ஹிந்து

இந்த வியாசமானது ஹிந்து மதம் என்பது என்ன? ஹிந்துக்கள் என்பவர் யார்?  ஹிந்து மதத்தால் மக்களுக்கு விடுதலை உண்டா? என்பதைப் பற்றி ஆராய்தல் என்னும் தன்மையில் எழுதப்படுவதாகும்.

இதற்குமுன் பல தடவைகளில் இதைப்பற்றிய ஆராய்ச்சிகள் பல ரூபமாக வெளிவந்திருந்த போதிலும்  அவ்வாராய்ச்சியில் நமது முக்கிய தத்துவங்கள் சிலவற்றிற்கு அநுகூலமாக அதாவது நமது கருத்துக்களை ஒத்ததாகக் காணப்படும் சில  விஷயங்கள் இவ்வார “நவ சத்தி”யின் உப தலையங்கத்தில் காணப்படுவதால் அதனை எடுத்துக்காட்டவும் மற்றும் அவைகளில் இருந்து இந்துக்கள்,  இந்துமதம் ஆகியவைகள் எவ்வளவு தூரம் சமய சமூகம் என்பவைகளுக்கு பொருப்பற்ற  தன்மையாகவும், ஒரு நாட்டின் கேட்டிற்கே இவை முக்கிய ஆதாரமாகவும் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டவும் இதை எழுதுகின்றோம்.

அதாவது “நவ சக்தி”யின் 6-5-1931¦²  உபதலையங்கம் இந்துக்கள் யார்?  என்னும் தலைப்பில் திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் அவர்கள்  எழுதி இருப்பதின்  சுருக்கமாவது;-

வடநாட்டில் சத்பந்திகள் என்று ஒரு சமூகத்தார் இருக்கின்றார்கள். அவர்களில் சாந்தேஷ் என்னும் ஜில்லாவில் மாத்திரம் 40000 பேர் இருக் கின்றார்கள். அவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளு கின்றார்கள்.

ஆனால் அவர்களது  நடவடிக்கைகள் சிலது இந்துக்களைப் போலவும்  சிலது முஸ்லீம்களைப்போலவும்  காணப்படும்.  இதனால் இந்துக்கள் வருணாச்சிர தர்ம மகாநாடு கூட்டி மேல்கண்ட சத்பந்திகள் என்னும் சமூகத் தார்களை இந்துக்கள் அல்ல என்று  தீர்மானித்து விட்டார்கள். பிரகு சத்பந்தி கள் சங்கராச்சாரி சாமியாருக்கு அப்பீல் செய்ததில் சங்கராச்சாரியும் அவர் களை  இந்துக்கள் அல்ல என்று சொல்லி விட்டார்.  பிறகு சங்கராச்சாரியார் கட்டளை மீது மேல் கண்ட சத்பந்திகளை மற்ற இந்துக்கள் மத  பகிஷ்காரம் செய்தார்களாம்.   சத்பந்திகள் இதனால் தங்களுக்கு மான நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்தார்கள்.  நீதிபதி சத்பந்திகள் இந்துமுஸ்லீம் ஆகிய இருவர் வழக்க ஒழுக்கங்க ளையும் பின்பற்றுவதாய் காணப்படுவதால் மானநஷ்டமில்லை என்று வழக்கைத் தள்ளிவிட்டார்.

இதில் நீதிபதி தீர்ப்பு ஒரு புறமிருக்கட்டும் .  மற்றபடி வருணாச்சிரம மகாநாட்டாரும், சங்கராச்சாரியாரும் கொண்ட முடிவு ஆராய்ந்து பார்த்தால் சத்பந்திகள் வேதம்தான் இந்து மதத்தின் ஆதாரம் என்பதை ஒப்புக்கொள்ளா ததாலும்,  ஏகாதசி முதலிய  விரதம் இல்லாததாலும், பசுவை போற்றாமை யினாலும், மற்றும் வெள்ளிக்கிழமை உபவாசமிருப்பதாலும். மேற்குநோக்கி பிரார்த்தித்து வணங்குவதாலும் சத்பந்திகள் இந்துக்களாக மாட்டார்கள் என்று முடிவு சொல்லி இருக்கின்றார்கள்.

இன்னார்  இந்து, இன்னார் இந்து அல்ல என்று வரையருத்து கூறும் அதிகாரம் யாருக்குண்டு. வேதத்தை ஆதாரமாகக் கொள்ளுபவர்கள் தான் இந்துக்களாவார்கள் என்று எங்கு சொல்லப்பட்டிருக்கின்றது? அதற்கு ஆதாரம் எது? இந்து சமூகத்தில் வேதத்தை பொருட்படுத்தாதவர்கள்  அநேகர்  இல்லையா? இந்துக்கள் எல்லோருக்கும் வேதம் தெரியுமா? வருணாச்சிரம இந்து மதத்தில் எல்லோருக்கும் வேதம் படிக்க உரிமை யுண்டா? வேதம் படிக்கவே உரிமையில்லாதவர்கள் வேதத்தை எப்படி ஒப்ப முடியும்? சங்கராச்சாரியார் எல்லா  இந்துக்களுக்கும் குருவா? சங்கராச்சாரி யார்  கொள்கைகளை ஒப்புக்கொண்டு நடப்பவர் மாத்திரமா இந்து? ( என்ற பல கேள்விகளை கிளப்பி விட்ட  பிறகு, திரு. திரு.வி.கல்யாணசுந்திர முதலி யாரவர்கள்  தமது அபிப்பிராயமாகக் கூறுவதாவது ):-

இந்து மதம் என்று சொல்லுவதானது எக்கட்டுப்பாட்டுக்கும் உட் பட்டதல்ல.  அதற்கு சத்மார்க்கம் என்று  பெயர். அதில் எல்லாக் கொள்கை களுமடங்கும். அது யாருக்கும் உரிமையுடையதாகும்.  அதை ஒரு கட்டுப் பாட்டிற்குள் அடிமைப்படுத்துவது அறியாமை. சமரசக் கொள்கையுடை யோரனைவரும்  இந்துக்கள்.

இந்து என்னும் பெயர் பிற்காலத்தில் வந்தது

ஒருவன் கோவிலுக்குப் போவது,  போகாமலிருப்பது மதசின்னங்கள் அணிவது, அணியாமலிருப்பது, உருவத்தை வழிபடுவது, வழிபடாம லிருப்பது, ஆத்திகம் பேசுவது,  நாத்திகம் பேசுவது ஆகிய காரியங்கள் எது வேண்டுமானாலும் செய்து  கொண்டும் செய்யாமலிருந்து கொண்டும் இந்துவாக இருக்கலாம்.

இந்து  மதத்தில் நாஸ்திகத்திற்கு இடமுண்டு

பிறப்பினால் ஜாதி கற்பிப்பதே வருணாச்சிரமாகும்.

இதனை எல்லா இந்துக்களும் ஏற்றுக் கொள்ளுவதில்லை.

வருணாச்சிரமத்தை ஒப்புக்கொள்ளாதவர்களை இந்துக்கள் அல்ல வென்று யாரும் தள்ளுவதில்லை.

வேதாந்த மதக்கார சங்கராச்சாரியார் வருணாச்சிரமத்தில் ஏன் விழ வேண்டும்.

வேதத்தை ஆதாரமாகக்கொண்டு இவர்இந்து,  இவர் இந்துவல்ல என்று சொல்லும் சங்கராச்சாரியார் வேதத்தின்படி நடக்காதவர்களை யெல் லாம் இந்துவல்ல என்று விலக்குவாரா?

பார்ப்பன வக்கீல்கள் இந்துக்களாவார்களா?

அவர்களை இந்துக்கள் அல்லவென்று சங்கராச்சாரியார் ஏன்  கூறவில்லை?

சமரசம் சன்மார்க்கம் ஏற்பட்டு  வரும் இந்நாளில் இடைக்காலத்தில் ஏற்பட்ட வருணாச்சிரமத்திற்கு ஆதிக்கம் தேடுவது அக்கிரமமாகும்.

நால்வருண மாசிரம முதலா நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே…….

என்பதாக திரு. முதலியார் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவற்றுள் இந்துமதத்தைப்பற்றி நாம் அவ்வப்போது சொல்லிவந்த பல விஷயங்களையே  திரு. முதலியார் அவர்களும் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இந்துமதத்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட கொள்கை இல்லை என்று நாம் சொல்லி வந்ததை ஏற்றுக்கொண்டு  மேலும் கோவிலை ஒப்புக் கொள்ளாமலும் உருவ வழிபாட்டைச்  செய்யாமலும் மதச்சின்னத்தையும் அணியாமலும்  கடவுள் உண்டு என்பதை ஒப்புக்கொள்ளாமலும் இருப்பவர் கள் கூட இந்துமதஸ்தர்கள்தான் என்பதாகவே குறிப்பிட்டிருக்கின்றார்.  மற்றும் அதுமாத்திரமல்லாமல் சமரசக்  கொள்கைகள் உடையாரனைவரும்  இந்துக்கள் என்றே குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

இவற்றையெல்லாம்விட மற்றொன்று அதாவது ஒவ்வொருவருடைய மனச்சாக்ஷிக்கும் மதிப்புக்   கொடுப்பது இந்து  மதம் என்றும்  சொல்லி இருப்பதாகும்.

எனவே வாசகர்களுக்கு இப்போதாவது இந்துமதம் என்பதின்  கொள் கையும் யோக்கியதையும்  நடைமுறையின் யோக்கியதையும் அதன் பேரால் மக்களை அடிமைகொண்டு கசக்கிப் பிழிந்துபார்ப்பனச் சோம்பேரிகள். புரோகித அர்ச்சக சாஸ்திரி  கூட்டத்தார்கள் கொள்ளையடித்து வரும் யோக்கியதையும் விளங்கவில்லையா? என்று  கேட்கின்றோம்.

இந்த நிலைமை உள்ளமதத்தை உத்தேசித்து காங்கிரசில் “மத நடு நிலைமை வகிப்பது” “மனச்சாக்ஷிக்கு  மரியாதைகொடுப்பது” என்கின்ற தான வார்த்தைகளை “பூரண சுயேச்சைத் திட்டத்தில்” சேர்த்திருப்பது என்றால் இந்தக்கொள்கைகளின்படி மக்களுக்கு விடுதலை உண்டா என்று கேட்கின்றோம்.

சங்கராச்சாரியின் மனச்சாக்ஷியும் சந்தேஷ் ஜில்லா இந்துக்கள் என்பவர்களின் மனச்சாக்ஷியும் சத்பந்திகளை இந்துக்கள் அல்லஎன்று சொல்லச் செய்து விட்டது என்பதோடு இதை ஆnக்ஷபிக்க யாருக்கும் உரிமை  இல்லை யென்பதாகவும் ஏற்பட்டுவிட்டது.  மற்றும் திரு. முதலியா ரவர்கள் இந்து  மதத்திற்கு வேதம்.  ஆதாரம் ஒன்று சொல்லுவது பொருந் தாது என்றும், எல்லா இந்துக்களுக்கும் சங்கராச்சாரியார் குருவாயிருக்க முடியாது என்றும், வேதத்தை ஓத எல்லா இந்துக்களுக்கும் உரிமை அளிக்கப் படவில்லை என்றும், வேதம் ஓதவே உரிமை இல்லாதவன் வேதத்தை எப்படி ஒப்புக் கொள்ளமுடியும்  என்றும் விளங்கக் குறிப்பிட்டு இருப்பதில்  இருந்து வேதத்தை ஒப்புக்கொள்ளாத அனேகர் இந்துக்களாக இருக்கின்றார்கள் என்பதும் புலனாகின்றது.

இதானது குர் ஆனை ஒப்புக்கொள்ளாதவர்கள் இஸ்லாமாகவும், பைபிளை ஒப்புக்கொள்ளாதவர்கள் கிறிஸ்துவர்களாகவும் இருக்கலா மென்பது போலவே இருக்கின்றது.

ஆகவே ஒருவனை மத விரோதி என்றோ  மதத்தலைவர் விரோதி என்றோ சொல்லுவதற்கு இடம் எங்கே இருக்கிறது? என்று கேட்கின்றோம்.

இவைகளையெல்லாம் கவனித்தால் நமது  நாட்டுக்கு  ஏதாவது ஒரு வகையில் விடுதலையோ, முன்னேற்றமோ ஏற்படவேண்டுமானால் நமது திரு. திரு.வி.கல்யாணசுந்தரமுதலியாரவர்கள் எடுத்துக்காட்டிய கொள்கைகள் கொண்டதான இந்துமதம் என்பதை அடியோடு அழித்து ஒழித்து ஆகவேண்டும் அதை  ஒழிக்காமல்  சன்மார்க்கமோ சமரசமோ இல்லை என்பது  உறுதி.  ஏனெனில், இந்தமாதிரி கொள்கையற்ற……… ஒரு ஆகாயக் கோட்டை மதத்தின் பேரால் இந்தியாவில் 22 -கோடி மக்களை மூடர்களாக்கி, மானமற்றவர்களாக்கி – மனிதத்தன்மை யற்றவர்களாக்கி-  வேசியாக்கி – வேசிமக்களாக்கி – தீண்டாதாராக்கி – காணாதாராக்கி சில சோம்பேரிகளும் சில அயோக்கியர்களுமே அடக்கி ஆண்டு ஆதிக்கம் செலுத்திவரும் கொடுமை ஒழியாமல் வேறு  எவ்வழியிலும் இந்நாட்டுக்கு விடுதலை இல்லை என்பதினால்தான்.

கடைசியாக நாம் கூறுவதாவது:- திரு.முதலியார் அவர்கள் இந்து மதத்திற்கு  சொல்லும் வியாக்கியானங்கள்  முழுவதும் ஒரு மதத்திற்கு இருப்பது என்பது மக்களின் மிருகப்பிராயத்தை காட்டுவதனாலும்   அதில் அவர் சிறிதுகூட நடப்பிற்கு விரோதமாய் எதையும் கற்பித்துக்கூறவில்லை  என்பதை நாம் மனமார ஒப்புக்கொள்ளுகின்றோம்.

குடி அரசு – துணைத்தலையங்கம் – 10.05.1931

 

You may also like...

Leave a Reply