ராஜி முறிவு
தற்காலம் இந்திய நாட்டில் நடைபெறும் அரசியல் கிளர்ச்சி சம்மந்தமான சட்டமறுப்பு சத்தியாக்கிரகம் முதலியவைகள் விஷயமாய் சர்க்காருக்கும், திரு. காந்தியாருக்கும் ராஜி செய்வதாக சில கனவான்கள் தோன்றி ஒரு மாத காலமாக மக்களின் கவனத்தை அதில் செலுத்தச் செய்து வந்தார்கள். ராஜி விஷயம் வெற்றி பெற்று விட்டால் அதன் பெருமை எங்கு தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கு இல்லாமல் போய் விடுமோ என்று கருதி “ராஜிக்கு அஸ்தீவாரமானவர் மகாகனம் பட்டம் பெற்ற சீனிவாச சாஸ்திரி யவர்களே யாவார்கள்” என்று பார்ப்பனப் பத்திரிகைகள் பிரசாரம் செய்தன. அது மாத்திரமல்லாமல் சென்னையிலிருந்து திரு. எ. ரங்கசாமி ஐயங்கார் தனக்கும் அதில் பங்கிருக்கட்டும் என்று போய் உள்ளே கலந்து அநேக அசோசியேடட் பிரஸ் செய்தியும் பிரீபிரஸ் செய்தியும் “நமது நிருபர்” செய்தியும் கலம் கலமாய் வெளியிட்டு பிரபலப்படுத்தினார். கடைசியில் நடந்த காரியம் ரூ. 1க்கு 16 அணாவாக இருந்தது ரூ. 1க்கு 192 பையாக ஆனதைத் தவிர வேறில்லை.
ஏனெனில் உண்மையில் ஏதாவது விவகாரம் இருந்தால் பைசல் செய்ய யாருக்காவது வேலையிருக்கக்கூடும். அதுவோ, தற்கால கிளர்ச்சி யில் ஒன்றும் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது. இரண்டா வதாக பஞ்சாயத்தில் பிரவேசித்தவர்களும் சத்தியாக்கிரகத்திலும், சட்ட மறுப்பிலும் வெறுப்புக் கொண்டவர்கள். அதாவது அவைகள் அவசிய மற்றவை என்று கருதினவர்கள், நமது மாகாணத்தில் உள்ள பல அரசியல் தலைவர்கள் தேசீயவாதிகள் என்பவர்கள் எப்படி இந்த சட்ட மறுப்பும் சத்தியாக்கிரகமும் சரியானதல்ல என்று சொல்லி விட்டு அதை விட்டு விலகிக் கொண்டார்களோ அது போலவும் மற்றும் மிதவாதிகளும், ஜஸ்டிஸ் காரர்களும், சுதந்திர தேசீய வாதிகளும் சட்டமறுப்பும் சத்தியாக்கிரகமும் நாட்டிற்கும், மக்களுக்கும் கேடு சூழ்வதென்றும், உடனே அடக்கப்பட வேண்டியதென்றும் சர்க்காருக்கு யோசனை சொல்லி, அதற்காக தங்கள் உதவியையும் சர்க்கார் தேடுவதாயிருந்தால் தங்களுக்கு இன்னின்னது செய்ய வேண்டும் என்றும் சர்க்காருடன் வியாபாரம் பேசினார்களோ அது போன்றதான மற்ற மாகாணங்களிலுள்ள மக்களில் இந்த ராஜிக்குப் புலப்பட்ட சமாதானப் பெரியார்கள் என்பவர்களு மாவார்கள். அவர்கள் ராஜிக்குப் புறப்பட்ட காரணம் எல்லாம் சத்தியாக்கிரகமும் சட்டமறுப்பும் தேசத்திற்கு தொல்லை விளைவிக்கின்றது என்று கருதிதான் புறப்பட்டார் களே ஒழிய சுயேச்சை என்பதை வாங்கப் புறப்பட்டவர்கள் அல்ல. ஆதலால் அவற்றை நிறுத்த திரு. காந்தியிடமும் திரு. வைசிராயிடமும் தூது போனார்கள். திரு. வைசிராய் அவர்கள் “அரசியல் சுதந்திர விஷயத்தில் நான் சொல்ல வேண்டியவைகள் எல்லாம் 3, 4 மாதங்களுக்கு முன்னாலேயே சொல்லிவிட்டதைத் தவிர வேறு ஒன்றும் புதிதாக சொல்ல வேண்டிய தில்லை” என்று சொல்லிவிட்டார். திரு. காந்தியவர்களோ “என்னுடைய கருத்தெல்லாம் சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே அனுப் பின இறுதிக்கடிதத்தின் மூலம் 11 நிபந்தனைகள் போட்டு எழுதிக் கொடுத்து விட்டேன். வேண்டுமானால் தற்கால சாந்தியாக 11ல் பகுதி குறைத்துக் கொண்டு ஐந்தரை நிபந்தனைகளுக்கு சர்க்கார் கட்டுப் பட்டால் யுத்தத்தை நிறுத்தி விடுகிறேன்” என்று சொல்லி விட்டார். மற்றும் உப தலைவர்களும் அதற்கு மேலொப்பம் போட்டு விட்டார்கள். இந்த நிலை யில் இரண்டு கட்சியாருக்கும் இன்று யாதொரு கஷ்டமும் இல்லாம லிருக்கின்றது.
அதாவது இன்றைய அரசியல் யுத்தப்பலன் என்னவென்றால் திரு காந்தியாரும் அவரது பிரதம சகாக்களும் சௌக்கியமாகயிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு காசு நஷ்டமும், ஒரு சிறு தொந்திரவும் கூடயில்லை. அது போலவே வைசிராய் பிரபுவுக்கும் ஒரு கவலையும் இல்லை. தோள் தினவெடுத்த பலசாலிக்கு சரீராப்பியாச வேலை கிடைத்தது போல் நல்ல வேட்டை கிடைத்தது. திரு. காந்தியார் தேச மக்களைப் பார்த்து “சட்டங் களை மீறுங்கள், அடிபடுங்கள், சிறை செல்லுங்கள், தியாகமில்லாமல் ஒன்றும் வராது, உங்களைப் பாராட்டுகிறேன்” என்று சொல்லி உத்திரவு கொடுத்து உற்சாகப்படுத்துவதுடன் அவர் பொறுப்பு நீங்கி விட்டது. வைசிராய்க்கு, தேச மக்கள் பணத்தில் உத்தியோகம் பார்க்கும் – தேச மக்கள் பிரதிநிதிகளிடம் “சட்டத்தையும், சமாதானத்தையும் காப்பாற்ற உங்களாலானதையெல்லாம் செய்யுங்கள். பெரிய ஆபத்து காலத்தில் சிறிய தர்மத்தையும், நீதியையும் பார்த்தால் முடியாது. அடித்தாவது, மண்டையை உடைத்தாவது, சுட்டாவது நிலைமையை சமாளித்து மக்களைக் காப்பாற்றுங்கள். இதுவரை நீங்கள் செய்ததெல்லாம் நிரம்ப சரி உங்களைப் பாராட்டுகிறேன்” என்று சொல்லி விட்டார். இருவரும் இன்று பெருமையுடனும், கீர்த்தியுடனும் விளங்குகின் றார்கள். இவற்றால் நாட்டுக்கு ஏற்பட்ட பலன் என்ன என்று பார்த்தால் ஜனங்கள் கஷ்டப்படுகின்றார்கள். வெள்ளைக்கார வியாபாரிகளும், இந்திய வியாபாரிகளும் நஷ்டமடைகிறார்கள். வெள்ளைக்காரத் தொழிலாளிகளும், இந்தியத் தொழிலாளிகளும் தொழிலில்லாமல் ஜீவனத்துக்கு வகையின்றி கஷ்டப்படு கின்றார்கள். அதிகாரிகளும் சிலர் அடிபட்டுச் சுட்டுக் கொல்லப் பட்டு விட்டார்கள். ஜனங்களிலும் பலர் அடிபட்டு சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். இதுவரை ஏற்பட்ட லாப நஷ்டம் இருவருக்கும் சமம் என்று தான் சொல்ல வேண்டுமேயொழிய யாருக்கும் கம்மி ஜாஸ்தி என்று சொல்வதற்கில்லை. இந்த யுத்தம் இனியும் இரண்டு மூன்று மாதத்திற்கு தொடர்ந்து நடந்தாலும் இந்தப் பலனைத்தான் அல்லது இதை அனுசரித்த பலனைத்தான் அடையக்கூடும் என்பதாகவே தோன்றுகின்றது. எப்படி இருந்தாலும் நம்மைப் பொறுத்தவரை அடிதடியும் உயிர்ச் சேதமுமில்லாமல் இன்னும், கொஞ்ச நாளைக்கு தொடர்ந்து இந்த யுத்தம் நடந்தால் ஏழை மக்களுக்கு அனுகூலம் என்பதாகத் தோன்றுகின்றது.
எப்படியெனில் வியாபார மந்தமானாலும், ஆகாரப் பொருள்களின் விலைவாசிகள் ஏழைகளுக்கு அனுகூலமாயிருக்கிறது. பணக்காரர்களின் திமிர் சற்றுக் குறைவு பட்டு வருகின்றது. பணமில்லாத வியாபாரிகளுக்கும் இயக்கத்தின் மீது பழியைப் போட்டுவிட்டு ஏதோ ஒரு விதத்தில் தங்கள் வரவு செலவை ஒழித்து கணக்குகளைச் சரிக்கட்டிவிட்டு கிளர்ச்சி முடிந்த பிறகு புதுக்கணக்குப் போட சவுகரியமாயுமிருக்கும். ஆகவே யுத்தம் தொடர்ந்து நடப்பதே நன்மையெனக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆகையால் ராஜி முறிவுக்கு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். மற்றபடி நமது இந்தியர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளவும், இந்தியப் பிரதிநிதிகள் அரசாங்க உத்தியோகங்களையும், இலாக்காக்களையும் குறைத்து நிர்வாகத்தை சுருக்கிக் கொள்ளவும் சம்மதிக்கின்ற போது தானா கவே வரி குறைந்து விடும். அரசியல் உரிமையும் நாணயமாய் பயன்படும். ஆதலால் இப்பொழுது வரியைப் பற்றியோ, உரிமையைப் பற்றியோ கவலைப்படுவது பயனற்றதேயாகும் என்பது நமதபிப்பிராயமாகும்.
மற்றபடி பூரண சுதந்திரங்கள் என்பதும், நம் நாட்டிலுள்ள ஜாதிமத வித்தியாசங்களும், உயர்வு தாழ்வுகளும் நீங்கினால்தான் கிடைத்த சுதந்திரங் களை மக்கள் நலத்திற்கும் தேசத்தின் நலத்திற்கும் பயன்படுத்த முடியுமே யொழிய இந்த நிலைமையில் அவனவன் சுயநலத்திற்கும் சுய ஜாதி நலத்திற் கும்தான் ஒவ்வொருவனும் உபயோகிப்பான் என்கின்ற பயமிருப்பதால் யாராவது ஒருவன் அதிகாரம் வகிக்கவோ அரசாங்கம் நடத்தவோ நாம் கண்டிப்பாய் விடமுடியாதவர்களாய் இருப்பதால் பூரண சுதந்திரத்திலும், அதிக சீர்திருத்தத்திலும் நமக்கு இப்போது ஆத்திரமில்லை. ஆகையினால் இப்போது ஏதோ இரு கூட்டத்தாருக்கும் இருக்கும் செல்வாக்குகளை ஜமின்தார்கள் ஆட்டுக் கடாச் சண்டை, சேவல் சண்டை ஆகியவைகள் நடக்க விட்டு வேடிக்கை பார்ப்பது போல் இருப்பதால் அவ்விரு திறத்தா ருக்கும் எவ்வித கஷ்டமும், நஷ்டமும் இல்லை. நாட்டுக்கும் இந்த சண்டை யினால் பிரமாத லாப நஷ்டமும் இல்லை என்றாலும் இதிலிருந்தும் மக்கள் கற்றுக் கொள்ளத்தக்க படிப்பினைகள் அதிகம் உண்டாகி அதன் பின்னால் நமது இயக்கத்திற்கும் பல எதிர்பாராத நன்மைகள் ஏற்படக்கூடும் என்றும் நாம் நினைத்து கிளர்ச்சி தொடர்ந்து நடக்கும் வரை நடக்கட்டும் என்றும் மறுபடியும் ஆசை கொண்டு முடிக்கின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 14.09.1930