திருப்பூர் காங்கிரஸ் பிரசாரமும் பணமுடிப்பின் யோக்கியதையும்
சென்ற வாரத்தில் இவ்வூருக்கு திரு. இராஜகோபாலாச்சாரியுள்பட சில காங்கிரஸ் பிரமுகர்கள் வந்து சேர்ந்தார்கள். உடனே பத்திரிகை நிரூபருக்கு ஆள் அனுப்பினார்கள். நிரூபரும் உடனே வந்து சேர்ந்தார். திரு. இராஜ கோபாலாச்சாரியாரின் திக்விஜயங்களையும் அவருடைய பிரசாரத்தின் முக்கிய கொள்கைகளையும் பத்திரிகைக்கு தந்தி கொடுக்கப்பட்டது. பின்னர் பணமுடிப்புக்கு ஒரு புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டது. சிறை சென்ற திருமதி. பத்மாவதி ஆஷருக்கு திருப்பூர் பொதுஜனங்களின் பெயரால் அவர் செய்த தியாகத்தை பாராட்டி ஒரு பண முடிப்பு கொடுப்பதென்றும் ³ யாரின் தலைமையில் கிராம பிரசாரத்துக்கு ³ பணம் செலவழிக்கப்படுமென்றும், ஆனால் ³ பணமுடிப்பை திரு. இராஜகோபாலாச்சாரியரிடம் கொடுத்து விடவேண்டியதென்றும் முடிவு செய்யப்பட்டது. உடனே, திரு. ஆஷர் கம்பெனியார் ரூ. 501 பிரபல பஞ்சு வியாபாரியும் காங்கிரஸ் தலைவரான வருமான ஒரு கனவான் ரூ. 101 பட்டியல் போட்டு விட்டார்கள். பிறகு சர்க்கா சங்கத்தின் சர்டிபிகேட் பெற்ற கதர் வியாபாரிகளுக்கு உடனே இந்த நிதிக்கு துகை போடும்படி கட்டளை பிறந்தது. உடனே கதர் வியாபாரிகள், தங்கள் நற்சாக்ஷி பத்திரங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக வழக்கப்படி ரூ. 50 முதல் ரூ. 21 வரை பட்டியலில் போட்டு துகைகளும் கொடுத்து விட்டார்கள். மற்றவர் களும் துகை கொடுத்து விட்டார்கள். துகையும் சுமார் ஆயிரம் வரை ரொக்கம் பை கட்டியாய் விட்டது.
மாலை 7-மணிக்கு நொய்யல் நதிக்கரையில் கூட்டம் கூடியது. திரு. ஈஸ்வரமூர்த்தி கவுண்டர் பணமுடிப்பு கட்டி திருமதி. பத்மாவதி ஆஷரிடம் பணமுடிப்பை கொடுத்தார். திருமதி. அம்மையாரும் பெற்றுக் கொண்டு ஒப்பந்தப்படி திரு. ஆச்சாரியார் அவர்களிடம் உடனே கொடுத்துவிட்டார்கள்.
பின்னர் பிரசங்கம் ஆரம்பமாயிற்று. திரு. மு.சந்தானம் அவர்கள் திருமதி. ருக்மணி லக்ஷிமிபதி அவர்களை புகழ்ந்து கூறினார். திரு. இராஜ கோபாலாச்சாரியார் திரு. வேதரத்தினம், அவர்களை புகழ்ந்து சில வார்த்தை கள் கூறி, திரு. காந்தி அவர்கள் சொல்லி அனுப்பினாரென்று சில உப தேசங்களைச் சொன்னார். திரு. வேதரத்தினம் அவர்கள் நேற்றைய தினம் கரூர் ஆற்றங்கரையில் திரு. கூ.ளு.ளு. இராஜன் அவர்கள் பேசும்பொழுது இந்த ஆற்றங்கரையிலுள்ள மணல்களெல்லாம் இந்த 10 வருஷங்களாய் நடந்த உபந்நியாசத்தைக் கேட்டு கொண்டிருந்து இப்போது அவைக ளெல்லாம் பிரசங்கம் செய்யுமென்று சொன்னார். ஆனால் நான் திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரைகளிலுள்ள மணல்கள் மாத்திரம் அல்லாமல் பக்கத்தில் உள்ள மரம் செடிகளெல்லாம் உபந்நியாசம் செய்யுமென்று நம்புகிறேனென்று சொல்லிவிட்டு இவ்வளவும் தெரிந்து கொண்டிருக்கும் திருப்பூரில் பொது ஜனங்களாயுள்ள நீங்கள் எல்லோரும் கதர் அணியவில்லையே என்றுதான் வருத்தப்படுகின்றேனென்று சொன்னார். பின்னர் திரு. திருகூடசுந்தரம் பேச எழுந்ததும் திரு. மு.ஏ. கிருஷ்ணசாமி அய்யர் என்பவர் ஸ்ரீனிவாசபுறத்தில் பெண்களுக்காக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருப்பதாயும் அந்தக் கூட்டத் திற்கு திருமதிகள் பத்மாவதி ஆஷரும், ருக்மணி லக்ஷிமிபதியும் போக வேண்டியிருப்பதால் திரு. திருகூடசுந்தரம் பேசப் போகும் கூட்டத்திற்கு திரு. விட்டல்தாஸ் ஆனந்தஜீசேட் அவர்களை தலைமை வகிக்கும்படிக்கும் சொல்லும்படியாய் திரு. ஈஸ்வரமூர்த்தி கவுண்டரை கூட்டத்தில் சொல்லும் படி செய்து அவரும் அம்மாதிரி சொல்லவே திரு. திருகூடசுந்தரனாருக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டு தானும் இந்தக் கூட்டத்தில் அதிக நேரம் பேசப் போவதில்லை என்றும் 6 காரணங்கள்தான் சொல்லப் போவதாயும் அதிலும் 3 காரணங்கள் சொல்லிவிட்டு 3 நிமிஷத்தில் உட்கார்ந்து விட்டார். இனிமேலாவது திரு. திருகூடசுந்தரனார் பார்ப்பன சூழ்ச்சியை நன்கு தெரிந்து கொண்டு இவர்களுடன் பின்பற்றுவதை நிறுத்திக் கொள்வாராக.
-ஒரு நிரூபர்
குடி அரசு – செய்தி விமர்சனம் – 10.05.1931