சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி அய்யர் – அய்யங்கார் சம்பாஷணை – சித்திரபுத்திரன்
அய்யர் :- என்ன அய்யங்கார்வாள் சுயமரியாதை இயக்கம் ஆரம்ப மான காலத்திலேயே நான் பிராமணாளுக்கு ஆபத்து வந்துவிட்டதே என்றும் இதற்கு ஏதாவது வழிசெய்யக் கூடாதா என்றும் கேட்டதற்கு “அது இந்தியாவில் மாத்திரம் நடக்காது சீக்கிரம் ஒழிந்துவிடும்” என்று சொன்னீர். இப்பொழுது நாளுக்கு நாள் அது வளர்ந்து கொண்டே வருகிறதே. எல்லோரும் அதை ஆதரிக்கவும் துணிந்துவிட்டார்களே: அதாவது சைவர் கள் ஒன்று கூடி“ 3000 வருஷத்திற்கு முன் இருந்த கொள்கைகள் எல்லாம் சுயமரியாதை இயக்க கொள்கைகள்தான்” என்கிறார்கள். வைணவர்கள் ஒன்று கூடி தங்கள் கொள்கையும் அதாவது “ராமாநுஜர் கொள்கையே சுயமரியாதை இயக்க கொள்கை” என்கிறார்கள். ஸ்மார்த்தர்கள் “சங்கரர் மதமே வேதாந்த மதம். ஆகையால் ஸ்மார்த்த மதமே சுயமரியாதை இயக்க கொள்கைதான்” என்கின்றார்கள். மகமதியர்கள் ஒன்றுகூடி “1,300 வருஷத்திற்கு முன்னேயே சுயமரியாதை இயக்க கொள்கையைத்தான் நபிகள் நாயகம் உபதேசித் திருக்கிறார்கள்” என்கின்றார்கள். பௌத்தர்கள் “2,000 வருஷத்திற்கு முன்னா லேயே பகவான் புத்தர் சுயமரியாதை இயக்கக் கொள்கையைத்தான் உப தேசித்து பிரசாரம் செய்தார்” என்கின்றார்கள். “சித்தர்கள் உபதேசமெல்லாம் சுயமரியாதைக் கொள்கைதான்” என்கின் றார்கள் பொதுமக்கள். பண்டிதர் களில் பலர் “உலகாயித மதம் தான் சுய மரியாதைக் கொள்கை. ஆதலால் அதுவும் இந்து மதத்தில் ஒரு பகுதிதான்” என்கின்றார்கள். பிறகு எந்த விதத்தில் அது அழிந்தோ மறைந்தோ போகும் என்பது நமக்கு விளங்க வில்லேயே !
அய்யங்கார்:- இதற்கெல்லாம் நீர் பயப்படாதீர். யாரோ எதையோ சொல்லிக்கொண்டு போகட்டும். நமது இந்து மதத்தை அதாவது நாம் இன்று அனுசரித்து வரும் கொள்கையை யாரும் ஒன்றும் செய்யமுடியாது . நம் பெரியார்களுக்கு இவற்றையெல்லாம் ஒழிக்க வழிதெரியும். இதைவிட கஷ்டமான காலத்தில் எல்லாம் இருந்து சமாளித்து வந்து இருக்கிறார்கள்.
அய்யர்:- எப்படித் தெரியும்? 10, 12 வருஷத்திற்கு முன் ஜஸ்டிஸ் கட்சி என்று ஒன்று தோன்றி எவ்வளவு தொல்லை விளைவித்துவிட்டது உமக்குத் தெரியாதா?
அய்யங்கார்:- எல்லாம் தெரியும் அதற்காகத்தானே நம் பெரியவாள் அப்போதே காந்தியைப் பிடித்து வந்து ஒரு கிளர்ச்சி செய்து ஏராளமாய் பணம் வசூல் செய்து பலரை ஜெயிலுக்கு அனுப்பி ஜஸ்டிஸ் கட்சியை வீழ்த்தினார்களே. மற்றும் அவர் வீடு வாசல்களுக்குள் எல்லாம் புகுந்து கலகம் செய்யச் செய்தது கூட உமக்குத் தெரியாதா?
அய்யர்:- சரி, அப்படியெல்லாம் செய்து ஜஸ்டிஸ் கட்சியை வீழ்த்திய பிறகுதானே சுயமரியாதை இயக்கம் வந்து வீழ்ந்துவிட்ட கட்சியை மறுபடியும் தூக்கி நிருத்தி முன்னிலும் அதிகமான தொந்திரவு கொடுத்துவிட்டது?
அய்யங்கார்:- தூக்கி நிருத்திவிட்டதால் என்ன ஆய்விட்டது. அக்கட்சியின் விஷப்பல்லுகளைப் பிடுங்கிவிட்டோமா இல்லையா? இப்போது அக்கட்சியை தண்ணிப் பாம்புபோலத் தானே ஆக்கிவிட்டோம். அது இப்போது சம்பளத்தோடு சரி. வேறு சிறிதாவது வாலாட்டுகிறதா பார்.
அய்யர்:- அக்கட்சியால் நமக்குத் தொல்லையில்லையானாலும் சுயமரியாதை இயக்கம் ஜஸ்டிஸ் கட்சியைவிட மோசமாக அதாவது ஜஸ்டிஸ் கட்சியாவது மூர்த்தன்னியமாய் இருந்த காலத்திலும் கூட உத்தியோகத் தில் மாத்திரம் பங்கு கேட்டது. இது பிராமணர்களின் யோக்கியதையையே அடி யோடு ஒழித்து பிராமணர்களை எல்லாம் போர்ட்டராக ஆக்குகிறேன். மூட்டை தூக்க வைக்கிறேன். அதுவரை ஒழியமாட்டேன் என்றல்லவா சொல்லிக்கொண்டு காரியம் செய்து வருகின்றது.
அய்யங்கார்:- இதற்கெல்லாம் பயப்படாதீர். சுயமரியாதை இயக்கத் தின் ஆடம்பரத்தையும் அதனால் ஏற்படும் ஆபத்தையும் உத்தேசித்துத் தானே இப்போது அதை ஒழிக்க மறுபடியும் முன்போலவே காந்தியைப் பிடித்து மற்றொரு கிளர்ச்சியை நம்மிட பெரியவாள் ஆரம்பித்தார்கள். அது ஆரம்பமாகி ஒரு வருஷம் போட்டபோட்டில் சுயமரியாதை இயக்கம் அடங்கி விடவில்லையா?
அய்யர்:- என்ன அடங்கி விட்டது? எங்குபார்த்தாலும் மாதம் ஒன்று, .இரண்டு, மூன்று மகாநாடுகள் நடக்கின்றன. வாரம்தோறும் பிரசாரங்கள் நடக்கின்றன. சுயமரியாதை இழவு, சுயமரியாதை கல்யாணம், சுயமரியாதை சாந்தி முகூர்த்தம், சுயமரியாதை கிரகப்பிரவேசம், சுயமரியாதை கருமாதி, சுயமரியாதை தெவசம், சுயமரியாதை வாசகசாலை திரப்பு விழா, ஆண்டு விழா, சுயமரியாதை சங்கத் திறப்பு விழா, ஆண்டு விழா, சுயமரியாதை கலப்புமணம், சுயமரியாதை மறுமணம், சுயமரியாதை விதவை மணம், குழந்தைகளுடன் விதவைகளின் திரு மணம், பார்ப்பனீயமற்ற சடங்கு சுயமரியாதை சங்க கட்டட அஸ்திவாரம் என்பதாக ஏதேதோ தினத்திற்குத் தினம் புதிது புதிதாக ஏதாவது ஒரு காரியம் நடந்து கொண்டே தோன்றிக் கொண்டே இருக்கின்றதே தவிர எங்கு அடங்கி விட்டது?
அய்யங்கார்:- இதெல்லாம் ஒரு வேகத்தினாலும், மற்றும் இதை ஒரு புதிய நாகரீகமாக மக்கள் கருதுவதினாலும் செய்யப்படுகின்ற ஒரு வேடிக்கை சங்கதியே ஒழிய மக்கள் இதன் உண்மையை உணர்ந்து செய் கின்றார்கள் என்று கருதவேண்டாம். புத்தருக்கு மேலாக இவர்கள் ஒன்றும் செய்துவிட முடியாது.
அய்யர்:- இதை நான் ஒப்பமுடியாததற்கு மன்னிக்க வேண்டும். அந்தக்காலம் வேறு இந்தக்காலம் வேறு. இப்போழுது அந்தக் கூட்டத்தில் பெரிய மனிதர்கள் என்பவர்கள், பண்டிதர்கள், படித்தவர்கள், நல்ல மதபக்தி யும் மத ஆராய்ச்சியும் உள்ளவர்கள், யாதொரு தயவு தாட்சன்னியத்திற்கும் கட்டுப்பட வேண்டாதவர்கள். இப்படியாக அநேகர் அக்கொள்கைகளை வாய்ப்பேச்சு மாத்திரமல்லாமல் காரியத்திலும் பின் பற்ற ஆரம்பித்து விட்டார் கள். இதுமாத்திரமல்லாமல், கல்யாண விஷயங்களில் ஜாதி பேதமில்லாமல் கீழ் ஜாதி மேல் ஜாதி பார்க்காமல் கொள்வினை கொடுப் பினை ஆகியவை நடத்த அநேகர் துணிந்துவிட்டார்கள். அநேகர் காரியத் திலும் செய்துவிட்டார்கள். பிராமணனைக் கண்டால் கும்பிடுவதும் சாமி என்று கூப்பிடுவதும் அவ மானமாய்க் கருதுகிறார்கள். இப்பொழுது எங்கு பார்த்தாலும் பிராமணர்களே முதலில் கையெடுக்க வேண்டியதாய் இருக் கிறது. இப்படி இருக்க “இது ஒரு வேகம் நாகரீகம்” என்று நீர் சொன்னால் நான் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?
அய்யங்கார்:- இதெல்லாம் அநேகமாய் பயமும் சுயநலமும், பேரா சையும் தாக்ஷண்யமும் காரணமாகத்தான் செய்யப்பட்டு வருகின்றவை. வெகு சீக்கிரத்தில் இந்தக் கூட்டமே மறுபடியும் பழைய பாடம் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். நீர் மாத்திரம் ஒன்றையும் கவனிக்காமல், கதர்,, காந்தி – காங்கிரஸ் சுயராஜ்யம் என்று மந்திரம் ஜெபித்துக் கொண்டு பிரசாரம் பண்ணும். இந்த மந்திர சக்தி சுயமரியாதை இயக்கத்தையும் கொள்கை களையும் இருந்தவிடம் தெரியாமல் அழித்துவிடும். ஆனால் இதில் உமக்கு தைரியம் இருக்கவேண்டும். பஞ்சாக்ஷரம், அஷ்டாக்ஷரம், தாரகம், காயத்ரி என்கின்ற மந்திர சக்திகள் எல்லாம் என்ன என்று நினைக்கிறீர்? இது போலத்தான். ஆகையால் நீர் சரியாய் ஜபித்தீரானால் வெகுசீக்கிரம் நம்பக்கம் மக்கள் திரும்பி விடுவார்கள்.
அய்யர்:- காந்தியும் காங்கிரசும் சுயராஜியமுமே சுயமரியாதைக் கொள்கையை ஒப்புக்கொண்டாய் விட்டதே இனி இந்த மந்திரம் எப்படி சுயமரியாதை இயக்கத்தை அழித்திவிட முடியும்?
அய்யங்கார்:- காங்கிரசும் காந்தியும் சுயமரியாதை இயக்கக் கொள்கையை எங்கு எப்போது ஒப்புக்கொண்டார்கள்? உமக்கு அத் தீர்மானத் திற்கு தத்துவ அர்த்தம் தெரிந்தால்தானே உண்மை விளங்கும். நீர் மேலாகப் பார்க்கிறீர். அதனால் “சுயமரியாதை இயக்கக் கொள்கைதான் காந்தி காங் கிரஸ் கொள்கை” என்று உளருகிறீர்.
அய்யர்:- சுயமரியாதை இயக்கத் தொண்டர்களே “சுயமரியாதை இயக்கக் கொள்கையே காங்கிரஸ் கொள்கையாகிவிட்டதால் இனி சுய மரியாதை இயக்கம் வேண்டாம்” என்கிறார்கள். காங்கிரஸ் தொண்டர்கள் எல்லாம் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளே காங்கிரஸ் கொள்கையாத லால் சுயமரியாதைக்காரர்கள் எல்லாம் காங்கிரசில் சேரவேண்டுமென்கின் றார்கள். ஆகவே நீர் மாத்திரம் இப்படிச் சொன்னால் நான் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?
அய்யங்கார்;- உம்மால் இப்போது ஒப்புக்கொள்ள முடியாது. பிறகு தெரியும் அதன் சூட்சம்.
அய்யர்:- சூட்சமென்ன?மோட்சமென்ன? உங்க அய்யங்காரில் ஒருவரே, அதாவது கே. சந்தானம் அய்யங்கார் சென்றவாரம் ஈரோட்டில் ஒரு கூட்டத்தில் “சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை இவ்வருஷ காங்கிரஸ் அப்படியே ஒப்புக் கொண்டாய்விட்டது. ஆதலால் உங்கள் இராமசாமி நாயக்கர் இனியும் இதில் (காங்கிரசில்) சேராமல் வேதாந்தம் பேசிக்கொண்டு இருப்பது நியாயமல்ல” என்று சொன்னார். நான் பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டே இருந்தேன். அப்படி இருக்க எனக்கு சூட்சமம் தெரியவில்லை என்கின்றீரே.
அய்யங்கார்:- அந்தசமயத்தில் நானும் கூடத்தான் அங்கிருந்து அவா (திரு சந்தானம் அய்யங்கார்) சொன்னதை யெல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்.
அய்யர்:- சரி, அப்படியானால் அதில் சூட்சமமென்ன இருக்கின்றது?
அய்யங்கார்:- சூட்சமென்னவென்றா கேட்கின்றீர். சொல்லுகிறேன் கவனமாய் கேளும்,
இராமசாமி நாயக்கர் சாமியைப்பற்றி, மதத்தைப்பற்றிச் செல்லுவதை ஒப்புக்கொள்ள முடியாது என்று சந்தானம் அய்யங்கார் சொன்னாரா? இல்லையா?
அய்யர்:- ஆம், அதனால் அங்கு சிறிது தகரார்கூட எற்பட்டது. என்னவென்றால் “இது காங்கிரஸ் பிரசாரமா, சாமி பிரசாரமா?” என்று ஒருவர் கேட்டார். பிறகு அந்த வார்த்தையை விட்டுவிட்டு வேறு பேச்சுப் பேசினார். இதில் சூட்சமமென்ன?
அய்யங்கார்:- சாமி, மதம் இரண்டையும் ஒப்புக்கொள்ளப்படாது என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய கொள்கை.
அய்யர்:- அப்படியல்லவே.
அய்யங்கார்:- பின்னை எப்படி.
அய்யர்:- “சாமியைப்பற்றி கவலைப்படாதே. சாமிக்கு பணம் காசு நேரம் செலவு செய்யாதே. சாமிபேரில் பழியைப் போடாதே பகுத்தறிவைக் கொண்டு எதையும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்” என்றுதான் சொல்லு கின்றது.
அய்யங்கார்:- அதற்கு என்ன அர்த்தம்? (பிராமணாளுக்கு) நமக்குத் தான் சாமி இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? அதைப்பற்றி கவலை நமக்கு எதற்கு? நாம் சாமி இருப்பதாக ரொம்பத்தான் நினைத்துக் கொண்டி ருக்கிறோமா? அல்லது அதற்காக மிகுந்த கவலைப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றோமா? அல்லது எல்லாப்பழியையும் அதன் மீது போட்டு விட்டு கைகட்டிக்கொண்டு சும்மாதான் இருக்கின்றோமா?
அய்யர்:- பின்னே நமக்கும் அவாளுக்கும் என்னதான் வித்தியாசம்?
அய்யங்கார்:- அங்கு அல்ல நமது சூக்ஷம்.
அய்யர்:- பின்னே எங்கு இருக்கின்றது நமது சூட்சமம்?
அய்யங்கார்:- “கடவுள் ஒருவர் உண்டு. அவரே நம்மை நடத்துகிறார். நமது செல்வம் முயற்சி அறிவு எல்லாம் அவருக்கு அர்ப் பணம் செய்து சுவாமியிடம் பக்தி காட்டி அவர் பாதார விந்தத்தை அடை வதே மனிதப்பிறவி எடுத்ததின் பயன்” என்றும், “இந்த ஜன்மத்தில் நாம் கோவில், குளம், சாவடி, பிராமணாளுக்கு தான தர்மம் செய்வதன் மூலம் அடுத்த ஜன்மத்தில் நாம் நல்ல ஜன்மம் எடுக்க வேண்டும்” என்றும் சொல்லு வதல்லவா நம்ம கொள்கை? இதுதான் காந்தி கொள்கை. இதுதானே காங்கிரஸ் கொள்கை. இந்தக் கொள்கையைக் கொண்டுதான் நாம் உலகத்தில் வெகு காலமாக ஆதிக்கத்துடன் வாழ்கின்றோம். இதில் கையை வைக்க விட்டால் தானே சுயமரியாதை இயக்கமும் நமது இயக்கமும் ஒன்று என்று சொல்ல முடியும். இந்தப்படி ஒப்புக்கொண்டு யாராவது நம்மவர்கள் சுயமரியாதை இயக்கத்துடன் சேருகின்றார்களா? என்பதை நன்றாய் யோசித்துப்பாரும். சைவனை எடுத்துக்கொள்ளும், சைவன் என்றால் என்ன. சில பண்டிதர்கள் தானே. அந்த சைவர்கள் என்ன வேண்டுமானாலும் ஒப்புக் கொள்வார்கள். சாமியைப் பற்றி கவலைப்படாதே என்றால் ஒரே ஓட்டமாக ஓடிப்போவான். பின் சாமி இல்லாவிட்டால் புராணம் ஏது? புராணம் இல்லாவிட்டால் பண்டிதன் என்கின்ற பெயர் ஏது? இப்படியே மற்ற சமயமும், மகமதியர்களும் இப்படித்தான். அதிலும் சில பண்டிதர்கள் தான் ஆதிக்கம். ஆண்டவனைப் பற்றி கவலைப்படாதே என்று அவரிடம் சொல்லிப் பார்த்தால் மண்டையை உடைத்துவிடுவார். இப்படித்தான் காங்கிரசும். காந்தி ஒவ்வொரு வார்த்தைக் கும் கடவுள் சித்தம், கடவுள் பிரார்த்தனை இல்லாமல் பேசுகின்றாரா? “கடவுள் மீது பழியைப் போடவேண்டாம். கடவுளைப்பற்றி கவலைப்பட வேண்டாம்” என்று காந்தி இடம் யாராவது சொல்லிப்பார்த்தால் சங்கதி தெரியும் . இரண்டு காதையும் மூடிக்கொண்டு பட்டினி கிடந்து செத்துப் போவேன் என்று முக்காடு போட்டு படுத்துக்கொள்ளுவார். ஆகவே சுயமரியாதை இயக்கத் தின் அஸ்திவாரக் கொள்கையை இந்தக் கூட்டத்தினர்கள் யாவரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அவ்வியக்கத்தில் இருப்பவர்களே 100-க்கு 90- பேர் கள் ஒப்புகின்றார்களா என்பதே சந்தேகம். ஆகையால் கடவுள் கவலையும், கடவுள் மீது பொருப்புப் போடும் குணமும் இந்து மத தர்மமும் மோக்ஷமும் மறுஜன்மம் ஆகியவைகளும் உள்ளவரை பிராமணாளை (பார்ப்பானை) யாரும் ஒன்றும் அசைத்து விட முடியாது. தெரியாமலா பிராமணாள் எல்லாம் காந்தியை மகாத்மா ஆக்கி விட்டார்கள். எப்படி யிருந்தாலும் காந்தி சூத்திரன்தானே. அப்படி இருந்தும் அவரை நம்முடைய வைதீகபிராமணாள் கூட மகாத்மா என்கிறார்களே எதற்காக? விபீஷணனை(ராக்ஷதனை) சிரஞ்சீவி ஆக்கவில்லையா? அனுமானை (குரங்கை) சிரஞ்சீவி ஆக்க வில்லையா? இது நடந்ததோ இல்லையோ, அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. பிராமணாள் நடந்து கொள்ளவேண்டிய முறைக்கு ராமாயணம் ஒரு வழிகாட்டி என்கின்ற அருத்தத்தில் நான் உமக்கு எடுத்துக்காட்டுகிறேன். இதனாலேயே என்னை புராணமரியாதைக்கார முட்டாள் என்று சொல்லி விடாதேயும்.
இந்த காந்திகூட எதுவரையில் மகாத்மா உமக்குத் தெரியுமா“ ராம ராஜியம் ஸ்தாபிப்பேன்” “கீதைதான் என்னை நடத்துகின்றது” “பெண்கள் எல்லாம் சந்திரமதி போல் இருங்கள்.” “வருணாச்சிரம தர்மம் உலக நடவடிக் கைக்கு சிறந்தது” என்று சொல்லும் வரை தான் மகாத்மா, அப்படிக்கில்லாமல் கொஞ்சம் மாறினாலும் தலைகீழாக கவிழ்ந்து விடுவோம் இது உமக்குத் தெரியாதா?
அய்யர்:- அவரைக்கூட கவிழ்க்க இனி யாராலாவது முடியுமா?
அய்யங்கார்:- ஏன் உமக்குத் தெரியாதோ.
அய்யர்:- தெரியாது.
அய்யங்கார்:- முன் ஒருதரம் காந்தி தீண்டாமை விஷயத்தில் கொஞ்சம் அதிகமாய் அதாவது அஸ்திவாரத்தில் கைவைக்கத் தகுந்தமாதிரி பேச ஆரம்பித்தவுடன் தென்னாட்டிலுள்ள நம்மிட பெரியவாள் எல்லாம் “மதத்தைப்பற்றிப் பேச உமக்கு என்ன யோக்கியதை” என்று வளைத்துக் கொண்டதும், பம்பாயில் “காந்தியைக் கொல்ல வேண்டும்”, “அவன் ஒரு முட்டாள்” “காந்தி அயோக்கியன்” என்று சொன்னதும், பூனாக்காரர் “காந்தீ யம் தேசத் துரோகம். திலகர் கொள்கைக்கு விரோதம்” என்று சொன்னதும், மாளவியாவை தலைமைகொண்ட இந்து மகாசபையாரும் “காந்திக்கு இந்து மதத்தைப் பேச உரிமை இல்லை”என்று சொன்னதும் உமக்குத் தெரியாதா? எங்கே தீண்டாமையைப் பற்றி, மதத்தைத் தாக்கி மாத்திரம் இப்போது தான் ஆகட்டும் காந்தியை ஒரு வார்த்தை மாத்திரம் பேசச்சொல்லு அவருடைய மகாத்மா தன்மை எத்தனை வினாடி நிலைக்கின்றது என்று பார்ப்போம்? நம்ம பெரியவாளும் நம்ம பத்திரிகைகளும் அவரை ஒரே அடியாய் தூக்கி தலைகீழாகக் கவிழ்த்து விடுவார்கள் தெரியுமா? இன்னும் ஒரு உதாரணம் சொல்லுகின்றேன் கேள். 1922 ´ ஒத்துழையாமை யானது சிறிது (பிராம ணாளுடைய) தேவைக்குமேல் போனவுடன், தாசை தேசபந்துவாக்கி சுயராஜ்யக் கக்ஷி உண்டாக்கி ஒத்துழையாமை ஒழித்து இதே காந்தியை மூலையில் உட்கார வைத்துவிடவில்லையா? ஆக்கவும் அழிக்கவும் நாம் தானே. அதனால்தானே நாம் பிரம்மஸ்ரீ ஆனோம்.
அய்யர்:- இது சரி. ஆனால் முன் சொன்ன தீண்டாமையைப்பற்றி கராச்சி காங்கிரஸ் தாராளமாக தீர்மானித்து விட்டதாக சொல்லுகின்றார்களே!
அய்யங்கார்:- என்ன தாராளம்?
அய்யர்;- “ஜாதிமதபேதமில்லாமல் எல்லோரும் பொது ரோட்டு, கிணர் ஆகிய இடங்களுக்கு போகலாம்” என்று சொல்லி தீர்மானம் போட்டு இருக்கின்றார்களே!
அய்யங்கார்:-அத்தீர்மானத்தில் என்ன இருக்கின்றது உம்ம தலை புருடை? நீர் பிராமணணாயிருந்தும் உமக்கு மூளையே கிடையாது. உங்கள் படுக்கை வீட்டில் சூத்திராள் படம் – அதாவது ராஜாக்கள், ஜமீன்தாரர்கள், மந்திரிகள் முதலியவர்கள் படம் ஏதாவது சுவற்றில் தொங்கவிட்டு இருந்ததோ.
அய்யர்:- அதிகப்பிரசங்கித்தனம் எல்லாம் பேசாதீர். உண்மையைச் சொல்லுமே, மற்றபடி அத்தீர்மானத்தின் இரகசியம் தான் என்ன?
அய்யங்கார்:- பொதுரோட்டில் இன்று யார் நடப்பதில்லை? பொது சந்தையில் இன்று யார் போவதில்லை? பொது ரயில் வண்டியில் இன்று யார் ஏறுவதில்லை? கச்சேரி நாடகக்கொட்டாய் வீதி மீட்டிங்கு இவைகளில் யார் நுழைவதில்லை. அதுபோலவே பொதுக்கிணறுகள் என்பதில் நகரங்களில் கிணறு கிடையாது. வாய்க்கால், நதி , இல்லாவிட்டால் பெரிய குளம், இல்லா விட்டால் தண்ணீர் குழாய். இன்னும் வரவர எல்லாப் பட்டணங்களிலும் தண்ணீர் குழாய் ஏற்பட்டு விடப்போகின்றது . ஆதலால் கிணற்றைப்பற்றிய தீர்மானத்தால் பயமில்லை. நகரங்களில் உள்ள தெருக்களில் எல்லாம் இப்போதும் யாரும் போய்க்கொண்டு தான் இருக்கிறார்கள். கிராமங்களில் மாத்திரம் சில தெருக்களில் போவதில்லை. அங்குள்ள பிரபுக்கள் பயத்தால் கீழ் ஜாதிக்காரர்கள் நாளைக்கும் காந்தி போகச் சொன்னாலும் போக மாட் டார்கள். போனாலும் ஒன்றும் முழுகிப்போகாது. ஏனென்றால் மற்ற வீதி களுடன் அதையும் சேர்த்து விடலாம். ஆதலால் இத் தீர்மானத்தினால் மதம் எங்குபோய்விட்டது? இதனால் எல்லாம் பிராமணாளுடைய உயர்வு எங்கு எப்படி போய்விடும் என்று கருதுகீன்றீர்?
அய்யர்:- பின்னை எதினால்தான் பிராமணாள் உயர்வும் அதை ஆதாரமாய்க்கொண்ட மதமும் இருக்கின்றது? என்கிறீர்.
அய்யங்கார்:- அது உம்ம புத்திக்கு இதுவரை படாதது எனக்கு அதிசயமாகவே இருக்கின்றது.
அய்யர்:- அது எது என்று சற்று சொல்லித்தான் காட்டுமே பார்க்கலாம்.
அய்யங்கார்:- பிராமணாளும் அவர்கள் மதமும் காப்பாற்றப் படுவது முக்கியமாய் கோயில்களாலேயேயாகும். அந்த இடத்தில் ஏதாவது மாறுதல் ஏற்பட்டால்தான் பிராமணாளுக்கும் வருணாச்சிரமத்திற்கும் ஒரு சமயம் ஆபத்து ஏற்படலாம். ஆகையால் அதில் கை வைக்க எப்படிப்பட்டவர் களுக்கும் சிறிதும் இடம் கொடுக்க நம்மிட பெரியவாள் ஒப்ப மாட்டார்கள். அது ‘மகாத்மா’ காந்தியானாலும் சரி, அவர்கள் பாட்டனார்களான சுவாமிகள் ஆச்சார்ய சுவாமிகளானாலும் சரி ஒன்றும் நடக்காது. ஆகை யால் அந்த இடம் (கோவில் மாத்திரம்) வெகு ஜாக்கிரதையாகவே காப் பாற்றப்பட்டு வருகின்றது. (சேரமாதேவி குருகுலத்தைப்பாருமே. குரு குலத்தையாவது நம்மவாள் அடியோடு ஒழித்துவிட்டார்களே ஒழிய வருணாச்சிரமத்தை விட வில்லையே) கராச்சி காங்கிரசில் கோயிலைப்பற்றிய பேச்சே கிடையாது. ஜாதி வித்தியாசத்தை ஒழிப்பதைப் பற்றிய பேச்சோ சிறிதும் கிடையாது தெரியுமா?
அய்யர்:- அப்படியா.
அய்யங்கார்:- என்ன அப்படியா என்று கேட்கின்றீர். உங்கள் பிர்மஸ்ரீ சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் தானே அதை நன்றாக விளக்கி இருக்கிறார். அதாவது, “கராச்சி காங்கிரஸ் தீர்மானத்தில் கோவில்களைப் பற்றிய பேச்சு இல்லையாதலாலும் (அது விஷயாலோசனை கமிட்டியால் வந்தும்) அதை சேர்க்கக் கூடாது என்று மனமார தள்ளிவிட்டதினாலும் மேலும் காங்கிரஸ் காரிய கமிட்டி யாருக்கும் கோயிலைப் பற்றிய பிரஸ்தாபிக்க இஷ்டமில்லை என்று நமக்கு தெரிய வந்ததினாலும் பொது உரிமையைப்பற்றிய தீர்மானத்தை திருத்த வேண்டிய அவசியமில்லை” என்று விளக்கி இருக்கின்றாரே நீர் பார்க்கவில்லையா? இது ஏன் தெரியுமோ? இந்த தீர்மானத்தை ஆதாரமாய் வைத்துக் கொண்டு யாராவது தென்னாட்டில் கோயில் பிரவேச சத்தியாக் கிரகம் ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது என்றுதான் விளக்கினார்.
அய்யர்:- காங்கிரஸ் தீர்மானத்தின் கருத்து இந்தப்படிதான் என்று உமக்கு எப்படித் தெரியும்.
அய்யங்கார்:- எப்படி தெரியும் என்றா கேட்கிறீர்? சொல்லுகிறேன் கவனமாய் கேளும். காங்கிரஸ் காரியக் கமிட்டியார், “இத்தீர்மானங்கள் அவசரமாய் பாசாக்கப்பட்டதாக பலர் கருதுவதால், அதில் ஏதாவது விலக்கு வதோ மாறுதல் செய்ய வேண்டியதோ அவசியம் உண்டா” என்று ஆங்காங் குள்ள ஜனத்தலைவர்கள் தேசபக்தர்கள் தியாகிகள் ஆகியவர் களுக்கு அனுப்பி அபிப்பிராயம் கேட்டிருந்தார்கள். ஏன் கோவில் இதில் சேர்க்கப் படவில்லை என்பது நன்றாய் விளக்கப்படட்டும் என்று அந்த முறையில் நமது தென்னாட்டு ஜனத் தலைவரும் தியாகியும் தேசபக்த ருமான நமது பிர்மஸ்ரீ சத்தியமூர்த்தி அய்யர்வாளுக்கும் அந்த சர்க்குலர் வந்தது. அதாவது அய்யர்வாள் ஒரே அடியாய் தீர்மானத்தின் சூக்ஷமத்தைத் தைரியமாய் உடைத்துவிட்டார். அதாவது காங்கிரஸ் காரியக்கமிட்டி சார்பாக காரிய தரிசிக்கு தந்தி கொடுத்தார். அவர்களும் சரி என்று ஒப்புக் கொண்டு விட்டார்கள்.
அய்யர்:- அதன் கருத்து அப்படியல்ல என்று மறு தந்தி ஒன்றும் வரவில்லையா?
அய்யங்கார்:- இல்லை. அன்றியும் எப்படி வரும் ? ஜாக்கிரதையாகத் தானே தீர்மானம் செய்யப்பட்டிருக்கின்றது. அப்படி ஏதாவது மாறுவதா யிருந்தால் பிறகு அத்தீர்மானத்திற்கே ஆபத்து வந்து விடாதா?
அய்யர்:- அப்படியா இவ்வளவு புத்திசாலித்தனமாக அத் தீர்மானம் செய்தவர்கள் யார்?
அய்யங்கார்:- யார் என்றா கேட்கின்றீர். தென்னாட்டில் சேரமாதேவி குருகுலத் தகராரின் போது ஈ.வெ.ராமசாமி நாயக்கனும் எஸ். ராமநாத பிள்ளையும் சேர்ந்து “ பிறவியில் ஜாதி வித்தியாசம் பாராட்டக்கூடாது என்பது காங்கிரசைப் பொருத்தவரையாவது அமுலில் கொண்டு வர வேண்டும்” என்று தமிழ்நாடு காங்கிரசில் ஒரு தீர்மானத்தை பாசாக்கினவுடன் காங்கிரசிலிருந்து ராஜினாமா கொடுத்தும் மற்றும் அந்த பிரசாரத்திலிருந்து விலகியும் இருந்து அந்த மாதிரி தீர்மானம் கொண்டு வந்த ஆளுகள் அதாவது ராமசாமி ராமனாதன் ஆகியவர்கள் காங்கிரசில் இருக்க முடியாமல் காங்கிரசை விட்டுப்போன பிறகு காங்கிரசில் வந்து சேர்ந்தார்களே அவர்கள்தான்.
அய்யர்:- அப்படியா அப்படிப்பட்டவர்கள் யார்? அவர்கள் பெயர்கள் என்ன?
அய்யங்கார்:- பிர்மஸ்ரீகள் உ.ராஜகோபால ஆச்சாரியார், ஆ.மு.ஆச்சாரியார், னுச.கூ.ளு.ளு.ராஜன் அய்யங்கார், னுச.கூ.ஏ.சாமினாத சாஸ்திரியார். சூ.ளு.வரதாசாஸ்திரியார், மு.சந்தான அய்யங்கார், மட்டப்பாரை சு.ளு. வெங்கிட ராமையர், ஏ. வைத்தியநாதய்யர், எக்கியேஸ்வர சர்மா,கூ.ஊ.சங்கரய்யர் இன்னும் சில பிர்மஸ்ரீகள் அதாவது இப்பொழுது தென்னாட்டில் காந்தீயம் காங்கிரசுஈயம் என்று பிரசாரம் செய்கின்றார்களே இந்த மகான்கள் தான்.
அய்யர்:- அப்படியா? சரி. இதனால் சுயமரியாதை இயக்கம் விழுந்து விடுமா?
அய்யங்கார்:- விழுகாமல் என்னசெய்யும் ? நம்முடைய பெரிய வாள் சூக்ஷிகளில் இருந்து சுயமரியாதைக்காரர் தப்புவதென்றால் இலேசான காரியமா?
அய்யர்:- சுயமரியாதை இயக்கம் கடவுள் ஜாதி மதம் ஆகியவைகள் மாத்திரம் அல்லாமல் பணக்காரன் – ஏழை, ஆண்-பெண், முதலாளி -தொழிலாளி ஆகிய விஷயத்திலும் கையை வைத்து பெரிய கலக்கம் கலக்குகின்றதே. அதனால் இப்போது தொழிலாளிகள் எல்லாம் நிமிர்ந்து பேசுகின்றார்கள். பெண்கள் வீட்டில் ஆண்களுக்கு அடங்கி நடப்ப தில்லை. சம்பள ஆட்கள் எல்லாம் முதலாளிகளை மதிப்பதில்லை. மற்றும் இதுபோன்ற பல உணர்ச்சிகளைக் கிழப்பிவிட்டு தொல்லை விளைவிக் கின்றார்களே, பரிகாரி முதல்கொண்டு வாய்யா, போய்யா என்கின்றானே. இவைகள் எல்லாம் எப்படி பழையபடி சரிப்படும் ?
அய்யங்கார்:- இதெல்லாம் சு.ம. இயக்கக்காரர்களின் சமதர்மக் கொள்கை பிரசாரத்தின் உபத்திரவம் என்பதாக எனக்கும் தெரிகின்றது. ஆனால் அதுவும் சீக்கிரம் அடங்கிவிடும்.
அய்யர்:- எப்படி அடங்கிவிடும்?
அய்யங்கார்:- காந்தி இருக்கும் வரை நமக்கு பயமில்லை. அவர் பகத்சிங் வகையறா தூக்கப்பட்டதும், மற்றும் அந்த இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்துடன் அதை காட்டிக் கொடுத்துதான் இராஜப்பிரதிநிதியிடம் ராஜி பேசினதும் மற்றும் இந்தியாவின் ஆக்ஷியில் சுதேச ராஜாக்களை யெல்லாம் கொண்டு வந்து போட்டு அவர்களுக்கும் இதில் ஆதிக்கம் வாங்கிக் கொடுத்ததும் முதலாகிய காரியங்கள், இந்த மாதிரி சமதர்மக் கொள்கைகளை எல்லாம் வெகு சீக்கிரத்தில் அடக்கிவிடும். ஆகை யால் நாம் பிழைக்க வேண்டுமானால் கௌரவமாய் வாழவேண்டு மானால், பழம் ஏற்பாட்டுப்படி வருணாச்சிரமம், ஜாதி வித்தியாசம் ஆண் பெண் வித்தியாசம், முதலாளி தொழிலாளி வித்தியாசம் இவைகள் நிலைத்து இருந்து நாம் பாடுபடாமல் பூதேவர்களாகவும் சுவாமிகளாகவும் இருந்து பிழைக்க வேண்டுமானால் மகராஜன் காந்தி நன்றாய் இருக்கவேண்டும். அவருக்கு மிகுதியும் கௌரவமும் செல்வாக்கும் நாம் சம்பாதித்துக் கொடுக்கவேண்டும். அவர் செல்வாக்கு குறைந்தால் இந்தியா சுயமரியாதைக் கொள்கையின் கீழ்தான் இருக்க முடியும். ஆகையால் காந்தியைக் காப்பாற்ற வேண்டும். அவர்தான் இப்போது நமக்கு (பிராமணாளுக்கு) நல்ல ஆயுதமாக இருக்கின்றார் தெரியுமா?
அய்யர்:- அப்படியா! காந்தீ வாழ்க! மகாராஜன் காந்தி வாழ்க!! மகாத்மா காந்தி வாழ்க !!! எங்கள் அப்பன் காந்தி வாழ்க!!!!
அய்யங்கார்:- அப்படிச் சொல்லு. இனி நாம் பிழைக்க வேண்டு மானால் இது தான் நமது மந்திரமாய் இருக்கவேண்டும்.
அய்யர்:- யார் யாரோ காந்தி ஒழிக! காந்தீயம் ஒழிக!! காங்கிரஸ் ஒழிக!!! என்கின்றார்களாமே?
அய்யங்கார்:- அதைப்பற்றி நாம் ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை. அதையெல்லாம் காந்தியே பார்த்துக் கொள்ளுவார். அந்த மாதிரி ஆசாமி களை ஒழிப்பதற்கு நம்ம காந்தி சர்க்காரைப்பிடித்து அடக்கி விடுவார்.
அய்யர்:- ஜவர்லால்நேருகூட அந்த கட்சியைச் சேர்ந்தவராமே.
அய்யங்கார்:- எந்தக் கட்சியை?
அய்யர்:- காந்தி ஒழிய என்று சொல்லுகின்ற மக்கள் கொள்கையை சேர்ந்தவர்களாமே.
அய்யங்கார்:- அதெல்லாம் சும்மா சொல்லுவது. அவர் என்றால் மாத்திரம் பிராமணரல்லவா? “மழைக்கால் இருட்டானாலும் மந்தி ( குரங்கு ) கொம்பு விட்டுக் கொம்பு தவரிப் பாயுமா?” ஜவர்லால் எவ்வளவு தீவிரமாய் பேசினாலும் பிராமணத் தன்மையை மாத்திரம் விட்டுக் கொடுத்து விடுவார் என்று நீர் கனவிலும் என்ணிவிட வேண்டாம். உதாரணம் வேண்டுமானால் சொல்லுகிறேன் கேள்.
அய்யர்:- சொல்லும் பார்ப்போம்.
அய்யங்கார்:- ஜவர்லால் ஆங்கிலம் படித்தவர். குழந்தைப் பருவத்திலேயே சீமைக்குச் சென்று அங்கேயே படித்து வளர்ந்தவர். ருஷியா வுக்குக்கூட போய் வந்தவர். மூடப்பழக்க வழக்கங்கள் மதப்பித்து ஆகிய வைகள் ஒழிய வேண்டுமென்றும், அவை ஒழியாமல் சுயராஜ்யம் வராது என்றும் சொன்னவர். இதெல்லாம் உமக்குத் தெரியுமா? தெரியாதா?
அய்யர்:- நன்றாய்த் தெரியும். அதனால்தான் நான் அவர் நமக்கு எதிரியாயிற்றே என்று பயப்படுகின்றேன்.
அய்யங்கார்:- போமய்யா போம். உமக்கு சூட்சம அறிவு இருந்தால் அல்லவா இந்த சூக்ஷ்மம் எல்லாம் அறியக்கூடும்.
அய்யர்:- நீர்தான் சூக்ஷ்ம அறிவுக்காரராயிருமே. சங்கதி என்ன? சொல்லும்.
அய்யங்கார்:- ஜவர்லால் நேரு மேல்சொன்ன இவ்வளவு இருந்தும் எலும்பைக் கொண்டுபோய் கங்கை ஆற்றில் போட்டு மாதா மாதம் பிண்டம் போட்டால் அந்த எலும்பின் ஜீவன் மோக்ஷத்திற்கு போவார் என்று சொல்லி அவர் தகப்பனார் எலும்பை கங்கையில் போட்டு பிண்டம் கொடுத்தாரே, அது உமக்குத் தெரியுமா?
அய்யர்:- ஆம் தெரியும்.
அய்யங்கார்:- இதிலிருந்தே பார்த்துக்கொள்ளுமே. வீரர் ஜவர்லால் நேரு நமது பிராமணத்தன்மையை விட்டுக் கொடுத்துவிட்டார்களா ? என்பதை.
அய்யர்:- ஓ! ஓ!! அப்படியா? இந்த இரகசியங்கள் எல்லாம் எங்க ளுக்குத் தெரிவதேயில்லை.
நாங்கள் சுயமரியாதை இயக்கத்தை கண்டதும் பயந்து விட்டோம்.
அய்யங்கார்:- ஒன்றுக்கும் பயப்படவேண்டியதில்லை. காந்தியும் காங்கிரசும் உள்ளவரை சுயமரியாதை இயக்கமோ, நாஸ்திக இயக்கமோ, போல்ஸ்விக் இயக்கமோ இன்னும் சமதர்மம், பொது உடமை, இயற்கைத் தன்மை முதலிய இயக்கங்களோ எதுவும் பிராமணனை ஒன்றும் செய்து விடாது என்று தைரியமாயிரும்.
அய்யர்:- வட்டமேஜை மகாநாட்டில் என்ன என்னமோ சுதந்திரம் வரப் போகுதாமே அதிலேதாவது ஆபத்து வந்து விட்டால்?.
அய்யங்கார்:- அதைப்பற்றியும் பயப்படவேண்டியதில்லை. அங்கு சென்று நமது ஜீவாதாரத்தைக் காப்பாற்றத்தானே காந்தியை “சத்தியாக்கிரக இயக்கம் தோற்றுப் போகும். பிறகு வருணாசிரமத்திற்கும் இந்து மதத்திற்கும் ஆபத்து வந்து உமக்கும் அவமானம் ஏற்பட்டு விடும்” என்று நம்ம சீனிவாச சாஸ்திரிகளும் இராஜகோபாலாச்சாரிகளும் பேதிக்குக் கொடுத்து இயக்கத்தை எப்படியாவது நிறுத்தி விட்டு அவரை வட்டமேஜை மகா நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டார்கள். அதுமாத்திரமல்ல, இந்து ராஜாக்களையும் கொண்டு வந்து நம்மிட பெரியவாள் இந்த சீர்திருத்தத்தில் புகுத்திவிட்டார்கள். ஆதலால் அது விஷயத்திலும் பயப்படவேண்டிய தில்லை. இன்னும் அநேக சங்கதிகளிருக்கின்றன. சாவகாசமாய் சொல்லு கிறேன். இப்போதே மூன்று பக்கத்திற்கு மேலாகிவிட்டது. யாரும் கோபித் துக் கொள்ளக் கூடாது.
குடி அரசு – உரையாடல் – 03.05.1931