ராஜதுரோக  குற்றம்:  பெரியாரின்  ஸ்டேட்மெண்ட்

 

1934  ஆம்  ஆண்டு  ஜனவரியிலிருந்து  ஜூன்  வரையிலான  முதல்  தொகுதி  இதுவாகும்.  அடக்கு  முறைக்கு  உள்ளான  “குடி அரசு’  1933  ஆம்  ஆண்டு  நவம்பர்  மாதத்திலேயே  தற்காலிகமாக  நிறுத்தப்பட்டு  விட்டதால்,  இத்  தொகுப்பில்  இடம்  பெற்றுள்ள  தலையங்கங்கள்  பெரியாரின்  உரைகள்  அனைத்தும்  “புரட்சி’  வார  இதழில்  இடம்  பெற்றவையாகும்.  1933  டிசம்பர்  30  இல்  “இராஜ  துரோக’  குற்றத்தில்  பெரியார்  கைது  செய்யப்பட்டு,  சிறையிலிருந்த  காலகட்டமும்  இதுதான்.

சென்னை  மாகாணத்தில்  ஆட்சியிலிருந்த  நீதிக்கட்சி  ஆட்சியின்  பதவிக்  காலம்  இந்த  ஆண்டோடு  முடிவுக்கு  வர  இருந்தாலும்  அன்றைய  பல்வேறு  அரசியல்  நிகழ்வுகளினால்  அதன்  ஆயுட்காலம்  1937  வரை  நீடிக்கப்பட்டது.  அப்போது  பொப்பிலி  அரசர்  மாகாண  முதலமைச்சர்.

தன்  மீது  சுமத்தப்பட்ட  “இராஜ  துவேஷ’  வழக்கினையொட்டி,  கோவை  மாவட்ட  ஆட்சித்  தலைவர்  ஜி. டபிள்யூ  வெல்ஸ்,  அய்.சி.எஸ். முன்  பெரியார்  தாக்கல்  செய்த  “”ஸ்டேட்மென்ட்”  இந்தத்  தொகுதியில்தான்  இடம்  பெற்றுள்ளன.  ஒரு  கொள்கையைப்  பரப்பும்போது  அதற்கு  இடையூறு  விளைவிப்பவர்களால் அடக்குமுறைக்கு  உள்ளாக  வேண்டியது  அவசியம்  தான்  என்று  கூறும்  பெரியார்,  இப்படிப்பட்ட  அடக்குமுறையை  வரவேற்குமாறு  தனது  தோழர்களுக்கு  விளக்கிட  கிடைத்த  சந்தர்ப்பமாகவே  இதைக்  கருதி  மகிழ்வதாக  அதில்  குறிப்பிடுகிறார்.

கோவையிலும்,  பிறகு  ராஜமகேந்திரபுரம்  சிறையிலும்  அடைக்கப்பட்ட  பெரியார்  இதே  ஆண்டு  மே  15  ஆம்  தேதி,  விடுதலையானார்.  விடுதலையான  பிறகு,  பெரியார்  பல்வேறு  நிகழ்ச்சிகளில்  நிகழ்த்திய  உரை,  இத்  தொகுப்பில்  இடம்  பெற்றுள்ளது.  தனது  சிறை  அனுபவங்களை  விளக்கி  பெரியார்,  விடுதலையான  அடுத்த  இரு  நாட்களில்  ஈரோட்டில்  நிகழ்த்திய  உரையில்  இவ்வாறு  குறிப்பிடுகிறார்:

“”குடி அரசு  பத்திரிகையில்  என்னால்  எழுதப்பட்ட  ஒரு  சாதாரணமானதும்,  சப்பையானதுமான  வியாசத்திற்காகத்தான்  நான்  சிறைக்குப்  போக  நேரிட்டதே  தவிர,  மற்றபடி  செய்யத்தக்க  ஒரு  சரியான  காரியம்  செய்துவிட்டு,  சிறைக்குப்  போகவில்லை.  சர்க்கார்  “குடி அரசு’ப்  பத்திரிகையின்  பழைய  இதழ்களைப்  புரட்டிப்  பார்த்தால்,  என்னை  வருடக்கணக்காய்  தண்டிக்கக்  கூடியதும்,  நாடு  கடத்தக்  கூடியதுமான  வியாசங்கள்  நூற்றுக்கணக்காக  தென்படலாம்.  ஆனால்,  அவர்கள்  அந்தக் காலத்திலெல்லாம்  கவனித்ததாக  எனக்குத்  தெரியவில்லை.  அதற்குக்  காரணம்  சுயமரியாதைக்  கொள்கையை  மக்கள்  ஆதரிக்கத்  தொடங்கி  விட்டதுதான்”  என்று  குறிப்பிடுகிறார்.  தமது  சிறைவாசத்துக்கு  தியாக  முத்திரை  பதிக்க  விரும்பாத  பெரியார்,  பாமர  மக்கள்  வேண்டுமானால்  பாராட்டலாம்.  ஆனால்  அறிவாளிகள்  பாராட்ட  ஏதுமில்லை  என்று  கூறுகிறார்.

இக்காலகட்டத்தில்  சுயமரியாதை  சமதர்ம  சங்கங்களும்,  சமதர்ம  பிரச்சாரங்களும்  வேகமாகப்  பரவின.  சென்னையில்  தோழர்  சிங்காரவேலு  தலைமையில்  நாத்திகர்  மாநாடு  நடத்தப்பட்டது.  மாகாணம்  முழுதும்  110  சுயமரியாதை  சமதர்ம  சங்கங்கள்  உருவாகியதாக  “”புரட்சி”யின்  தலையங்கம்  கூறுகிறது.  மே  நாள்  பற்றிய  விரிவான  தலையங்கம்  எழுதி,  கிராமங்கள்,  நகரங்கள்  தோறும்  மே  தினக்  கொண்டாட்டங்களை  நடத்துமாறு  “புரட்சி’  அழைப்பு  விடுத்தது.

ஒத்துழையாமை  இயக்கத்தை  திரும்பப்  பெற்ற  காந்தியார்,  சட்டமறுப்பு  இயக்கத்தையும்,  “கடவுள்  தம்மிடம்’  கூறியதாகக்  கூறி  நிறுத்திக்  கொண்டதை  விமர்சித்தும்  காங்கிரஸ்  சுயராஜ்யக்  கட்சிகளின்  சந்தர்ப்ப  வாதங்களை  விரிவாக  அலசியும்  பல  தலையங்கங்கள்  எழுதப்பட்டுள்ளன.  வட்டமேசை  மாநாட்டில்  காங்கிரசின்  குழப்பங்களையும்,  தீண்டப்படாத  மக்களுக்கு  எதிராக  நடத்திய  சதியையும்  “சுயராஜ்யக்  கட்சி’  என்று  தலையங்கம்  வெளிப்படுத்தியிருக்கிறது.

சிறையிலிருந்து  விடுதலையான  பெரியார்,  ஜஸ்டிஸ்  கட்சி  கூட்டம்  ஒன்றில்  பேசுகையில்  “”அக்கட்சி  பொது  மக்கள்  கட்சியாக  இல்லாமல்,  ஜமீன்தார்கள்  முதலாளிகள்  கட்சியாகிவிட்டது”  என்று  இடித்துக்  காட்டியதோடு,  இதை  பொய்யாக்கிக்  காட்ட  வேண்டும்  என்றும்  வலியுறுத்தினார்.  அதே  உரையில்,  “”வெறும்  ஸ்தாபனங்கள்  அமைப்பதால்  ஒரு  பயனும்  ஏற்பட்டுவிடாது.  ஸ்தாபனங்கள்  பெரிதும்  சுயநலக்காரர்களின்  விளம்பரத்துக்கு  ஒரு  சாதனமாகும்.  உழைப்பும்  வேலை  செய்து  காட்டுவதுமேதான்,  நமது  எதிரிகளைத்  தோற்கடித்து,  நமக்கு  நல்ல  வெற்றியைக்  கொடுக்கும்”  என்று  குறிப்பிட்டிருப்பது  அமைப்புகளைப்  பற்றிய  பெரியாரின்  பார்வையை  தெளிவுபடுத்துகிறது.

பால்ய  விவாகத்தை  தடை  செய்யும்  சட்டம்  நிறைவேற்றப்பட்டதோடு,  தீண்டாமை  ஒழிப்பு,  கோயில்  நுழைவு  உரிமைச்  சட்டங்கள்  இந்திய  சட்டசபையில்  வரவிருந்த  சூழலில்  இவற்றை  தடுப்பதற்கு  பார்ப்பனர்கள்  கும்பகோணம்  உட்பட  பல  ஊர்களில்  யாகங்களை  நடத்தினர்.  ஆடுகளின்  “பீஜத்தை’  (உயிர்  உறுப்புகள்)  நசுக்கி,  சித்திரவதை  செய்து  “மோட்சத்துக்கு’  அனுப்பும்  சித்திரவதை  யாகத்தைக்  கண்டித்து  “”ஜீவரக்ஷõ  பிரச்சார  சபை’  எனும்  அமைப்பு  ஆரணிக்கு  அருகே  உள்ள  கடலாடி  எனும்  கிராமத்தில்  கூட்டம்  ஒன்றை  நடத்தியது.  திரு.வி.க. தலைமையில்  நடந்த  அந்தக்  கூட்டத்தில்  “ஜீவகாருண்யம்’  எனும்  தலைப்பில்  பெரியார்  நிகழ்த்திய  சிறப்பான  உரை  இத்தொகுதியில்  இடம்  பெற்றுள்ளது.

“ஜீவகாருண்யம்’  என்ற  சொல்லுக்கு  கூறப்படும்  பொதுவான  கருத்துக்கு  எதிர்  சிந்தனை  கொண்டவர்  பெரியார்  என்றாலும்,  “அந்த  ஜீவகாருண்யம்’  என்ற  சொல்லாடலை  சமூகப்  பார்வையில்  மக்களிடம்  பெரியார்  எடுத்துரைத்த  அணுகுமுறை  பெரியாரியலாளர்களுக்கு  வழிகாட்டும்  ஒளிவிளக்காகும்.

சுமார்  ஒரு  மாத  காலம்  நாளேடாக  வெளிவந்த  “பகுத்தறிவு’  நிறுத்தப்படுகிறது  இதற்கான  அறிவிப்பை  “புரட்சி’  பதிவு  செய்கிறது.

அக்காலத்தில் பிரபல சைவ சொற்பொழிவாளரான  கோவை  சி.கே.சுப்ரமணிய  முதலியார்,  “”தமிழ்நாடு”  பத்திரிகையில்  சுயமரியாதைக்காரர் களும்  “நல்ல  நாள்,  ராகுகாலம்’  பார்ப்பவர்கள்  என்ற  ஒரு  கட்டுரை  எழுதினார்.  அதற்கு சரியான பதிலாக “சைவர்கள் மனப்பான்மை’ என்ற தலைப்பில்  வெளிவந்த தலையங்கமும், தீண்டப்படாத மக்களை கோவிலுக்குள்  அனுமதிப்பது,  வர்ணாஸ்ரமத்துக்கு  எதிரானது  என்று  பூரி  சங்கராச்சாரி  தேவகோட்டையில்  பேசியதற்கான  கண்டனமும்,  இத்தொகுப்பில்  குறிப்பிடத்தக்கவையாகும்.

இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  சுயராஜ்யக்  கட்சித்  தலைவர்  எஸ்.சத்திய மூர்த்தி  சாஸ்திரி  போட்டியிட  முயலுவதைக்  குறித்து  விடுதலைக்குப்  பின்  பெரியார்  எழுதிய  தலையங்கத்தில்  இவ்வாறு  குறிப்பிடுகிறார்:

“”சத்தியமூர்த்தி  சாஸ்திரியைவிட  மேலான  யோக்கியதையும்  அந்தஸ்தும்  உடையவர்கள்  பார்ப்பனரல்லாதாரில்  எத்தனையோ  பேர்  இருக்கிறார்கள்  என்றாலும்,  அவர்களில்  பெரும்பாலோர்  தங்கள்  சுயநலத்துக்காக  வகுப்பு நலனை மிக குறைந்த விலையில் விற்கக் கூடியவர்கள் என்று  சொல்லலாம்  என்பது  நமது கருத்து.  ஆனால்,  நமது  சத்தியமூர்த்தி  சாஸ்திரிகளோ  எந்தக்  காலத்திலாவது எவ்வளவு  நெருக்கடியான  சொந்த  அசௌகரியத்திலாவது  பார்ப்பனியத்தையோ,  பார்ப்பன  ஆதிக்கத்தையோ  ஒரு  கடுகளவுகூட  விட்டுக்  கொடுத்தார்  என்று  சொல்ல  முடியாது.  இந்த  வழக்கமும்,  யோக்கியதையும்  தோழர்  சத்தியமூர்த்தி  சாஸ்திரியிடம்  மாத்திரமல்ல,  100க்கு  99 1/16  பார்ப்பனர்களிடத்திலும்  காணலாம்.  இதுவே  தான்  இந்நாட்டில்  பார்ப்பனீயம்  நிலைத்திருப்பதற்கு  காரணம்  என்பதோடு,  இந்தக்  குணம்  பார்ப்பனரல்லாதாரிடம்  இல்லாததாலேயே  அவர்களது  முயற்சிகள்  அடிக்கடி  கவிழ்க்கப்பட்டுவிடுவதற்கும்  காரணம்  என்று  சொல்லலாம்.”

இது  கல்வெட்டுகளில்  பொறிக்கப்பட  வேண்டிய  சாசனமாகும்.

பதிப்பாளர்

You may also like...