர்கள்  நட்புக்காக  சமஸ்தான  பிரஜைகளின்  மூலாதாரமான  உரிமைகளைக்  கட்டுப்படுத்திக்கூட  தாங்கள்  மன்னர்கள்  ஆதரிக்கும்  கருத்தை  நிறைவேற்ற  சர்க்கார்  முயலுகிறார்கள்  என்றும்  சந்தேகப்படாமல்  இருக்க  முடியாது.  இவ்வளவும்  செய்வது  நமக்குத்  தீதேயாயினும்  நாம்  கண்டிக்கும்  சமஷ்டியல்  அரசியல்  முறைக்குப்  பாதுகாப்பேயாயினும்  சட்ட  மெம்பர்  “”மன்னர்கள்  ஹத்து  மீறிப்  போனால்  சர்வாதிகாரப்  பீடம்  உடனே  தலையிடத்  தயங்காது”  என்று  கூறியிருக்கிறார்.  இதற்கு  முன்பு  உதயபுரி,  இந்தூர்,  நாபா,  ஆள்வார்,  தேவாஷ்,  காஷ்மீரம்,  ராம்பூர்  முதலிய  பல  சமஸ்தான  விஷயங்களில்  இதுவரையில்  இவ்விதம்  நடந்து  வந்திருக்கிறார்களேயானாலும்  நாம்  உறுதிமொழியைப்பற்றி  எதுவும்  கூற  விரும்பவில்லை.  ஆனால்  பரிதாபப்படுகிறோம்.

பிரபல  பேரறிஞர்  மிஸ்டர்  பிரடரிக்  அதர்ட்டன்  “”இந்தியாவிலுள்ள  முன்னூற்று  சொச்சம்  சிற்றரசர்களுக்கும்,  ஜமீன்தாரர்களுக்கும்  இறுதி  காலம்  கிட்டிவிட்டதென்று  நன்கு  உணர்ந்து  கொண்டார்கள்.  இங்கிலாந்தில்  சில  நூற்றாண்டுகளுக்கு  முன்  எதேச்சாதிகாரம்  செலுத்திய  பிரபுக்கள்  எக்கதிக்கு  இலக்கானார்களோ  அக்கதிக்கே  இவர்களும்  காலக்  கிரமத்தில்  இலக்காகி விடுவார்கள்  என்பது  உறுதி.  இன்னும்  சில  வருடங்களில்  இவர்களுடைய  நாட்டுப்  பங்களாக்களில்  தனியே  சுககாலம்  கழிப்பதைக்  காணலாம்.  முன்னூற்றுச்  சொச்சம்  பேர்களில்  இருநூற்று  முப்பது  பேர்கள்  “”மாக்ஷிமை  தங்கிய  மகாராஜாக்கள்.”  இவர்கள்  தங்களை  நோக்கி  விரைந்து  வரும்  வெள்ளத்தினின்று  எப்படி  தப்பிப்  பிழைப்பது  என்று  சிந்தை  கலங்கி  இருக்கிறார்கள்”  என்று  எழுதுகிறார்.

மன்னர்  பாதுகாப்பு  சட்டமோ  கேவலம்  260  தனி  நபர்களின்  நன்மையைப்  பொறுத்தது.  வேலையற்றவர்கள்  பாதுகாப்போ  இந்நாட்டில்  கணக்கில்  கிட்டிய  4கோடி  பேர்களையும்,  கிட்டாத  பலகோடி  மக்களின்  நன்மையை,  உரிமையை  இவைகளைப்  பற்றி  மட்டுமல்ல  கோடிக்  கணக்கான  மக்களின்  பட்டினி  வயிறுகளுக்கு  பரிகாரம்  தேடுவதையும்  பொறுத்ததாகும்.  ஆதலால்  அடுத்தாற்  போல்  வரும்  கூட்டத்தில்  இந்நாட்டு  ஏழைத்  தொழிலாளர்  பாதுகாப்பைப்  பற்றி  சற்று  கவனம்  செலுத்தி  மன்னர்களை  மட்டும்  சர்க்காரார்  காப்பாற்ற  வில்லை,  நமக்கும்  பாதுகாப்பளிக்க  சர்க்காரார்  தவறுவதில்லை  என்ற  நம்பிக்கை  பொது  மக்களுக்கு  உண்டாகுமாறு  சர்க்காரும்,  இந்திய  சட்டசபை  மெம்பர்களும்  முயற்சிக்கக்  கோறுகிறோம்.

புரட்சி  தலையங்கம்  25.02.1934

சாம்பியன்  திட்டம்  சாகடிக்கப்படுமா?

வழக்கம்  போலவே  இவ்வருடமும்  நமது  மாகாண  சட்டசபையின்  முன்  இவ்வாண்டின்  34,  35  வருட  வரவு  செலவு  திட்டம்  சமர்ப்பிக்கப்பட்டது.  சட்ட  சபையிலுள்ள  எதிர்  கக்ஷிகளின்  பிரசங்கிகளும்,  அதிகாரத்திலுள்ள  கக்ஷியின்  அங்கத்தினர்களில்  அதிர்ப்தியுற்றோர்களென்போர்  சகலரும்  வரவு  செலவு  திட்டத்தைப்பற்றி  பேசித்  தீர்த்தார்கள்.  மூன்று  நாள்  இதற்காக வென்றே  ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கத்தினர்களின்  அபிப்பிராயங்களறிதல்,  ஆலோசனைகளை  கேட்டல்  என்கின்ற  முறையில்தான்  எதிர்  கக்ஷியினர்  விவாதங்களுக்கு  இடமும்  நேரமும்  ஒதுக்கப்படுவது  வழக்கம்.  இம்மாமூல்  சடங்கிற்கு  பின்போ  மாகாண  சர்க்கார்  நடைமுறை  முக்கிய  உருப்பினர்களான  நிர்வாகக்  கமிட்டி  மெம்பர்கள்,  அதாவது  மந்திரிகள்,  லா மெம்பர்,  ஹோம் மெம்பர்,  பொக்கிஷ மெம்பர்  என்ற  ஆறு  கனவான்களும்  முதல்  இரண்டு  தினங்களிலும்,  நடந்த  பிரசங்கத்தைத்  தோற்கடித்து  விடக்  கூடிய  மாதிரியில்,  ஏன்  இன்னும்  அதிகமாகக்  கூடவே  பேசினார்கள்.  இத்துடன்  இவ்வருட  வரவு  செலவு  திட்டம்  நிறைவேற்றப்பட்டது.

இதில்  நமது வாசகர்களுக்கு  விசேஷ  கவனம்  செல்ல  வேண்டுமென்பது  அவசியமல்ல.  அப்படியாயினும்  இதை  மேல்  வாரியாகவேனும்  கவனியாது  நாம்  இருந்துவிடுவதற்கில்லை.  நமது  மாகாண  கல்வி  மந்திரியான  திவான்  பகதூர்  கனம்  எஸ். குமாரசாமி  (ரெட்டியார்)  அவர்கள்  தனது  இலாகா  சம்பந்தமாக  சகோதர  அங்கத்தினர்கள்  செய்த  உபன்னியாசங்கட்கு  அபிப்பிராயங்கட்கு  பதில்  சொல்லும்  முறையில்  முதலில்  (தமது)  இலாகாவைப்  பற்றி  அங்கத்தினர்கள் அதிகம்  கவனம் செலுத்தவில்லை  என்பதை  எடுத்துக்காட்டி  வேடிக்கையாக  அல்ல  சகோதர  அங்கத்தினர்கள்  நிலவரி  விஷயமாக  விசேஷ  ஊக்கம்  காட்டப்பட்டதே  இதற்குக்  காரணம்  என்றும்  எடுத்துரைத்திருக்கிறார்.  கல்வி  சம்பந்தமாகவும்,  தமிழ்  வளர்ச்சி  சம்பந்தமாகவும்  ஏதேனும்  புது  வாக்குறுதிகள்,  நோக்கங்கள்  எடுத்துறைக்கக்  கூடுமென்று  எதிர்பார்த்தோர்  பெரிதும்  ஏமாற்றமடைந்தார்கள்  என்று  சொன்னபோதிலும்,  கனம்  எஸ்.குமாரசாமி  அவர்களின்  சமாதானப்  பிரசங்கத்தின்  முற்பகுதியில்  பெரும்பாகம்  இந்நாட்டுப்  பக்திமான்களுக்கு  செலவிடப்பட்டதைக்  கண்டு  திடுக்கிட்டுப்  போனோம்.  இன்று  பல  வருடங்களாக  நமது  மாகாணத்தில்  ஆரம்பக்  கல்வியைச்  சீர்திருத்தி  அமைக்கப்  பல  முயற்சிகள்  செய்யப்பட்டதில்  மிஸ்டர்  சாம்பியன்  அவர்களின்  ஆரம்பக்  கல்வித்  திட்டம்  மிக  முக்கியமானதாகும்.  இத்திட்டத்தில்  சில  மாறுதலை  நாம்  விரும்புவதுண்டெனினும்,  இத்திட்டம்  முழுதும்  அலக்ஷியப்படுத்தக்  கூடியது  அல்லது  நிறுத்தி  வைக்க  வேண்டியது  என்று சொல்ல  எவரும்  துணியார்.  ஆனால்  கனம்  கல்வி  மந்திரியவர்கள்  “”சாம்பியன்  திட்டமானது  இன்னும்  ஸ்தல ஸ்தாபனங்களில்  அபிப்பிராயம்  கேட்பதிலேயே  இருக்கிறது.  இது  கிடைத்த  பின்னரே  கவர்ன்மெண்டார்  முடிவு  செய்வதாக  இருக்கின்றனர்”  என்று  கூறிவிட்டார்.

இப்பதிலானது ஆரம்பக் கல்வியைப் பற்றியும், மிஸ்டர்  சாம்பியன்  திட்டத்தினால் சீர்திருத்த முறையில் அறிவாளிகளாக வெளிவரும் இளைஞர்களையுடையதாக எதிர்காலம் இருக்க முடியுமா?  என்பதில்  நம்பிக்கை வைத்த நம்மை ஏமாறச் செய்து விட்டது.

மிஸ்டர்  சாம்பியன்  அவர்களால்  தயாரிக்கப்பட்டுள்ள  ஆரம்பக்  கல்வித்  திட்டத்தை  அத்திட்டம்  வெளியான  தினத்திலேயே  கண்டனம்  செய்ய  ஆரம்பித்துவிட்டார்கள்.  இக்கண்டனம்  ரோமாபுரியைக்  கூட  எட்டியது  எனலாம்.  இக்கண்டனம்  செய்த  ஒரு கூட்டத்தாரின்  சௌகரியத்துக்காக  ஓர்  உயரிய  திட்டத்தைக்  கைவிடுவது  தவறு  என்பதுடன்  அத்திட்டம்  தயாரிக்க  முதலில்  இடமளித்த  எந்திரத்தையும்,  அத்திட்டம்  தயாரிக்கப்பட்ட  காலத்தில்,  அதில்  சாக்ஷியம்  கொடுத்த  எண்ணற்ற  பொறுப்பேற்றவர்களின்  முயற்சியையும்  அலக்ஷியப்படுத்துவதுபோல்  கூட  கனம்  மந்திரியவர்கள்  சமாதானம்  இருக்கிறது  என்பதையும்  நாம்  எடுத்துக்காட்டாமல்  இருப்பதற்கில்லை.

இந்நாட்டில் உள்ள ஜனசமூகம் என்றால் அது ஒரு  சில  வைதீகர்களையோ,  அவர்களைப்  பாராட்டி  வரவேண்டிய  நிர்ப்பந்தத்திலுள்ளவர்களையோ  குறிப்பிடுவதல்ல.  எதிர்த்தவர்களான  அறிவிற் பெரியோர்கள்  சொல்லும்  காரணங்கள்தான்  என்ன?  சுருக்கமாக  சொன்னால்  எக்காரணத்தினாலோ,  எடுத்ததற்கெல்லாம்  கண்டனம்  செய்வதற்காக  இப்போது  இம்மாகாணத்தில்  சிலர்  கிளம்பி  இருக்கிறார்கள்.  இவர்களின்  செல்வாக்கு,  கூட்டுறவு  ஆகியவைகளுக்காக  பயந்து  நமது  மாகாண  கல்வி  மந்திரியவர்கள்  தமது  காலத்திலேயே  இத்திட்டத்திலுள்ள  உயரிய  முறைகள்  பலதை  இல்லாவிட்டாலும்,  சிலதையாவது,  செய்யாமல்  போகப்  போவதில்லை யானாலும்  இச்சமயத்தில்  இதை  எடுத்துக் காட்டாமலிருக்க  முடியவில்லை.

சாம்பியன்  திட்டம்  அமுலுக்கு  வரக்கூடாது  என்று  கண்டித்தும்  சர்க்காரை  மிறட்டியும்  இதுவரையில்  வெளிவந்த  சகல  செய்திகளையும்  நாம்  பார்த்தோம்.  அதில்  அறிவின்  வளர்ச்சிக்கு,  ஜனசமூக  வாழ்க்கையின்  நன்மைக்கு,  முரணானதாகவோ,  புறம்பானதாகவோ,  எதுவும்  திட்டத்தில்  இருப்பதாக  எடுத்துக்காட்டுவதான  கண்டனம்  இல்லை.  இந்நாட்டு  எல்லா  மக்களும்  தங்களை  ஆதரிப்பதாக  பிரமாண்டமான  பொய்  மூட்டை  மீதே  கண்டனக்  கோட்டைகள்  கட்டப்பட்டிருக்கிறது.  இதற்காகவா  நமது  கனம்  கல்வி  மந்திரியவர்கள்  மலைக்கப் போகிறார்கள்?  இதைவிடத்  திடுக்கிடக்  கூடிய  பல  கண்டனங்கள்  தோன்றிய  போதெல்லாம்  சமாளித்த  மந்திரியாரிடம்  நமக்கு  நம்பிக்கை  இல்லாமலில்லை.  வீண்கூச்சல்  எதற்கு  என்று  அலக்ஷியமாக  பிரஸ்தாப  பதில்  கூறப்பட்டிருந்தாலும்,  எதிர்காலத்தில்  தன்  கடமையைத்  திறம்படச்  செய்ய  கனம்  மந்திரியவர்கள்  தவறாது  இருப்பாராக.

கண்டனக்காரர்கள்  சொல்லும்  காரணங்களில்  பிர்மாண்டமான  காரணங்கள்  என்னவென்று  பார்ப்போம்.

  1. இன்று கல்விக்காக  செலவிடப்படும்  பணத்தைவிட  மூன்று  மடங்கு  பணச்செலவாகும்  என்பது.

பணச்செலவு  அதிகமென்பதில்  இவர்கள்  விடும்  கண்ணீர்  வாஸ்தவமானால்  தங்கள்  தர்ம  ஸ்தாபனங்களுக்கு  என்று  வருடா  வருடம்  வாங்கும்  இலக்ஷக்கணக்கான  ரூபாயிலிருந்து  சிறிது  குறைத்து  இக்கல்வித்  திட்டத்துக்குப்  போட்டுவிடப்  போகிறார்களா?  என்று  பார்த்தால்  அது  இன்று  நடக்கக்  கூடியதல்ல  என்பதுடன்  கண்டனக்காரர்கள்  தங்கள்  மதப்பிரசாரத்துக்கு  எதையும்  கையாளும்  தந்திர  முறையிலேயே  முதலில்  பணச்  செலவு  என்ற  பேரால்  கண்டனம்  என்றார்கள்  என்று  சொல்லலாம்.

  1. பிறப்பினால் உயர்வு  தாழ்வு,  மதத்தினால்  உள்ள  வித்தியாசம்,  மதத்தினால்  உள்ள  சலுகை  இவைகளுக்கு  தீங்கிழைப்பதாக  இருக்கிறதாம்.

இவர்கள்  சொல்லும்  “”தீங்கிழைப்பதாக  இருக்கிறது”  என்பவைகள்  எத்தனை  இலக்ஷம்  ஏழை  எளியச்  சிறுவர்கள்  ஆரம்பக்  கல்வியைப்  பெற  முடியாது  தடுக்கிறது என்பதையும்,  கல்விக்காகக்  கொடுக்கப்படும்  பணம்  அவர்கள்  பேரால்  சர்க்காரால்  தாறாளமாக  செலவிடப்பட்ட  போதிலும்  அவை  முழுதும்  அவர்களுக்குப்  போகவே  மிஸ்டர்  சாம்பியன்  திட்டம்  உதவி  செய்யத்  தூண்டுகிறது  என்பதிலும்,  இவர்கள்  காட்டும்  கண்டனம்  நியாயமுடையதாக  இருக்க  இயலுமா?

  1. ஆரம்பப் பள்ளிக்  கூடங்களில்  ஆண்,  பெண் இருபாலரும்  ஒன்றாகப்  படிப்பது  தவறு.

நமது  மாகாண  முதல்  மந்திரியாக  இருந்தவர்களில்  இருவர்கள்  மிஸ்டர்  சாம்பியன்  திட்டம்  ஆரம்பிக்கப்பட்ட  காலத்தும்,  பின்பும்  இம்முறையை  ஆதரித்து  இருக்கிறார்கள்  என்றும்  இதற்காக  மந்திரிகளை  மகாஜனங்கள்  பாராட்டியிருக்கிறார்கள்  என்றும்  சொல்வதுடன்  ஒரு  முதன்மந்திரியார்  ஆரம்பக்  கல்விச்  சாலைகளில்  மட்டுமல்ல  உயர்தர  பட்டம்  பெறும்  சர்வகலா  சாலைகளிலும்  இம்முறை  கையாளப்  படவேண்டும்  என்றும்  இன்றுள்ள  முறை  மாறி,  புது  முறையில்  படிப்பும்,  பள்ளியும்  பாடமும்  வருகிற  காலத்தில்  உபாத்தினிகளாகவே  சகலரும்  நிறைந்திருக்க  வேண்டும்  என்றும்  கூட  சொல்லியிருப்பதை  மட்டும்  இங்கு  ஞாபகமூட்டுகிறோம்.

இன்றுள்ள  கிறிஸ்துவ  கலா  சாலையில்  முக்கிய  வகுப்புகளிலும்,  வைத்திய  கலா  சாலையில்  பல  வகுப்புகளிலும்,  நகரங்களில்  பெண்கள்  ஹைஸ்கூல்கள்  இல்லாத  இடங்களிலும்,  கிராமங்களில்  பெண்  பள்ளிக்  கூடங்கள்  இல்லாத  இடங்களிலும்  கிராமங்களிலுள்ள  கிறிஸ்துவ  பாடசாலைகளுக்குச்  சென்றால்  பெண்கள்  கிறிஸ்துவ  மதத்தில்  சேர்த்துக்  கொள்ளப்படுவார்கள்  என்ற  பயமுள்ள  இடங்களிலுமுள்ள  கல்விச்  சாலைகளில்  பெண்கள்   சிறுமிகள்  சென்று  கல்வி  கற்று வருகிறார்களா?  இல்லையா?  என்று  மட்டும்  வினவுகிறோம்.

  1. ஜனக்குறைவால் ஒரு  மதத்தார்  தற்காலம்  ஒரு  சிறிய  பாடசாலையை  ஸ்தாபித்து,  பின்னர்  ஜனங்கள்  அதிகரிக்கும்போது  பாட  சாலையை  மென்மேலும்  விருத்தியாக்க  மேல்  வகுப்புகளுக்குச்  சர்க்கார்  அங்கீகாரம்  கிடைக்க  இடமில்லை  என்பது.

இதில்  பள்ளிக்  கூடங்கள்  ஏற்படுவது  என்பது  மக்களின்  கல்விக்  குறையை  நிரப்புவதற்காகவா?  அல்லது  ஜனக்குறைவாக  உள்ள  மதக்காரர்கள்  பள்ளிக்கூடம்  வைத்து  அது  மூலியமாக  மதத்தை  வளர்க்க  பள்ளிக்  கூடங்களா?

எம்மதம்  குறைய  ஆரம்பிக்கிறதோ  அவர்கள்  பணத்தைக்  கொண்டே  குறைவுபட்ட  எண்ணிக்கையுள்ள  மதம்  பெருக  வேண்டுமென்ற எண்ணமா?  தனி  முறையில்  என்று  ஆரம்பிக்கப்பட்டுள்ள  பல  சிறு   மதப்பிரசார  ஆரம்பக்  கல்விச்  சாலைகளில்  மதமாறுதல்,  அதனால்  குழப்பம்,  கலகம்  உண்டாவதாலும்,  கிராமங்களிலிருப்போர்  பயந்து  பள்ளிக்கு  சிறுவர்களை  அனுப்ப  மறுக்கிறார்கள்  என்ற  குறையை  நிவர்த்திக்கவே  சாம்பியன்  திட்டமானது  புது  மாறுதலை  செய்ய  ஏற்பட்டது.

முன்  சொன்ன  நொண்டிக்  காரணங்களைக்  காட்டி  மிரட்டும்  மதக்  கிறுக்கர்களின்  கண்டனத்தை  பொறுட்படுத்தாது,  விரைவில்  ஆரம்பக்  கல்வி  முறையில்  தங்கள்  கடமையைச்  செய்ய  மாகாண  கல்வி  இயந்திரம்  தயங்கக்  கூடாது  என்று  கேட்டுக்  கொள்கிறோம்.  ஸ்தல  ஸ்தாபனங்கள்  மீது  பழியைப்  போட்டு  அதன்  மறைவில்  எவரும்  மறைய  ஆசைப்படுவது  நியாயமாகாது.  மதக்  கிறுக்கர்களின்  கண்டனத்தை  மட்டும்  சர்க்கார்  பெரிதுபடுத்தினதாக  பொது  ஜனங்கள்  உணர்ந்தால்  அவர்களும்  தங்கள்  கண்டனங்களைச்  சர்க்காருக்கு  எடுத்துச்  சொல்லி  சர்க்கார்  கடமையைச்  செய்தொழிக்குமாறு  சர்க்காரை  கேட்டுக்கொள்ள  பொது  ஜனங்களுக்குத்  தெரியுமேயாயினும்  சர்க்கார்  அது  வரையில்  இதை  வளரவிடக்கூடாதென்றும்  எடுத்ததற்கெல்லாம்  மதமிருப்பதாகக்  கூறும்  பரிதாபத்துக்குறியவர்களிடம்  கோபம்  கொள்ளாமலும்  அவர்கள்  கண்டனத்தைக்  கண்டு  அஞ்சாமலும்,  தாங்கள்  நியமித்த  கமிட்டி,  தாங்கள்  விரும்பிய  அறிக்கை  இவைகளுக்காக  செலவான  பணம்,  இவைகள்  அத்தனையையும்  அலட்சியப்படுத்திய  வைதீகர்களிடம்  அலட்சியத்தைக்  காட்டி  ஆரம்பக்  கல்வி  திட்டத்தில்  சர்க்கார்  தங்கள்  கடமையைச்  செய்ய  தவறாதென்ற  எண்ணம்  எங்கும்  உண்டாகச்  செய்ய  கேட்டுக்கொள்ளுகிறோம்.

புரட்சி  தலையங்கம்  04.03.1934

You may also like...