கடவுளைப் பற்றி நினைக்க முடியா

 

தொழில் முயற்சி

மேல் நாட்டினர் முற்போக்கு

“நான் ஓர் நாஸ்திகனல்ல, தாராள எண்ண முடையோன். நான் ஒரு தேசீயவாதியுமல்ல, தேசாபிமானியுமல்ல. ஆனால் தீவிர ஜீவரக்ஷh எண்ண முடையவன். எனக்கு ஜாதி என்பதோ, ஜாதியென்பதின் பேரால் கற்பிக்கப் படும் உயர்வு தாழ்வுகளோ கிடையாது. அத்தகைய எண்ணத்தையே நான் எதிர்ப்பவன். ஆதரிப்பவனல்ல. தாங்கள் மேல் ஜாதியார், உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு, மனிதரது ஜீவாதாரமான உரிமைகளாகிய தெரு வில் நடத்தல், கோவிலுக்குள் செல்லல் முதலியவற்றை மறுத்துக் கொண்டு, ஏனையோர்க்கும் சமத்துவம் வேண்டுமென்று செய்கிற முயற்சியைக் கண்டிக்கிறேன்.”

“காலமெல்லாம் பண்டய பழக்கவழக்கங்களும், மூடக் கொள்கை களும் நிலைத்தே நிற்க வேண்டுமென்றால் ஒரு பறையன் என்று சொல்லப் படுகின்றவனோ, அல்லது சக்கிலி என்று சொல்லப் படுகின்றவனோ, மிருகத்தைவிடக் கேவலமாக நடந்தப்பட்டே வர எப்படி இந்தியா அவன் தாய் நாடு தான் என்று எண்ணமுடியும்? ஒரு பொது சேவைக்கு அவர்களை நம்மோடு ஒத்துழைக்க எதிர்பார்க்க முடியுமா?”

வேலையில்லாத் திண்டாட்டம்

கஷ்டப்படுகின்ற தொழிலாளிகள் அரசாங்கத்தை நடத்துகின்ற வர்களாயிருக்கவேண்டும். ஜனங்களின் நன்மைக்காக, ஜனங்களாலேயே நடத்தப்படுகின்ற அரசாங்கமாயிருத்தல் வேண்டும். இந்தியாவைப் பற்றி யுள்ள வறுமையை அகற்றக் கூடிய அரசாங்கமாயிருக்க வேண்டும். பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஐக்கிய தேசம் முதலியனவெல்லாம் குடியரசு நாடுகளாகவே இருக்கின்றன. ஆனால் எங்கும் வேலையில்லாத் திண்டாட்டமே தலை விரித்து ஆடுகிறது. ரஷ்யா ஒன்றில் மட்டும் வேலை இல்லாத் திண்டாட்டமே கிடையாது. ஒரு சில பிச்சைக்காரர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் வயது சென்றவர்களும், அங்கவீனர்களுமே, அவர்களை அரசாங்கம் போஷிக்கிறது. உண்மையில் அது ஒரு புதிய உலகம் அதுபோல் முன்னொரு போதும், எந்நாட்டிலும் சீர்திருத்தம் நடந்தேறியதேயில்லை. அந்நாடு தொழி லாளர் மயமாகவே இருக்கிறது. தோட்டி முதல் தொண்டமான் ஈறாக எல் லோரும் அரசாங்கத் தொழிலாளராகவே கருதப்படுகின்றனர் அங்கு எல்லா மனிதரும் சமமாகவே கருதப்படுகின்றனர். மக்களுக்குள் உயர்வு தாழ்வு என்பதே கிடையாது. வியாபாரம், தொழில், வர்த்தகம், கல்வி முதலிய சமூக அபிவிருத்திக்கான தொழில்களெல்லாம் அரசாங்கப் பொறுப்பிலேயே நடைபெற்று வருகின்றன. விவசாயம் ஐக்கிய முறையில் அரசாங்கப் பொறுப்பில்  பரிபாலிக்கப்பட்டு வருகிறது.

“அங்கு சமயமென்பது ஒன்றுமே கிடையாது. ஜனசமூக நன்மையே சமயம். அதுவே சன்மார்க்கம். கிறிஸ்துவ கோயில்களுண்டு. அதற்கு அரசாங் கத்தார் எவ்வித பணஉதவியும் செய்வது கிடையாது. அவர்களுக்கு கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ கவலையோ, விசாரமோ  கிடையாது.”

“குற்றம் செய்தவர்களை அரசாங்கம் ஒரு நவீன முறையில் தண்டிக் கிறது. அவர்களுக்கு சகல சௌகரியங்களும் செய்து கொடுக்கப்பட்டாலும், அவர்கள் சம்பளத்தில் ஒரு பாகம் அபராதத் தொகையாக பறிமுதல் செய்யப் படுகிறது. பலமுறை குற்றம் செய்தவர்களை சுகாதார நிலயத்திற்கனுப்பி அங்கு அவர்களது மனோ நிலை மாறத்தக்க சிகிச்சைகள் செய்யப்படு கின்றன.”

“பாடசாலைகள் மூலமாயும் சினிமாக்கள் மூலமாயும் இதுவரை கற்றிராத பாமர மக்களுக்கும் தொழிற் முயற்சியை அஸ்திவாரமாகக் கொண்ட கல்வி கற்பிக்கப்படுகிறது. ஒரு மதத்தையும் பின் பற்றாத அரசாங்கம், மத எதிர்ப்பு சங்கத்திற்கு போதிய உதவியளித்து வருகிறது.”

நான் இத்தேசத்தைப் பார்வையிடச் சென்றதின் நோக்கமெல்லாம், அங்குள்ள நிலைமைகளைச் சரிவர அறியவும், அத்தேசத்தைப் பற்றிப் பெருமிதப்படுத்திக் கூறும் கதைகள் உண்மையா வென்று அறியவுமே யாகும். அரசாங்கம் தாம் தேசத்தை புணருத்தாரணம் செய்ய வேண்டுமென்ப திலேயே தீவிர கவனம் செலுத்துவதால் கடவுளைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ நினைப்பதற்கு அவர்களுக்குநேரமில்லை.”

“எகிப்து நாட்டில் பர்தா( கோஷா) முறை அநேகமாக அழிந்து விட்ட தென்றே சொல்லலாம். சில வயோதிகக் கிழவிகள் மட்டும் அதைவிடவில்லை. எகிப்திய பெண்கள் ஆங்கில மாதரைப் போலவே ஆடை அணிந்து கொள்ளுகிறார்கள். துருக்கி தேசத்தில் அதி தீவிரமான மாறுதல்கள் ஏற்பட் டுள்ளன. சமூகமுன்னேற்றத்தில் துருக்கி மாதர் அதிக பிரயத்தனம் எடுத்து வருகிறார்கள். சமீபத்தில் ஒரு துருக்கி மாது போலீஸ் சூப்பரெண்டாக நியமனம் பெற்றிருக்கிறார்.”

குறிப்பு : கொழும்பில் 17 – 10 – 32இல் சிலோன் டெய்லி நியூஸ் பத்திரிகை பிரதிநிதியொருவருக்கு பேட்டி கொடுத்துப் பேசியது.

குடி அரசு  – நேர்காணல் – 30.10.1932

You may also like...