“நான்”

சென்ற வாரத்திற்கு முந்திய வாரத்தில் ஆத்மா என்னும்  விஷயத்தைப் பற்றி எழுதிய வியாசத்தின் இறுதியில்   அதன்  தொடர்ச்சி பின்னால் வரும் என்று  எழுதப்பட்டிருந்தது.  அதாவது ஆத்ம உணர்ச்சி என்று சொல்லப்படு வதான “நான்” (என், எனது, என்னுடைய) என்பதின் தன்மையைப் பற்றி எழுதுவதாக எழுதியிருந்தோம்.

ஆகவே இப்போது மனிதன் தன்னை உணர்த்தும் வகையில் நான் என்று சொல்லிக் கொள்வது எது என்பதே இப்போது இவ்வியாசத்தில் ஆராய்வதாகும்.  முன் வியாசத்தில் ஆத்மா என்பதைப் பற்றிச் சொன்னது போலவேதான் இப்போது  “நான்” என்பதைப்  பற்றியும் சொல்ல வேண்டி யிருக்கின்றது.

மனிதன் தன்னை நான் என்று  சொல்லிக் கொள்வது எதனால்? அது எது? என்னும் ஆராய்ச்சியானது இந்து மதம் என்பதின் கடைசி அதாவது “வேதாந்த” தத்துவமாகப் பாவிக்கப்பட்டு  “அதைக் கண்டுபிடிப்பதே கடவுளைக் கண்டு பிடித்ததாகும்” என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

உதாரணமாக  “தன்னை அறிந்தவனே கடவுளை அறிந்தவனா வான்” என்றும், “தன்னைத்தான் அறிந்தால் கடவுளை அறியவேண்டிய தில்லை” “தன்னை அறிந்தவரை  ஞானி” என்றெல்லாம் சொல்லப் படுவதை நாம் கேட்டிருக்கின்றோம்.

ஆகவே இந்தப்படி சொன்னவர்கள் எல்லாம்  ஒரு மனிதன் தன்னை  ‘நான்’ என்று சொல்லிக்கொள்கின்றானே அது எது என்று கண்டுபிடிக்கும் விஷயத்தில் ஏதோ ஒரு பெரிய கஷ்டம் இருப்பதாக நினைத்தோ அது சுலபத் தில் மனதுக் கெட்டாதது என்று கருதியே இப்படிச் சொல்லியிருக்கக் கூடும் என்பதாகவும், மற்றும்  ‘நான்’ என்பதை  கண்டுபிடிக்க முயற்சி செய்து  ஒருவன் அதைக்  கண்டுபிடித்து விட்டானேயானால் பிறகு அவன் “ஞானி யாகவும்” “துறவியாகவும்” அல்லது கடவுளைப்பற்றி  கவலைப்பட வேண்டி யவனல்லாத – லக்ஷியம் செய்யப்பட வேண்டியவனல்லாத “நாஸ்தீகனாக” வும்  ஆகிவிடக்கூடும் என்று கருதிச் சொன்னதாகவும் இருக்கக்கூடும் என்பதாக முடிவு செய்து கொள்ள வேண்டியிருக்கின்றது.

எப்படி இருந்தாலும் ஒரு மனிதன் தான்  யார்? தனக்குள் இருந்து நான் – என் என்று வரும் உணர்ச்சி எது?  அதெப்படி  உண்டாகின்றது? எது வரையில் அவ்வுணர்ச்சி  இருக்கின்றது? என்பவை முதலான உண்மையை  உணர்ந்தால் அவன் நாஸ்திக அபிப்பிராயத்தை அதாவது ஆத்மாவோ, கடவுளோ  இருக்கின்றது என்பதை  நம்பாத கொள்கையையே கொள்ள வேண்டியவனாகி விடுவான் என்று சொல்லப்படுவதில் உண்மை உண்டு   என்பதை ஒப்புக் கொள்ளுகின்றோம்.

உலகத்தில் பெயரும் – உருவமும் உள்ள வஸ்துக்கள் எல்லாம் ஒரு வித சேர்க்கையால் அதாவது பல கூட்டுப் பொருள்களால் சேர்ந்து  இருக் கும் வடிவத்தையே பெரிதும்  உணர்த்துவதாகும்.

ஏனெனில் உலகத்தில் உள்ள எந்தப் பெயருக்கும் மாறுதலையடை யாத ஒரு தனி வஸ்து  என்பது கிடையவே கிடையாது  என்பதை ஞாபகத் தில் வைத்துக் கொள்ளவேண்டும்,   ஏனெனில் எந்தப் பெயரும் ஒரு தோற் றத்திற்கு அல்லது ஒரு  உருவத்திற்கு அல்லது ஒரு வடிவத்திற்குத்தான் உபயோகிக்கப்பட்டு – சொல்லப்பட்டு வருகின்றதே அல்லாமல்  வஸ்து வுக்குப் பெயர் சொல்லப்படுவதில்லை என்பதேயாகும்.

உதாரணமாக நாம் ஏதாவது ஒரு வஸ்து என்பதை எடுத்துக் கொண்டு அதற்குப் பெயர் என்ன? என்று ஒரு மனிதனைக் கேட்டு, அவன் சொன்ன பெயரையே திருப்பிச் சொல்லி  அந்தப் பெயருக்குண்டான வஸ்துவைத் தொட்டுக் காட்டும்படி அம்மனிதனையே கேட்டால், அந்த மனிதன் தொட்டுக் காட்டும்  பாகத்தில் இருக்கும் வஸ்துவானது அந்தப் பெயரை அதாவது அவன் முன் சொன்ன பெயரை உடையதாக  அது காணப் படாததை  நாம் நன்றாய்ப் பார்க்கலாம், அதாவது

ஒரு லாந்தர் – ஒரு மேஜை-ஒரு கடிகாரம் – ஒரு புஸ்தகம்  என்பது போன்ற பெயர்களை உடைய  வஸ்துக்கள்  என்பவைகளில் ஏதாவது ஒன்றை  எடுத்துக் கொண்டு  அவற்றின் பெயர் என்ன என்று கேட்டால் முறையே முன் சொன்ன பெயர்களைத்தான்  சொல்லுவான்.

ஆனால் ஒரு லாந்தர் என்பது எது என்று தொட்டுக் காட்டச் சொன்னால் லாந்தர் என்பதில் அவன் தொட்டுக் காட்டிய பாகம் ஒரு சிமிணி யையோ, கண்ணாடியையோ, தகட்டையோ, கம்பியையோ, ஆணியையோ தான் தொட்டுக் காட்டப்பட்டதாய் இருக்கும்.

அதுபோலவே ஒரு மேஜையைத்  தொட்டுக் காட்டச் சொன்னால் தொட்டுக் காட்டிய  பாகம் ஒரு பலகையையோ, அல்லது   காலையோ, ஆணியையோ, குமிளையோ, கைப்பிடியையோ தான் தொட்டுக் காட்டியதாய் காணப்படும்.

அது போலவே  ஒரு கடிகாரம்  என்பதையும் தொட்டுக் காட்டச் சொன்னால் அவன் மேல் மூடியையோ, கண்ணாடியையோ அல்லது, திறந்த கடிகாரமாய் இருந்தால், ஒரு சக்கரம் என்பதையோ, ஆணி என்பதையோ தொட்டுக் காட்டியதாகத்தான் காணப்படும்.

அதுபோலவே ஒரு புஸ்தகம் என்பதையும் தொட்டுக் காட்டச் சொன்னால் அவன் தொட்டுக் காட்டிய பாகம்  காகிதமாகவோ, அட்டை யாகவோ, காலிகோ துணியாகவோ, தோலாகவோ தான் காணப்படும்.

இப்படியே மற்றும் அதன் உள்பிரிவு பெயர்களும் அதாவது மேல்  சொல்லப்பட்ட பெயர்களும் சரியானபடி தொட்டுக் காட்டப்பட்டதாகவும் இருக்கமுடியாது.   ஏனெனில் அவன் லாந்தர் என்பதாகக் காட்டியது கம்பி  என்பதனாலும், கம்பி என்பதாக ஒன்றைத் தொட்டுக் காட்டியதாக இல்லாமல் இரும்பைத்  தொட்டுக்காட்டியதாகதான் காணப்படும்.  இரும்பு  என்பதை  காட்டும் போது ஏதோ  ஒரு வகையான மண்ணின்  சேர்க்கையை  காட்டிய தாகத்தான் காணப்படும்.  இப்படியே நமக்குக் காணப்படும் வஸ்துக்கள் எல்லாம் ஏதோ ஒரு ரூபமாத்திரத்திற்கு – ஒரு உருவத்திற்கு-ஒரு மாதிரியான தோற்றத்திற்கு அந்தப் பெயர் சொல்லப்படுவதாகக் காணப்படுமே அன்றி அந்தப் பெயருக்கு அந்த வஸ்து கட்டுப்பட்டு அந்த வஸ்துக்கள் வேறு எந்த ரூபத்தை  அடைந்தாலும், வேறு  எந்த குணத்தை  அடைந்தாலும் அந்தப் பெயரையே யுடையதாக  காணும்படியான ஒரு  வஸ்துவும் காணப்பட முடியாது என்பது  இவற்றிலிருந்து நன்றாய் உணரக் கிடைக்கின்றது.

ஆகவே லாந்தர் என்றதும், மற்றும் மேஜை, கடிகாரம், புஸ்தகம் என்றதும் ஒரு வித வடிவத்தில் காணப்படும் ஒரு தோற்றத்தின் பெயரே அல்லாமல் ஒரு வஸ்துவின் பெயர் அல்ல என்பதும் இதனால் உணரத் தகுந்ததாகும்.

எப்படியெனில் மேஜை நாற்காலி, பெஞ்சு,  ஊஞ்சல் என்று   சொல்லப் படுவதான வஸ்துக்கள் மரம் என்னும்  ஒரே மூலப் பொருளாலும் இரும்பு என்னும் ஒரே  உபமூலப் பொருளாலும் செய்யப்பட்டிருந்தாலும் தனித்தனி வடிவத் தோற்றத்தினால்  தனித்தனி  பெயரை உடையதாகி இருப்பது போலவே உலக வஸ்துக்கள் வடிவம், உருவம், சாயல், குணம், நிலை முதலாகிய பேதத்தால் பலவித பெயர்களை உடையதாயிருந்து பல பல  காரணங்களால் அதே வஸ்துக்கள் வேறு பல பெயர்களையும் அடைந் தாலும் முடிவில் அவற்றின் மூலப்பொருள்கள் பெயர் எல்லாவற்றிற்கும் ஒரே  (தாது) பெயருடைய வஸ்துவாகவேதான் இருக்கும்.

இதுபோலவேதான் ஜீவன்கள் என்கின்ற ‘உயிர்’ப் பிராணிகள்  எல்லாம்கூட உருவத்தில் -தோற்றத்தில் வேறு  வேறு வகையாய் – பெயராய் சொல்லப்பட்டாலும் அவற்றின் மூலப் பொருள்களும் ஒன்றேயாகும். அதாவது மரத்தையே மூலப் பொருளாய்க் கொண்டமேஜை, நாற்காலி பெஞ்சு முதலிய பல பெயர்களுக்கு உருவம்  தோற்றம் ஆகியவைகளே காரணமாய் இருப்பது போல் அணுக் கிருமி, பூச்சி, புழு, பக்ஷி, மிருகம், குரங்கு மனிதன் முதலாகிய  பல ஜெந்துக்களும் உருவம், தோற்றம், குணம் முதலிய காரணமாய் பலபெயர்கள்  சொல்லப்பட்டாலும்  தொட்டுக்காட்டும் பாகங் களானது  எல்லா ஜீவ வர்க்கத்திற்கும் ஒரே மாதிரியான-ஒரே பெயர்  கொண்ட தான மூலப் பொருளாகத்தான்  இருக்கும்.  ஆகவே ஜீவ வர்க்கங்கள் என்பனவாகிய சகல ஜீவப் பிராணிகளும் சாயல், உருவம், தோற்றம், குணம் முதலியவற்றை அவற்றின்  மூலப் பொருள்களும், தத்துவமும் ஒன்றே யாகும்.

எனவே எத்தனையோ கோடிவித ஜீவப்பிராணிகள் என்பதில் மனிதன் என்பதும்   ஒருவிதமான தோற்றமுடைய வுருவத்திற்கு  சொல்லப்படும் பெயரேயொழிய மனிதன் என்கின்ற  ஒரு தத்துவத் தனிப் பொருள் இல்லை என்பதை இதனால் ஒருவாறு உணரலாம்.  ஏனெனில் மனிதன் என்று குறிப்பிடுவதற்கு தொட்டுக்காட்டக்கூடிய ஒரு  வஸ்து மனித சரீரத்தின்  எந்த பாகத்திலும் கிடையாது என்பதாலேயாகும்.  உதாரணமாக ஒரு மனித உருவத்தைக் காட்டி அவனை மற்ற ஒரு மனிதனைத்  தொட்டுக் காட்டச் சொன்னால் அவன் ஒரு மனிதன் என்பவனின் சரீரம்  என்பதில் ஏதாவது ஒரு அவயவத்தைத்தான் தொட்டுக்காட்டுவான்.  அந்த அவயவத்திற்கு ஏற்கனவே  பெயர் கை, கால்,வயிறு, மார்பு, முதுகு, தோள் என்பவை முதலாகிய  ஏதாவது ஒரு பெயரையுடைய அவயமாகத்தான் இருக்க முடியும்.  அந்தப் பெயருக்குடைய அவயவ வஸ்துவையும் கவனித்துப் பார்க்க ஆரம்பித்தால் அது தசை, தோல் முதலாகிய  பெயர்களையுடைய பொருளாகத்தான் காணப்படும்.  இப்படி எல்லாம் இருந்தாலும் கூட அப்படி காட்டப்பட்ட  மனிதனும்  இயங்குதல் அதாவது அசைகின்ற சக்தி இருக்கும் போதுதான் அந்த தோற்றத்திற்கு மனிதன் என்கின்ற பெயரை உடையதாகவும் அதாவது அசைகின்ற சக்தி இல்லாது போய் விட்டால் மனிதன்  என்ற பெயரையுடைய அதே தோற்றம் பிணம் என்னும் பெயரையுடையதாக ஆகிவிடுகின்றது.

அன்றியும் மனிதன் அசையும் சக்தியை உடைத்தாயிருக்கும் வரை அந்த சரீரத்தில் எந்த பாகம் அதாவது  முன்  சொல்லப்பட்ட அவய வங்களாகிய கண், காது, வாய், கால், கை முதலாகிய எந்த  பாகம் போய் விட்ட போதிலும் மனிதன் என்றே சொல்லப்படுகின்றது.  ஆகையால் அசையும் சக்தி உள்ள ஒருவித தோற்ற உருவத்திற்குத்தான்  இங்கு மனிதன் என்று சொல்லப்படுவதாய் இருந்து வருவதை பார்க்கின்றோம். இந்தப் படியான மனிதன் அசையும் சக்தியை உடைத்தாய் இருக்கும்வரை தான் அவனுக்குள் உயிரோ-ஜீவனோ-ஆத்மாவோ ஒன்று  இருக்கின்றது என்று கருதுகின்றார்களே ஒழிய வேறில்லை.

இந்த அசையும் சக்தி இருக்கின்ற ஜீவன்கள் எல்லாவற்றிற்குமே தான் ஆத்மா என்பதாக ஒன்று இருக்கின்றது என்பது ஆத்மாவாதிகளின் கொள்கையாகும்.  அதாவது “சரீரத்தில் இருந்து ஆத்மா பிரிந்து விட்டால் அசைவு நின்று விடும்”.  அதாவது மனிதன் செத்துப்போவான் என்று சொல்லுவார்கள். எப்படி இருந்தாலும் “சரீரத்திற்கு அசையும் சத்தியை கொடுப்பது தான் ஆத்மா” என்பது ஆத்மாவாதிகள் கொள்கையென்பதும் இதனால் புலப்படும்.  ஆகவே இந்த அசையும் சக்தி சரீரத்திற்கு எப்படி உண்டாகின்றது? இது எப்படி நின்று போகின்றது? என்பதை சரிவர உணர்ந்தோமானால் ஆத்மாவின் யோக்கியதை இன்னதொன்று ஒருவாறு விளங்கிவிடும்.

இதற்குமுன் ஆத்மாவைப் பற்றி சில கேள்விகள் எழுகின்றன.

அதாவது சரீரத்திற்குள் ஆத்மா எப்படி வந்தது? ஏன் வந்தது? சரீரத்தை விட்டுவிட்டு  ஆத்மா எப்படி வெளியேறுகின்றது? அது ஏன் வெளியேறிவிடுகின்றது? எந்த மாதிரி ஆத்மா மனித சரீரத்திற்குள் வரு கின்றது?  எந்த மாதிரி ஆத்மா கழுதை முதலிய மிருக சரீரத்துக்குள் வரு கின்றது? எந்த மாதிரி ஆத்மா அணுக்கிருமி முதலிய சரீரத்திற்குள் நுழைக் கின்றது? ஜீவன்களின் அசைவு, பலம், குணம் முதலிய பலவித மாறுதலான நடவடிக்கைகளுக்கு ஆத்மா காரணமா – அல்லது அதனதன் சரீர அமைப்பு காரணமா என்பன போன்ற பல கேள்விகளாகும்.  (இவை பழைய கேள்விகளாக பலருக்கு காணப்படலாம் என்றாலும் பழைய கேள்விகள் புதிய மனிதர்களுக்கு தோன்றக்கூடாமல் செய்வதற்கு பழைய காலத்தில் இருந்தே யாரிடத்திலும் சக்தியில்லாமல் போய்விட்டதால் அது புதிய மனிதர்களுக்கும் தோன்றுவதற்கு யார் என்ன செய்ய  முடியும்) இவை ஒரு புறம் நிற்க இனி எடுத்துக் கொண்ட விஷயமாகிய ‘நான்’ என்பதைப் பற்றி கவனிப்போம்.

ஒரு மனிதன் தான் ‘நான்’ என்று சொல்லுவது அந்த மனிதனுக்குள் இருக்கும் அசையும் சக்தியாகிய ஆத்மா என்பதா? அல்லது வேறு பொருளா? என்று பார்ப்பதனால் அது வேறு பொருளா அல்லவா என்பதை கண்டு பிடிப்பதற்கு முன்னாலேயே ஆத்மா என்பது நான் என்று சொல்லு வதல்ல என்பதானது சீக்கிரத்தில் கண்டு பிடிக்கக்கூடியதாக இருக்கின்றது. எப்படியெனில் ஒரு மனிதன் பேசும்போது, “என் ஆத்மா என்றும், நான் என் ஆத்மாவை விடமாட்டேன் என்றும் இந்த மாதிரி நான், என், என்பது வேறு என்றும், ஆத்மா என்பது வேறு என்றும் பிரித்துப் பேசுவதையும் பேசும்படி இருப்பதையும் பார்க்கின்றோம்”. ஆகவே சரீரத்தின் அசையும் சக்தி ஆத்மா என்றால், இந்த நான் என்பது அதைவிட்டு வேறுபட்ட மற்றொரு விஷயமாக இருக்கும் என்று கருத வேண்டியதாய் இருக்கின்றது என்பது இதனால் ஒருவாறு புலப்படும்.

 

ஆனால் ஒரு மனித சரீரத்தில் ஆத்மா என்பதாக ஒரு வஸ்துவும் உயிர் என்பதாக ஒரு வஸ்துவும் நான் என்பதான தன்மையை உணர்த்த ஒரு வஸ்துவும் ஆக மூன்று வஸ்துக்கள் இருக்கும் என்று நினைப்பது சரி யான  நினைப்பாகாது என்பதோடு அப்படி நினைத்தாலும் அவைகளில் எது மனிதனை நடத்துகின்றது.  அல்லது மனிதனுடைய நடத்தைக்கு ஜவாப் தாரித் தனமுடையது என்னும் விஷயம் மயக்கத்தையும் முரண்களையும் விளை விக்கக் கூடியதாக ஆகி விடும்.  ஆதலால் நான் என்று சொல்லப் படுவதும், எண்ணப்படுவதும் தனிப்பட்ட ஒரு வஸ்துவல்ல என்றுதான்  எண்ண வேண்டியிருக்கின்றது. மற்றபடி பின்னை அது என்னமாய்தான் இருக்கக் கூடும் என்ற கேள்விக்கு நமது அபிப்பிராயத்தை தெரிவிக் கின்றோம்.

அது பிசகாய் இருந்தாலும் இருக்கலாம்.  ஆனால் அந்தப் பிசகானது ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா என்று பிரித்துச் சொல்லுகின்றது போன்ற அவ்வளவு பெரிய பிசகாகவும் ஆத்மாவுக்கு குணங்கள் கற்பிக்கின்ற அளவு பிசகாகவும் இருக்காது என்பது மாத்திரம் உறுதி.  திருத்துவதற்கு யாவருக் கும் உரிமை கொடுத்தே நமதபிப்பிராயத்தை தெரிவிக்கின்றோமே யொழிய இதுவே சரியான அபிப்பிராயம் என்பதாக  நாம் ஒன்றும் இவ்விஷயத்தில் சொல்ல வரவில்லை.

ஆகவே ஆத்மா என்பதாக தனித்துப் பிரித்து உணர்த்தக்கூடிய வஸ்து ஒன்று இல்லையென்று சொல்லுவதோடு இனி “நான்” என்ற உணர்ச்சி என்ன என்பதைப்பற்றி சிறிது சொல்லுவோம்.                                (தொடரும்)

குடி அரசு – கட்டுரை – 17.05.1931

 

 

 

 

You may also like...

Leave a Reply