தொழிலாளர்களும் காங்கிரஸ் இயக்கமும்
“ காங்கிரஸ் தலைவர்கள் வீழ்க!
டில்லி ஒப்பந்தக்காரர்கள் ஒழிக!!”
சுபாஸ் சந்திரபோஸ் மீது நம்பிக்கையில்லை!!! ”
சக்லத்வாலா சேதி.
– யார் எழுதினாலென்ன
கல்கத்தாவில் தொழிலாளர்காங்கிரஸ் ஒன்று திரு. சுபாஸ்சந்திரபோஸ் தலைமையில் கூடிற்று. அது சமயம் பம்பாய் தொழிலாளர்கள் பிரதிநிதிகள் “காங்கிரஸ் தலைவர்கள் ஒழிக, டில்லி ஒப்பந்தக்காரர்கள் (அதாவது காந்தி) ஒழிக” என்று கோஷித்துக்கொண்டிருந்தார்கள்.
லண்டனிலிருந்து பொது உடைமைக்கட்சி திரு. சக்லத்வாலா அவர் கள் “சென்ற தடவை நான் இந்தியாவுக்கு வந்திருந்த பொழுது காந்தியின் வண்டவாளத்தையும் அவரைப் பின்பற்றுகின்றவர்களின் புரட்டுகளையும், துரோகங்களையும் வெளியிட்டேன். ஆனால் இந்த சமயம் பிரிட்டன் என்னை அங்குவர அனுமதிக்கவில்லை. ஆனாலும் இந்தியாவில் உள்ள பொது உடைமை மக்கள் காந்தியின் பித்தலாட்டத்தை தைரியமாய் வெளிப் படுத்தவேண்டும்” என்று எழுதியிருந்தார்.
சுபாஸ் சந்திரபோஸ் தலைமை பிரசங்கத்தில், கராச்சி காங்கிரஸ் தீர்மானத்தை வரவேற்று, அதில் காணும் வார்த்தைகளைவிட கருத்து நல்லதென்று சொன்னதுடன் ருஷிய மாஸ்கோ கட்டளைக்கு சரணாகதி அடைய வேண்டியதில்லை என்றும் சொன்னார். இதனால் மறுநாள் குழப்பம் ஏற்பட்டு “சுபாஸ் சந்திர போஸ் மீது நம்பிக்கை இல்லை” என்பதாக பொது உடமைக்கக்ஷி தொழிலாளர்கள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதில் சுபாஸ் சந்திர போசும் இருந்து கொண்டார். ஒரு ஓட்டினால் அது தோல்வி யுற்றதானாலும் கூட்டத்தை ஒத்திபோட்டு விட்டதாகச் சொல்லிவிட்டு சுபாஸ் சந்திர போஸ் வெளியேறிவிட்டார். பிறகு எல்லோரும் கூடி “சுபாஸ் சந்திர போஸ் மீதும் அவரது கோஷ்டி மீதும் நம்பிக்கை இல்லை” என்கின்ற தீர்மானம் நிறைவேற்றி விட்டார்கள்.
பொது உடைமைக் கக்ஷி தொழிலாளர் அறிக்கை
“திரு. சுபாஸ் சந்திர போஸ் விவாதத்தில் கலந்துகொள்ளுவதில்லை என்று வாக்களித்ததினால் அவர் மீது நம்பிக்கையில்லை என்ற தீர்மானத் திற்கு அக்கிராசனம் வகிக்க அனுமதித்தோம். ஆனால் அவரும் ஓட்டு கொடுத்ததால் ஒரு ஓட்டில் அத்தீர்மானம் தோற்றுப்போய் விட்டது. அத்தீர்மானம் முதலில் தோற்றுவிட்டதற்குக் காரணம் இதுதான் காரண” மென அவ்வறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கிறார்கள்.
இது ஜீலை µ 6, 7 தேதி திராவிடன், சுதேசமித்திரன், இந்தியா, தமிழ்நாடு ஆகிய பத்திரிகைகளில் காணப்படுகின்றன. எல்லாப் பத்திரிகை களையும் வைத்துப் பார்த்தால் இன்னும் பல விஷயங்கள் விளங்கும்.
தமிழ்நாட்டில் உள்ள சில தொண்டர்கள் “காங்கிரசும், நவஜீவன் பாரத சபையும் பொது உடைமைக்காரர் கொள்கையும், தொழிலாளர் கொள்கையும் ஒன்று என்று சொல்லுவதும்” “காங்கிரஸ் தொண்டர்களும், காங்கிரசை ஆதரிப்பவர்களும், நவஜீவன் பாரத சபை மகாநாடு நடத்துகிறோம்” என்பதும் ஒரு கடையில் லாபத்தின் நிமித்தம் பல சாமான்கள் வைத்து விற்பதையே யொக்கும்.
திரு. சக்லத்வாலா தொழிலாளர் காங்கிரசுக்கு அனுப்பிய சேதியில் நன்றாய் எழுதியிருக்கிறார். “நான் முன் இந்தியாவுக்கு வந்த போது காந்தி யின் வண்டவாளத்தை நன்றாய் விளக்க முயற்சித்தேன். இவ்வருஷம் சர்க்கார் என்னை இந்தியாவுக்கு அனுமதிக்கவில்லை. ஆனால் நீங்கள் (பொது உடைமைத் தொழிலாளர்கள்) இந்த சமயத்தில் காந்தியின் பித்தலாட் டங்களையும் அவரது கோஷ்டியின் மோசங்களையும் துரோகங்களையும் நன்றாய் ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்” எனக் கேட்டுக் கொண்டி ருக்கின்றார். ஆகவே தொழிலாளிகள் மனிதர்களாய் வாழவேண்டுமானால், இந்தியாவில் பொது உடைமை தத்துவம் ஏற்படவேண்டுமானால், முதலா வதாக காங்கிரசும், காந்தியும், அவரது கோஷ்டியும் ஒழிந்தாக வேண்டு மென்பதே அவர்களது அபிப்பிராயம் என்பது நன்றாய் விளங்குகின்றது.
இதே திரு சுபாஸ் சந்திர போஸ் அவர்கள் கராச்சி காங்கிரசில் திரு காந்தியவர்களால் அழைக்கப்பட்டு காந்தியைப் பார்ப்பதற்கு முன் பேசிய பேச்சில் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால் உண்மை விளங்கும். அதாவது-
“காங்கிரஸ் நமக்கு சுதந்திரத்தை சம்பாதித்துக் கொடுக்கு மென்ற நம்பிக்கை எனக்கில்லை. காங்கிரசின் கொள்கை பயனற்ற தாயும், பலஹீனமானதாயுமிருக்கிறது.
காங்கிரஸ் தலைவர்கள் கூறுவதில் முன்னுக்குப்பின் முறணா னவைகள் பல யிருப்பதோடு அவர்கள் சொல்லொன்றும், செய லொன்றுமாகச் செய்து வருகிறார்கள். அவர்களுடைய வேலைத் திட்டம் புதிய மாறுதலை யுண்டாக்கும் நோக்கங் கொண்டதா யில்லை. ஆனால் விஷயங்களைச் சரி கட்டிக்கொண்டு போகிறவை களாகவே யிருக்கின்றன.
ஜமீன்தாரர்களுக்கும், குடிகளுக்கும், பணக்காரனுக்கும், கூலிக்காரனுக்கும், தீண்டப்படாதாரெனக் கூறப்படுகிறவர்களுக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், யாவருக்கும் நல்ல பிள்ளைகளாக நடந்து கொள்வதென்பதையே அவர்கள் தங்கள் கொள்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.
என்று சொன்னார்.
பிறகு திரு.காந்தியைப் பார்த்த பிறகு திரு.சென்குப்தா கக்ஷியின் தொல்லைக்குப் பயந்து திரு.காந்தியை சரணாகதி அடைய நேர்ந்ததின் பயனாய் “காங்கிரசுக்கு ஜே! காந்திக்கு ஜே!!” போட வேண்டிய அவசியத் தில் வந்து விட்டார். “பாவம்” இல்லையானால் ஒரு மணி நேரத்தில் எப்படி ஞானோதயம் ஏற்பட்டிருக்கும் என்பதை யோசித்தால் இந்த உண்மை விளங்கும்.
இப்பொழுதும் நமது நாட்டில் காங்கிரசு தொண்டர்கள், தலைவர்கள் என்பவர்கள் பொதுஉடைமை தத்துவம் பேசுவது என்பது பொது உடைமை தத்துவத்தை ஒழிப்பதற்காகச் செய்யும் காரியமாகத்தான் முடி யுமே யொழிய மற்றபடி அதனால் எவ்வித பயனும் ஏற்படப் போவ தில்லை என்பது உறுதியானாலும் இந்த முட்டுக்கட்டைகளை எல்லாம் இலக்ஷியம் செய்யாமல் பொது உடைமை உணர்ச்சி ஏற்படக்கூடிய வேகம் நமது நாட்டில் தோன்றி விட்டதால் இதற்காக யாரும் பயப்பட தேவை யில்லை என்பதையும் ஆனால் தைரியமாய் உண்மையை வெளிப்படுத் திக் கொண்டு வரவேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
குடி அரசு – கட்டுரை – 12.07.1931