திருநெல்வேலி ஜில்லா 4-வது சுயமரியாதை மகாநாடு
சகோதரர்களே! இன்று இந்த மகாநாட்டுக்குத் தலைமை வகிக்கும் திரு. எஸ். இராமநாதன் அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டியதில்லை. அவர் தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு மிராசுதார் குமாரர். அவர் எம்.ஏ, பி.எல், படித்துப் பட்டமும் சன்னதும் பெற்று, சென்னையில் ஹைகோர்ட்டு வக்கீலாயிருந்தவர். ஒத்துழையாமையின் போது வக்கீல் வேலையையும், தனது சம்பாதனையையும் விட்டுவெளியேரி சிறை சென்ற வர். இவர் சிறைசென்ற காலம் எது என்றால் இப்போதைப்போல் சிறைக்குப் போகின்றவர்களுக்கு மாமியார் வீட்டுக்கு முதல் தவணை செல்லும் மரு மகனைப் போல் அளவுக்கும் தகுதிக்கும் மீறின உரிமைகளும், சுக போகங் களும் சிறையில் கிடைத்துக் கொண்டிருக்கும் காலம் அல்ல அது. திரு. இராம நாதன் அவர்கள் தலையில் கூடையும் கையில் மண்வெட்டியும் கொடுக்கப் பட்டு தெருவில் ரோட்டுபோடும் வேலைசெய்தவர். சிறை அதிகாரிகளால் பல நிர்பந்த தண்டனைகள் செய்யப்பட்டதல்லாமல் தனி அரையில் அதாவது “கூனு கொட்டடியில்” போட்டு மக்களைப் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் இல்லாமல் வதைக்கப்பட்டவர். இதற்காக இவரைப்பற்றி மாத்திரம் சட்ட சபையில் பலகேள்விகள் கேட்கப்பட்டது உங்களுக்குத் தெரியும். தவிர சென்னை மகாஜன சங்க காரியதரிசியாயும், தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியில் காரியதரிசி யாயும் இருந்தவர். இவைகள் தவிர தமிழ், கேரளம், கர்னாடகம் ஆகிய நாடுகளுக்கு கதர் போர்டு நிர்வாக காரிய தரிசியாயும் இருந்தவர். இவ்வளவும் தவிர திரு. காந்தியவர்களுக்கு உற்ற சீடராகவும் இருந்து, திரு. காந்திய வர்களால் மிகவும் போற்றப்பட்டவராகவும் இருந்தவர். இவ்வளவும் அல்லாமல் யாதொரு சுயநலப் பிரதிப் பிரயோஜனமும் எதிர் பாராமலும், தன் கைப்பொறுப்பிலேயே சகல செலவும் செய்து கொண்டு இவ் வியக்கத்தில் உழைப்பவர். அன்றியும் அவரது கொள்கையில் மயக்கமும் குளருபடியும் சமயத்திற்குத் தகுந்த அர்த்த வியாக்கியானமும் இல்லாமல் மிகத்தெளிவும், ஒரே நிலையும் உள்ளவர். ஆகவே இப்படிப்பட்ட ஒருவர் இந்த மகாநாட்டுக்கு கிடைத்திருப்பதால் மகாநாடு உண்மைச் சுயமரியாதை மகாநாடாக நடந்து உண்மையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மக் களுக்கு உண்மையான வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.
குறிப்பு : 04.04.1931 அன்று தூத்துக்குடி பாலகிருஷ்ண எலக்டிரிக் தியேட்டரில் நடைபெற்ற மாநாட்டில் ஆற்றிய உரை.
குடி அரசு – சொற்பொழிவு – 12.04.1931