சுயமரியாதைத் திருமணங்கள்
பௌனாம்பாள் அழகப்பா திருமணம்
தோழர்களே! இன்று மணமகனாக வீற்றிருக்கும் எம்.கே. அழகப்பா “”நாட்டுக்கோட்டை செட்டிமார்” வம்சத்தைச் சேர்ந்தவர். மணமகள் பௌனாம்பாள் “”வேளாள” வம்சத்தைச் சார்ந்தவர். இந்த மணம் புரோகிதச்சடங்கு முதலிய அனாச்சார வழக்கங்களின்றி நடைபெறுகிறது. மணமக்கள் இருவரும் தாங்களே மனமொத்து மண ஒப்பந்தம் செய்து கொள்ள முன் வந்தது பாராட்டத்தக்கது. வைதீகர்கள் பழைய சாஸ்திரத்தை அனுசரித்து அறிவுக்கும், ஞாயத்திற்கும் பொருந்தாத முறையில் நூற்றுக்கு 90 கல்யாணங்களைச் செய்து விடுகின்றனர். அது கடைசியில் யாதொரு பிரயோஜனத்தையும் அளிக்காமல் கஷ்டத்தையே விளைவிக்கின்றது. யெப்படியாவது கல்யாணம் ஆனால் போதுமென்று முயர்ச்சிக்கின்றனர். தாங்களே தங்களுக்கு இஷ்டமானவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள மணமக்களுக்கு சுதந்தரம் கிடையாது. பெண் கொள்வதை சந்தையில் மாடுவாங்குவதாக நினைத்து செய்து விடுகின்றனர். பொருத்தம் பார்ப்பதில் மணமக்களுக்கு இருக்க வேண்டிய மனப் பொருத்தம் பார்க்கப் படுவதில்லை.
வழியே போகும் ஒரு பார்ப்பானையோ, வள்ளுவனையோ கூப்பிட்டுப் பொருத்தம் பார்க்கச் சொல்லி மணத்தை நடத்தி விடுகின்றனர். மாப்பிள்ளை 7லீ அடியும் பெண் 2லீ அடியுமாக இருந்தாலும் பரவாயில்லை பார்ப்பான் சொல்லிவிட்டால் போதும். போன உடனேயே அறுத்துவிட்டு வந்து விட்டால் தலைவிதியென்று சொல்லிவிடுவார்கள். பெண்களும் அவ்வாறே நினைத்துக் கொண்டு முக்கி முணகி மூலையில் கிடக்க வேண்டியது தான். இந்த அனியாயத்தை பொருத்துக் கொண்டிருக்கக் கூடாது. கூடிய சீக்கிரம் பகுத்தறிவு பெற்று விவாக தம்பதிகளான அழகப்பா பௌனாம்பாளைப் பின்பற்றி நடப்பீர்களாக.
குறிப்பு: 16.09.1934 திருச்சி தமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்கத்தின் ஆதரவில் பௌனாம்பாள் அழகப்பா திருமணத்திற்கு தலைமையேற்று ஆற்றிய சொற்பொழிவு.
பகுத்தறிவு சொற்பொழிவு 23.09.1934