“வகுப்புவாதம்”

இன்றைய அரசியலில்-தேசீயத்தில் ஒரு மனிதன் அரசியல் ஞானி யாகவும், தீவிர தேசீயவாதியாகவும் ஆகவேண்டுமானால் அவன் எவ்வளவு அயோக்கியனாகவும், எவ்வளவு சுயநலக்காரனாகவும், சமயத்திற்குத் தகுந்தபடி குட்டிக்கரணம் போடுபவனாகவும் இருந்தாலும் ஒரு வார்த்தையை மாத்திரம் சொல்லிவிட்டால் போதும்.

அதாவது,

“வகுப்புவாதம் கூடாது” என்றால்,

உடனே அவனுக்கு வேண்டிய விளம்பரங்களும் தேசாபிமானி-தேசபக்தன் என்கின்ற பட்டங்களும், அரசியல் ஞானி-தீவிர தேசீயவாதி என்கின்ற நாமகரணங்களும் ஏற்பட்டுவிடும்.

நமது பார்ப்பனர்களும் அப்படிப்பட்டவனை ஊரூராய் இழுத்துக் கொண்டு போய் உபசாரப் பத்திரங்கள் வாங்கிக்கொடுத்து, கூட்டம் கூட்டு வித்து, மாலைகள் போட்டு மறியாதை செய்து புகழ்மாலை பாடி அனுப்பி விடுவார்கள்.

மற்றபடி ஒருவன் எவ்வளவு யோக்கியனாயிருந்தாலும் நாணையக் காரனாகவும் உண்மையில் தேசத்திற்காகவே மக்களுக்காகவே பாடுபடு கின்றவனாகவும் பல தியாகங்கள் செய்து கஷ்ட நஷ்டப்பட்டவனாகவும் இருந்தாலும், “வகுப்பின் பேரால் கொடுமைப்படுத்தப்பட்டு மக்களோடு, மக்களாய் சேர்க்கப்படாமல் சட்டத்தின் படியும் சமூகப்பழக்க வழக்கத்தின் படியும் பிறித்து வைத்திருக்கும் மக்களுக்கு மற்ற மக்களுக்குண்டான வகுப்புரிமை கொடுக்கவேண்டமா”  என்று கேட்டுவிட்டால் “நமது தேசீய” வாதிகளுக்கு உடனே வந்துவிடும் கோபம்.

அவனை தேசத்துரோகி என்றும், வகுப்புவாதி என்றும், தேசீய ஞான மற்றவனென்றும் தேசவிடுதலைக்கும், சமரசத்திற்கும், சுயராஜ்ஜியத்திற்கும் முட்டுக்கட்டை போடுகிறவன் என்றும் தூற்ற ஆரம்பித்து விடுவார்கள்.

அதுதான் போகட்டும் ‘மதம் எல்லாம் ஒன்றாக வேண்டும், வகுப்பு எல்லாம் ஒன்றாகவேண்டும் மதப்பிரிவு வகுப்புப்பிரிவு என்பது கூடாது, மதத்தின் பேராலும், வகுப்பின் பேராலும் மக்கள் சட்டத்திலும், சமூக வாழ்க்கையிலும் பிறிக்கப்படக்கூடாது உயர்வு தாழ்வு கூடாது’ என்று ஒருவன் சொன்னால் உடனே அவனை ‘துலுக்கனும் மலுக்கனும் ஒன்றா?’  ‘பார்ப்பானும் பறையனும் ஒன்றா?’ என்ன ‘நீ மதத் துரோகியாயிருக் கிறாயே வகுப்பு துவேஷியாயிருக்கின்றாயே’ என்று சொல்லிவிடுவார்கள்.

“அப்படியானால் அவர்களுக்கு தனிஉரிமை கொடுக்க வேண் டாமா?” என்றால், ‘இதெல்லாம் தேசத்துரோகம் தேசீயத்திற்கு விரோதம்’ என்று சொல்லி தூற்ற ஆரம்பித்து விடுவார்கள்.

இந்தக் காரணத்தினாலேயே தேசத்திற்காக இரவும் பகலும் பாடு பட்டு ஜெயிலுக்குச் சென்று கஷ்டப்பட்டு இந்திய மக்களைத்தட்டி எழுப்பின வீரர்களாகிய மௌலானா ஷெளகத் அலி போன்றவர்கள் எல்லாம் இன்று தேசத்துரோகிகளாகவும், மக்களுடைய பிரதிநிதிகள் அல்லாதார்களாகவும் ‘ஆகிவிட்டார்கள்’.

நகத்தில் அழுக்குப்படாமல் பட்டு வெல்வெட்டின் மீது நடந்து கொண்டு ஊரைவிட்டு -வீட்டைவிட்டு அசையாமல், தங்கள் தொழிலையும் விடாமல், தேசீயத்தின் பேரால் பெருமை பெற்று பணமும் சம்பாதித்துக் கொண்டு கௌரவமாயிருந்துகொண்டு பெரும்பெரும் கூட்டங்களில் தலைமை வகிக்க மாத்திரம் வந்து புகழ்மாலை பெற்றுப் போய்க் கொண்டி ருக்கும் திருவாளர்கள் டாக்டர் அன்சாரி, முத்துரங்கம், விஜயராகவாச்சாரி போன்ற “பெரியார்கள்” இன்று தேசீய வாதிகளாய் இந்திய மக்கள் பிரதிநிதி களாய்- காங்கிரஸ் தலைவர்களாய்-திரு.காந்தியின் உத்தமதோழர்களாய் விளங்குகின்றார்கள். காங்கிரஸ் மண்டபங்களுக்கு தங்கள் பெயர் இடப்படத் தக்கவர்களாய் விளம்பரம் செய்யப்படுகின்றார்கள்.

வகுப்புவாதமே! உனக்கு ஏற்பட்டு இருக்கும் இழிவுதான் எவ்வளவு? நினைக்கவே பயமாயிருக்கின்றதே! இதிலிருந்து “தேசீய” வாதத்திற்கு பெருமையும் சுகமும் கீர்த்தியும் கிடைக்கின்றதென்பதும் “வகுப்பு” வாதத்திற்கு சிறுமையும், கஷ்டமும், துரோகமும் கிடைக்கின்ற தென்பதும் நன்கு விளங்குகின்றது.  இருந்தாலும் பறவாயில்லை. நாம் வகுப்பு வாதியே தான். எது வரையில்? என்று கேட்கின்றீர்களேயானால் இந்தியாவில் வகுப்பு பிரிவு என்பது எதன் பேரினாலும் சரி, அதாவது மக்களுக்குள் தேசத்தின் பேரிலோ மதத்தின் பேரிலோ, நிறத்தின் பேரிலோ, ஜாதியின் பேரிலோ, வகுப்பின் பேரிலோ, தொழிலின் பேரிலோ ஆண்பெண் பிறவியின் பேரி லோ ஆகிய எவைகளின் பேரிலானாலும் சரி. பிறிவுகள் என்று சட்டத் திலோ-சமூகத்திலோ-பழக்கவழக்கத்திலோ இருக்கின்றவரை-மனதால் எண்ணப்படுகின்ற வரை கண்டிப்பாய் நாம் வகுப்புவாதியேதான் என்பதை அழுத்தம் திருத்தமாய்ச் சொல்லுகின்றோம்.

தேசீயவாதிகளே! கோபித்துக்கொள்ளாதீர்கள்!! கோபித்துக் கொள்ளா தீர்கள்!!! ஏனெனில் நாம் மாத்திரம் வகுப்பு வாதியல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

மற்றும் யார்?  யார்? எனிலோ ஒவ்வொரு வருணப்பிறிவில் நம்பிக்கை இருக்கும் ஒவ்வொரு வருணத்தின் உரிமையையும் காப்பாற்ற முயற்சிக்கும் உங்கள் “மகாத்மா” வருண வகுப்புவாதி.

ஒவ்வொரு மதத்தையும் காப்பாற்றும் – மத நடுநிலைமை வகிக்கும் உங்கள் காங்கிரசு வகுப்புவாதி.

எந்த வகுப்பாருடைய எந்த ஜாதியாருடைய மனமும் புண்படாமல் நடந்து கொள்ளும் உங்கள் “போல்ஸ்விக் வீரர்” ஜவஹர்லால் வகுப்புவாதி.

ஒவ்வொரு வகுப்பாருடைய கலைகள் -ஆதாரங்கள்-பழக்க வழக்கங்கள், தொழில் முறைகள் முதலியவைகளைக் காப்பாற்ற ஜாமீன் கொடுக்கும் உங்கள் காங்கிரசுக் காரியக்கமிட்டி வகுப்பு வாதி.

ஹிந்தி தெரியாதவர்களுக்குக் காரியக்கமிட்டியில் இடமில்லாத காங்கிரஸ் தேர்தல் வகுப்புவாதி.

கதர் கட்டாதவர்களுக்கு ஓட்டில்லை என்கின்ற காங்கிரசு தேர்தல் ஓட்டர்களின் யோக்கியதாபக்ஷம் வகுப்புவாதி.

தீண்டாதவர்களுக்கு கோயில் -குளம்-பள்ளிக்கூடம் தனியே கட்டிக் கொடுக்கப்படவேண்டும் என்று சொல்லுகின்ற திரு.மாளவியா வகுப்புவாதி.

கடைசியாக மதங்களும், வகுப்புகளும் இருந்து வருவதைக் கண் ணில் நேரில் பார்த்துக் கொண்டும், அதனதன் உரிமைகளைத் தவறாமல் அளிப்பதாக வாக்களித்துக் கொண்டும் இருக்கின்ற மக்கள் அந்தந்த வகுப்பினருக்கு பிரதிநிதித்துவ உரிமை கொடுப்பதற்கு மறுப்பதும்-யாரா வது கேட்டால் அதற்கு வகுப்புவாதம் என்று பெயர் கொடுப்பதும் எல்லா வற்றையும் விட பெரிய வகுப்புவாதி என்னப்படும்.

தேசமே வகுப்புகளின் கண்காட்சிசாலையாய்-மதங்களின் கண் காட்சி சாலையாய், ஜாதிகளின் வகுப்புகளின் கண்காட்சி சாலையாய் இருக்கும் போது சட்டசபையிலும், உத்தியோகத்திலும், மதவகுப்புப் பிரதி நிதித்துவம் இருந்தால் என்ன முழுகிப்போகும்? என்று கேட்கின்றோம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 23.08.1931

You may also like...

Leave a Reply