தமிழ் தினசரி
“சண்டமாருதம்” என்னும் தமிழ் தினசரிப் பத்திரிகை திருச்சியில் இருந்து சுயமரியாதை இயக்கத்திற்கு ஆக சுயமரியாதை சங்கத் தலைவர்க ளுடைய முயற்சியின் மீது ஆரம்பிக்கப்பட்டு இம்மாதம் 7ந்தேதி முதல் வெளியாகி இருக்கின்றது. அதை ஒரு லிமிடெட் கம்பெனி மூலம் வெளி யாக்கக் கருதி இருந்த விஷயம் பத்திரிகைகள் மூலம் ஏற்கனவே வாசகர் களுக்குத் தெரிந்ததாகும். லிமிடெட் கம்பெனி ரிஜிஸ்டர் செய்து பங்கு சேர்ந்த பிறகே பத்திரிகை வெளிவருவதென்றால் சற்று நாளாகும். ஆதலால் மகாநாடு நடைபெறும் நாளிலேயே எப்படியாவது பத்திரிகை வெளி யானால் அதற்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்கின்ற ஆசையின் மீது உயர்திரு.சௌந்திரபாண்டியன் அவர்கள் தற்கால சாந்தியாக சொந்தத்தில் ஏற்பாடு செய்து திரு.முருகப்பா அவர்கள் ஆசிரியத் தன்மையில் வெளிப் படுத்தப்பட்டதானது மிகுதியும் பாராட்டத்தக்கதும் நன்றி செலுத்தத்தக்க துமாகும்.
கூடிய சீக்கிரத்தில் கம்பெனி ரிஜிஸ்டர் செய்யப்பட்டு உயர்திரு. பாண்டியன் முதலியவர்கள் பங்கு சேர்க்க வருவார்கள். அந்தச்சமயம் பொது மக்களும் சிறப்பாக இயக்கத்தில் ஆர்வமுள்ள கனவான்களும் ஆதரவளித்து பங்குதாரர்களாகச் சேர்ந்து ‘சண்டமாருதத்தை’ என்றும் நிலையானதும், மேலானதுமான ஒரு முக்கிய பத்திரிகையாய் நின்று நமது இயக்கத்திற்குழைக்க தங்கள் தங்களாலான உதவிகளைச் செய்ய வேண்டி யது பொது மக்கள் கடமையாகும். பத்திரிகை நடத்துவது என்பது லேசான காரியம் அல்ல வென்பதும் அதிலும் ஒரு இயக்கத்திற்குப் பிரசார பத்திரிகையாய் ஒரு தினசரியை நடத்துவது என்பது சுலபமான காரியமல்ல வென்பதும் நண்பர்கள் உணர்ந்ததேயாகும். ஆதலால், கனவான்கள் எவ்வித யோசனையுமின்றி ஆதரவளிக்க வேண்டுகின்றோம். ஆங்காங்குள்ள நமது இயக்க நண்பர்கள் “சண்டமாருத”த்திற்கு ஒவ்வொரு வருஷ சந்தா தாரர்களாக அநேக சந்தாதாரர்களை சேர்த்துக் கொடுத்து தாங்களும் சந்தா தாரராய் சேரவேண்டுமாய் வேண்டிக்கொள்கின்றோம். ஒரு வார முயற்சி யில் தினசரிப் பத்திரிகை வெளிவருவதற்கும், போதிய அளவு முன் பணம் உதவி செய்ததுமல்லாமல் மற்ற முயற்சிகளுடன் மகாநாட்டு வேலைத் தொந்திரவையும் எடுத்துக் கொண்ட உயர்திருவாளர்கள் சௌந்திர பாண்டியன், முருகப்பா, விஸ்வநாதன் முதலிய கனவான்களின் ஊக்கத் தையும் உதவியையும் போற்றுகின்றோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 16.08.1931