பொப்பிலியும்    செட்டிநாடும்

 

செட்டிநாட்டு  கோடீஸ்வரரும்,  பரம்பரை  ராஜா  பட்டம்  பெற்றவரும்,  தர்மப்பிரபுவுமான  ராஜா  சர்.  அண்ணாமலை  செட்டியாரின்  குமாரர்  சென்னை  கார்ப்பரேஷன்  மேயர்  குமாரராஜா  என்றழைக்கப்படும்  முத்தையா  செட்டியார்  அவர்கள்  மீது  ஜஸ்டிஸ்  கட்சியார்  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  நிறைவேற்றத்  துணிந்து  அவரிடம்  அதாவது  முத்தையா  செட்டியார்  அவர்களிடம்  சென்னை  சட்டசபைக்  கொரடா  பதவியையும்,  ஜஸ்டிஸ்  கட்சியின்  நிர்வாக  சபையின்  தலைவர்  பதவியையும்  ராஜிநாமா  பெற்றுவிட்டார்கள்.

இந்தக்  காரியமானது  இந்தியாவின்  சரித்திரத்திலேயே    ஏன்  உலக  சரித்திரத்திலேயே புதுமையானதும், இதற்கு முன் எவரும் செய்யத்  துணியாததும், பார்த்திராததும்,  கேட்டிராததுமான  காரியமென்றே  சொல்ல  வேண்டும்.

செட்டிநாட்டுப்  பிரபுவுக்கு  அதிகாரம்,  பதவி,  பட்டம்,  பணம்,  செல்வாக்கு  ஆகியவை  எல்லாம்  நிறைந்து  இருந்தும்  கட்சி  முறை,  கொள்கை  முறை,  சிநேக  முறை  என்பவைகள்  அல்லாமல்  தனிப்பட்ட  முறையிலும்,  செல்வ  முறையிலும்,  பின்பற்றுவோர்  முறையிலும்  ஏராளமான  பலமும்,  சாய்காலும்  இருந்தும்  ஒன்றும்  பயன்படாமல்  கோழிக்குஞ்சை  ராஜாளி  தூக்கிக்  கொண்டு  போவதுபோல்  ஒரு  நொடிக்குள்  வேலை  ஒப்பேறி  விட்டது.  அதாவது  இரண்டு  முக்கியமான  பதவியும்  காலி  செய்யப்படவேண்டியதாய்  விட்டது.

இனிமேல்  ராஜா  சர்.  அவர்களும்  குமாரராஜா  அவர்களும்  அவர்களது  ஆட்களும்,  அவர்களது  பத்திரிகைகளும்  பொப்பிலிராஜாவைத்  தூக்கிலிடுவதானாலும்  சரி  இன்னமும்  என்ன  செய்து  கொள்ளுவதானாலும்  சரி  “”நினைத்தார்  காரியத்தை  முடித்தார்”  என்பது  போல்  ஒரு  காரியத்தை  அதாவது  செட்டிநாட்டு  பிரபுக்கள்  விஷயத்தை  கொசுவை  நசுக்குவது  போன்ற  சுலப  முயற்சியில்  பொப்பிலி  ராஜா  முடிவு  செய்து  விட்டார்.

இதற்காக  அவர்  ஒரு  பிரயாசையும்  படவில்லை  என்பதோடு  ஒருவர்  தயவையும்  எதிர்பாராமல்  செட்டிநாட்டை  ஆதரிக்கும்  பத்திரிக்கைகளையும்,  ஆட்களையும்  லட்சியம்  செய்யாமல்  “”ஒன்றா  கட்சியை  விட்டு  செட்டிநாடு  வெளியேற்றப்பட  வேண்டும்,  இல்லாவிட்டால்  பொப்பிலி  வெளியேறி  விடவேண்டும்”  என்கின்ற  முடிவின்  வலிவையே  ஆயுதமாகக்  கொண்டு  செட்டிநாட்டுக்கு  மங்களம்  பாடிவிட்டார்.

எவ்வளவு  தந்திகள்,  எவ்வளவு  கடிதங்கள்,  எவ்வளவு  மிரட்டல்கள்,  எவ்வளவு  சிபார்சுகள்  ஒன்றையும்  கவனிக்காமல்  வைரக்குன்று  போல்  நின்று  நினைத்த  காரியத்தை  முடித்தார்.

இவற்றிற்கெல்லாம்  காரணமாய்  இருந்தது  பொப்பிலி  அவர்கள்  தன்னை  அண்டிநிற்கும்  கட்சியின்  தலைமை  (சர்வாதிகாரி)  பதவியை  சுண்டுவிரல்  நுனியில்  வைத்துக்  கொண்டு  எந்த  நிமிஷத்தில்  வேண்டுமானாலும்  உதரி  எறிவதற்கு  தைரியத்துடன்  தயாராய்  இருந்ததும்,  கட்சித்தலைவர்  பதவியால்  தான்  எவ்வித  பெருமையோ,  எவ்வித  சுயநலமோ  அடையாமல்  கட்சிக்கு  தன்னால்  பெருமை  அளிக்கப்பட்டதுடன்  தனது  செல்வத்தையும்,  செல்வாக்கையும்  கட்சிக்கு  உதவி  வந்த  தன்மையுமே  இவ்வளவு  பெரியதொரு  மகத்தான  காரியத்தை  வெகு  அலட்சியமாகவும்,  சுலபமாகவும்  முடித்து  விட  முடிந்தது.

இந்த  முயற்சியில்  தோழர்  பொப்பிலி  ராஜா  அவர்கள்  தோற்று  இருந்தாலும்  கூட வீரராகவே  விளங்கி  இருப்பார்  என்பதில்  சிறிதும்  ஐயமில்லை.  முதல்  மந்திரி  பதவியையும்  கூட  அவர்  அவ்வளவு  அலக்ஷியமாகவே  கருதி  இருப்பதாலேயே  உத்தியோக  தோரணையிலும்  பல  காரியங்கள்  உறுதியோடு  செய்யப்படுகின்றதே  யொழிய  மந்திரி  பதவியை  கடுகளவாவது  லக்ஷியம்  செய்து  கொண்டு  இருந்திருப்பாரேயானால்  நாட்களையும்,  பணங்களையும்  எண்ணிக்  கொண்டிருப்பதைத்  தவிர  அவரால்  வேறு  ஒரு  காரியமும்  செய்து  இருக்க  முடியாது.

நிற்க  இந்தக்  காரியத்தின்  பயனாய்  இப்போது  பெரியதொரு  யுத்த  முஸ்தீப்புகள்  தயாராகிக்  கொண்டிருக்கிறதாக  தெரிய  வருகின்றது.

தோழர்  ராஜா  சர்  அண்ணாமலையார்  அவர்கள்  மூன்று  லக்ஷ  ரூபாய் முதல்,  ஐந்து  லக்ஷ  ரூபாய்  வரையிலும்  செலவு  செய்யத்  துணிந்து  துகையை  எடுத்து  வேறாக  மஞ்சள்  துணியில்  முடிந்து  வைத்துக்  கொண்டு  பொப்பிலி  ராஜாவை  ஒழிப்பதற்கு  அல்லது  ஒரு  கை  பார்ப்பதற்கு  யுத்தம்  தொடங்க  பிளானும்,  எஸ்டிமேட்டும்  போட  ஆரம்பித்து  அடையார்  அரண்மனையில்  யுத்த  ஆபீசு  திறந்தாய்  விட்டது.  மைலாப்பூர்  “”இஞ்சினீர்”  (பார்ப்பன  மேதாவி  வக்கீல்)களும்,  சென்னைநகர்  “”கண்ட்ராக்டர்”  (பத்திரிக்கைக்காரர்)  களும்  செட்டி  நாட்டு  அடையார்  அரண்மனைக்குள்  புகுந்து  நிரம்பி  விட்டார்கள்.  படைகளுக்கு  ஆள்களாக  காங்கிரசு  தொண்டர்களும்,  சுயமரியாதைத்  தொண்டர்களில்  சிலரும்,  “”மூலபலம்”  போல்  அரண்மனையைச்  சுற்றி  அணிவகுத்து  நின்ற  வண்ணமாய்  இருக்கின்றார்கள்.  மகாயுத்தம்  போல்  ஒரு  பெரிய  யுத்தம்  நடந்து  தான்  தீரும்  என்பதில்  நமக்கு  சந்தேகமில்லை.  ஆனால்  இதில்  யார்  வெற்றி  பெறுவார்  யார்  தோல்வி  அடைவார்  என்பதை  இப்போது  சுலபத்தில்  சொல்லி  விட  முடியாது.  ஏனெனில்  ராஜா  சர்  அவர்கள்  பணத்தை  வாரி  இரைக்கின்றார்.  தேசீய    சத்தியாக்கிரக  பத்திரிக்கைக்காரர்களை  யெல்லாம்  ஐந்து  நிமிஷத்தில்  சரிக்கட்டி  அடிமை  கொண்டு  கால்  பெருவிரல்  அடியில்  வைத்துக்  கொண்டு  விட்டார்.

அது  மாத்திரமல்லாமல்  பத்திரிக்கைக்காரர்கள்  பெரிதும்  பார்ப்பனர்களாய்  இருப்பதால்  தோழர்  சத்தியமூர்த்தி  அய்யர்  அவர்கள்  சொன்னதுபோல்  “”ஜஸ்டிஸ்  கட்சியை  500  கஜ  ஆழத்தில்  புதைத்து  விட  வேண்டும்  என்பதற்கு  இணங்க  பார்ப்பனர்களுக்குச்  சொந்தத்திலேயே  ஜஸ்டிஸ்  கட்சியை  ஒழித்து  விட  வேண்டும்  என்கின்ற  ஆசையிருப்பதோடு  “”நல்ல  வேட்டை”  “”கொழுத்த  ஆடு”  என்பது  போல்  பெரியதொரு  ஆசாமியான  ராஜா  சர்  தங்களுக்குக்  கிடைத்து  இருப்பதுடன்  அவரால்  பணமும்  கிடைக்கக்  கூடியதாய்  இருந்தால்  அவர்கள்  (பத்திரிக்கைக்காரர்கள்)  எவ்வளவு  ஆனந்தத்தோடு  “”பழம்  நழுவிப்  பாலில்  விழுந்தது  அதுவும்  நழுவி  அவர்கள்  வாயில்  விழுந்தது”  போல்  ஆனந்தங்கொண்டு  இருப்பதில்  ஆச்சரியப்பட  வேண்டியது  ஒன்றுமே  இல்லை.

ஆகவே  ராஜா  சர்  அவர்களுக்கு  பணம்,  பத்திரிகை,  ஏராளமான  பார்ப்பனர்களின்  சேவை,  மேதாவிப்  பார்ப்பனர்களது  மூளை  ஆகியவைகள்  இருப்பதால்  அவருடைய  தாக்குதலை  அவ்வளவு  சாதாரணமாக  மதித்து  விட  முடியாது.

இவை  ஒரு  புறமிருக்க  “”இனம்  இனத்துடன்  சேரும்”  என்பது  போல்  தோழர்  ராஜா  சர்  அவர்களைப்  போல்  இதற்கு  முன்  ஜஸ்டிஸ்  கட்சியில்  இருந்து  விலக்கப்பட்டோ,  அல்லது  அலட்சியமாய்  கருதப்பட்டோ,  அல்லது  கட்சியால்  தங்கள்  இஷ்டப்பட்ட  காரியம்  கைகூடாமல்  போய்  மனச்சலிப்போடு  கோபமாயோ  இருக்கக்கூடிய  மற்றும்  பல  தோழர்களும்  இந்த  சமயம்  ராஜா  சர். அண்ணாமலை  அவர்களுக்கு  சம்மன் இல்லாமலே  உதவி  செய்யவும்,  ராஜா  சர்.  அவர்கள்  பணத்திலும்,  முயற்சியிலும்  தாங்கள்  பழியைத்  தீர்த்துக்  கொள்ளவும்  கருதி  ராஜா  சர்.  அவர்களுடன்  அடூடூடிச்ணஞிஞு  ஆய்  சேர  வெகு  பேர்  காத்துக்  கொண்டும்  இருக்கிறார்கள்.  இது  சம்பந்தமாய்  நெகோசேஷன்  தூதுகள்  நடந்து  கொண்டும்  இருக்கின்றன.

மற்றும்  இச்சந்தர்ப்பத்தை  மாதம்  மும்மாரி  பெய்து  விளைந்த  நல்லதொரு  வெள்ளாமை  போல்  கருதி  தக்கபடி  அறுப்பு  அறுத்து  பத்தாயத்தில்  கொட்டிக்  கொள்ளலாம்  என்கின்ற  கனவு  கண்டு  கொண்டிருக்கும்  பல  பைகாட்  அண்ணாத்தை  மக்களின்  உதவிகளும்  செட்டி  நாட்டு  ராஜாவுக்கு  போட்டி  மேல்  போட்டியாக  வலுவில்  வந்து  கொண்டிருக்கும்.

தோழர்  பொப்பிலி  ராஜா  அவர்களுக்கோ  “”பொப்பிலி  ராஜா  அவர்கள்  தரிசனமே  அமாவாசையையும்,  பௌர்ணமியையும்  ஒரே  நாளில்  பார்க்க  ஆசைப்பட்டவன்  கதி  போல்  இருக்கின்றது”  என்பாரும்  “”பார்க்கக்  கிடைத்தாலும்  ஒன்று  இரண்டு  பேச்சுக்கு  மேல்  பேச  சந்தர்ப்பம்  கிடைப்பது  அதைவிட  அரிதான  காரியம்”  என்பாரும்,  “”பொப்பிலி  எவரையும்  மதிக்காத,  லட்சியம்  செய்யாத  ஆணவம்  படைத்தவர்”  என்பாரும்  ஆக  பலவிதமாய்க்  குறை  கூறுவோர்களும்,  சுலபத்தில்  பொப்பிலியை  நெருங்கித்  தங்கள்  காரியத்தைச்  சாதித்துக்  கொள்ள  முடியாது  என்று  கருதிக்கொண்டிருப்பாருமே  அவருடன்  மிகுதியாயிருக்கிறார்கள்.

பொப்பிலியின்  மீது  பொறாமை  கொண்டவர்களும்,  துவேஷம்  கொண்டவர்களும்  பழி  வாங்க  வேண்டுமென்ற  எண்ணம்  கொண்டவர்களும்  நல்லதொரு  சமயம்  கிடைக்கவில்லையே  என்று  பதுங்கிக்  கொண்டு  இருக்கின்றவர்களும்,  கூட  இருந்தே  குளிர்  காய்ந்து  விடுவோம்  என்று  அவரை  ஒவ்வொரு  நிமிஷமும்  கிட்ட  இருந்து  கொண்டே  மோசம்  செய்யக்  கருதிக்  கொண்டு  இருக்கிறவர்களும்  மலிந்தும்  இருக்கிறார்கள்  என்றாலும்  சில  உண்மையாளர்  உண்டு.

இப்படிப்பட்ட  கூட்டத்தை  துணையாகவும்,  சகாயமாகவும்  கொண்டு  தான்  பொப்பிலி  அவர்கள்  ராஜா  சர்  அவர்களது  தாக்குதலுக்கு  மார்பைக்  காட்ட  வேண்டியவராய்  இருக்கிறார்  என்றாலும்  பொப்பிலிக்கு  இருக்கும்  பெரியதொரு  பின்  பலம்  என்னவென்றால்  வெற்றி  தோல்வியின்  பயனானது  வெற்றியானாலும்,  தோல்வியானாலும்  பொப்பிலிக்கும்  செட்டி  நாட்டுக்கும்  இரண்டு  பேருக்கும்  ஒன்று  போல்  பாவிக்க  முடியாததும்,  இரண்டு  பேரும்  ஒன்று  போல்  பலன்  அனுபவிக்கக்  கூடாததுமான  நிலையில்  இருவர்களும்  இருப்பதே  பொப்பிலிக்கு  பின்பலமாகும்.

அதாவது  பொப்பிலி  தோற்றுப்  போனார்  என்று  வைத்துக்  கொண்டாலும்,  நல்லதொரு  தோல்வியே  ஏற்பட்டு  விட்டது  என்று  வைத்துக்  கொண்டாலும்  பொப்பிலிக்கு  முழுகிப்  போவதோ,  கடுகளவு  நஷ்டமோ,  கவலையோ  ஏற்படக்  கூடியதோ  ஆன  காரியம்  ஒன்றுமே  இல்லை.  பொது  வாழ்வின்  பேரால்  பொப்பிலிக்கு  இனி  ஆக  வேண்டிய  காரியம்  எதுவுமே  இல்லை,  அவருக்கு  இன்று  தன்  சொந்தத்தில்  சுயநலத்துக்கு  என்று  ஆசைப்படவேண்டிய  காரியமோ,  லட்சியமோ  கூட  எதுவும்  இல்லை  என்பதாகும்.

ஆதலால்  அவரது  தோல்வியானது  அவருக்கு  எவ்வித  பாதகத்தையோ,  சங்கடத்தையோ  விளைவிக்க  முடியாது.

ஆனால்  தோழர்   செட்டிநாடு  ராஜா  சர்.  அவர்கள்  நிலைமை  அப்படியில்லை.  ராஜா  சர்.  அவர்களது  செல்வம்,  செல்வாக்கு,  புகழ்,  மனநிம்மதி  முதலிய  மனித  வாழ்வு  சாதனங்கள்  ஒவ்வொன்றும்  அவர்களுக்கு  பொது  வாழ்வில்  உள்ள  வெற்றியையும்,  மதிப்பையும்  பொருத்ததாகவே  இருக்கின்றது.  அவரைச்  சுற்றித்  திரிபவர்கள்,  உதவியாளர்கள்,  ஆப்த  நண்பர்கள்  ஒவ்வொருவரும்  செட்டிநாட்டு  ராஜாவால்  பிழைப்பதற்கும்,  அவரை  உபயோகப்படுத்திக்  கொள்வதற்குமே  உள்ளவர்களே  பெரும்பான்மையானவர்களாய்  இருக்கின்றார்களே  ஒழிய  ராஜா  சர்.  இடம்  அனுதாபமோ,  உண்மையான  பற்றுதலோ,  சுகதுக்கங்களில்  பங்குண்டென்று  நினைப்பவர்களோ  மிகமிக  அறிது.  ஆகவே  பொப்பிலி  ராஜா  அவர்களது  படை  “”சிறியது”  ஆனாலும்  அவை  சொந்தப்படை.  பொப்பிலிக்காக  உயிர்விடத்  துணிந்த  உத்தமப்படை  சுயநலம்  கருதாமல்  ஒத்துழைக்கக்கூடிய  படை.  செட்டிநாடு  அவர்களின்  படைகளோ  “”பெரும்”  படையானாலும்  அது  100  க்கு  99  கூலிப்படை  தன்  தன்  சொந்தக்  காரியத்துக்கு  ஆக  செட்டிநாட்டு  ராஜாவை  நத்திக்  கொண்டு  சூழ்ந்திருக்கும்  சுய  காரியப்படை  நல்ல   சமயத்தில்  வீசம்  கூலி  அதிகமாய்க்  கிடைப்பதாயிருந்தால்  தலைவனையே  கழுத்தறுக்கத்  தகுந்த  “”உதாரகுணமுள்ள”  துரோகப்படை.

செட்டிமார்  நாட்டிலேயே  செட்டிநாட்டு  ராஜா  சர்  அவர்களுக்கு  தாட்சண்ணியமும்பயமும்  வேறு  கதியில்லாமலும்  இருக்கின்ற  செட்டிமார்கள் “”உதவி” அல்லாமல் உண்மையானவர்கள்,  சுதந்திரமாயுள்ளவர்கள்  நல்லெண்ணத்தின்  மீதும்  உதவிக்கு  வரும்  படை  மிக  மிக  அறிதாகும்.

இவைகள்  எல்லாவற்றையும்  விட  செட்டி  நாட்டுக்கு  உதவி  பார்ப்பன  மூளை,  பொப்பிலி  ராஜாவுக்கு  உதவி  அரசாங்க  மூளை.  பார்ப்பனர்களை  நம்பிக்  கெட்டவர்களும்,  பார்ப்பனர்களால்  கெட்டவர்களும்  ஆன  குடிகளும்  ராஜாங்கமும்  இவ்வளவு  என்று  உலகத்துக்கு  நாம்  எடுத்துக்  காட்ட  வேண்டியதில்லை.

ஆனால்  அரசாங்கமோ  இவ்விஷயத்தில்  வெகு  சுளுவில்  யாரையும்  கை  விட்டு  விடாமல்  நடுநிலைமையாய்  நடந்து  கொள்வார்கள்.

மற்றொன்று  என்னவென்றால்  பொப்பிலி  செய்த  காரியம்  சரியோ,  தப்போ  எப்படி  இருந்தாலும்  அது  ஜஸ்டிஸ்  கக்ஷிக்காக,  பார்ப்பனரல்லாதார்  மக்கள்  நலத்துக்காக  என்கின்ற  கவசத்தை  கொண்டிருக்கின்றது.  செட்டிநாடு  ராஜாவால்  செய்யப்பட்டதாகச்  சொல்லப்படும்  காரியம்  சரியோ,  தப்போ  உண்மையோ,  பொய்யோ  எப்படி  இருந்தாலும்  அது  கட்சிக்கு  ஆபத்து  ஏற்படத்தக்கபார்ப்பனர்  நன்மைக்காக,  பார்ப்பனரல்லாதாரைக்  காட்டிக்  கொடுத்து  செய்த  இமயமலை  போன்ற  துரோகம்  என்ற  கவசத்தைக்  கொண்டிருக்கிறது.

பார்ப்பனப்  பத்திரிக்கைகள்  இப்போது  செட்டிநாட்டை  ஆதரிப்பதற்காக  இந்த  ஒரு  வாரத்துக்குள்  போட்ட  காரணங்களே  பொப்பிலி  ராஜாவின்  கூற்றுக்களை  மெய்பிக்க  தகுந்த  கல்லுப்போன்ற  ஆதாரங்களாக  விளங்குகின்றன.

இந்த  நிலையில்  பொப்பிலியை  செட்டிநாடு  வலுவில்  தாக்க  யுத்த  முஸ்திபுகளைத்  தயார்  செய்து  வருவது  அவ்வளவு  போற்றத்தக்கதும்,  புத்திசாலித்தனமானதுமான  காரியம்  என்று  சொல்ல  நம்மால்  முடியவில்லை.  பார்ப்பனர்களை  நம்பிய  பார்ப்பனப்  பத்திரிகைகளை  நம்பிய    காங்கிரசுப்  பார்ப்பனர்களையோ,  மிதவாதப்  பார்ப்பனர்களையோ  நம்பிய  பார்ப்பனரல்லாதார்  எவரும்  இந்த  50  வருஷ  காலத்தில்  முன்னுக்கு  வந்ததாகச்  சரித்திரமும்  இல்லை  சம்பவமும்  இல்லை  என்பதை  செட்டி  நாட்டுக்கு  வணக்கத்துடன்  எச்சரிக்கை  செய்கின்றோம்.

ஆதலால்  செட்டிநாட்டு  ராஜா  சர்.  அவர்களும்,  குமாரராஜா  அவர்களும்  நடந்து  போன  விஷயத்தையும்,  யுத்த  ஆத்திரத்தையும்  மறந்து  சில  முக்கியஸ்தர்களைக்  கொண்ட  ஒரு  கூட்டத்தை  கூட்டி  இனி  நடக்க  வேண்டியது  என்ன?  எப்படி  நடந்து  கொள்ள  வேண்டும்  என்பதை  முடிவு  செய்து  ஒரே  கட்சியில்  உறுதியாய்  நிற்க  முடிவு  செய்து  கொள்வதே  தக்க  காரியம்  என்பதை  விண்ணப்பித்துக்  கொள்ளுகிறோம்.

பகுத்தறிவு  தலையங்கம்  16.12.1934

You may also like...