காந்தியார்
திரு. காந்தியார் சிறையில் மூன்று வேலைகள் செய்கிறார். அவற்றுள் ஒன்று தக்ளியில் நூல் நூற்பது. மற்றொன்று பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது. வேறொன்று இந்த இரண்டும் செய்து மீதி இருக்கும் நேரத்தில் ராமநாம பஜனை செய்வது. ஆகவே அவரது பகுத்தறிவுக்கு நாம் வேறு உதாரணம் காட்ட வேண்டியதில்லை யென்றே நினைக்கின்றோம். இம் மூன்று காரியங்களும் இந்தியாவின் பொது வாழ்க்கையையும் முன்னேற்றத் தையும் முன்னுக்குக் கொண்டு போகுமா? பின்னுக்குக் கொண்டு போகுமா வென்பதை யோசிக்கத்தக்கது. திரு. காந்தியிடம் குருட்டுப் பக்தியுள்ளவர் களுக்கு நாம் இப்படிக் கேட்பது சற்று கஷ்டமாக இருக்கலாம். தக்ளியில் நூல் நூற்பது எதை உத்தேசித்து என்று இதுவரை யாராவது தெரிந்தார்களா? தக்ளி நூல் வெள்ளைக்கார ஆட்சியின் கொடுமையையும் இந்தியாவின் பொருளாதார கொள்ளையையும் என்ன செய்து விடக்கூடும் என்பது நமக்கு விளங்க வில்லை. என்ன சொன்னாலும் தட்டிச் சொல்லாமல் கேட்பதற்குச் சில மக்கள் இருக்கின்றார்கள் என்பதைத் தவிற மற்றபடி அதில் என்ன உண்மை இருக்கின்றது. இரண்டாவதாக பகவத்கீதைக்கு ஆங்கில மொழி பெயர்ப்பு வேலை. இதுமுன் ஒரு தடவை டாக்டர் பெசண்டம்மையால் செய்தாய் விட்டது. இரண்டாவதாக திரு. திலகரால் ஒரு தடவை கீதா ரகசியம் என்பதாக ஒரு மொழி பெயர்ப்பும் செய்தாய்விட்டது. இப்போது திரு. காந்தியும் இதையே ஆரம்பித்து விட்டார். கீதையின் தத்துவம் என்ன? அதன் பயனென்ன? என்பதைப் பற்றிய உண்மை யாராவது தெரிந்து அதை மதிக்கின்றார்களா?
கீதையை ஒரு மனிதன் ஒப்புக் கொள்ளுவதானால் முதலாவதாக பாரதக் கதையை ஒப்புக் கொள்ள வேண்டும்.
பிறகு கிருஷ்ணனையும், அவனது செய்கைகளையும், அவனையே கடவுளாகவும் ஒப்புக் கொள்ள வேண்டும். இம்மூன்றிலும் சந்தேக முள்ளவர்கள் கீதையை “பகவான்” வாக்காகக் கொள்ள முடியாது. இது ஒரு புறமிருக்க அதிலுள்ள விஷயங்கள் வாழ்க்கைக்கு பொருத்தமானதாகவோ அல்லது அனுபவத்திற்கு சாத்தியமானதாகவோ இருக்கின்றதா? நிற்க மூன்றாவது காரியமாக பஜனை செய்து கொண்டிருக்கிறாராம்.
பஜனை என்பது புராணங்களில் உள்ள கடவுள்களை புராணக் கதைகளைச் சொல்லிக் கொண்டோ நினைத்துக் கொண்டோ இருப்பதாகும்.
ஆகவே இம்மூன்று காரியங்களும் எவ்வளவு பகுத்தறிவும், பொது நல நன்மையுமான காரியம் என்பதை முடிவு செய்யும் விஷயம் வாசகர் களுக்கே விட்டுவிடுகின்றோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 27.07.1930