வட்ட மேஜை முடிவு
1920-ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் அரசியல் சீர்திருத்தம் வழங்கின போது அதிலும் முன்னேற்றமான சீர்திருத்தம் வழங்கும் விஷயத்தில் “ஒரு 10 வருஷகாலம் பொறுத்து பிரிட்டிஷ் பார்லி மெண்டினால் ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு அதை இந்தியாவுக்கு அனுப்பி அதன் மூலம் இந்தியரின் தேவையையும் தகுதியையும் விசாரித்தறிந்து அதற்குத்தகுந்ததான அரசியல் முன்னேற்றம் வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தபடியே 1929ல் ஒரு கமிட்டியை அதாவது சைமன் கமிட்டியை இந்தியாவுக்கு அனுப்பினார்கள். அந்தப்படி அனுப்பப்பட்ட கமிட்டியை காங்கிரஸ் என்னும் பெயரால் ஒரு கூட்டம் பகிஷ்காரம் செய்த தாய் காண்பித்தாலும் மற்றபடி இந்தியாவிலுள்ள எல்லாப் பொது ஸ்தாபனங் களும், சமூக சமய ஸ்தாபனங்களும், மேலும் இந்திய ஜனப்பிரதிநிதி களடங்கிய ஸ்தலஸ்தாபனங்களாகிய தாலூகா, ஜில்லா போர்டு, முனிசிபா லிட்டி முதலியவைகளும், அரசியல் நிர்வாக ஸ்தாபனங் களாகிய மாகாண சட்டசபை, இந்தியா சட்டசபையாகிய ஸ்தாபனங்களும் பெரிதும் வரவேற்று உபசரித்து தங்கள் குறைகளையும் கஷ்டங்களையும் தேவைகளையும் எடுத்துச் சொல்லி மேற்கொண்டு அளிக்கப்படும் சுதந்திரங் களை நிர்வகிக்கும் தகுதிகளையும் எடுத்துக்காட்டி அவற்றிற்காக பல திட்டங் களையும் வகுத்து அக்கமிட்டி வசம் கொடுத்ததும் யாவரும் அறிந்ததே யாகும்.
இவை ஏற்பட்ட பிறகு காங்கிரசானது தன்னுடைய அபிப்பிராயத் தை தேச மகாஜனங்களும் அரசாங்கமும் ஏற்றுக்கொள்ளாமல் போய் விட்டதே என்கின்ற கோபமான ஆத்திரத்தால் சட்ட மறுப்பென்பதன் மூலம் பாமர மக்கள் சுலபத்தில் ஏமாறத்தகுந்ததான கொள்கைகளாய் கண்டு பிடித்து சுதேசியென்றும், வரி மறுப்பு என்றும், மதுவிலக்கு மறியல் என்றும் சொல்லும்படியான திட்டங்களைக் கொண்டு சட்ட மறுப்பு முதலிய கிளர்ச்சி களை ஆரம்பித்ததும் அக்கிளர்ச்சியையும் பொது ஜனங்களும் பொதுஜன ஸ்தாபனங்களும் பல சமூக ஸ்தாபனங்களும் சட்ட சபைகள் முதலியவை களும் லட்சியம் செய்யாமல் சைமன் கமிட்டிக்கு முன் தங்களால் சமர்பிக்கப் பட்ட திட்டங்களை விவரித்துச் சொல்வதற்காகவும் அத்திட்டங்கள் நிறைவேற்றப்படுவதன் மூலம் ஒரு சமூகத்திற்கும் மற்றொரு சமூகத்திற்கும் அபிப்பிராய பேதம் ஏற்படாமலும் ஒரு லக்ஷியத்திற்கும் மற்றொரு லட்சியத்திற்கும் முரண் ஏற்படாமலும் ஒரு மாகாணத்திற்கும் மற்றொரு மாகாணத்திற்கும் அதிருப்தி ஏற்படாமலும் இருப்பதற்காகவென்று எல்லா மாகாணப் பிரதிநிதிகளையும் எல்லா சமூக சமயப் பிரதிநிதிகளையும் எல்லா லட்சியப் பிரதிநிதிகளையும் வரவழைத்து நன்றாய் தர்க்கித்து முடிவு செய்வது என்னும் கருத்தின் மீது வட்டமேஜை மகாநாடு என்பதாக ஒன்றை லண்டனில் கூட்டி அதற்கு இந்தியர்களால் கொண்டாடப்பட்டவர்கள், முன் வழங்கப் பட்ட இந்திய அரசியல் சீர்திருத்தங்களை நடத்திக் கொடுத்தவர்கள், மேலும் நடத்திக் கொடுக்கத் தகுதியும் செல்வாக்கும் உடையவர்கள் என்று கருதக் கூடியவர்களில் பலரை சமய, சமூக, ஜாதி, வகுப்பு, தொழில், லட்சியம், ஆண், பெண் தன்மை வாரியாகப் பிரதிநிதிகளை அறிந்து வரவழைத்து சுமார் மூன்று மாத காலம் பேசி, விவாதித்து ஒரு முடிவுக்கு வந்ததோடு புதிய சீர்திருத் தத்தின் போக்கு இன்ன விதமாய் இருக்க வேண்டும் என்கின்ற தன்மையை யும் தீர்மானித்து அத்தீர்மானத்தையும் ஏகமனதாய் நிறைவேற்றிக் கொண் டார்கள் என்பதும் யாவருமறிந்த விஷயமாகும்.
இவை ஒரு புறமிருக்க பிரிட்டிஷ் பிரதம மந்திரியாரும் மேற்கண்ட விஷயங்கள் நன்றாகக் கலந்து பேசி தர்க்கித்து ஒரு தீர்மானத்திற்கு வந்த தற்காக இந்தியாவுடன் நேசமாகவும் அன்னியோன்ய நட்பாகவும் இருக்க வேண்டுமென்கின்ற எண்ணத்தின்பேரில் என்று மனப்பூர்வமான ஆசை யைக் காட்டி மனம்விட்டுப் பேசியதில் பல நன்மொழிகள் கூறி பிரதிநிதி களையும் மகிழ்ச்சியுடன் உபசாரம் செய்து வழியனுப்பியிருப்பதும் இந்த நல்ல காரியத்திற்காகவென்று ³ இந்தியப்பிரதிநிதிகளும் பிரதம மந்திரி யாரின் தயாளகுணத்திலும் பிரிட்டிஷாரின் நல்ல எண்ணத்திலும் நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுவதற்காக அவர்களைப்புகழ்ந்து பாராட்டியதுடன் நன்றியும் செலுத்திவிட்டு இந்தியாவுக்கு கப்பலேறி இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் இனி இரண்டொரு வாரத்தில் இங்கு nக்ஷமமாய் வந்து சேர்ந்தும் விடுவார்கள் என்பது உறுதி.
இந்த நடவடிக்கைகளிலிருந்து இந்தியாவுக்கு வழங்கப்பட வேண்டிய 3வது தவணை சீர்திருத்த முயற்சியின் அத்தியாயங்கள் ஒருவாறு முடிவு பெற்றதாகி விட்டதென்றே கூறலாம். ஒவ்வொரு கூட்டத்தாரும் இச் சீர்திருத்தங்கள் “தங்களால் தான் கிடைத்தது” “தங்களால்தான் கிடைத்தது” என்று பெருமையும் பாராட்டிக்கொள்ளலாம். ஆனால் இன்றிலிருந்து அனேகமாய் காங்கிரசுக்கோ மற்றபடி திரு. காந்தி கிளர்ச்சிக்கோ கூட இனி மேல் உள்ள கவலையும் வேலையுமெல்லாம் இந்த சீர்திருத்தத்தின் பயனாய் ஏற்படப் போகும் பெரிய பெரிய அதிகாரங்களும், பதவிகளும், சம்பளங் களும் மற்ற விதமான பண வரும்படிகளும், பெருமைகளும் யார் யார் அடையும்படி செய்வது என்பதைத்தவிர வேறு வேலையில்லாமல் போய்விடுமென்பதில் நமக்குச் சந்தேகமில்லை. சர்க்காரும் அநேகமாய் இந்த எண்ணத்தையே கொண்டு கூடிய சீக்கிரம் ஜெயில் கதவுகளை யெல்லாம் திறந்து அரசியல் கைதிகள் என்று சொல்லப்படும் ‘தேச பக்தர்களை’ எல்லாம் வெளியில் விரட்டி அடித்துத் துரத்தி விடக்கூடும் என்பதிலும் நமக்குச் சந்தேகமில்லை. வெளிவந்த, இந்த “தேசபக்தக் கூட்டங்களும்” இனி கொஞ்சகாலத்திற்கு அதாவது தேர்தல் காலம் சமீபிக்கும்வரை மக்களின் உப்பு வரியைப்பற்றியோ, சீமை ஜவுளியைப் பற்றியோ, கள்ளுகுடியைப் பற்றியோ சிறிது கூட கவலையில்லாமல் தேர்தலுக்கு ஆள்களைப் பொறுக்கி எடுத்து கூட்டு வியாபாரப் பங்கு உண்டாக்கி ஒப்பந்தம் பேசி அடுத்தத் தேர்தலுக்குத் தயார் செய்யும் வேலையிலேயே சரியானபடி ஆழ்ந்து கிடந்து தேர்தல் சமீபத்தில் வந்த பிறகுதான் மறுபடியும் ஒருமுறை உப்புவரி, சுதேச சாமான், மதுவிலக்கு ஆகிய கொள்கைகளைப்பற்றி பேசமுடியும் என்று முடிவு கட்டிவிடலாம்.
ஆகவே, இந்தக் காங்கிரசு விஷயமும் உப்புக் காய்ச்சும் கிளர்ச்சி விஷயமும், நிரபராதிகள் உதை அடிபட்டு, மண்டையுடைத்து, உயிர்கூட துறக்கவேண்டி நேர்ந்த விஷயமும், சிலர் பெரிய பெரிய நஷ்டம் அடைந்த விஷயமும் கொண்ட அத்தியாயமும் ஒருவாறு முடிவுபெறலாம்.
இவற்றிற்கெல்லாம் சமாதானமாக “நாங்களும் இந்தமாதிரியெல்லாம் செய்யாவிட்டால் இதுகூட கிடைத்திருக்காது” என்கின்ற எண்ணத்தின் மீதே சிலர் தங்கள் தங்கள் கஷ்டத்திற்கு சமாதானம் செய்து கொண்டாலும் கொள்ளலாம்.
ஆகவே இவையும் ஒருபுறமிருக்கட்டும். இனி சீர்திருத்தத் திட்ட விஷயத்தையும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படப்போகும் பலனையும் பற்றி சிறிது யோசிப்போம்:-
முதலாவது இந்த சீர்திருத்தத்தின் மூலம் வகுப்புவாதம் ஒழிந்த தென்றாவது, ஒழிவதற்கு வகை ஏற்பட்டதென்றாவது சொல்வதற்கு இல்லை யென்பதையும், வகுப்புக்குவகுப்பு நம்பிக்கைக்கு மார்க்கமோ, சமாதா னமோ, வகுப்புப் பிரதிநிதித்துவ விஷயமோ கூட வட்டமேஜை மகாநாட்டின் காலத்தில் 4ல் 3பங்கு நாட்களான சுமார் இரண்டு மாதகாலம் பேசியும் எவ்வித முடிவும் பெறாமல் போனபடியே திரும்பப்பட்டது என்பது கூட இல்லாமல், இங்கு இருந்து சீமைக்குப் போகும்போது இருந்த நிலைமை யைவிட அதிக மோசமான அவநம்பிக்கையின் மீதே திரும்பும்படியாகி விட்டதென்றும் சொல்லலாம்.
எப்படியிருந்தாலும் தேசியவாதிகளில் படித்த மக்களுக்குள்ளும் பணக்காரர்களுக்குள்ளும், ஜமீன்தார், முதலாளி ஆகியவர்களுக்குள்ளும் இப்போதைய சீர்திருத்தம் அதாவது வழங்கப்போவதாக ஏற்பட்ட சீர் திருத்தம் சைமன்கமிஷன் சிபார்சுக்கு மேல் என்றும் மிக்க தாராளமான தென்றும் பொதுஜனப் பிரதிநிதிகளால் கேட்கப்பட்டவைகளுக்கும் மேல் என்றும் எங்கும் அபிப்பிராயமாயிருப்பதைக் காணலாம்.
நம்மைப் பொருத்தவரையில் நாமும்கூட வகுப்புவாதமும் அவ நம்பிக்கையும், பிரதிநிதித்துவமும் நேர் செய்யப்படாமலும் ஆண் பெண், விஷயம், தாழ்த்தப்பட்டவர்கள் விஷயம் முதலிய விஷயங்களில் கண்டிப் பான ஒருசமத்துவ திட்டத்தை உறுதியாக்கி முடிவு செய்யாததைப் பற்றியும், அதிருப்திப் படுவதோடு சுதேச சமஸ்தானங்களையும் கொண்டு வந்து நம்முடன் பிணைந்திருக்கும் ஒருபெரிய ஆபத்தைப் பற்றியும் மிகவும் மிகவும் வருந்த வேண்டியிருக்கின்றது. இந்த விஷயமானது இதுவரையில் அளித்து வந்த சீர்திருத்தங்களால் எப்படி நமது பாமர மக்களை நம்நாட்டு படித்தவனும், பணக்காரனும், மேல் ஜாதிக்காரனும் ஏமாற்றி, அடக்கி, ஆண்டு கொள்ளை அடித்துகொண்டும், அவர்களும் பாமரமக்களும் ஒருவருக் கொருவர் சண்டையிட்டுக் கொண்டு கிடக்கும்படியாயும் ஐரோப்பியர்களின் காரியம் ஒரு ஊசிமுனை அளவுகூட குந்தகமில்லாமல் நடக்கும்படியாக இருந்து கொண்டிருக்கும்படி செய்யத் தகுந்ததாய் இருந்ததோ அதேபோல் ஏன்? இப்போது அதற்கும் மேலாக தங்கள் காரியம் பந்தோபஸ்தாக இருக்கும்படியும், இங்குள்ள சிறு மீன்களைப் பெரு மீன்கள் பிடித்துச் சாப் பிட்டுக் கொண்டு தங்களுக்கு என்றும் குறையாப் பங்கு கஷ்டமில்லாமல் கொடுத்துக்கொண்டு வரும்படியாகவும் பார்த்து பெரிய ஆபத்துக்களை கொண்டுவந்து விட்டாய் விட்டது. இந்தப்படி பிரிட்டிஷ் சர்க்கார் செய்யவும் இதை இந்தியப் பிரதிநிதிகள் ஒப்புக்கொள்ளவும் இனி காங்கிரஸ் தலைவர் களும் ஒப்புக் கொள்ளவும் திரு.காந்திகூட மேலொப்பம் போடவும்வேண்டிய அவசியம் ஏற்படப்போகும் காரணம் என்ன வென்று யோசித்தால் அது தானாகவே விளங்கும். என்னவென்றால் இந்தியநாட்டில் ருஷியக் கொள்கை பரவிவிடுமோ என்கின்ற பயத்தின் மீது பிரிட்டிஷார் இந்தியப் படித்தவர் களையும் பணக்காரர்களையும் கூட நம்பாமல் பாதுகாப்புக்காக சுதேச சமஸ் தானங்களையும் இப்போது இந்த ஆக்ஷியின்மீது ஆதிக்கம் செலுத்தும்படி யாகவும் பங்குபெரும்படியாகவும் செய்துவிட்டார்கள். இனி மத்திய அரசாங்கத்தில் எப்போதும் சுதேச சமஸ்தானங்களின் ஆதிக்கம் தான் தலை சிறந்து நிற்கப்போகின்றது. எப்படியெனில், தாலூகா ஜில்லாபோர்டுகளில் எப்படி ஜமீன்தார்கள் ஆதிக்கமும், பாளையக்காரர்கள், பட்டக்காரர்கள் பண்ணையக்காரர்கள் ஆதிக்கமும் தானாகவே ஏற்பட்டுவிடுகின்றதோ அதே போன்றும், மற்றும் சட்டசபைகளிலும் ஜமீன்தார்கள் ஆதிக்கமும் பணக்காரப் பிரபுக்கள் ஆதிக்கமும் தலை சிறந்து விளங்குகின்றதோ அதே போலவும், இவர்கள் எப்படி அந்த ஸ்தாபனங்களில் இருந்துகொண்டு சர்க்கார் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொடுப்பதுடன் தங்கள் ஆதிக்கத்தையும் நிலை நிறுத்திக் கொண்டு பார்ப்பன ஆதிக்கத்திற்கும் உதவி செய்து கொண்டு வரப் படுகின்றார்களோ அது போலவும் தான் இனி சுதேச சமஸ்தானங்களையும் கொண்டுவந்து நுழைத்ததின் மூலம் பணக்காரனுக்கும் பார்ப்பானுக்கும் அரசாங்கத்திற்கும் மற்றொரு புதிய ஆதரவு ஏற்பட்டுவிட்டது என்றே சொல்லலாம். இந்தமாதிரி அரசாங்கத்தை இனி பாமர மக்களால் சிறிதுகூட அசைக்க முடியாதென்றே சொல்லிவிடலாம்.
அன்றியும் சமதர்மக் கொள்கையையோ, ஒரே பக்கம் செல்வ மெல் லாம் போய்ச்சேர்ந்து கொண்டிருப்பதைத் தடுக்கும் கொள்கையை யோ இனி சுலபத்தில் எதிர்பார்க்க முடியாமல் செய்யப்பட்டு விட்டது. திரு. காந்தியவர் களும் தான் உப்பு சத்தியாக்கிரகக் கிளர்ச்சியை ஆரம்பித்ததற்குக் காரணமும் “ருஷியக்கொள்கை போல்ஸ்விஷம் இந்தியாவில் பரவிவிடும் என்று கருதி அதைத்தடுப்பதற்குத்தான் உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பித் தேன்” என்று சொல்லியிருப்பதையும் சேர்த்துப் பார்த்தால் கட்டாயம் அரசாங்கத்தார் இந்தக் கருத்துக் கொண்டேதான் இப்படிச்செய்தார்கள் என்பதும், திரு.காந்திக்கும் இது மிகத் திருப்தியாயிருக்குமென்பதும் தானாய் விளங்கும். இந்தக்காரியமா னது இந்தியா “விலங்கைத்தரித்து குட்டையில் மாட்டிக்கொண்டதற்கு” ஒப்பேயாகும். இதில் சிறிதும் சந்தேகமேயில்லை. ஏனெனில் நம்முடைய இன்றைய சுதேச ராஜாக்கலெல்லாம் ஏறக்குறைய தசரத சக்கரவர்த்தி போலும், ராமனைப் போலும், கிருஷ்ணனைப் போலும், அரிச்சந்திரனைப்போலும், கூன்பாண்டியனைப்போலும் தான் இருக்கின்றார் களே யொழிய அதிலிருந்து சிறிதும் மாறுபட்டவர்கள் மிகமிகச் சொற்பமே யாவார்கள்.
ஆகவே, இந்தமாதிரி சமஸ்தானங்களை யெல்லாம் அதாவது இந்தியாவிலுள்ள சுதேச அரசாங்கங்களின் தொல்லைகளையெல்லாம் அடி யோடு ஒழிக்கவேண்டுமென்று கருதிக்கொண்டிருந்த நமக்கு அவர் களுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமான ஆதிக்கமும் பந்தோபஸ்தும் ஏற்பட்டி ருக்கின்றதென்றால் அதைப்பற்றி என்ன சொல்லுவது என்பது வாசகர்கள் தான் முடிவுகட்ட வேண்டும்.
தவிர, மற்ற சீர்திருத்தங்கள் விஷயத்திலோ வட்ட மேஜை மகா நாட்டில் தீர்மானமாகியிருக்கின்ற தீர்மானப்படி பார்த்தால் அன்னிய நாட்டு சம்பந்தம், வெள்ளைக்கார உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்பு, சீர்திருத்தத் திட்டத்தை நடத்தி வைத்தல், சிறுபான்மை யோரின் பாதுகாப்பு முதலிய சில விஷயங்களில் பாதுகாப்பு செய்துகொண்டிருப்பது தவிர மற்றவைகளை மத்திய அரசாங்கத்திற்கு ஒப்படைத்து அதை இந்திய பிரஜைகளின் பிரதிநிதி களால் நிர்வகிக்கச் செய்யச் சம்மதிக்கப்பட்டாய் விட்டது. பிரதிநிதிகளைத் தெரிந்தெடுக்கும் உரிமை முழுவதையும் நமக்கே விட்டுக்கொடுத்துமாய் விட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தார் தங்கள் பந்தோபஸ்தில் வைத்துக் கொண்ட விஷயங்கள் சரியா தப்பா அல்லது அதையும் அவர்கள் நமக்கு ஒப்படைத்துவிட வேண்டியதுதானா என்கின்ற விஷயம் வேறானது. அது விஷயத்தில் வட்ட மேஜை மகாநாட்டுக்குச் சென்றவர்கள் யாருக்கும் ஆnக்ஷபனையோ அதிருப்தியோ கிடையாது. நமக்கும் அதில் அதிக தகராறு கிடையாது. ஏனெனில் அவைகளை நமது கைக்கு மாற்றிவிட்டதினாலேயே அவை நமது மக்களுக்கு பயன் படும்படியாக செய்யப்படுமா என்கின்ற விஷயத்தில் நாம் பயந்து கொண்டு தான் இருக்கின்றோம். அது ஒருபுற மிருந்தாலும் மாற்றப்பட்டு நம்மிடம் ஒப்படைக்கப் போகும் விஷயங்கள் எப்படி நடைபெறும் என்பதைப்பற்றி யோசித்துப் பார்க்கலாம்.
இந்த இடத்தில் வாசகர்களை பரிசுத்தமான மனதுடன் நடுநிலை யிலிருந்து வாசிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறோம். இந்த “சுதந்திரமும் லாபகரமானதுமான” சீர்திருத்தங்கள் வந்ததற்காக யார் பெருமை பாராட்டிக் கொண்டாலும் சரி அல்லது இன்னும் முற்போக்கான சுதந்திரம் வராமல் போனதற்கு யார் மீது குற்றம் சுமத்தப்படுவதானாலும் சரி அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. வந்திருப்பதும் வரப்போவதும் இந்தியப் பொது மக்களுக்கு என்னபலனைக் கொடுக்கும் என்பதுதான், கீழே எழுதப்போவ தின் கருத்தாகும். அப்படிப் பார்ப்போமானால் கிராமப்பஞ்சாயத்து, யூனியன், தாலூகா, ஜில்லாபோர்டு, முனிசிபாலிட்டியாகிய பிரதிநிதி ஸ்தாபனங்களில் இது வரையிலும் இன்றும் புகுந்திருக்கும் ஊழல்களும், மாகாணசட்டசபை, நிர்வாகசபை மந்திரிசபை ஆகியவைகளில் தேர்தல், நியமனம் முதலியவை களில் பிரவேசித்திருக்கும் யோக்கியதைகளும், நாணயங்களும், ஒழுக்கங் களும், அவற்றின் நிர்வாகங்கள் நடக்கும் தன்மைகளையும் பார்த்தால் இந்த யோக்கியதைகளும், தன்மைகளும் இந்தமாதிரி சரக்குகளும் தான் நாளைக்கு இந்திய நிர்வாகத்திலும் அதாவது மத்திய அரசாங்கத்திலும் போய் ஆதிக்கம் செலுத்த இடம் ஏற்பட்டது என்பது அல்லாமல் வேறு ஒன்றுமில்லை என்பது நன்றாய் விளங்கும். அன்றியும் இதற்குமுன் வந்துள்ள சீர்திருத்தங்கள் எந்த மாதிரி மக்களுக்குப் பயன்பட்டது? எந்த முறையில் நடத்தப்பட்டது? என்ப தையும் பார்த்தால் வரப்போகும் சீர்திருத்தமும் யாருக்குப்பயன் தரும்? எப்படி நடைபெறும்? என்பதற்கு “வினாடி பலன்” கூட எழுதிவைத்து விடலாம்.
உதாரணமாக, பெரிதும் எப்படிப்பட்டவர்கள் பிரதிநிதியாகின் றார்கள்? என்ன முறையில் பிரதிநிதி ஆகின்றார்கள்? ஆனபின்பு எப்படி நடந்து கொள்கின்றார்கள்? என்கின்ற விஷயத்தைப் பார்த்தால் மாகாணங்களில் இருந்த அயோக்கியத்தனங்களும் நாணயக்குறைவான தன்மைகளுந்தான் இந்திய மத்திய அரசாங்கநிர்வாகத்திலும் தாண்ட வமாடப் போகிறது என்பதை கல்லின் மேல்எழுதிப் பொன்னால் செதுக்கிவிடலாம். இன்றையத் தேர்தல்களுக்கும், நிர்வாகப்பதவி பெருவதற்கும் செய்யப்படாத அயோக் கியத்தனங்கள் இந்த உலகில் எங்காவது, எந்த சமூகத்தினிடமாவது இருக் கின்றதா என்று கேட்கின்றோம்.
சீர்திருத்தப் பிரதிநிதிகள் தெரிந்தெடுப்பு முறையும், அவர்கள் தனி யோக்கியதையும், பெரிதும் இந்தப்படியென்பதாக ஒருபுரமிருந்தாலும், மொத்தத்தில் சீர்திருத்தம் என்பதின் தன்மைதான் எப்படி இருக்கின்றது என்பதையும் சற்று பார்ப்போம்.
“தண்டுவன் வீட்டில் குமரியை அடமானம் வைக்கப்பட்டது” என்கின்ற கிராமப் பழமொழிபோல்,
யோக்கியப் பொருப்பும் நாணையமும் சிறிதுகூட இல்லாததும், பணத்தாசையும் அயோக்கியத்தனமும் மித மிஞ்சி உள்ளதுவுமான கூட்டத் தார்கள், சமூகத்தார்கள் தவிர வேறு எந்த விதத்திலும் சிறிதாவது ஒரு இரண்டு பேராலாவது யோக்கியன் என்றும் நாணையஸ்தன் என்றும் வெளிக் காகிலும் சொல்லப்படக்கூடிய ஒரு மனிதனும் சுலபத்தில் இந்தியப் பொது ஜனப் பிரதிநிதியாவதற்கு மார்க்கமில்லாத முறை கொண்ட சீர்திருத்த மாகவே இருக்கின்றது. அது மாத்திரமல்லாமல் ஆள் ஒன்றுக்கு எந்த வேலையாவது செய்து நாள் ஒன்றுக்கு 0-12-0 அணா கூட சம்பாதிக்க சிரமமான யோக்கியதை இல்லாத ஒருவன் நாள் ஒன்றுக்கு மொத்த ஜன சங்கையில் ஆள் ஒன்றுக்கு 0-3-0 அணா கூட வரும்படியில்லாத நாட்டில் மாதம் 1க்கு 5000, 6000, 7000 ரூபாய்கள் வீதம் சம்பளமும் சில சமயம் மாதம் 1க்கு 10,000, 15,000 வீதம் லஞ்ச மும் சம்பாதிக்கத்தகுந்ததும் சம்பாதிக்கலாம் என்ற ஆசையும் நம்பிக்கையும் உண்டாக்கத் தகுந்ததுமான அநேக உத்தியோகங்களும் பதவிகளும் அதிகாரங்களும் கிடைப்பதல்லாமல் வேறு ஒன்றும் அதிகமாக இல்லை என்று உறுதியாகச் சொல்லுவோம். இது மாத்திரமல்லாமல் இந்தப்படியான பதவி முதலியவைகளைப் பெறுவதற்கு மனிதன் அதாவது பிரதிநிதியாக இருக்க விரும்புகிறவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பார்த்தால் முன் சொன்னது போல் இனி இதற்கு மேற்பட்ட அயோக்கியத்தனம் உலகில் எதற்கும் எந்த பாகத்திலும் செய்யப்படுவதில்லை என்கின்ற ‘உயர்ந்த’ தத்துவமான காரியத்தைச் செய்து தான் பெற வேண்டியிருக்கின்றது. ஆகவே இவற்றிலிருந்தே இந்த சீர்திருத்தமானது எவ்வளவு மேலானது என்பது மூடனுக்கும் நன்றாய் விளங்கும். ஆனால் பணம் பதவி அதிகாரம் ஆகிய ஆசைகொண்ட மக்களையும் அவர்களை அண்டிப் பிழைக்க வேண்டிய மக்களையும் இந்த மாதிரி சீர்திருத்தமும் இதுபோன்ற தன்மை கொண்ட இன்னும் அதிகமான சீர்திருத்தமும் மேலானது என்பதோடு அவர்களும் அவர்கள் முன்னோர்களும் “முன் ஜன்மத்தில் செய்த பூஜா பலத்தினால்” கிடைத்தது என்று சொல்ல செய்வதோடு இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பெருவதற்கு இனியும் ஒரு தரம் இரண்டு தரம் ஜெயிலுக்குப் போகலாம் வா என்று மற்றவர்களை அழைக்கவும் செய்யும்.
ஆனால் இந்தியாவின் ஜனத் தொகையில் 100க்கு 90 பேர்கள் கொண்டவர்களான ஏழைமக்கள், உழுகும் குடியானவர்கள், தொழிலாளிகள், கூலிக்காரர்கள், தீண்டப்படாதவர் முதலாகியவர்களுக்கு இந்த சீர்திருத்தம் என்ன பலனைக் கொடுக்கும் என்றும் பார்த்தால் முன்னிலும் அதிகமான தொல்லைகளையும் கொடுமைகளையும் ஒழுக்கக் குறைவுகளையும்தான் உண்டாக்குமென்று “தீர்க்கதரிசனம்” சொல்லுவோம்.
நம்முடைய முடிவான கருத்தென்னவெனில் “இந்தியாவுக்கு ஜனநாயக ஆக்ஷி” என்பதெல்லாம் ஏழைகளைக் கொடுமைப்படுத்து வதான சூக்ஷியும் அயோக்கியத்தனமும் என்று அகராதி எழுதவேண்டியதேயாகும்.
ஏனென்றால் ஜனங்களின் யோக்கியதை என்ன? அவர்கள் பிரதி நிதிகள் எப்படிப்பட்டவர்கள்? ஜனநாயகக்கொள்கை எப்படிப்பட்டது? என்பவைகளைப் பார்த்தால் முன்சொன்னபடி இளைத்தவர்களை வலுத்த வர்களும் அயோக்கியர்களும் ஏமாற்றுவ தென்பதல்லாமல் வேறு என்ன இருக்கின்றது? மேலும் இந்த ஐம்பது வருஷ சொந்த அனுபவத்தில் நாம் இதைத் தவிர வேறு ஒன்றையும் முடிவு செய்ய நமக்குப்போதிய ஆதாரம் கிடைக்கவும் இல்லை.
இன்னமும் தெளிவாகப் பேச வேண்டுமானால் நமது ஜனநாயகம் என்பது கூலிக்காரனுக்கும் தொழிலாளிக்கும் முதலாளி காப்பாளனாகவும், உழுகும் குடியானவனுக்கு மிராசுதாரனும் ஜமீன்தாரனும் காப்பாளனாகவும், பெண்களுக்கு ஆண் காப்பாளனாகவும், பரையனுக்கு பார்ப்பான் காப்பா ளனாகவும், சாதுக்கு தந்திரசாலி காப்பாளனாகவும் (இதற்கு வேறுஒரு உதாரணம் சொல்லவேண்டுமானால் எலிக்குப் பூனை காப்பாளனாகவும்) இருக்க சம்மமதிப்பது போல்தான் இன்று இந்திய மக்களுக்கு ஜனநாயகம் ஆக்ஷித்தன்மையில் வரும் காப்பாளத்தன்மையும் இருக்கின்றதே தவிர வேறில்லை.
ஆகவே இந்தமாதிரியான ஜனநாயக ஆக்ஷியை மூடனும் அயோக் கியனு மல்லாத எவர்தான் விரும்புவார்கள் என்பதை யோசித்து முடிவு செய்யும் பொருப்பை அறிவுள்ள வாசகர்களுக்கே விட்டுவிடுகின்றேன்.
கடைசியாக நாம் சொல்லுவதென்னவென்றால் உலக மக்களில் பெரும்பாலோர் பூரண விடுதலை சமதர்மம் பொது உடைமைத்தன்மை ஆகிய உயர்வான தர்ம போகங்களை அடையக் கருதிக் கொண்டு அதற்கான முயற்சிகள் செய்துகொண்டுமிருக்கும் காலத்தில் நம்நாடு மேலும் மேலும் அடிமையாகிக்கொண்டு வருவதும் ஏழைகளை வஞ்சித்து ஏகபோகமாய் சம்பளம் லாபம் வரும்படி ஆகியவைகளை ஒரு கூட்டம் கொள்ளை யடிப்பதும் தப்பு என்றும் சம்பளத்தையும் வரும்படியையும், லாபத்தையும், உத்தியோகத்தையும் குறைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கும் காலத்தில் மறுபடியும் அதிகமான சம்பளமும் உத்தியோக ஆசையும் நமது பிரதிநிதி என்பவர்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதுமான காரியங்களால் நாமும் – நமது நாடும் – இன்றைய உலகப்போக்கில் வெகுதூரம் பிற்போக் கடைந்துவிட்டோம் என்றே சொல்லுகிறோம்.
இனி இராஜாக்கள் மகாராஜாக்கள் ஜமீன்தார்கள் என்பவர்கள் யோக்கியதையும் சம்பளம் உத்தியோகஸ்தர்கள் ஆகியவைகளின் யோக்கிய தையும் பற்றி அதை அடையும் வழியைப் பற்றியும் விபரமாய் பின்னால் எழுதுவோம்.
“ அரசியல் சீர்திருத்தம் சமதர்மக் கொள்கைக்கு ஆபத்து”
குடி அரசு – தலையங்கம் – 25.01.1931