நமது ஆசிரியரின் ஐரோப்பா பிரயாணம்
இன்று 13-12-31-ல் நமது ஆசிரியர் திரு. ஈ.வெ.இராமசாமி அவர்கள் திரு.இராமனாதன் அவர்களுடன் (ஹஅbடிளநை) அம்போய்சி என்னும் பிரஞ்சு கப்பலில் ஐரோப்பா முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்வதற்கு புறப்பட்டு விட்டனர். திரு.இராமசாமி அவர்கள் உடல்நிலை தொடர்ந்த பிரயாணத்திற்கு இடங்கொடுக்க முடியாத நிலையிலிருப்பினும் இயக்க வளர்ச்சியை முன்னிட்டு என்ன நேர்ந்த போதிலும் தமது சுற்றுப் பிரயாணத்தை முடித்து வருவதென்ற எண்ணத்துடனேயே புறப்பட்டு விட்டார். சுற்றுப்பிரயா ணத்தை முடித்து விட்டு மீண்டும் நம் நாடு திரும்புவதற்கு ஏறக்குறைய 3,4 மாதங்கள் செல்லுமெனத் தெரிய வருகின்றது. இவர்களது சுற்றுப்பிரயாண நிகழ்ச்சிகளும், அவ்வப்போது நமதியக்க சம்பந்தமான கட்டுரைகளும், நமது பத்திரிகையில் வெளிவரும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளு கின்றோம். மேலும் மேல் நாட்டுப் பழக்க வழக்கங்களைப் பற்றி நமது மக்கள் நன்கு தெரிந்து கொள்ளுமாறு இது வரையிலும் மேல் நாடு சென்ற எந்த இந்தியரும் நடு நிலைமையான தாராளமனப்பான்மையுடன் அபிப்பி ராயம் கூறியதில்லை. இது மாத்திரமல்லாமல் மேல் நாடு சென்று திரும்பி யுள்ள இந்தியர்களான நம்மவர்கள் பெரும்பாலும் அரசியல், கல்வி, மத விருத்தி இவைகளைப் பற்றியே தான் இதுவரையிலும் ஆராய்ந்திருக்கின் றனரேயொழிய அத்தேசத்து மக்கள் வழக்கபழக்கங்கள், மதபக்தி, கடவுள் பக்தி இவைகளை அவர்கள் எந்த அளவுக்குத் தங்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்திக் கொள்ளுகின்றனர் என்பதைப் பற்றி சிறிதும் கவலை கொண்டதுமில்லை அவைகளைப் பற்றி நமது மக்களுக்கு எடுத்துக் கூறியதுமில்லை. காரணம் எதுவாகவிருக்கலாமென கருதுகின்றீர்கள். அந்த நாடுகளின் உண்மையான நிலை நமது மக்கள் தெரிந்து கொண்டால் “இந்து” மதத்தின் கெதி என்னவாகுமோ என்னும் பயமே தான் காரண மாகும்.
இத்தகையவர்கள்தான் இன்று நமது நாட்டில் மேல் நாடு சென்று திரும்பியவர்கள் என்ற புகழுக்குள் புகுந்து கொண்டு மக்களை மிருகங்க ளெனக் கருதி வேட்டையாடி வருகின்றனர். இப்படிப்பட்ட சமரசமற்ற மனப் பான்மையுடையவர்கள் எண்ணத்தில் மண்ணையள்ளிப் போடுவதே நமது ஆசிரியரின் சுற்றுப்பிரயாண நோக்கமாகும். ஐரோப்பா சுற்றுப்பிரயாணத் தின் பொழுது ஆங்காங்கு நமது நாட்டு சமூக நிலையையும், நமது இயக்கக் கொள்கைகளையும் பிரசாரம் செய்தும் வருவார்கள். இதனால் மேல் நாட்டு மக்களுடைய ஆதரவும் நமதியக்கத்திற்கு ஏற்படும் என்பது திண்ணம்.
உலக ஒற்றுமை வேண்டுமேயானால் சகல தேசமக்களுக்கும் பொருத் தமான சமூகச்சட்டங்கள் ஏற்படுதல் வேண்டும். இம்மாதிரியான காரியங்களைச் செய்வதற்கு நமது நாட்டில் முன்வருவோரைவிட தடை செய்கின்றவர்கள் அல்லது குறை கூறுகின்றவர்கள் தான் மலிந்துக் காணப்படுகின்றனர். இத்தகைய மக்களுக்கிடையே இம்மாதிரியான உணர்ச்சி தோன்றுவதென்பது இலகுவான காரியமல்ல. அதிலும் அனுஷ் டானத்திற்குக் கொண்டு வருவதென்பதோ அதிக கஷ்டமான காரியமாகும். இப்படிப்பட்ட காரியங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவருவதற் கான வழிகளைக் கண்டுபிடித்து மக்களையும் அவ்வழியையே பின்பற்று மாறு செய்வதென்ற நோக்கத்துடன் தங்களது திரேக நிலையையும், பொருட் செலவையும் கவனியாது, சுற்றுப்பிரயாணத்திற்குத் துணிந்த நமது கிழச் சிங்கத்தையும், அவரது வலக்கையாம் இராமநாதனையும் எவ்வாறு நமது மக்கள் போற்றாதிருக்க முடியும். நம்மைப்பொருத்தவரையில் வெற்றியும், தோல்வியும் ஒன்றேயானாலும், வெற்றியும், தோல்வியும் சந்தர்ப்பத்தை பொருத்தாகுமென்பதுதான் நமதியக்க அபிப்பிராயமேயல்லாது திரு. காந்தியவர்களைப் போல் “கடவுள் செயல்” என்று ஒருபோதும் கருதுவ தில்லை. மேலும் நமது ஆசிரியரும், திரு.ராமநாதன் அவர்களும் திரு.காந்தி அவர்களைப்போல் வெற்றி மாலை சூடிவருவதாகச் சென்று “கடவுள்” சித்தத்தால் “தோல்வியடைந்து விட்டேன்”என்ற முகாரி இராகப்பல்லவி யைப் பாடிக்கொண்டு இந்தியா திரும்பப் போவதில்லை. ஏன் எனிலோ? நமது சமூக விடுதலை நமது சமூக ஒற்றுமையால் தான் ஏற்பட முடியுமே யல்லாது பிறரை எதிர்பார்த்துத் தூரதேசம் சென்று கிடைத்து விடமாட்டாது என்ற மாற்றமுடியாத அபிப்பிராயமே தான் காரணம்.
ஆகவே, நமது ஆசிரியரவர்கள் வெற்றியையோ, தோல்வியையோ எதிர்பார்த்து ஐரோப்பா செல்லவில்லை. தனது உடல் நலன், நமதியக்க வளர்ச்சி, மேல் நாட்டு மக்கள் பழக்கவழக்கங்கள், பொருளாதாரச் சமரசம், தொழிலாளர்கள் நலன் இவைகளைப் பற்றி ஆராயவும் தங்களது ஆராய்ச்சி யால் கிடைக்கப்பெற்றவைகளை இந்திய மக்களுக்கு எடுத்துக் கூறவுமேயாம். இத்தகைய நல்லசந்தர்ப்பத்தை நாம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் சந்தர்ப்பம் இப்பொழுது தான் இடங்கொடுத் திருக்கின்றது.
இனி இச்சமயத்தில் நமது கடமை என்னவென்பதையும் சற்று யோசித்துப் பார்த்தல் வேண்டும். வைதீக, தேசீய, வருணாசிரம, பிராமண, இந்து மகாசம்ரட்சணா சபைகளெல்லாம் தங்களது வேலைகளை வெகு தீவிரமாகச் செய்து கொண்டு வருகின்றனவென்பது வெளிப்படை. அகில இந்திய காங்கிரஸ் சப் கமிட்டியோ, நாசிக் தீண்டாதார் சத்தியாக்கிரகத்தை ஆதரிக்க மறுத்து விட்டது. குஜராத் சாதி ஹிந்துக்களோ ஆதிதிராவிடக் குழந்தைகள் தங்களுடைய குழந்தைகளுடன் ஒன்று சேர்ந்து படிப்பதற் காகத் தீண்டப்படாதார், பயிர், பச்சைகளையெல்லாம் நெருப்பிற்கிரை யாக்கினர்.
வைதீகக் கோஷ்டியினரோ குருவாயூர் சத்தியாக்கிரகத்திற்கு எதிர் சத்தியாக்கிரகம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். திரு.காந்தியவர்களோ தீண்டாதாருக்குத் தனித் தொகுதி கொடுப்பதை தனது உயிரைத் தியாகம் செய்வதன் மூலமாகவாகினும் தடை செய்வதாக கர்ஜிக்கின்றார். நம் நாட்டுப் பார்ப்பனர்களோ சாரதா சட்டத்தைக் கொளுத்திவிட வேண்டுமெனத் துள்ளுகின்றனர். மதக்கர்த்தாக்களோ தங்களது கொள்ளையடிக்கும் திட் டத்தை இன்னும் விரிவுபடுத்திக் கொண்டே போகின்றனர். பணக்காரர் களோ அவர்களுக்காதரவளிக்கின்றனர். போதாக்குறைக்கு நமதியக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த பல நண்பர்களும் இன்று பொருளாதார நிலையை யுத்தேசித்து நம்மை எதிர்க்கவும் ஆரம்பித்து விட்டனர். இம்மாதிரியான பல திறப்பட்ட எதிர்ப்புகளுக்குள் இன்று நமது இயக்கம் பரவி வருகின்ற தென்றால் இன்னும் கொஞ்சம் தியாக புத்தியுடன், பொறுப்புணர்ந்து ஒற்றுமையுடன் வேலை செய்ய முற்படுவோமானால் நமதியக்கத்தின் வளர்ச்சி எவ்வளவு வேகமுடையதாகவிருக்கு மென்பதை யும் சிந்தித்தல் வேண்டும். நமக்குள்ளிருக்கும் சில சில்லரை விவகாரங் களை இயக்க சம்பந்தப்படுத்தி இயக்கத்திற்கு கேடு விளைவிப்பதான வழியில் செல்லுவது நியாயமானதாகாது. ஆகையால் நமது ஆசிரியர், திரு.ராமசாமியும், திரு.இராமநாதனும் ஐரோப்பா சுற்றுப்பிரயாணம் செய்யும்பொழுது நாமும் நமது வேலையைத் தீவிரமாய் இங்கு நடத்த வேண்டும். பிறப்பதும், இறப்பதும் உலக இயற்கையேயாயின் பிறப்பிற்கும் இறப்பிற்கும் மத்தியிலிருக்கும் நாட்களை சேம்பேறித்தனமாய்க் கழிப்ப தென்பதன்று. ஆகையால் ஒன்று கூடுங்கள், இயக்கத்தைப் பற்றிய வேலை களில் உங்கள் சிந்தையையும், நேரத்தையும் செலவிடப் பிரயத்தனப் படுங்கள். இவைகள்தான் ஐரோப்பா சென்று திரும்பும் நமது ஆசிரியருக் கும், திரு.இராமநாதனுக்கும், நாம் அளிக்கும் பரிசாகும். ஆகவே, நமது கடமைகளில் நாம் எப்பொழுதும் தவர மாட்டோமென்று உறுதி கூறுவது டன், ஐரோப்பா சுற்றுப் பிரயாணம் வெற்றியுடனும், சௌகரியத்துடனும், மன சமாதானத்துடனும் இருக்க வேண்டுமென விரும்புகின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 13.12.1931