பாலர் பரிபாலனம்
சென்னை பண்டிதர் திரு.எஸ். ஆனந்தமவர்களால் எழுதப்பட்ட “பாலர் பரிபாலனம்” என்னும் புஸ்தகம் வரப்பெற்றோம். நமது நாட்டில் குழந்தை வளர்ப்பிலோ அல்லது அதன் போஷணையிலோ போதிய சிரத்தையும், கவனமும் காட்டப்படுவதில்லை யென்பதோடு அனேகருக்கு அதன் விபரமே தெரியாதென்று சொல்லவேண்டி இருக்கிறது. இதனா லேயே சிசு மரணமும், அகால மரணமும், பலவீனமும், ஊக்கமின்மையுமாகிய வைகள் மலிந்து அன்னிய நாட்டார் முன்னிலையில் இந்தியர்களை மாக் களாகக் கருதப்படும் படியாகச் செய்து வருகின்றது. இவை மாத்திரமல் லாமல் மக்களுக்கு நல்லொழுக்கமும் பகுத்தறிவும் கூட அடைவதற்கில் லாமல் இருந்துவரப் படுகின்றது. இவற்றிற்கெல்லாம் காரணம் பிள்ளை களை எப்படி பரிபாலிப்பதென்கிற விஷயத்தில் சிறிதும் அறிவும், ஆராய்ச் சியும் இல்லாததே காரணமென்பதைத் திரும்பவும் வலியுறுத்திச் சொல்ல வேண்டி யிருக்கின்றது.
இத்தகைய பெருங்குறையை போக்க திரு. ஆனந்தமவர்கள் முயற்சித்து இப்புத்தகம் எழுத முன்வந்தது பேருதவியேயாகும். இதில் குழந்தை பிறப்பு, குழந்தைப் பருவத்துன்பங்களும், காயலாவும், ஸ்நானம், உடை, ஆகாரம், தாதி, தொத்து வியாதியிலிருந்து காப்பாற்றுதல், அம்மை குத்துதல், உடற்பயிற்சி, தூக்கம், மல ஜலங்களித்தல், உணவு, கல்வி கொடுக் கும் முறை முதலிய அனேக விஷயங்களைப்பற்றி தெளிவாகவும், முறை யாகவும் எழுதப்பட்டிருக்கிறது. இது வைத்திய சாஸ்திரமாத்திரமல்லாமல் சரீரதத்துவம், மனோதத்துவம் முதலிய பல நூல்களையும், ஆராய்ந்து எழுதப்பட்ட ஒரு முக்கிய புஸ்தகமாகும். ஆகவே இப்படிப்பட்ட அருமை யான புஸ்தகத்தை எழுதின பண்டிதர் திரு. எஸ்.எஸ். ஆனந்தமவர்கள் அறிவிலும் ஆராய்ச்சியிலும் வைத்திய பாண்டித்தியத்திலும் வல்லவ ரென்பதை நாம் தமிழ் நாட்டாருக்கு எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. எனவே இப்புஸ்தகமானது ஒவ்வொரு தாய்மாரிடத்திலும் ஒவ்வொரு புஸ்தகாலயத்திலுமிருக்க வேண்டியதோடு ஆண் பெண் பள்ளிக்கூடங் களிலும் பாடமாய் இருக்கத் தக்கதென்றும் சொல்லுவோம்.
வேண்டுவோர் கீழ்கண்ட விலாசத்திற்கெழுதி பெற்றுக் கொள்ளவும்.
விலாசம்
பண்டிட் எஸ்.எஸ். ஆனந்தம்
தமிழ் மருத்துவசாலை
221, தங்கசாலைத் தெரு, சென்னை.
குடி அரசு – மதிப்புரை – 25.01.1931