* தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்கள் பகத்சிங்

1. (ய) பொது உடைமை, சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக தனது உயிரை மனப்பூர்த்தியாக தியாகம் செய்த உண்மை வீரர் பகத்சிங்கை இம் மகாநாடு மனமாரப்பாராட்டுகின்றது.

(b) பகத்சிங் தூக்கிலிடப்பட்டதின் மூலம் உண்மையும் வீரமும் பொருந்திய வாலிபர்களின் உள்ளத்தை சமதர்ம தத்துவமும், பொது உடைமைக்கொள்கையும் கவர்ந்து கொள்ளும்படி ஏற்பட்டு விட்டதால் அச்சம்பவத்தை இம்மகாநாடு ஆர்வத்தோடு வரவேற்கின்றது.

(உ) இந்திய வாலிபர்கள் இது காரணமாய் தங்களுக்குள் பொங்கித் ததும்பும் ஆர்வத்தை அறிவும், சாந்தமும் பொருந்திய வழிகளில் தேச சேவைக்கு உபயோகப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்துகின்றது.
விடுதலை சுதந்திரம்

2. இந்திய நாடு உண்மையான விடுதலை பெறுவற்கு வர்ணாசிரம மதவித்தியாசங்களை அடியோடுஅழித்து, கடவுள், மோட்சம், நரகம், கர்ம பலன், மறுபிறப்பு, தலைவிதி முதலிய விஷயங்களில் இருந்துவரும் மூட நம்பிக்கைகளை ஒழித்து, தன்னம்பிக்கையும் தன் முயற்சியும் உண்டாக்கும் கொள்கைகளை மக்களுக்குப் புகட்டி, பூமிக்குடையவன்- உழுகின்றவன், முதலாளி – தொழிலாளி, ஆண் – பெண், மேல்ஜாதி – கீழ்ஜாதி என்பவை களான பேதங்களை அகற்றி தொழில் முறைகளிலும், சமூகத்துறைகளிலும், அரசியல்களிலும் சகலரும் சமசுதந்திரத்துடன் ஈடுபட சம அவகாசமும், சம அந்தஸ்தும், சம ஊதியமும் கிடைக்கக் கூடிய முறையில் நமது சமூகத்தைத் திருத்தி அமைத்துக்கொள்ளவேண்டியது அவசியம் என்று இம் மகாநாடு தீர்மானிக்கின்றது.
பெண் உரிமை

3.(ய) விவாகம், விவாக ரத்து, கல்வி, சொத்து, கற்பு, ஒழுக்கம், தொழில், அரசியல் முதலிய துறைகளில் ஆண்களுக்கு உள்ள சகல உரிமைகளும் பெண்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என்பதாக இம்மகாநாடு திட்டமாய்க் கருதுகின்றது.

(b) நமது பெண்மக்கள் வாழ்விற்கு அவசியமான வகையில் உடைகளையும், நகைகளையும் சுருக்கிக்கொள்ளவேண்டுமெனவும், தேக சக்திக்கு செல்வ நிலைக்கும் தகுந்த அளவில் குழந்தைகளைப் பெறுவதற் காகக் கர்ப்பத்தடைமுறைகளை அவசியம் கையாளவேண்டுமென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.
நம்பிக்கையில்லை

4. (1) மகாத்மா காந்தியவர்கள் மதத்தின் பேரால் நடை பெறுகின்ற மூட நம்பிக்கைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் கையாளுவதினா லும்,

(2) தனது செய்கைகளுக்கும், பேச்சுகளுக்கும் கடவுளே காரணம் என்பதாக அடிக்கடி சொல்லி வருவதால் ஜனங்களின் தன்னம்பிக்கையும், தன் முயற்சியும் பொறுப்பும் அற்றுப்போவதாலும்,

(3) வர்ணாசிரமம், இராமராஜ்யம், மனுஸ்மிருதி, தர்மம் முதலிய பழய கொடுங் கோன்மையான ஏற்பாடுகளை மறுபடியும் திருப்பிக்கொண்டுவர முயற்சி செய்து வருவதா லும்,

(4) நமது நாட்டில் இயந்திர வளர்ச்சியை தடைசெய்து வருவதாலும்,

(5). சமதர்மக் கொள்கைகளுக்கு விரோதமாயிருந்து வருவதாலும் அவரிடத்தில் நம்பிக்கை இல்லை என்று இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.

குடி அரசு – 12.04.1931

You may also like...