தரகர்கள் ஒழிப்பு
தரகர்கள் என்பது பெரும்பாலும் வியாபாரிகள் என்பதையே குறிக்கும்.
வியாபாரிகள் என்பவர்கள் அனேகமாக சரக்குகளை உற்பத்தி செய்யும் விவசாயக்காரர்கள், தொழிலாளர்கள் ஆகியவர்களுக்கும் அச் சரக்குகளை வாங்கி உபயோகிக்கும் பொது ஜனங்கள் என்பவர்களுக்கும் இடையில் இருந்து கொண்டு குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிப்பவர்களே ஆவார்கள்.
பணம் சம்பாதித்து முதலாளிகளாக ஆவது என்பதற்கு அல்லாமல் வேறு எந்தக் காரியத்திற்கும் இந்தக்கூட்டத்தார்கள் உலகிற்கு தேவையே இல்லை.
இவர்களாலேயே தான் வெள்ளாமை செய்யும் விவசாயியும், சாமான்கள் செய்யும் தொழிலாளியும் என்றென்றைக்கும் ஏழைகளாயும் தரித்திரர்களாகவும் இருக்க வேண்டி இருக்கிறது. ஆனால் இந்த இரு தரத்தாருமே தான் உலகம் நடைபெறுவதற்கு ஆதாரமாய் இருந்து வருகின்றார்கள். அப்படி இருந்தும் இவர்களது குறைந்த அளவு தேவைகளையோ, நலனையோ கூட கவனிக்க உலகில் எந்த மதமும், எந்த அரசாங்கமும் நாளது வரை கவலை எடுத்துக் கொண்டதே இல்லை.
மனிதன் எப்பொழுது இயற்கைக்கு விரோதமாக வாழ்க்கை நடத்த நினைத்தானோ அல்லது இணங்கினானோ அன்று முதல் மனிதன் பாடுபட வேண்டியவனானான். ஆதலால் மனிதன் பாடுபடுவதைப் பற்றி நாம் பரிதாபப்படவில்லை. ஆனால் அந்தப் பாட்டின் உழைப்பின் பயனை அந்த உழைப்பாளி அடையாமல் சும்மா இருக்கும் (உழைக்காத) சோம்பேரி அடைவதென்றால் இது எந்த முறையில் நியாயமாகும்?
இங்கு இந்த சாக்கில் பொதுஉடமையைப் பற்றிப் பேசவோ, சமதர்மத்தைப் பற்றிப் பேசவோ நாம் வரவில்லை. நீதி, நியாயம் என்பது வேண்டாமா என்று தான் கேழ்க்கின்றோம்.
உழைப்பாளிக்கும், விவசாயிக்கும், பண்டங்களைச் செய்யும் பாட்டாளிக்கும் வீடில்லை, கல்வி இல்லை, சரீர சௌக்கியமில்லை, உடலில் வலிவு இல்லை, அறிவும் இல்லை என்றால் அவர்கள் உலகத்தில் ஏன் இருக்கவேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை.
விளை பொருள்கள் 100க்கு 100 பங்கு விலை அதிகம் விற்று கொள்ளை லாபம் வந்தாலும் விவசாயக் கூலியானவன் பஞ்சகாலத்தில் வாழ்வதைப் போல் வாழவேண்டி இருக்கின்றதைப் பார்க்கின்றோம். அது போலவே உற்பத்தி செய்த சாமான்கள் 100 க்கு 100 பங்கு லாபத்துக்கு விற்று லாபம் பெற்றாலும் தொழிலாளி கைக்கும் வாய்க்கும் கணக்கு சரியாகும்படி தான் வாழ்கிறான். இவை கவனிக்கப்பட வேண்டியதுதான் அரசியல்வாதிகள், சமுதாய இயல் வாதிகள் கடமை என்பதோடு ஒரு நல்ல அரசாங்கத்தினுடையவும், ஒரு உண்மையும் யோக்கியமும் பொருந்திய மதத்தினுடையவும் கடமையாகும் என்பது நமதபிப்பிராயம்.
அதை விட்டுவிட்டு இதெல்லாம் கடவுள் செயல் என்று சொல்லிவிட்டு இதற்காக யாதொரு காரியமும் செய்ய வேண்டியதில்லை என்றும் சொல்லப்படுமானால், தூக்கு மரங்களையும், சிறைக் கூடங்களையும் பெயர்த்து அழித்துவிட்டு கொலைகளையும், திருட்டுகளையும் பற்றி யாதொரு நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளாமல் அவைகளையும் கடவுள் செயல் என்று ஏன் சொல்லிவிடக் கூடாது என்று கேட்கின்றோம்.
இந்த கஷ்டத்தை நிவர்த்திப்பதற்காக நாம் பிரமாதமான முறை எதையும் சொல்ல வரவில்லை. உண்மையிலேயே விவசாயிகள், பூமிக்கு சொந்தக்காரர்களாய் இருக்கின்றவர்கள் முதல் கொண்டு, வாரத்துக்கு குத்தகைக்கு உழுகிறவர்கள் உள்பட விவசாயக் கூலிகள் வரையில் கடன்காரர்களாகவே தரகர்களுக்கும், லேவாதேவிக்காரர்களுக்கும் உழைத்து உழைத்துப் போட்டு விட்டு பட்டினி கிடப்பவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் ஏன் இந்தப்படி இருக்க வேண்டும்? தொழிலாளிகளும் ஏன் இப்படியே இருக்க வேண்டும்? என்பதைச் சிறிது கவலையுடன் யோசித்து தக்கது செய்யுங்கள் என்று தான் சொல்ல வருகின்றோம்.
அதற்கு நாம் சொல்லும் மார்க்கம் மிகமிக சுருக்கமானதும், சுலபமானதுமாகும்தான். இதில் பலாத்காரமோ, சமாதான பங்கமோ இருக்கவோ ஏற்படவோ இடமும் இல்லை.
அதாவது விவசாயக்காரன் சர்க்காரிலேயோ, அல்லது கூட்டுறவு ஸ்தாபனங்களிலேயோ தவிர வேறு எங்கும் கடன் வாங்க மார்க்கமில்லாமலும் அவனுக்கு வேறு தனிப்பட்ட நபர் யாரும் கடன் கொடுக்காமலும் செய்ய வேண்டியது முதன்மையான காரியமாகும். அதோடு விவசாயத்தில் ஈடுபட்ட கூலி ஆட்களுக்குக் கூலி தவிர விவசாயத்தில் ஒரு பங்கு இருக்கும்படி செய்ய வேண்டும்.
பிறகு விளைபொருள்கள், அதாவது ஆகார சாமான்கள், கூட்டுறவு பண்ட சாலைகளே விலைக்கு வாங்கி, அதாவது விவசாயிக்கு கட்டும்படியான விலைக்கு வாங்கி அக்கூட்டுறவு ஸ்தாபனங்கள் மூலமாகவே வாங்குபவர்களுக்குக் குறைந்த லாபத்தில் விற்பனை செய்ய வேண்டும். இதனால் யாருக்கும் கஷ்டம் ஏற்படாது. அதிக லாபம் வைத்து விற்பதானாலும் அந்த லாபம் சாமான் விற்ற விவசாயிகளுக்கும் வாங்குகின்ற ஜனங்களுக்கும் பிரயோஜனப்படும்படியே செய்ய வேண்டும்.
இந்தப்படி செய்வதாயிருந்தால் மிடில்மேன் அதாவது தரகன் அல்லது வியாபாரி என்கின்ற கூட்டத்திற்கு நாட்டில் தேவையே ஏற்படாமல் போய்விடும். அப்போது அனாவசியமாக ஏராளமான பணக்காரர்கள் உற்பத்தி ஆகமாட்டார்கள் என்பது மாத்திரமல்லாமல் உண்மையிலேயே விவசாயக்காரர்களுக்கு நஷ்டமும் கஷ்டமும் இல்லாமல் போவதுடன் மனிதத் தன்மைக்கு வேண்டிய சகல காரியங்களும் விகிதாச்சாரம் அவனும் அடைய சவுகரிய மேற்பட்டுவிடும்.
தொழிலாளிகள் விஷயத்திலும் மனித சமூகத்துக்கு வேண்டிய அனுபவ சாமான்கள் யாவும் இக்கூட்டுறவு முறையினாலேயே செய்யப்பட்டு அக்கூட்டுறவு முறையினாலேயே வினியோகிக்கப் படுமானால், மில் முதலாளிகள் என்கின்ற கூட்டம் எப்படி உற்பத்தியாகும்? அவர்களுக்கு வேலைதான் ஏது? ஒரு வஸ்த்துவின் லாபத்தை அந்த வஸ்துவை பாடுபட்டு செய்தவனாவது அல்லது பாடுபட்ட பணத்தைக் கொடுத்து வாங்குபவனாவது அனுபவிக்க வேண்டுமே அல்லாமல் சும்மாயிருக்கும் சோம்பேறி தரகன் ஏன் அனுபவிக்க வேண்டும் என்றுதான் கேட்கின்றோமே ஒழிய யாரையும் நாம் தூக்கில் போடும்படியோ, சிறையில் வைக்கும்படியோ சொல்ல வரவில்லை.
பிறகு தொழிலாளிகள் இருக்கும் இடங்களில் குறைந்தது 5 மைல் சுற்றளவு தூரத்துக்காவது கள்ளுக்கடைகளோ, மார்வாடிகளோ, நாட்டுக்கோட்டையார்களோ இல்லாமல் இருக்கும்படி செய்துவிட்டு அவர்களுக்கு தேவையான பணத்தைத் தொழிற்சாலை நிர்வாகிகளிடமே வாங்கிக்கொள்ளும்படி செய்து விட்டு லாபத்தில் ஒரு பகுதியோ அல்லது அத்தொழிலாளிக்குப் போதிய அளவு தாராளமான கூலியைக் கொடுத்து அக்கூலியை சாமான் மீது வைத்து விற்கும்படியாகவோ செய்து விட்டால் தொழிலாளிகளைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது.
இந்த இரண்டு காரியங்கள், அதாவது விவசாயி விஷயமும் சாமான்கள் உற்பத்தி செய்யும் தொழிலாளி விஷயமும் இந்த முறையில் முடிவு செய்யப்பட்டுவிட்டால் உலகில் வேறு எவ்விதமான நெருக்கடிகளும் இருக்காது என்பதோடு அரசியல் நிர்வாகத்துக்கும் இவ்வளவு கஷ்டமும் பளுவும் இருக்க நியாயமும் இல்லாமல் போய்விடும்.
இதற்காக இப்போது நமது அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையெல்லாம் சமீபத்தில் ஜர்மனி சர்க்கார் செய்திருப்பது போல் கூட்டுறவு ஸ்தாபனங்களை பலப்படுத்தி அவைகளை இன்னமும் சற்று அதிகமான சர்க்கார் மேல் பார்வை பார்த்து நிர்வகிப்பது என்ற ஒன்றே போதுமானது என்று சொல்லுவோம்.
இன்று இந்த நாட்டில் கு.கு.ஃ.இ., ஆ.அ.,M.அ., படித்து விட்டு மக்கள் ஆயிரம், பதினாயிரம் கணக்காய் வேலை இல்லாமல் கஷ்டப்படுகின்றதை நேரில் பார்க்கின்றோம்.
இவர்களில் அனேகர் போலீஸ் கான்ஸ்டேபிள் வேலைக்குக் கூட வரத் தயாராய் இருக்கிறார்கள். மாதம் 15 ரூபாய் 20 ரூபாய்க்கு குமாஸ்தா மேஸ்திரி வேலைக்குக் கூட வர கெஞ்சுகின்றார்கள்.
இவர்களுக்கு ஒரு ஏற்பாடு செய்யாமல் எத்தனை நாளைக்கு விட்டு வைத்துக் கொண்டு இருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை.
மேலும் இந்த நாட்டில் ஏதாவது அரசியல் கிளர்ச்சி உண்மையில் இருக்கின்றது என்று சொல்லப்படுமானால் இந்த மாதிரி வேலையில்லாத ஆட்களுடைய கஷ்டமே அப்படிப்பட்ட அரசியல் கிளர்ச்சிக்குக் காரணமாகும். ஆதலால் அப்படிப்பட்ட தொல்லைகளும், ஒருவாறு ஒழிந்து ஜனங்கள் சமாதானத்தோடு வாழுவதற்கும் அனுகூலமாயிருக்கும் என்பது நமதபிப்பிராயம்.
இன்று நடக்கும் கூட்டுறவு ஸ்தாபனங்கள் என்பவை இந்த மாகாணத்தில், தமிழ்நாட்டைப் பொருத்தவரை கிரிமினலுக்கு இடமில்லாமல் நடைபெறுகிறது என்பது ஒரு அளவுக்கு திருப்தி ஆனாலும் ஆந்திர தேசத்தில் பெரும்பாலும் மோசடியாகவே நடைபெற்ற அனேக கேசுகள் கிரிமினலுக்கு போவதாகக் கேழ்விப்பட்டோம்.
ஆதலால் கூட்டுறவு ஸ்தாபனங்கள் இலாக்கா சற்று விரிவடைந்து இன்னமும் அநேக துறைகளில் பிரவேசித்து தக்க மேற்பார்வையுடனும் உண்மையான நல்ல எண்ணத்துடனும் ஏழை மக்களுக்கும், பாடுபடும் உழைப்பாளி மக்களுக்கும் உதவும் படியாகவும் நடைபெறச் செய்ய வேண்டும் என்கின்ற ஆசையினாலே இதை எழுதுகின்றோம்.
பகுத்தறிவு துணைத் தலையங்கம் 02.12.1934