கலைகள்

சுயமரியாதை இயக்கத்தார் மத சம்பந்தமான ஆபாசங்களை எடுத்து வெளிப்படுத்துகின்ற காலத்தில் அதற்குச் சரியான சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாத நமது பண்டிதர்கள் தாங்கள் தப்பித்துக் கொள்ளு வதற்காகப் பழைய கலைகள் என்னும் சாக்கின் பேரில் அதன் நிழலில் போய் மறைந்துகொண்டு “சுயமரியாதை இயக்கத்தார் பழைய கலைகளை நாசம் செய்கின்றார்கள்” என்று பழிசுமத்துவதன் மூலமே அவைகளைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள். ஆகவே இது அவர்களுடைய நியாயமற்ற தன்மையையும் பயங்காளித்தன்மையையும் வேறு வழியில் சமாதானம் சொல்ல சக்தியற்ற தன்மையுமே காட்டுவதாகின்றது.

கோவில்களைக் குற்றம்சொல்லி அதில் உள்ள விக்கிரகங்களின் ஆபாசங்களை எடுத்துக்காட்டி இம்மாதிரி காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சியை மக்களுக்கு வளர்க்கலாமா என்றும் இந்த ஆபாசத்திற்காக இவ்வளவு பணச்செலவும் நேரச்செலவும் செய்யலாமா என்றும் கேட்டால் ஓவியம் என்னும் நிழலில் புகுந்துகொண்டு “அவைகள் அவசியம் இருக்க வேண்டும்” என்றும் “அவைகள் அழிந்தால் இந்திய ஓவியக் கலை அழிந்துவிடும்” என்றும் “சாமி பக்திக்காக தாங்கள் கோவில்களைக் காப்பாற்றுவதில்லை” என்றும் “ஓவியக்கலை அறிவுக்காக கோவில்கள் காப்பாற்றப்பட வேண்டும்” என்றும் சொல்லுகின்றார்கள். இதுபோலவே புராணங்களைப் பற்றிய ஆபாசங்களை எடுத்துச் சொல்லும் போதும் இதே பண்டிதர்கள் “புராணக் கதைகளை நாங்கள் மதிப்பதில்லை” என்றும் “அப் புராணங்களில் உள்ள இலக்கண இலக்கிய கலைகளையே காப்பாற்ற முயற்சிக்கின்றோம்” என்றும், “கம்பன் கவிச்சுவையும் சேக்கிழார் தமிழ்ச் சுவையும் இவ்வுலகில் வேறு எங்கும் காணமுடியாது” என்றும் “ஆதலால் அவைகள் காக்கப்பட வேண்டும்” என்றும் பேசுகின்றார்கள்.

ஆகவே நமது பண்டிதர்களின் ஓவியக்கலையும், காவியக் கலையும் போகின்ற போக்கைப் பார்த்தால் அவர்களுக்கு உள்ள பகுத்தறிவுக் கலை எவ்வளவில் இருக்கின்றது என்பது ஒருவாறு தானாகவே விளங்கும். மக்களுக்கு ஓவியம் வேண்டுமானால் இந்தியக்கோவில் ஓவியமும் இந்துக் கடவுள்கள் ஓவியமும் கடுகளவு அறிவுள்ள மனிதனும் ஒப்ப முடியாத மதிக்கமுடியாத ஓவியங்கள் என்பதோடு அவை மனிதத்தன்மையும், பகுத்தறிவும் உள்ள மக்களால் உண்டாக்கப்பட்ட ஓவியம் என்று சொல்ல முடியாததான நிலையில் அவை இருப்பதையும் காணலாம். எப்படியெனில் இந்திய ஓவியம் என்பது இந்து மத சம்மந்தமான கடவுள், புராணம் ஆகியவைகளைப் பற்றியதைத்தவிர தனிப்பட்ட இயற்கை அறிவைப் பற்றியது மிக மிக அருமை என்றே சொல்ல வேண்டும். அது மாத்திர மல்லாமல் அவைகளில் இயற்கைக்கு முறண்பட்டதே, 100-க்கு 99 ஓவியங் கள் என்றும் சொல்லவேண்டும். சாதாரணமாக மனிதனும், மிருகமும் புணர்வதும், மிருக முகத்துடன் மனிதன் இருப்பதும் மிருகங்கள் பறப்பதும், மிருகங்களின் மீது அளவுக்கு மீறின மக்கள் இருப்பதும், பக்ஷிகளின்மீது மக்கள் இருப்பதும், மக்கள் பறப்பதும், நாலு கைகளும், ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆறு முகங்களும், சிறிய உருவத்தின்மீது பெரிய உருவங்கள் இருப்பதும், தாமரைப் புஷ்பத்தின் மீது ஒருபெண் நிற்பதும் இந்த மாதிரியாகவும் இன்னமும் இதைவிட எத்தனையோ பொறுத்தமற்ற, சாத்தியமற்றதான உருவங்களே இன்று ஒவியமாகக் கருதப்டுகின்றன. சாதாரணமாக மேல்நாடு ஓவியங்களைப் பார்த்தால் இது ஓவியமா? உண்மை தோற்றமா? என்று மருளும்படியாகவும் அவைகளுடைய சாயல் முதலிய வைகளில் இருந்தே குணம், காலம், இடம்,நடவடிக்கை முதலியவைகள் தெரிந்துகொள்ளும்படி யாகவும் அவைகள் பிரத்தியக்ஷமாக இயங்கிக் கொண்டிருப்பது போலவும் எவ்வளவோ அருமையான காரியங்கள் வெகு எளிதில் மிகச்சாதாரண தன்மையில் அறியும்படியாகவும் நாமே பார்த்த மாத்திரத்தில் சுலபத்தில் பழகிக்கொள்ளும் படியாகவும் இருப்பதைக் காணலாம். இவற்றிற்காக ஒரு தம்படியாவது செலவில்லா மலும், பூஜை, நைவேத்தியங்கள் செய்வதின் மூலம் நேரத்தையும், அறிவையும் பறி கொடுக்காமலும் அனுபவிக்கலாம்.

ஆகவே அப்படிப்பட்ட அருமையான ஓவியங்களையும், சித்திரங் களையும், பதுமைகளையும் விட்டுவிட்டு, அநாகரீகமும் காட்டுமிராண்டித் தனமுமான மிருகப்பிராயமும் கொண்டதான உருவங்களை வைத்துக் கொண்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் அவைகளுக்குப் பணம், காசு, நேரம் ஆகியவை செலவு செய்து பூஜை முதலியது செய்து கீழே விழுந்து அவைகளிடம் பக்தியையும் காட்டிக்கொண்டு, “அவைகளை ஓவியக்கலைக் காகக் காப்பாற்றுவதற்காக இப்படிச் செய்கின்றோம்” என்றால் இது பகுத்தறி வும், யோக்கியக் குணமும் படைத்த மனிதர் என்பவர்களின் செய்கையாகுமா – பேச்சாகுமா என்று கேட்கின்றோம்.

இதுபோலவே காவியங்கள் என்பவைகளை எடுத்துக் கொண்டோ மேயானால் அதன் ஆபாசக் களஞ்சியங்களை அளவிட்டுச் சொல்ல முடியாது. நமது மக்களில் 100-க்கு 10பேரே எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள். அவர்களில் ஆயிரத்திற்கு அரை பேரே காவிய இலக்கண இலக்கியங்களை அறியக்கூடியவர்கள். அவர்களில் எத்தனையோ ஆயிரத்திற்கு ஒருவரே புராணங்களை வெரும் இலக்கியமாகவே மாத்திரம் எண்ணுபவர்கள் அல்லது அனுபவிப்பவர்கள் என்பதாக கணக்கெடுக்கலாம்.

ஆகவே இவர்களைத்தவிர மற்ற கோடிக்கணக்காண மக்கள் அவற்றை என்னவாகக் கருதுகின்றார்கள்? அதைப்பார்த்தபின், கேட்ட பின் எப்படி நடந்து கொள்ளுகின்றார்கள்? என்கின்ற விஷயங்கள் இந்தப் பண்டிதர்களுக்கு தெரியாததா என்று கேட்கின்றோம்.

கம்பராமாயணத்தின் கவி அழகையும், சேக்கிழார் புராணத்தின் தமிழ் அழகையும் பண்டிதர்கள் எடுத்துச்சொல்லும்பொழுதே புஸ்தகத் தின் முன் தேங்காய், பழம் உடைத்து கற்பூரம் பற்றவைத்து, பூஜை செய்து, கீழே விழுந்து கும்பிட்ட பிறகு “ஸ்ரீ மதேராமானுஜாய நமஹ” என்றும், “நமப்பார்வதீபதே – அரகர சங்கர மகாதேவா” என்றும் சொல்லிவிட்டுப் பிறகு கண்மூடி, கை கூப்பி, காப்புச் சொல்லி அருள் உண்டாக்கிக்கொண்டு பிறகுதான் கவி படித்துப் பொருள் சொல்ல ஆரம்பிக்கின்றார்கள். அதுவும் யார் முன்னிலை யில், எப்படிப்பட்ட ஆண் பெண் முன்னிலையில் என்ப தைப்பற்றி நாம் விவரிக்கவே வேண்டியதில்லை.

ஆகவே இந்த நிலையில் புராணங்கள், காவியங்கள் ஆகியவைகள் இலக்கியத்திற்கும், இலக்கணத்திற்கும் பயன்படுகின்றனவா- பயன்படுத்தப் படுகின்றனவா? அல்லது மக்களை இலக்கண இலக்கிய அறிவற்ற மக்களாக் கப் பயன் படுத்தப்படுகின்றனவா என்பதை அறிவுள்ள வாசகர்க ளையே யோசித்து அறிந்து கொள்ளும் படி விட்டுவிடுகின்றோம்.

இந்த இடத்தில் நாம் முக்கியமாய் குறிப்பிடுவது என்னவென்றால் நமது பண்டிதர்கள் என்பவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கும்,புஸ்தக வியாபாரத்திற்கும், வாழ்க்கை நிலைமைக்கும் இம்மாதிரி காட்டுமிராண்டித் தனமான அநாகரீகமான காவியங்களும், ஓவியங்களுமல்லாமல் வேறு வகை ஒன்றுமில்லாமல் போன தால் அவர்கள் இத்தனை மோசமான பொய்யையும், புரட்டையும், வஞ்சகத்தையும் சொல்லிக்கொண்டு இவை களைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

ஆகவே இம்மாதிரி ஆபாசமும் அநாகரீகமானதுமான காவியமும், ஓவியமும் அழிக்கப்படவேண்டுமானால் முதலாவதாக நமது பண்டிதர்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு, வாழ்க்கைச் சௌகரியத்திற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்துக் கொடுக்கவேண்டியது பகுத்தறிவையும், நாகரீகத்தையும் விரும்பும் பொது ஜனங்களின் கடமையாயிருக்கின்றது.

மேல்நாட்டுப் பண்டிதர்களுக்கு அவர்களுடைய கல்வியானது பகுத்தறிவை உண்டாக்கக் கூடியதாய் இருப்பதால் அவர்கள் அனாகரீகப் பழங்காவியங்களுடையவும், ஓவியங்களுடையவும் உதவி சிறிதும் இல்லாமலே உயிர்வாழ சௌகரியமடைந்திருக்கிறார்கள்.

ஆனால் நம்முடைய பண்டிதர்கள் பரிதாபகரமான நிலைமையில் இருப்பதால் அவர்களைக் குற்றம் சொல்லுவதிலும் பயனில்லை என்றே சொல்லுவோம்.

குடி அரசு – கட்டுரை – 26.04.1931

You may also like...

Leave a Reply