3 வது மாகாண சுயமரியாதை மகாநாடு
விருதுநகரில் நடக்கவிருக்கும் 3-வது சுயமரியாதை மகாநாடானது முன் குறிப்பிட்டபடி ஜுன்-µ 6,7, தேதிகளில் நடத்துவது சற்று தாமதித்து அதாவது ஒரு வாரம் பொறுத்து நடத்த வேண்டியதாக ஏற்பட்டு விட்ட தென்று தெரிவிக்க வேண்டியதாகிவிட்டது. ஏனெனில் மகாநாட்டிற்குத் தலைமை வகிக்க ஏற்கனவே இசைந்து அதை உத்தேசித்தே சுமார் 1 மாதத்திற்கு முன்னதாகவே இங்கு வந்து நீலகிரியில் (ஊட்டியில்) தங்கியிருந்த உயர்திருவாளர் சர். ஹரி சிங்கவர் அவர்களுக்கு பல்லில் வலி ஏற்பட்டு அதனால் ஒரு பல் எடுக்கவேண்டியதாகியும் மேலும் அவருக்கு அந்த வலி நிற்காமல் மிகவும் தொந்திரவு கொடுத்ததால் அவர் மகாநாட்டுக்கு வர முடியாமலும் அதுவரை இங்கு இருக்க முடியாமலும் திடீரென்று தமது ஊருக்குப் புறப்பட வேண்டியதாகிவிட்டது. ஆன போதிலும் மகாநாட்டை எந்த விதத்திலும் ஒரு வாரம் முன்பின்னாகவாவது நடத்திவிடலாம் என்கிற தீர்மானத்தின் மீதே தலைவர் உயர்திருவாளர் சௌந்திரபாண்டியன் அவர்களும், மற்றும் விருதுநகர் பிரமுகர்கள் திருவாளர்கள் வி.வி.ராமசாமி, செந்தில்குமார நாடார் முதலியவர்களும் வெகு மும்மரமாகவே மகாநாட்டு வேலைகளை கவனித்துக்கொண்டு வருகிறார்கள். வேறு தலைவர் தேர்ந்தெடுத்து சீக்கிரம் மகாநாடு நடக்கும் தேதியை தெரிவிக்கப்படும்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 24.05.1931