சீக்கிரத்தில் சட்டசபை கலையப் போகிறதாம்

“சீக்கிரத்தில் இந்திய சட்டசபை கலையப் போகின்றது” என்று ஸ்டேட்ஸ்மென் பத்திரிகை எழுதியிருப்பதாகத் தமிழ் நாடு பத்திரிகையில் 10-ந் தேதி உபத்தலையங்கத்தில் காணப்படுகின்றது. அதாவது,

“இந்தியா அரசியல் மகாநாட்டில் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஒத்துழைக் கப் போகின்றார்களாதலால் அதை உத்தேசித்து டில்லி சட்டசபையைக் கலைத்து விட்டு புதிய தேர்தல்கள் நடக்கப்போகின்றது” என்று ஸ்டேட்ஸ் மென் பத்திரிகைக்கு அதன் டெல்லி நிரூபர் எழுதியிருப்பதாகக் காணப்படு கின்றது. இதைப் பற்றி ஏற்கனவே நாம் 1-2-31- ² குடி அரசு தலையங்கத்தில் எழுதி இருக்கின்றோம். அப்போது சிலருக்கு அது ஆச்சரியமாகவும்,
உண்மையற்றதாகவும் தோன்றி இருக்கலாம். எப்படி யிருந்தாலும் இது உண்மையானால் காங்கிரசுக்காரர்களுக்கு சமீபத்தில் நடந்த காந்தி – இர்வின் ஒப்பந்தத்தின் பலனாய் ஏதாவது பயன் உண்டு என்று சொல்வ தானால், சட்ட சபைகள் கலைக்கப்பட்டு, காங்கிரசுக்காரர்கள் வெற்றி பெற்று சட்டசபைகளில் நுழைய ஒரு அகால சந்தர்ப்பம் ஏற்படுவதை தவிர வேறு ஒன்றும் இருக்க முடியாது. ஆதலால், இந்த ஒப்பந்தமோ அல்லது இந்த அபிப்பிராயம் தொக்கி இருப்பதான குறிகளோ, ராஜிய சம்பாஷணையில் கலந்திருக்க வேண்டு மென்று நாம் யூகிக்க பல வழிகளிலும் இடம் மேற்படுகின்றது.

ஆனால், காங்கிரசுக்காரர்களுக்கு தங்களுக்கு வெற்றி ஏற்படுவது நிச்சயம் என்கின்ற தைரியமில்லாவிட்டால் கராச்சி காங்கிரசு, சட்டசபைப் பிரவேசத்தை ஒரு சமயம் மறுத்து விட்டாலும் மறுத்து விடக்கூடும். ஆகை யால் எதுவும் கராச்சி காங்கிரசில்தான் முடிவுபெறலாம்.

ஆனாலும், அதுவரை அடுத்த தேர்தலுக்குச் செய்யப்பட வேண்டிய முஸ்தீப்புகளில் ஒன்றாகக் கள்ளுக்கடை மறியலும், ஜவுளிக்கடை மறியலும் அங்குமிங்குமாக தலை நீட்டிக் கொண்டு இருக்கவேண்டியதுதான். ஆனால், தீண்டாமை விலக்கு விஷயமாக மாத்திரம் எதுவும் தலைகாட்டப் பட மாட்டாது. ஏனெனில், தீண்டாமை விஷயம் பேசினாலோ, அதற்காக மறியல் முதலியவைகள் துவக்கப்பட்டாலோ ஓட்டுக்கிடைப்பது கஷ்டமான காரிய மாகி விடுமாதலால், அது கிணற்றில் போடப்பட்ட கல்லுபோல் பேசாமல் இருந்து கொண்டு இருக்கும்.
ஆதலால், இப்போது சட்டசபைகளில் இருப்பவர்கள் கூட, தீண்டாமை சம்மந்தமாகப் பேசப்பயப்படுவதுடன், ஜவுளி மறியலுக்கும், கள்ளு மறியலுக் கும் கூட தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டாலும் கொள்ளுவார்கள். தீண்டாத வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்ட சட்டசபை அங்கத் தினர்கள் கூட அடுத்த தடவை தேர்தலின் மூலம் சட்டசபைக்கு வர வேண்டி யவர்களாக இருப்பதால் அவர்களுக்கும்கூட தீண்டாமைக் கொடுமையைப் பற்றிப் பேசுவது சற்று கஷ்டமாகத்தான் இருக்கும்.

ஏனெனில், ஒன்று தீண்டாமையைக் கடிந்து பேசுகின்றவர்களுக்கு ஓட்டுக் கிடைக்காமல் போகும்.
இரண்டு தீண்டாமை ஒழிந்து விட்டால் தீண்டாதவர்களின் பெயரால் இப்போது சிலருக்குக் கிடைத்து வரும் சௌகரியங்கள் பிறகு கிடைக்காமல் போகலாம். ஆகவே இரண்டு காரணங்களால் அவர்களும் பயப்படுவார்கள்.
ஆகவே இந்தக் காரணங்களால் காங்கிரசுக்கு இருக்கும் மதிப்பை நாம் இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், காங்கிரசினால் பொதுமக்க ளுக்குப் பயன் உண்டு என்பதையும், அந்தக் காரணத்தால்தான் காங்கிரசுக்கு மதிப்பு இருக்கின்றது என்பதையும் மாத்திரம் தான் நாம் ஒப்பு கொள்ள முடியவில்லை. பிரத்தியாரையும் நம்பச் செய்யமுடியவில்லை.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 15.03.1931

You may also like...

Leave a Reply