துணுக்குகள்

 

ஆதிதிராவிடர்  இல்லையோ?

அடுத்த  மார்ச்சு,  ஏப்ரல்  மாதத்தில்  நிர்வாக  சபையில்  ஓர்  இடம் காலியாகும்  என்று  ஏஷ்யம்  கூறப்படுகிறது.  இக்காலியாகும்  இடத்தில்  யார்?  உட்கார்வது  என்பதுபற்றி  எல்லாப்  பத்திரிகைகளும்  ஏஷ்யம்  கூறி  சிலர்  பெயரை  சிபார்சும்  செய்கிறது.  வகுப்புத்  துவேஷத்தை  வெறுக்கும்  சகவர்த்தமானியான  “”சுதேசமித்திரன்”  ஒரு  ஐயங்கார்,  அல்லது  ஐயர்  கனவான்  பெயரை  சிபார்சு  செய்வதுடன்,  முன்பு  பனகால்  காலத்தில்  காபினெட்டில்  ஓர்  பிராமணர்  இருக்க  வேண்டுமென்பதற்காகவே  மந்திரியாக  ஒரு  பிராமணரை  நியமித்ததாகவும்  அந்நியாயப்படி  இன்று  ஓர்  பிராமணர்  அவசியம்  என்று  கூறுகிறது.

இதுவரை  பெரிய  உத்தியோகங்களில்  ஐயர்,  ஐயங்கார்,  ஆச்சாரியார்  எல்லாம்  நீண்ட  நாள்  இருந்து  பார்த்துவிட்டார்கள்.  அதைப்போன்றே  முஸ்லீம்,  கிருஸ்துவர்,  முதலியார்,  நாயுடு,  தமிழர்,  தெலுங்கர்,  கேரளர்  முதலிய  யாவரும்  இருந்து  பார்த்துவிட்டார்கள்  என்று  நமது  சகவர்த்தமானிக்கு  இவைகளைக்  கூறுகிறோம்.  ஆனால்  இதுவரை  இந்  நாட்டில்  ஜனசங்கையில்  நாலில்  ஒரு  பாகத்தினரான  ஆதிதிராவிடர்  என்பவர்களில்  ஒருவர்கூட  இதுவரையில்  அங்கு  இருந்து  பார்த்ததில்லை.  இன்று  ஆதிதிராவிட  முற்போக்கைக்  குறித்து  எங்கும்  பலத்த  கிளர்ச்சி  இருக்கிறது.  ஆதலால்  சகலரும்  ஒன்றுசேர்ந்து  ஆதிதிராவிட  கனவான்  ஒருவர்  அங்கு  வர  முயற்சிக்கக்  கூடாதா?  என்பதே!

நமது  மாகாண  ஆதிதிராவிட  சமூகத்தலைவர்கள்  தங்களுக்குள்ள  அற்ப  அபிப்பிராய  பேதங்களை  விட்டொழித்து  ஒரு  ஆதிதிராவிட  கனவான்  அங்குவர  முயற்சிப்பார்களா?  அல்லது  இன்றுள்ளது  போன்ற  உயர்தர  ராஜதந்திரிகளின்  முன்னோடும்  பிள்ளையாக  மட்டும்  இருந்தும்  தங்கள்  காலத்தைக்  கடத்த  ஆசைப்படுகிறார்களா?  ஆதிதிராவிடர்கள்  ஒன்றுபட்டால்  இது கிட்டாது  போகுமென்று  நாம்  நினைக்கவில்லை.

விதவையிலும்  பணக்காரனீயமா?

நமது  சட்டசபையில்  கனம்  கல்வி  மந்திரியவர்கள்  ஐஸ்ஹவுஸ்  என்பதிலுள்ள  விதவைகள்  விடுதிக்கு  வருடம்  செலவுக்கும்,  உபகாரச்   சம்பளத்துக்கும்  ரூபாய்  27ஆயிரம்  செலவாவதாகக்  கூறியிருக்கிறார்.  அத்துடன்  அவ்  விதவை  விடுதியில்  பிராமணப் பெண்கள்  62பேர்  என்றும்,  பிராமணரல்லாதார்  விதவைகள்  பன்னிரண்டே  பேர்களென்றும்  கூறியுள்ளார்.

விதவைகள்  மணத்தை  எதிற்கும்  வைதீகம்,  வைதீகப்  பிராமணீயம்  இவர்களிடம்  நாம்  எதுவும்  சொல்லவில்லை.  சீர்திருத்த  விதவை  மணத்தை,  விதவைகள்  முற்போக்கை  விரும்புகிறவர்களுக்கே  கூறுகிறோம்.  விதவைகளில்  கூடவா  பணக்காரனீயமும்,  பார்ப்பனீயமும்  இருக்க  வேண்டும்.  இதற்குக்  காரணர்  விதவைகள்  விடுதியில்  தலைமை  உத்தியோகம்  ஓர்  பிராமண  விதவை  அம்மாளிடமும்,  விதவை  விடுதியில்  உள்ள  உபாத்தியாயினிகளில்  பெரும்பாலும்  பிராமண  அம்மாள்களாலேயே  நிரப்பப்பட்டிருக்கிறதென்றும்  ஜஸ்டிஸ்  பத்திரிகையில்  பல  முறை  செய்தி  வந்திருக்கிறது.  கனம்  கல்வி  மந்திரியவர்கள்  விதவை  விடுதி  தலைமையைத்  திருத்தியமைத்து  வருடந்தோறும்  வரும்  பிராமணரல்லாத  விதவைகள்  மனுக்கள்  குப்பைத்  தொட்டிக்குப்  போகாதிருக்கச்  செய்ய  இனியாவது  தவறக்  கூடாதென்று  கூறுகிறோம்.

கேள்வி  முறை  ஏது?

சென்ற  சட்டசபையில்  கூட்டத்தில்  “”இனாம்தார்கள்  குடிகள்”  சம்பந்தமாக  ஓர்  மசோதா  செய்யப்பட்டதை  எல்லா  விடங்களிலும்  கண்டித்து  தீர்மானங்கள்  அனுப்பப்படுகிறது.  பத்திரிக்கையின்  செல்வாக்கு  இனாம்தார்களின்  குடிகள்  நன்மையைவிட,  இனாம்தார்கள்  நன்மை  கோரியே  பெரிதும்  உபயோகப்படுத்தப்படுகிறது.  சர்கார்  இம்மசோதாவுக்கு  ஆதரவு  காட்டியபோதிலும்  அதை  பயன்படாதடிக்க  செய்யப்படும்  முயற்சி  மிக  அதிகமாகும்.  இதற்குக்  காரணம்  இனாம்தார்கள்தான்  பெரும்பாலும்  பத்திரிக்கையைப்  படிக்கும்,  ஆதறிக்கும்  கூட்டமாக  இருக்கிறார்கள்,  இனாம்தார்கள்  குடிகளில்  பெறும்பான்மையானவர்களுக்கு  தங்களுக்கெல்லாம்  நன்மையை  கொடுக்கக்கூடிய  திட்டம்  ஒன்று  வந்திருக்கிறதென்பதே  தெரியாத  விஷயமாகும்.  இனாம்தார்களின்  குடிகள்  அவர்களின்  நலம்  கருதி  செய்யப்பட்ட  மசோதாவின்  செய்தியை  அரியும்படிச்  செய்ய  சர்க்கார்  விளம்பர  அதிகாரிகளாவது  முயல  வேண்டும்.

எல்லாம்  பொதுவுடமையா?

இனாம்தார்கள்  குடி  விஷயமாய்  விவாதம்  நமது  சட்டசபையில்  நடக்கும்போது  ஓர்  சட்ட  நிபுணர்  கூறினார்  இனாம்தார்களுக்கு  சொந்தமானதை  பரிமுதல்  செய்யும்  உரிமை  இச்சட்டத்துக்கு  இருக்கிறது.  இது  பொதுவுடமை  தத்துவம்  என்றார்.  மற்றோர்  பிரபலஸ்தர்  கூறினார்  இச்சட்டம்  செய்தல்  ரஷ்ய  பொதுவுடமையை  வரவேற்பது  போலாகுமென்றார்.  இதற்கு  பதிலளித்த  கனம்  மந்திரியாரோ!  இவ்விதம்  சட்டம்  செய்யாதிருத்தலானது  ரஷ்யப்  பொதுஉடமையை  இங்கு  கூப்பிட  இடமுண்டாகுமென்றார்.  இவ்விதம்  தொட்டதெல்லாம்  பொதுவுடமையாக  தோன்றுகிறது.  இதைப்போன்றே  ஐக்கிய  மாகாணத்தில்  நிறைவேற்றப்பட்டுள்ள  விவசாயிகள்  கஷ்ட  நிவாரண  மசோதாவை,  அம்மாகாண  பேங்கர்கள்  சங்கத்தார்  தெரிந்து  கவர்னருக்கு  அனுப்பியுள்ள  ஓர்  மகஜரில்  பொதுவுடமைக்கொள்கையை  இம்  மசோதா  மூலியம்  ஒப்புக்கொள்வது  போலாகிறது என்று  காட்டியிருக்கிறது.  இவ்விதம்  பிரபுக்கள்  சர்க்கார்  செய்யும்  ஒவ்வொன்றையும்  பொதுவுடமை  என்று  சொல்கிறார்களே!  இதற்காக  இவர்கள்மீது  சர்கார்  ஏதும்  நடவடிக்கை  எடுக்காதா?

பொக்கிஷமெம்பர்  பொய்யரா?

நாட்டில்  மிராசுதாரர்கள்  துயரச்  சத்தம்  மிகவும்  பலமாகப்  போய்விட்டது.  நிலவரி  மட்டுமல்ல,  தண்ணீர்  வரியையும்  சேர்த்து  நூற்றுக்கு  25  விகிதம்  குறைக்க  வேண்டுமென்று  நேற்று  சட்டசபையில்  தீர்மானம்  நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  இவ்வாதத்தில்  மிராசுதார்களோ  வரி  கொடுக்க  முடியாத  நிலையில்  இருக்கிறார்கள்  என்கிறார்கள்.  கவர்ன்மெண்டு  பொக்கிஷ  மெம்பர்  அவர்களோ  மிராசுதார்  கூச்சல்  வெறுங்  கூச்சல்  என்கிறார்.  இருக்கும்  ரிசர்வு  பண்டைக்  காலி  செய்வதற்காகவே  நிலவரி  குறைக்கவேண்டுமென்று  தீர்மானம்  கொண்டுவரப்பட்டிருப்பதாகக்  கூறுகிறார்.  இவ்விரண்டில்  எது  உண்மை  என்பதும்,  உண்மையாகவே  கஷ்ட  நிலையிலுள்ள  விவசாயிகளை  சர்க்கார்  கவனிக்கிறார்களா?  இல்லையா?  என்பதும்  நம்முடைய  விவாதமல்ல.  பொக்கிஷ  மெம்பர்  சொல்வதில்  சிறிது  உண்மையுண்டு.  அத்துடன்  மிராசுதார்களுக்கே  இவ்வளவு  கஷ்டமானால்,  மிராசுதார்களிடம்  வேலை  செய்யும்  சோகமுடைய  விவசாயக்கூலிகளின்  நிலைமை  என்ன?  என்பதை  சிந்திக்க  மிராசுதார்கள்  தவறமாட்டார்கள்  அல்லவா?  அவர்கள்  குறைகளை  சொல்ல  எந்த  சட்டசபை  இருக்கிறது!

தேர்தல்  நாடகமா?

தாலூகா  போர்டுகளை  ஒழித்து  விடுவதா?  இல்லையா?  என்று  கடைசி  முறையாக  சட்டசபையில்  விவாதிக்கப்பட்டது.  கனம்  முதல்  மந்திரியார்  இன்றுள்ள  208  தாலூகா  போர்டுகளில்  பாதி  போர்டுகள்  தங்கள்  செலவுக்குக்கூட  வழி  தேடிக்கொள்ள  முடிவதில்லை  என்கிறார்.  ஆதலால்  208  போர்டுகளையும்  இழுத்துப்  பூட்டிவிட  வேண்டுமென்கிறார்.  இது  இன்றைய  மந்திரி  முயற்சிமட்டுமல்ல.  சென்ற  ஏழு  வருடமாக  இருந்த  மூன்று  மந்திரி  சபையும்  ஆதரித்த  முயற்சியே  யாகும்.  ஆனால்  முன்பு  மந்திரி  கட்சியமைத்தவர்களே  இன்று  இதை  எதிர்க்கிறார்கள்.  எதிர்ப்புக்குத்  தோதாகப்  பல  நியாயங்களைக்  கூறுகிறார்கள்.  ஏழு  வருடங்களில்  500க்கு  மேற்பட்ட  பஞ்சாயித்து  சபைகள்  உண்டாகிவிட்டது.  தாலூகா  போர்டுகளின்  வருமானத்தில்  பாதி  பாகத்தை  அது  விழுங்கி  விடுகிறது.  இதற்கு  பஞ்சாயித்து  போர்டுகளை  கலைக்க வேண்டியதுதானா?  208  போர்டுகளுக்கு  பயப்படுகிறவர்கள்  500  போர்டுகளுக்கு  அதிகம்  பயப்படுவார்கள்.  அடுத்த  தேர்தலில்  தாலூகா  போர்டுகளைக்  காப்பாற்றிய  சலுகையைக்காட்டி,  தங்கள்  கட்சிக்கு  தாலூகா  போர்டுகளின்  செல்வாக்கை  உபயோகப்படுத்திக்  கொள்ளவே  சிலர்  இன்று  எண்ணுகிறார்கள்.  இன்றைய  சட்ட  சபையின்  நிலைமையைதான்  இவ்விவாதம்  காட்டக்கூடியதாக  இருக்கிறது.

புரட்சி  துணுக்குகள்  04.02.1934

You may also like...