ஒரு நல்ல சேதி ஈரோடு முனிசிபாலிடி

 

ஈரோடு முனிசிபாலிடியானது கொஞ்ச காலத்திற்கு முன் இருந்து வந்த பொருப்பற்றதும், நாணையமற்றதுமான நிர்வாகத்தின் பயனாய் செல்வங்கள் பாழாகி கண்டபடி கண்டவர்களால் ஒழுங்குகளும், பண்டங் களும் கையாளப்பட்டு கடைசியாக கடனில் மூழ்கி சம்பளம் வகையறா பட்டுவாடா செய்யவும் சக்தியற்று இந்த மாகாண பாப்பர் முனிசிபா லிடியிலும் ஒழுக்க ஈனமான முனிசிபாலிடியிலும் முதல்நெம்பராய் இருந்து வந்ததானது மாறி, தற்கால சேர்மென் ஜனாப், கே.எ. ஷேக்தாவூத் சாயபு அவர்கள் காலத்தில் நாணையமும், பொருப்பும் பெற்று செல்வ நிலைமையிலும் சற்று நன்னிலை அடைந்து இப்போது நல்ல முனிசிபாலிடிகளில் ஒன்று என்று சொல்லத்தக்க பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.  அவரது சொந்த செல்வாக்கினால் ஈரோடு முனிசிபாலிடியால் கல்வி இலாக்காவுக்கு கொடுக்கப்பட வேண்டிய ரூ. 44,000 – ம் கவர்ன்மெண்டார் தள்ளிக் கொடுத்து வஜா செய்து கொண்டார்கள்.  மற்றும் அவரது சொந்த பிரயத்தனத்தினால் ஜில்லா போர்டுக்கு கொடுப்பட வேண்டிய 2, 3 வருஷ பாக்கியாகிய சுமார் 25,000 ரூபாயும் ஒருவிதத்தில் தள்ளிக் கொடுத்து ஜில்லா போர்டினால் நிரந்தரமாய் வருஷம் 4000, 5000 ஈரோடு முனிசிபாலிட்டிக்கு லாபம் இருக்கும்படியாய் செய்யப்பட்டாய் விட்டது.

மற்றும் ஈரோடு முனிசிபாலிட்டிக்கு தாங்கமுடியாத பாரமாகவும் பெருநஷ்டமாகவும் இருந்து வந்த ஹைஸ்கூல் (அதாவது முன்னிருந்த சேர்மெனால் பாதிரிகள் தாட்சண்ணியத்திற்காக தலையில் போட்டுக் கொண்ட ஒரு உபத்திரவம்) ஆனது இப்போது கோவை ஜில்லா போர்டாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதால் அவ்விஷயத்தில் ஈரோடு முனிசிபாலிட்டிக்கு வருஷம் 7000, 8000 வீதம் மீது ஏற்படும்படியாக ஆகிவிட்டது.

கன்ட்றாக்டர்கள் தொல்லைகளால் கவுன்சிலர்களுக்குள் அடிக்கடி நிகழும் எதிர்பாராத மனவருத்தங்களும் இனிமேல் நேராமல் இருப்பதற்கு முனிசிபல் வேலைகளை டிபார்ட்டுமெண்டு மூலமாகவே செய்வது என்ப தன் மூலம் இனி அவ்விதம் ஏற்படாமல் இருப்பதற்கும் ஏற்பாடாகிவிட்டது.  ஆகையால் பல வழிகளிலும் ஜனாப், ஷேக்தாவூத் சாயபு  அவர்கள் காலத்தில் ஈரோடு முனிசிபாலிடி நல்ல நிலைமை அடையும் வழியில் திரும்பிவிட்டது என்றே சொல்லலாம். ஆனால் மறுபடியும் அரசாங்கமும்  பொது ஜனங்களில் ஒரு கூட்டமும் முன் நடந்து கொண்டதுபோல் பொருப் பற்ற தன்மையில் நடந்துகொள்ளாமல் யோக்கியமாய் நடந்துகொண்டால் ஈரோடு முனிசிபாலிடி கோயமுத்தூர் முனிசிபாலிடிக்கு உள்ள நல்ல பெயரில் அரைவாசிப் பெயராவது வாங்கக்கூடும்.

கடைசியாக ஈரோடுமுனிசிபாலிடியின் கடன் கஷ்டங்கள் ஒருவாறு தீர்க்கப்பட்டதற்கும் அதன் கஷ்ட நிலைமை ஒருவாறு நிவர்த்தியானதற்கும் கோவை ஜில்லா  போர்டு பிரசிடெண்டு    திவான் பகதூர் சி.எஸ். இரத்தின சபாபதி  முதலியார் அவர்களின் உதவி மிகுதியும் போற்றத்தக்கதும் நன்றி பாராட்டத்தக்கதுமாகும்.  ஈரோடு முனிசிபாலிடியில்  அவரது ஞாபகச் சின்னம் எங்காவது இருப்பதற்கு ஈரோடு பொது ஜனங்களோ, முனிசிபா லிடியாரோ   முயற்சிக்க வேண்டியது   அவர்களது முக்கிய கடமையாகும்.

கடைசியாக ஒன்று. அதாவது  ஈரோடு மின்சார சக்தி வினியோக விஷயமாய் அந்த நிர்வாக பொருப்பையும்  உரிமையையும் சர்க்காரார்கள் ஈரோடு  முனிசிபாலிடியாருக்கு கொடுக்காமல்  ஏதோ ஒரு வெள்ளைக்கார கம்பெனிக்கு கொடுத்தது மிகவும் அக்கிரமமும் அநியாயமுமான காரியமாகும்.  அதுமாத்திரமல்லாமல் இந்தப்படி செய்ததற்கு அரசாங்கத் தார் சொல்லும் காரணம் மிகவும் அநீதியுமானதாகும்.

அதாவது, “ஈரோடு முனிசிபாலிடியின்  நிர்வாகம் மிகவும்  ஒழுங்கீனமாகவும் யோக்கியப் பொருப்பற்று நடந்து  கடன்கார முனிசிபாலிடியாய் இருப்பதால் மின்சார சக்தி நிர்வாக சுதந்திரப் பொருப்பை அதற்குக் கொடுக்க முடிய வில்லை” என்று சொல்லிவிட்டார்கள்.  ஒழுக்கீனமாகவும், யோக்கியப் பொருப்பில்லாமலும் யாரோ  நடந்துகொண்ட காரியத்திற்கு ஆகவும் அப்படிப்பட்ட காலத்தில் பொது ஜனங்களும் கவுன்சிலர்களும் எவ்வளவோ தூரம்  சர்க்காராரை பிரவேசிக்கும்படி கேட்டுக்கொண்ட காலத்திலும் வேண்டுமென்றே அலக்ஷியமாய் இருந்துவிட்டு இப்போது அதே குற்றத்தை ஈரோடு முனிசிபாலிடியார் மீது சுமத்துவதானது சிறிதும்  ஒழுங்கல்ல என்றுதான் சொல்லவேண்டும் .

இந்த மின்சார நிர்வாக சுதந்திரத்தை ஈரோடு முனிசிபாலிடியாருக்கு கொடுக்காமல் ஒரு வெள்ளைக்கார தனி வியாபாரக் கம்பெனிக்கு கொடுத்த தால் ஈரோடு முனிசிபாலிடிக்கு வருஷம்1-க்கு 20,000-க்கு மேலாகவே 30.000 ரூ. வரை கூட வரக்கூடிய ஆதாயம் நஷ்டமாகிவிட்டது.  யூனிட் 1-க்கு 0-0-6 வீதம் வாங்கும் மின்சாரத்தை அக்கம்பெனியார் நமக்கு யூனிட் 1-க்கு 5-அணாவுக்கு  விற்கப் போகின்றார்கள். கோயமுத்தூர் முனிசிபாலிடி விஷயத்திலும்  சர்க்காரார் இப்படித்தான் செய்ய இருந்தார்கள். ஆனால் அந்த சேர்மென் திரு.சி.எஸ். ஆர் அவர்களின் செல்வாக்கால் கோயமுத்தூர் முனிசிபாலிடி சமாளித்துக் கொண்டது.  ஆனால்  ஈரோட்டு முனிசிபாலிடிக்கு அந்தப்படியான செல்வாக்கு இப்போது இல்லையானாலும் ஈரோடு பொது  ஜனங்கள் தங்கள் ஒற்றுமையையும்  கட்டுப்பாட்டையும்  காட்டி தைரியமாய் எதிர்த்து நின்றால் ஈரோடும் வெற்றி பெறலாம்.  அதாவது “ஈரோடு முனிசி பாலிடி மூலமாய் அல்லாமல் வேறு வழியில் வரும் மின்சாரம் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் யாரும் தனி வியாபாரக் கம்பெனிகாரர்களிடம் மின்சாரம் வாங்கி உபயோகித்துக் கொள்ள மாட்டோம்”என்று உறுதியாய் சொல்லி விட்டால் போதுமானதாகும்.

அந்தப்படி செய்தால் ஈரோடு முனிசிபாலிடிக்கு குறைந்தது வருஷத் தில் 20000 ரூ. வருஷம் மீதியாகும்.

குடி அரசு – கட்டுரை – 03.05.1931

 

 

You may also like...

Leave a Reply