இக்காலத்திலுமா  பண்டை  நாகரீகப்  பெருமை?

 

பண்டைக்காலத்தில்  நமது  பாரதநாட்டில்  தமிழர்களின்  நாகரீகம்  எப்படி  இருந்தது  என்னும் விஷயத்திலும்  பாஷையானது  எப்படி  தனித்து  விளங்கி  வந்தது?  என்னும்  விஷயத்திலும்  மக்கள்  எப்படி  வாழ்ந்து  வந்தார்கள்  என்னும்  விஷயத்திலும்  இன்னும்  பலவாறான  விஷயத்திலும்  நமது  வித்வ சிகாமணிகளும்,  பண்டிதமணிகளும்  பேசித்  தங்கள்  அரிய  காலத்தையும்,  புத்தியையும்  செலுத்தி  தற்போதைய  மக்கள்  நிலைமைக்குத்  தங்களால்  செய்யவேண்டிய  கடமைகளைச்  செய்தவர்களாக  நினைத்துக்  காலங்கடத்தி  வருகிறார்கள்.  இது  இந்தக்  காலத்தில்  நம்நாட்டு மக்களுக்கு எவ்வளவு முற்போக்கையுண்டு பண்ணுமென்பதையும் நம் மக்களுக்குத்  தற்காலத்தில்  எவ்விதமான  உணர்ச்சியும்,  ஊக்கமும்,  நினைவும்  வேண்டியிருக்கிறது?  என்பதையும்  யோசித்தால்  நமக்கு  வேண்டியது  இதுவா?  என்பது  விளங்காமல்  போகாது.

நம்  நாட்டாரும்  மற்ற  நாட்டாரோடு  சம  வாழ்வு,  சம  அந்தஸ்து,  சம  உரிமை  இல்லாமல்  உழன்று  பசி,  தரித்திரம்,  நோய்,  அற்பமான  வருவாய்,  சுதந்திரமற்ற  அடிமை  வாழ்வு  முதலிய  கொடும்  வியாதிகளின்  மிகுதியால்  அவதிப்பட்டு  அல்லலுற்று  வாழ்ந்து  வரும்  இந்நெருக்கடியான  சந்தர்ப்பத்தில்  என்ன  செய்யவேண்டுமென்பதும்,  இத்தகைய  இழிந்த  நிலைமைகளுக்கு  அடிப்படையான  மூல  காரணமென்னவென்பதைச்  சிந்தித்து  ஊன்றி யோசிப்பார்களேயானால்,  இவ்விதமான  பண்டைப்  பெருமைகளால்  வீண் கால÷க்ஷபம்  செய்யமாட்டார்கள்  என்றே  நினைக்கிறோம்.

ஏனெனில்  தற்சமயம்  நமது  மக்களுக்கு  மற்ற  நாட்டு  மக்களுக்கு  அமைந்துள்ள  வாழ்க்கைகளுக்குச்  சமமாகவேனும்  நமது  மக்களின்  வாழ்க்கைகள்  அமையவேண்டுமாயின்  முதலில்  நமக்குள்  சமத்துவத்தைப்  பரப்பி  வரவேண்டியதே  இன்றியமையாத தாகுமென்பதை  யாவரும்  மறுக்கத்தகாதவைகளில்  முதன்மையாகு மென்பது  நமது  உறுதியாகும்.  அத்தகைய  சமத்துவத்திற்கு  நமக்குள்ளிருக்கும்  ஜாதி,  மதம்  முதலிய  வேறுபாடுகளை  வேருடன்  கில்லி  எறிந்து  தீரவேண்டும்.  இவைகளுக்குப்  போதிய  அறிவு  வளர்ச்சிக்கேற்ற  விஷயங்களைக்  கல்வியின்  மூலமாகவாவது  அது  துரிதத்தில்  முடியாமற்போகுமாயினும்  பிரசார  மூலமாகவேனும்  சந்தர்ப்பத்திற்கேற்றபடி  சாத்தியமான  முறைப்படியாவது  நமது  மக்களுக்குப்  புகட்டி  வரவேண்டுமென்பதையாவது  யாவரும்  செய்து  வரவேண்டிய  கடமைக்குட்பட்டிருக்க  நமது  பண்டைத்  தமிழிலும்,  நாகரீகத்திலுமா  இன்று  நமது  ராஜதானியில்  சிறுபான்மைத்  தொகுதியோரான  ஒரு  முகமதிய  கவர்னரும்,  மைசூர்,  திருவாங்கூராகிய  இரண்டு  பெரிய  சுதேச  ராஜ்யங்களுக்கு  இரு  முகமதிய  திவான்களும்  வாழ்ந்து  வருகிறார்கள்  என்பதை  யோசித்தால்  விளங்காமற் போகாது.  நமது  சமூகம்  பெரும் பான்மையான  எண்ணிக்கையிருந்தும்  நமக்குள்ள  ஜாதி,  மத  வேறுபாடுகளின்  முக்கிய  காரணத்தாலன்றோ  நமது  கவர்ன்மெண்டாரும்  நம்மை  ஒரு  சமூகமென்று  அழைக்கவும்  கூட  மறுத்த  நம்மை  மகமதியரல்லாதார்  என்று  ஒரு  அனாமதேயப்  பேர்  வழிகளைப்போல்  அழைக்கவும்  அந்தப்  பெருமை  அழியாதிருக்க  அவர்கள்  சட்டம்  முதலிய  தேர்தல்  தஸ்தாவேஜுகளிலும்  அழியாமல்  பதித்தும்  வைத்திருக்கிறார்கள்.  நம்மீது  நமது கவர்ன்மெண்டாருக்கும் மற்றுமுள்ளவர்களுக்குமுள்ள மதிப்பைக் காட்டுவதற்கு அதுவே போதுமான அத்தாக்ஷியாகும்.  இப்படி நமது பெரும்பாலான மக்களின் உழைப்பிலும்  நமது  வரிப்பணத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற சர்க்காரும்  அன்னிய  மதத்தினரும்  இன்னும்  சொல்லப்புக்கால்  அந்நிய  நாட்டினரும்கூட  நம்மைக்  கேவலமாக  எண்ணி,  மதித்து  ஏளனம்  செய்து  புறக்கணித்துவரும்  இந்த  சமயத்திலும்  கூடவா  நமது  பண்டைத்  தமிழும்,  நாகரீகமும்  நம்மை  அத்தகைய  இழிதன்மையிலிருந்து  உத்தரித்து  விடப்போகிற தென்பதை  மறுமுறையும்  சிந்தித்துப்பார்க்க  வேண்டுகிறோம்.  இங்கு  மகம்மதியர்களில்  ஒருவரை நமது  ராஜதானிக்கு  கவர்னராகவும்,  மற்றுமிரு  ராஜ்யங்களினுடைய  திவான்  பதவியைக்  காட்டி  இருப்பது  பொறாமைக்காகக்  கூறியதாக  பாவிக்காமல்  அவர்கள்  மதத்தில்  பிறவியினால்  உயர்வு  தாழ்வு  இல்லை  என்கின்ற  கொள்கையின்  முதிர்ச்சியால்  அத்தகைய  பெறுதற்கரிய  ஸ்தானங்களை  அடைந்தார்கள்  என்று  அவர்கள்  கொள்கைகளைப்  பாராட்டவே  கூறியதாகுமே  ஒழிய  வேறுவிதமாக  அல்ல வென்பதையும்  தெரிவித்துக்  கொள்ள  விரும்புகிறோம்.

நமது  பண்டைத்   தமிழும்  நமது  பண்டை  நாகரீகமும்  சொல்லிக்  கொண்டு  வருவதின்  போக்கைச்  சிந்திக்கும்போது  பள்ளிப்  பிள்ளைகளின்  பழய  பெருமைகளைப்  பேசிக்களிக்கும்  சம்பிரதாயத்தை  ஒக்குமே  ஒழிய  வேறல்ல.  அதாவது  ஒரு  தனவந்தன்  வீட்டுப்பையன்  குதிரையின்  மீது  சவாரி  செய்து  பள்ளிக்கு  வந்து  கொண்டிருக்கும்போது, ஒரு  கிழிந்ததும்  அழுக்கடைந்துள்ளதுமான  ஆடையைத்  தரித்துக்  கொண்டிருக்கும்  ஒரு  ஏழைப்பையன்  þ  தனவந்தரின்  பையனைப்  பார்த்துவிட்டு  எங்கள்  தாத்தாகூட  இதைவிட  ஒரு  உயர்ந்த  குதிரை  மீதுதான்  எப்போதும்  சவாரி  செய்வாரென்று சொல்லி  மகிழ்வதையொக்கும்.  தாத்தா  குதிரை  சவாரி  செய்த  இருப்பிடத்தில்  ஏற்படக்கூடிய  காய்ப்புகூட  இவனிருப்பிடத்தில்  உண்டா  என்றால்  அதுவுமிராது.  இம்மாதிரியான  பிரயோசனமற்ற  விஷயங்களால்  மக்களுக்கு  ஏற்படும்  பயன்  யென்னவென்பதே  நமது  கேள்வி.  இந்த  வித்வ  சிகாமணிகளும்  பண்டிதமணிகளும்  இப்படியாக  பழந்தமிழின்  நாகரீகத்தையும்  பண்டைத்  தமிழின்  மாண்பையும்  பற்றி  ஒரு  பக்கம்  பேசி  வருகையில்  மற்றொரு  பக்கம்  சனாதனிகள்  கூட்டம்  போட்டுக்  கொண்டு  ராஜப்பிரதிநிதியவர்களிடம்  எங்கள்  ஜாதி  மத  வேறுபாடுகளில்  சர்க்கார்  தலையிடக்  கூடாதென  கேட்டுக்  கொள்ளப்போவதும்  அத்தகையக்  கூட்டங்களுக்கு  துணைப்படையாக  நமது  ஜில்லா  போர்டு  தலைவரும்  வைசிராய்  சட்டசபை  மெம்பருமான  ஒரு  செல்வாக்குள்ள  தமிழ்  மக்களின்  மாபெரும்  தலைவரெனப்படுவோரும்  சென்று  வந்தவுடன்  þ  சனாதனிகள்  கூடி  கோவையில்  கூட்டிய  ஒரு   சனாதனிகள்  கூட்டத்திற்கும்  தாம்  வரமுடியாமைக்கு  வருந்துவதாகவும்  þ  கூட்டத்தில்  தமக்கிருக்கும்  ஆர்வத்திற்கும்  அபிமானத்திற்கும்  அறிகுறியான  வாழ்த்துக்  கடிதமும்  விடுத்திருப்பதும்  நடை முறைகளில்  காணப்படுகிறது.

மற்றொரு  பக்கம்  தோழர்  காந்தியார்  வருணாச்சிரம  தர்மத்துக்குள்  புகுத்தப்பட்ட  ஹரிஜன  சேவையின்  பேரால்  அவர்களை  þ  கட்டுத்  திட்டங்களிலிருந்து  மீளாதபடி  முன்னேற்றப்  பணம்  திரட்ட  திக்விஜயம்  செய்து  வருவதுமாக  நிகழ்ந்து  வருகிறது.

இவ்வித  நிகழ்ச்சியால்  மக்கள்  சமத்துவத்திற்கு வழி  ஏற்படாதென்றும்,  ஆகையால்  தங்கள்  வரவு  இத்தருணம்  இம்முறையில்  நல்வரவாகாது  என  அதைப்  பகிஷ்கரிக்க  நாங்கள்  உறுதிகொண்டு  முன்  வந்திருக்கிறோம்.  அதன்  அறிகுறிக்காக  எங்கள்  கையில்  இதோ  கருப்புக்கொடி  பிடித்துக்  கொண்டிருக்கிறோ மென்பதை  மூடப்பழக்கங்களிலாழ்ந்து  உழலும்  மக்கள்  மனதிற்படும்படியாக  நமதியக்கத்தவர்கள்  முன்வந்தால்,  அதுவும்கூட  சமாதானக்  குறைவை  உண்டாக்கும்  என்கிற  பாணத்தைப்  பிரயோகிக்கும்படி  சர்க்காரைத்  தூண்டிவிட  சிற்சில  சுயநலக்  கூட்டங்களும்  அக்கூட்டங்களின்  முறைகளால்  தாங்களும்  முன்னேற  முயலும்  சில  தமிழர்களும்  அதில்  பங்கெடுத்துக்  கொள்ள  முயலுகிற  இக்காலத்திலும்  கூட  நாம்  மக்களுக்குள்  வேற்றுமைகளை  உண்டு  பண்ணக்கூடிய  முறைகளை  கண்டிக்காமலிருக்க  முடியாதென்பதைச்  சொல்லப்  பின்  வாங்கமாட்டோம்.

ஆகையால்  இத்தகைய  நெருக்கடியான  சந்தர்ப்பத்தில்தான்  நமது  சுயமரியாதை  இயக்கத்தவர்கள்  நமது  முழு  மனதையும்,  சக்தியையும்  காலத்தையும்  வினியோகித்து  நமது  லக்ஷியத்தையும்  கொள்கைகளையும்  முன்னிலும்  பன்மடங்கு  அதிகரித்தோங்கி  வளர்த்து  மக்களுக்குள்  பயன்படத்  தக்க  மாதிரியில்  நடைமுறையில்  வெற்றிகரமாக  நடத்திக்  காட்டும்  வண்ணம்  திட்டங்கள்  வகுக்க  ஏற்படுத்தப்பட்ட  காலத்தில்  þ  இடத்துக்கு  விஜயம்  செய்து காரியங்களை  நடத்தி  வைக்க  வேணுமாகக்  கேட்டுக்  கொள்கிறோம்.

புரட்சி  தலையங்கம்  18.02.1934

You may also like...