கராச்சி

கராச்சி நகரில் இவ்வாரம் நடந்த நடவடிக்கைகள் இந்திய மக்களை திடுக்கிடச் செய்திருக்கும் என்று சொல்லுவது மிகையாகாது. அன்றியும், சாதாரணமாகவே இந்த நான்கு, ஐந்து வருஷங்களாக குடி அரசுப் பத்திரி கையைத் தொடர்ந்து வாசித்து வந்த வாசகர்களுக்கும், சுயமரியாதை இயக்க பிரசாரங்களையும் அம்மகாநாட்டு தீர்மானங்களையும் தொடர்ந்து கேட்டு வந்த பொது ஐனங்களுக்கும், ஒரு பெரிய ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சி யையும் உண்டாக்கி இருக்குமென்பதில் சிறிது சந்தேகமில்லை.

ஏனெனில், ‘குடி அரசு’ப் பத்திரிகை சென்ற நான்கு, ஐந்து வருஷங் களாய் எந்தெந்தக் கொள்கைகளை சுமந்து தமிழ்நாடெங்கும் முழக்கி வந்ததோ அந்தக் கொள்கைகளேதான் பெரிதும் இவ்வாரம் முழுவதும் கராச்சியில் உண்மை உணர்ச்சியுள்ள பதினாயிரக்கணக்கான- வாலிபர் களா லும், பெரியவர்களாலும் முழங்கச் செய்யப்பட்டதோடு பெரும் பெரும் தலை வர்கள் என்பவர்களையும் அம்முழக்கங்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு பின்பாட்டு பாடும் படியாக செய்துவிட்டது. அதுமாத்திரம் அல்லா மல் நாம் எந்த எந்தக் கொள்கைகளையும், ஸ்தாபனங்களையும், அதன் தலை வர்களையும் குறிப்பிட்டு அவை நாட்டின் உண்மையான சுதந்திரத்திற்கும், முன்னேற்றத்திற்கும் தடையானதென்று முடிவு கட்டி, அவைகள் எல்லாம் ஒழிய வேண்டுமென்று ஆசைப்பட்டுப் பலமாகத் தாக்ஷண்யம் இல்லாமல் பிரசாரம் செய்து கண்டித்து வந்தோமோ அக்கொள்கைகளும், ஸ்தாபனங் களும், அதன் தலைவர்களும் இப்போது கராச்சியில் வெளிப்படையாய் வெறுக்கப்பட்டதோடு அவை அழிய வேண்டும் என்றும், தலைவர்கள் விலகிக் கொள்ள வேண்டுமென்றும் சொல்லப்படும் கூப்பாடுகள் ஆகாய மளாவ முழங்கிக்கொண்டே இருந்தது மற்றும் இது மாத்திரம் அல்லாமல் அவ்வார்த்தைகளைப் பந்தல்களில் எழுதிக்கட்டித் தொங்கவிடப்பட்டும் இருந்ததுடன் அத்தலைவர்களின் நேரில் தெரிவிக்கப்பட்டுமாய் விட்டது. எந்த எந்தத் தலைவர்களைப் பெரிய பெரிய மகாத்மா வென்றும், பழுத்த தேசாபிமானிகள் என்றும் கூறி, அவர்களது கட்டளைக்கும், அபிப்பிராயங் களுக்கும் மாறாக பேசுவதோ, நினைப்பதோ “பாவம்” என்றும், தேசத் துரோகம் என்றும் அநேக மக்களால் கருதப்பட்டு வந்ததோ, அந்தந்தத் தலைவர்களையே “எங்களுக்கு நீங்கள் வேண்டாம்”, “திரும்பிப் போங்கள்”, “உங்களது கொள்கை ஒழிக”, “உங்களது ஸ்தாபனங்கள் அழிக”, “உட்கார்ந்து விடுங்கள்” என்ற கூப்பாடுகள் முழங்கியதோடு அவைகளை அத்தலைவர் களே நேரில் பார்க்கவும், காதில் கேட்கவும் நேரும்படியான சம்பவங்கள் தாராளமாய் நடைபெற்றும் விட்டன.

இவை மாத்திரமல்லாமல் எந்த ஒரு “ராஜி”யானது உலகமே போற்றப் படுவதாக மக்கள் எல்லாரும், நினைக்கவேண்டும் என்று பெரிய பெரிய ஏற்பாடுகள் ஜால வித்தைகள் போல் செய்து காட்டப்பட்டதோ, அந்த ராஜி யானது கராச்சி தெருக்களில் சிரிப்பாய் சிரிக்கப்பட்டுவிட்டது. இன்னும் விளக்கமாய் சொல்லவேண்டுமானால் கராச்சியில் கூடியுள்ள ஆயிரக் கனக்கான வாலிபர்கள் வாயினால் “காங்கிரஸ் ஒழிக”, “காந்தியம் ஒழிக”, “ராஜி அழிக” என்ற சப்தம் மொகுடு முட்ட முழங்கிவிட்டன என்பதே யாகும்.

அன்றியும் மேற்கண்ட இந்த தத்துவம் கொண்ட விஷயங்களையே 4 வருஷத்திற்கு முன்பிருந்தே நாம் சொல்லிவந்தபோதும், எழுதி வந்த போதும், ஆங்காங்கு எழுதித்தொங்க விட்டபோதும் இந்த நாட்டில் எந்த ஒரு கூட்டத் தார் நம்மைத் தேசத்துரோகி என்றும், விடுதலைக்கு விரோதி என்றும் கூப்பாடு போட்டார்களோ அந்தக் கூட்டத்தார்களே இன்று கராச்சித் தெருக்களில் தேசத்துரோகிகள் என்பதாகக் கூப்பிடப்பட்டதை சமாளிக்க முடியாமல் அவர் களிலும் பலர் இக்கூட்டத்தில் அதாவது மேற்கண்ட சபதங்கள் முழங்கிய கூட்டத்தில் சேர்ந்து கூடவே கோவிந்தா போட வேண்டியவர்களாகி விட்டார் கள். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், நமது குடி அரசின் கொள்கை களே – சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளே பெரிதும் கராச்சி நகரில் இவ்வருஷம் தாண்டவமாடின என்று சொல்லுவது எவ்விதத்திலும் மிகையாகாது.

அது மாத்திரமல்லாமல், காங்கிரசும், காங்கிரஸ் தலைவர்களும் கூட இந்தக் கொள்கைப்போர்வையையே போர்த்திக்கொள்ள வேண்டியதாகி விட்ட தையும், பார்த்த யோக்கியமான எவரும் இனி குடி அரசு கொள்கை களைக் குற்றம் சொல்லமாட்டார்கள் என்றே சொல்லுவோம்.

நிற்க, திரு. காந்தியவர்கள் விஷயமாய்ப் பலர் நடந்து கொண்டதைப் பற்றி திரு. காந்தியவர்களே மனம் நொந்து பேசியதைப் பார்த்தாலே உண் மையான விடுதலையும், சுதந்திரத்தையும் கோரும் மக்களுக்கு காந்தியத்தில் எவ்வளவு அதிருப்தியும் ஆத்திரமும் இருக்கின்றது என்பது தானாகவே விளங்கும்.

அன்றியும் தேசீய மகாசபை என்றுகூறி இந்திய பாமர மக்களை சுமார் அரை நூற்றாண்டாக ஏமாற்றி வந்த காங்கிரசைப் பற்றியும், அதன் தலைவர் களைப்பற்றியும், அவர்கள் நடத்தைகளையும், உள் எண்ணங்களையும் பற்றியும் பாரத நவவீரர்சபை மகாநாடு என்னும் தியாகத்திற்குத் துணிந்த வாலிப மக்கள் மகாநாட்டின் வரவேற்புத் தலைவரும், மகாநாட்டுத் தலைவ ரும் கூறியிருப்பவைகளைப் பார்த்தால் காங்கிரசு முதலியவைகளைப் பற்றி நாம் இதுவரை சொல்லி வந்ததற்கும் இவர்கள் சொல்லுவதற்கும் ஏதாவது சிறிதளவு வித்தியாசமாவது இருக்கின்றதா என்பதும் விளங்கிவிடும். மேல் கண்ட இவ்விரு கனவான்களும் காங்கிரசு நடவடிக்கைகளுக்கும் பிரசாரத் திற்கும் பிடிக்கும் சில ஆள்கள் போன்று வாடகைக்கோ கூலிக்கோ பிடித்த ஆள்கள் அல்ல என்பதும், உண்மையாகவே மனம் கசிந்து பேசியவர்கள் என்பதும் யாவரும் அறிந்ததேயாகும். அதாவது அவர்களில் ஒருவர் சுவாமி கோவிந்தானந்தர், மற்றவர் சுபாஸ் சந்திரபோஸ் ஆவார். ஆகவே மேல்கண்ட கனவான்கள் கூறுவதாவது.
வரவேற்பு கமிட்டி தலைவர் சுவாமி கோவிந்தானந்தர் கூறியதின் சாரம்:-

“பாமர மக்களுக்கு அனுகூலமான ஆக்ஷியை ஸ்தாபிக்க வேண்டு மென்பது எங்களது நோக்கம். ருஷியாவின் சமதர்மக் கொள்கையை இந்தியாவுக்கு ஏற்ற விதத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது அவா. சமதர்மத்தோடு கூடின பூரண சுயேட்சையே இந்தியாவின் முடிவான லக்ஷியம். இந்தியாவின் ஜீவநாடி காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை ஆதரிக்க வில்லை. பகவத்சிங்கும் மற்ற தேச பக்தர்களும் செய்த தியாகத்தை அனுகூலமாய்க் கொண்டு கையில் வலுத்தவர்களும், ராஜியவாதிகளும் இப்போது பயனடைந்து வருகிறார்கள்” என்பதாகும்.

மகாநாட்டுத் தவைவர் சுபாஸ் போஸ் பேசியதின் சாரமாவது,
“காங்கிரசின் கொள்கைகள் பயனற்றதாகவும் பலவீனமுள்ள தாகவும் இருக்கின்றது.

காங்கிரஸ் தலைவர்களோ, முன்னுக்குப்பின் முரணாய் பேசு கின்றவர் களாகவே இருக்கின்றார்கள்.

அவர்களது நடத்தைகளோ, வாயில் பேசுவதொன்றாகவும், காரியத்தில் செய்வது வேறொன்றாகவும் இருக்கின்றன.

அவர்களது வேலைத் திட்டங்ளோ, எவ்வித புதிய மாறுதல் கொள்கைகளும் அற்றவைகளாகும்.
அவர்கள் உள் எண்ணங்களோ எப்படியாவது மக்களிடத்தில் விஷயங்களை சரிக்கட்டிக் காட்டிக் கொண்டு போனால் போதுமென்ப தேயாகும்.

அவர்களது லக்ஷியங்களோ, ஜமீன்தாரர்களுக்கும் குடியான வனுக்கும், பணக்காரனுக்கும், கூலிக்காரனுக்கும், மேல்ஜாதிகார ரென்போருக்கும், தீண்டப்படாதா ரென்போருக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் எல்லோருக்குமே தாங்கள் நல்ல பிள்ளைகளாய் இருக்க வேண்டுமென்பதையே லக்ஷியமாய் கொண்டவர்கள்.
நமக்கு சுதந்திரத்தைச் சம்பாதித்துக் கொடுக்க காங்கிரஸ்காரர் களால் முடியும் என்கின்ற நம்பிக்கை எனக்கு சிறிதும் இல்லை. ஆதலால் இந்தியா சுதந்திரமடைய வேண்டுமானால் வேறு ஒரு புதிய ஸ்தா பனத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்”
என்று பேசியிருக்கிறார்.

காங்கிரசின் யோக்கியதைக்கு இதைவிட நல்ல ஒரு நற்சாக்ஷிப்பத்திரம் வேறு யாராலும் கொடுக்கமுடியாது, இதுவரை கொடுக்கப்பட்டதுமில்லை. ஆகவே, காங்கிரசைப்பற்றியும், அதன் தலைவர்களைப் பற்றியும் அவர்களது எண்ணங்களைப் பற்றியும் இந்த 5,6 வருஷ­ காலமாக நாம் பேசியும் எழுதியும் வந்தவைகளுக்கும் இதற்கும் ஏதாவது ஒரு கடுகளவு வித்தியா சமாவது இருக்கின்றதா என்பதை வாசகர்கள்தான் யோசித்துப்பார்த்து முடிவு கட்ட வேண்டும் என்பதாகக் கருதிவிட்டு விடுகின்றோம். நிற்க,

சுதந்திரத்திற்காக வகுக்கப்பட்ட கொள்கைகள் விஷயத்திலும் ³ திரு. போஸ் அவர்கள் கூறுவதாவது:-
“விவசாயிகள் தொழிலாளிகள் ஆகிய இவர்களுக்கு சமதர்மம் ஏற்படவேண்டும். ஜாதி வேற்றுமைகள் ஒழிக்கப்படவேண்டும், சமூகம் மதம் என்பதான மூடநம்பிக்கைகள் எல்லாம் அடியோடு அழிக்கப் படவேண்டும். பெண்களைப், புதிய தர்மங்களை ஏற்றுக் கொள்ளச் செய்யவேண்டும்” என்பனவாகியவைகளாகும்.
ஆகவே, இந்தக் கொள்கைகள் கூட இதுவரை குடி அரசு பிரசாரம் செய்து வந்ததோடு இது சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமான கொள்கை களாகவும் இருப்பது யாவரும் அறிந்ததேயாகும்.

தவிர, சென்ற ஒருவருஷ காலமாய் இந்தியாவில் நடந்த சத்தியாக் கிரகப் போர் என்னும் விஷயத்திலும் நமது அபிப்பிராயமானது இந்திய மக்களால் எவ்வளவு பலமாக ஊர்ஜிதம் செய்யப்பட்டது என்பதற்கும் தெளிவான ஆதாரங்கள் வேண்டுமானால் ராஜியைப்பற்றிய பொதுமக்கள் அபிப்பிராயம் என்ன என்பதைக் கூர்ந்து பார்த்தாலே நன்றாய் விளங்கும். அதைவிட நன்றாய் விளங்கவேண்டுமானால் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஒவ் வொரு “தியாக” புருஷர்களும் தேசீய “வீரர்”களும் கிளர்ச்சிக்கு வெளிப் படையாகவோ, மறைமுகமாகவோ உதவி செய்து வந்த “தேசீய வாதி”களும் எப்படியாவது சீக்கிரத்தில் ராஜி ஏற்படாவிட்டால் தமது கதி மாத்திரமல்லாமல் கிளர்ச்சியின் கதி என்ன ஆவது என்று கவலைப்பட்டு ராஜிக்காக அலைந்த தும், ராஜியாக வேண்டும் என்று பிரார்த்தனைகள் செய்ததும், ராஜி செய்து கொள்ளும்படி திரு.காந்திக்கு பலர் தந்திகொடுத்ததும், பத்திரிகைகள் எல்லாம் “காந்தி பெரிய மனது வைத்து விட்டுக்கொடுக்க வேண்டும்” என்று கோரிக் கொண்டதும், மற்றும் இந்நாட்டில் உள்ள சகல முதலாளிகளும், நிலச்சுவான் தார்களும், வியாபாரிகளும் பெரிதும் திரு. காந்தியையும், கிளர்ச்சியையும் சதா வைது கொண்டு இருந்ததுமான காரியங்களே போதிய ஆதாரங்களாய் இருந்து ருஜுவளிக்கும். இவ்வளவும் போராவிட்டால் கிளர்ச்சி துவக்கப் படும்போது திரு. காந்தியவர்களால் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனைகளையும், இறுதிக் கடிதத்தில் கண்ட வாசகங்களையும், மறுபடியும் ராஜி பேசும்போது ஏற்படுத்தப்பட்ட சமாதானக் கொள்கைகளையும், பிறகு ராஜி ஒப்பந்தப் பத்திரத்தில் காணப்பட்ட நிபந்தனைகளையும் கவனித்துப் பார்த்தாலும் போதுமானதாயிருக்கும்.

தவிர, ராஜி ஏற்பட்டபிறகு எங்கு பார்த்தாலும் ராஜி ஒப்பந்தத்தைப் பற்றிய மக்கள் அபிப்பிராயத்தை மாற்ற ஆங்காங்கு பிரசாரம் செய்ய வேண்டி வந்ததும், பிறகு ஒப்பந்தம் என்ன கதியோ ஆகித்தொலையட்டும் என்கின்ற அலட்சியத்தின் மீது எப்படியாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்கின்ற கவலையே பிரதானமாகி, வைசிராய் பிரபுவுக்குச் சதா தந்திகள் கொடுத்துக் கொண்டிருந்ததும் ஆகிய விஷயங் கள் கிளர்ச்சியின் வீரத்தையும், ராஜியின் கௌரவத்தையும் இன்னும் நன்றாய் விளக்கிவிடும்.

மேலும், ராஜி செய்து கொண்ட தலைவர்கள் தங்களுக்கு வெற்றிகர மான நிபந்தனை எது என்பதை விளக்குகையில் ஒரே ஒரு நிபந்தனையை மாத்திரம் எடுத்துச் சொல்லி வெற்றிகொண்டாடிவந்ததான அதாவது,
“தென்னாப்பிரிக்காவில் திரு. காந்திக்கும் திரு.ஸ்மட்சுக்கும் ஒரு ஒப்பந்தம் நடந்து இருவரும் ஒரு ஒப்பந்தக்கடிதத்தில் கையெழுத்துப் போடும்படியான ஒரு பெருமை கிடைத்ததுபோல் இந்தியாவிலும் திரு. காந்திக்கும் திரு. இர்வினுக்கும் ஒரு ஒப்பந்தம் நடந்து இருவரும் ஒரு ஒப்பந்தக் கடிதத்தில் கையெழுத்துப் போடும்படியான பாக்கியம் கிடைத் ததே அதுவே போராதா” என்பதும்,

“காங்கிரசு ஒரு ஜனப்பிரதிநிதி ஸ்தாபனம் என்பதை சர்க்கார் ஒப்புக் கொண்டார்களே அதுவே போராதா” என்பதுமான சமாதானங்களாலேயே திருப்தியடைய வேண்டுமென்று பெருமை பாராட்டி வந்திருப்பதும் போது மானதாகும்.

இவை ஒருபுறமிருக்க காங்கிரஸ் தலைவர்களுக்கும் திரு. காந்தி அவர்களுக்குமே தங்களுக்குள்ளாக கராச்சி காங்கிரசில் எங்கு தாங்கள் செய்து கொண்ட ராஜி ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்படாமல் கவிழ்த்து விடப்படுகின்றதோ என்று ஏற்பட்ட கவலையும், ராஜியை முதலில் வெற்றி என்று கூறினவர்கள் எல்லாம் “அது வெற்றியுமல்ல தோல்வியுமல்ல. அது யுத்த சமாதான உடன்படிக்கையாகும்” என்று சொன்னதும், திரு.காந்தி யவர்கள் தன்னுடைய ராஜியை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாமல் தள்ளி விடுமானால் (அதாவது மக்கள் தன்னுடைய வார்த்தைகளை கேட்கா விட் டால் என்கின்ற தலைப்பில்) தான் பட்டினி கிடந்து சாகப்போவதாகவும் பய முறுத்தியதும், மற்றும் அதை நிறைவேற்ற எவ்வளவோ பிரயாசைப் பட்டதும், வங்காளத்தில் திரு. சென்குப்தாவுக்கும், திரு. சுபாஸ் போசுக்கும் இருக்கும் தகராரை ஆஸ்பதமாக வைத்து, திரு. சுபாஸ் போசை சுவாதீனப்படுத்திக் கொண்டதின் மூலம் ராஜி தீர்மானத்திற்கு ஏற்பட்டிருந்த எதிர்ப்பை ஏமாற்றி நிறைவேற்றிக் கொள்ளச் செய்ததுமான காரியங்களும், ராஜி தீர்மானம் காங்கிரசில் வந்தபோது அதைப்பற்றி பேசியவர்களில் அதிகம் பேர், திரு. காந்தியவர்களின் பெருமைக்குப் பங்கம் வராமல் இருப்பதற்கே தாங்கள் ஆட்சேபிக்காமல் இருப்பதாக சொன்னவைகளும் கிளர்ச்சியின் பலனைத் தெரிவிக்கப் போதுமான ஆதாரங்களாகும்.
அன்றியும், இதுவரை கருப்புக்கொடி பிடிப்பதும், “திரும்பிப்போ” என்பதும், “நீங்கள் எங்களுக்கு வேண்டியதில்லை” என்பதும், மிக்க கேவலமாய் கருதப்பட்டு, அதைப்பெற நேர்ந்தவர்களையும் கேவலமாய்க் கருதுவதாக இருந்து வந்ததானது (இந்த ஆயுதமே இதுவரை காங்கிரஸ் “வீரர்”களுக்கு ஒரு பெரிய ஆயுதமாக இருந்தது) இப்போது அது காங்கிரஸ் தலைவரும் உலகப்பெரியாரும் மகாத்மாவுமானவர் என்று சொல்லப்பட்ட வருக்கே ஏற்படுவதற்கு இந்த ராஜி நிபந்தனைகளே பெரிதும் காரணமாய் இருந்ததென்றால் இனி இதற்குமேல் கிளர்ச்சியின் பயனையும், ராஜியின் யோக்கியதையும் விளக்கவேண்டியதில்லை என்றே கருதி, நிறுத்திக் கொள் ளுகிறோம். நிற்க,

இனி குடி அரசு கொள்கைகளும் சுயமரியாதைக் கொள்கைகளும் எவ்வளவு தூரம் இந்நாட்டில் மதிக்கப்பட்டிருக்கின்றது என்று பார்ப்போ மானால் காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தயாரிக்கப்பட்ட வருடாந்திர அறிக் கையினால் ஒருவாறு விளங்கும். அதாவது அவ்வறிக்கையில் “தென் னிந்தியா (அதாவது தமிழ்நாடு)வானது இந்தக் கிளர்ச்சிக்குத் தனது கிரமமான பங்கைச் செலுத்தவில்லை” என்பதாகக் குறிப்பிட்டிருந்ததும், “பத்திரிகைகள் யோக்கியமாக நடந்து கொள்ளவில்லை” என்று குறிப்பிட்டிருந்ததும், இதற்காக திரு. சத்தியமூர்த்திக் கூட்டத்தார் அழுது அதை மாற்ற வேண்டு மாய்க் கேட்டுக் கொண்டதும், அதற்காக அவர்கள் சொன்ன காரணங்களும் போதுமான ஆதாரங்களாகும். மற்றும், குடி அரசுவின் கொள்கைகள் காங்கிரஸ் தலைவர்களை எவ்வளவு தூரம் நடுங்கச் செய்துவிட்டது என்று தெரியவேண்டுமானால் காங்கிரஸ் வேலைத் திட்டம் தயாரித்து இருப்பதில் அவர்கள் காட்டியுள்ள தந்திரங்களும், அத் தீர்மானத்தை நிறைவேற்று கையில் மகாசபையில் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட விபரங்களும், அதிலும் மிகுதியாக சென்னை மாகாணக் காங்கிரஸ் தலைவர்களே கலந்து இருந்ததும் கவனித்துப் பார்த்தால் நன்றாய் விளங்கும். மேல்கண்ட வேலைத் திட்டத் தீர்மானங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டதா? தந்திரதிற்காக அதாவது பாமர மக்களை ஏமாற்ற செய்யப்பட்டதா என்கின்ற விஷயம் ஒரு புறம் இருந்தாலும், அத்திட்டங்கள் கொண்ட கொள்கைகளுக்கு நாட்டில் செல்வாக்கு இருப்பதை அத்தலைவர்கள் உணர்ந்து இருக்கின்றார்கள் என்பதை மாத்திரம் நன்றாய் வெளிப்படுத்தி இருக்கின்றது.

அதாவது, இனி அரசியல் சீர்திருத்த விதிகளை (கான்ஸ்டிடியூ ஷனை) மாத்திரம் சொல்லி பாமரமக்களை ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்து விட்டார்கள். அன்றியும் “கள்ளை நிறுத்திவிடுவோம்” “வரியை குறைத்து விடுவோம்” என்பது போன்ற தூண்டிமுள்ளில் குத்தும் புழு போன்ற சில விஷயங்களால் மக்களை ஏமாற்ற முடியாது என்றும், இனியும் சற்று முற்போக் கான கொள்கைகளை வெளிப்படையாய் எடுத்துச்செல்ல வேண்டிய காலம் வந்து விட்டது என்பதையும் உணர்ந்து விட்டார்கள்.

ஆகவே, அதற்கு தகுந்தபடி தந்திரம் செய்து சில திட்டங்களை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். என்றாலும், அதை நன்றாய்க் கவனித்துப் பார்த்தால் அதில் ஒரு இடத்திலாவது சோம்பேரிகளுடைய ஆதிக்கத்தை அதாவது பார்ப்பனீய ஆதிக்கத்தை சிறிதும் விட்டுக்கொடுத்ததாக காணப் படவேயில்லை என்பதும் அது பாமரமக்களை ஏமாற்ற என்று வெகு தந்திர மாகவே தயாரிக்கப்பட்டிருக்கின்றது என்பதும் நன்றாய் விளங்கும்.

அதாவது, இனி வரப்போகும் சுயராஜ்யத்தில் பாமர மக்களுக்கு என்ன நன்மை இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டவேண்டிய காலம் வந்து விட்டதால், அதற்காக இத்திட்டம் போடப்பட்டதென்பதாக ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இதன் தலைப்பின் கீழாகவே 20 திட்டங்கள் வகுக்கப்பட்டிருக் கின்றன.

அவற்றுள், முதல் பிரிவில் 3-வது உள் பிரிவு ஒவ்வொருவனுடைய மனசாக்ஷிக்கும் மதிப்பு கொடுக்க வேண்டியதாகவும், தங்கள் தங்கள் இஷ்டப்படி மதத்தைக் கொண்டாடலாம் என்றும் இருப்பதானது மிக்க தந்திர மும் மோசடியுமானதாகும். எப்படியெனில் இந்தத் தீர்மான வாசகத்தின் பல னாய் நாட்டின் எப்பேர்ப்பட்ட முற்போக்கையும் தடைப்படுத்தி விடமுடியும். பொது காரியங்கள் என்பதில் ஒவ்வொருவருடைய மனசாட்சியும் மதிக்கப் படுவது அபாயமான பலனையே கொடுக்கும். உதாரணமாக, சாரதா சட்டமும், மதச் செலவுகளும் கோவில் செலவுகளும் பகுத்தறிவுக்கு விரோதமான தென்றும், நாட்டுக்கும் மனித சமூக நன்மைக்கும் கெடுதியென்றும் தெரிந்தா லும், திரு. சத்தியமூர்த்தி திரு. எம். கே. ஆச்சாரி போன்றவர்கள் மனசாட்சியை மதிப்பதற்காக அவைகள் தடுக்கபடக் கூடாதென்றே ஏற்படுகின்றது. தவிர மேற்படி முதல் பிரிவிலேயே 4-வது உட்பிரிவானது கல்வியையும், அறிவையும் பாழாக்கப் போதுமானதாக இருக்கின்றது. அதாவது, வித்தை பாஷை, சிறுவகுப்பினர் எழுத்துக்கள் நூல்கள் ஆகியவைகளுக்குப் பாது காப்பு அளிப்பது என்பது. இதனால் புராணங்கள், சாஸ்த்திரங்கள், சமஸ் கிருதம் முதலிய பயனற்றவைகளும் பாஷைகளும் காப்பாற்றப்படவேண்டும் என்பதும், மூடநம்பிக்கையை மக்களிடம் இருந்து போக்காமல், காப்பாற்ற வேண்டும் என்பதுமாகும். இதுவே இந்தப் பிரிவின் உண்மையான உத்தேச உள் அர்த்தமாகவும் இருக்கின்றது.

தவிர 6-வது உள் பிரிவு வெளிக்கு நல்லதுபோல் காணப்பட்டாலும் சில வகுப்பாருக்குச் சம சந்தர்ப்பமும், சம உரிமையும் கிடைக்கச் செய்யா மல் தடுக்க உபயோகிக்கவும் உதவும்.

ஏழாவது உள் பிரிவானது கோவில்கள் என்பவற்றின் மூலமாக மக்களுக்குள் ஜாதிப்பிரிவினையும் உயர்வு தாழ்வு தத்துவமும் காப்பாற்றப் பட்டு வருவதை ஒழிக்க இடமில்லாமல் இருக்கும்படி செய்யப்பட்டி ருக்கின்றது. தீர்மானத்தில் உள்ளபடியான சட்டம் இப்போதும் இருந்துதான் வருகின்றது. ஆனால் உண்மையில் உள்ள வித்தியாசத்தையும், உயர்வு தாழ்வு தன்மையும் அழிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்கின்ற தத்துவம் இதில் அடங்கி இருக்கின்றது. இந்த உண்மையை திரு. சத்தியமூர்த்தி ஐயர் இத் தீர்மானம் வந்த போதே தனது பேச்சில் தன்னை அறியாமலே காட்டி யிருக்கிறார்.

2-வது பிரிவில் சர்க்கார் மதவிஷயத்தில் நடு நிலைமை வகிக்க வேண்டு மென்பது மிகவும் ஆபத்தான விஷயமாகும். இதனால் இன்று இந்த நாட்டிலுள்ள ஜாதி மத வித்தியாசங்கள் நிரந்தரமாய் இருந்து கொண்டு அதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற தொல்லைகளும், மக்களின் கொடுமைகளும் நிலையாகவே இருக்கும்.
அன்றியும் இந்த நிலையானது மக்களின் முட்டாள்தனத்தைக் கொண்டு, ஆளைத்தூக்கி ஆள்மேலே போட்டு, சோம்பேரி வேட்டை ஆடு பவர்களுக்கு அனுகூலமாகவே இருந்துவரும்.

3 – வது தீர்மானம் தொழிலாளர்களைப் பற்றியது. அதாவது:-
“தொழிலாளர்களுடைய காலட்சேபத்திற்குக் கட்டக்கூடிய சம்பளம் ஒரு வரையறைக்கு உட்பட்ட வேலை காலம், சௌகரியமான வேலை நிலைமை, விருதாப்பியம், வியாதி காலம், வேலை இல்லாத காலம் ஆகிய வைகளுக்குப் பாதுகாப்பு” என்று இருக்கின்றது.

இதானது தொழிலாளி, முதலாளி என்பதாக இரண்டு ஜாதிகள் பிரிந்து தொழிலாளிகளை நிரந்திரமாய் அவர்களது ஆயுட்காலம் எல்லாமும் அவர் களது சந்ததிகள் காலமும் தொழிலாளர்களாகவே இருக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள் போலவே இருக்கின்றது. அதாவது தொழிலாளர்களுக்கு ஜீவனத் துக்குப் போதுமான கூலி இவ்வளவென்று திட்டம் செய்வதும், முதலாளிகள் கணக்கு வழக்கின்றி கொள்ளை அடித்துப் பொருள் சேர்க்க வழி செய்வதும் என்றால், இது மிகவும் மோசமான காரியமாகும். தொழிலாளிகளுக்கு அவர் களுக்கு வேண்டிய ஜீவனச் செலவு போக முதலாளிகளுடைய லாபத்திலும் ஒருபங்கு இருக்க வேண்டியது நியாயமாகும்.

ஏனெனில், தொழிலாளிகள் தங்களுடைய சம்பாதனையில் தங்கள் ஜீவனச் செலவு போக காலக் கிரமத்தில் பணம் மீத்து வைத்து அவர்களும் ஒரு காலத்தில் முதலாளிகளாகத் தாராளமாய் வழியை திறந்து விட்டு விட வேண்டும். அப்படிக் கில்லாமல் செய்திருப்பதானது இதுவும் ஒரு வித வருணாசிரமதர்மமேயாகும். அதாவது தொழிலாளி மகன் தொழிலாளி யாகவே இருக்கச் செய்வ தாகும். ஆதலால் இந்த பிரிவு தொழிலாளிகளை ஏமாற்றத்தான் உதவுமே தவிர அவர்களை முன்னுக்குக் கொண்டு வர முடியாது.

9-வது பிரிவில் பூமியில் இருந்து குறிப்பிட்ட ஒரு வருமானத்திற்கு மேல்பட்ட வரும்படி கிடைத்தால் “வருமான வரி விதித்தல்” என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதுவும் ஏமாற்றுத் தீர்மானமேயாகும். இதனால் யாருக்கும் எவ்விதப் பயனும் ஏற்படாது.

பூமிக்குடையவர்களும், அதிக வெள்ளாமை செய்ய முயற்சிக்க மாட் டார்கள். ஒரு சமயம் தானாகவே தாராளமாய் விளைந்தாலும் வீண்செலவு கள் மூலம் விவசாயக்கணக்கு, வரவுச்செலவை சரி கட்டிக்காட்டி, ஆதாயம் காட்டாமல் செய்து விடுவார்கள். ஆகையால் நாம் முன் ஒரு சமயம் எழுதியபடி பூமி உடையவர்களுக்கு இத்தனை ஏக்கரா பூமி உடையவருக்கு ஏக்கரா ஒன்றுக்கு இன்ன விகிதம் தீர்வை என்று வரி விதித்தால் செலவுக்கு மேல்பட்டு மீதி கிடைக்கக்கூடியவனுக்கே அதிகவரி ஏற்படும். பூமிகளும் ஒரே கையில் போய் சேர்ந்து விடாமல் பலபேர்கள் அனுபவிக்கவும் அனு கூலமாய் இருக்கும். இதனால் ஏழைகளுக்கு எவ்வித தொந்தரவும் இருக்காது. ஆதலால் இந்த பிரிவு சிறிதும் பயனற்றதேயாகும்.

மற்றும் இந்தப்படியே அநேகமாய் ஒவ்வொரு பிரிவிலும் பயனற்ற தன்மைகள் அடங்கிக் கிடப்பதுடன், சமய சமூக சமுதாயத்துறைகளில் சிறிதும் கை வைக்காமல் ஜாக்கிரதையாய் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. ஆகவே இத்திட்டங்கள் ஏமாற்றும் தன்மையுடன் பாமர மக்களைக் தங்கள் பக்கம் இழுக்கச் செய்த சூட்சித் தன்மையும் பொருந்தினவையாகு மென்றுதான் சொல்லுவோம். ஜாதிமத விஷயம், புராணவிஷயம், மத விஷயமான அவரவர்கள் மனசாக்ஷி விஷயம் அதாவது மூடநம்பிக்கைகள் விஷயம், தொழிலாளிகள் நிலைமை, பணக்காரர்கள் நிலைமை, முதலியவைகளில் இப்போது நம் நாட்டில் நடை முறையில் இருப்பதைவிட எவ்வித மாறுதலும் காங்கிரஸ்காரர்கள் சுயராஜ்யம் கிடைத்த பிறகு செய்யப் போவதாய்ச் சொல்லும் இந்த புதிய அரசியல் திட்டத்தால் ஏற்பட்டுவிடும் என்றோ, ஏற்படுத்த ஆசை கொண்டு இத்திட்டங்களை வகுத்தார்கள் என்றோ நம்மால் சொல்லமுடியவில்லை.

ஆகவே, சமதர்மத்திலும், பொதுவுடமைக் கொள்கையிலும் நம்பிக் கையும், ஆர்வமும் உள்ள வாலிபர்கள் இதைக்கண்டு ஏமாந்து விடாமல் திட்டமான கொள்கைகளை வெளிப்படையாக விளக்கி அவற்றை தயவு தாட்சண்யம் இல்லாமல் வலியுருத்தி, அமுலில் கொண்டுவர பாடுபட வேண்டியதே அவர்களது கடமையாகும்.
சாதாரணமாகவே இந்தியாவைப் போல, பல வழிகளிலும் முதலாளி களாலும் வைதீகர்களாலும் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகள் எல்லாம் விடுதலைப் பெற்று முன்னுக்கு வந்த சரித்திரங்களைப் பார்த்தால் அவை எதுவும் இம்மாதிரி ஏமாற்றமான தீர்மானங்களால் விடுதலை அடைந்து விடவில்லை என்பதும், சமய சமூக சமுதாயக் கொள்கைகள் தலைகீழாக மாற்றப்பட்டதான புரட்சியாலேயே திடீரென மாறுதலையடைந்து, விடுதலை பெற்றன என்பதும் விளங்கும். ஆனால் இந்தியாவுக்கு வரப்போகின்ற சுயராஜியத்தில் வேறு வழிகளில் சிறிது முற்போக்கிற்கு இடமிருந்தாலும், இவ்விதக்காரியங்கள் வெகு ஜாக்கிரதையாகவே நழுவ விடப்பட்டிருக் கிறதுடன், இதை மக்கள் அறியாமல் இருக்கத் தந்திரங்களும் செய்யப் பட்டிருக்கின்றன. ஆகவே இந்த மாதிரியான சுயராஜியம் வருவதால் இந்தியாவின் பொதுமக்களாகிய 100க்கு 90 வீதமான மக்களுக்கு எந்த விதத்தில் மாறுதலோ, புதிய நன்மையோ இருக்கின்றது என்று கேட் கின்றோம்.

இன்றைய தினம் முதலாளி தன்மைக்கு மாத்திரம் உடையவர் களின் ஆதிக்கத்தில் இருக்கும் இந்தியாவானது, பூரண சுயேச்சைக் கிளர்ச்சியின் பயனாய் விடுபட்டு முதலாளித் தன்மையும் வருணாச்சிரம வைதீகத் தன்மை யும் உள்ள கூட்டத்தார் ஆதிக்கத்திற்கு உட்படுத்தப் படுவதாக இருக்கின்றதே தவிர வேறு எவ்வித நன்மையும் மாறுதலும் காணப்படுவதாய் இல்லை. முதலாளித் தன்மை அடியோடு அழிபட வேண்டும் என்பதில் நமக்கு ஒரு சிறிதும் ஆnக்ஷபனை கிடையாது. ஆனால் ஒன்றில் இருந்து விடுபட்டு, மறுபடியும் இரண்டிலும்போய் மாட்டிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியமான காரியமாகும். திரு. காந்தியவர்கள் தன்னை முதலாளி கூட்டத்தவர் அல்ல என்று சொல்லக்கூடுமானாலும் அவர் முதலாளி கூட்டத்தாருடைய தத்துப்புத்திரர் என்பதை ஒப்புக் கொண்டு தானாக வேண்டும். இரண்டாவதான வருணாச்சிரம வைதீக விஷயத்திலோ திரு. காந்தி அவர்கள்தானே அவைகளில் ஒரு உருவாக இருக்கின்றவர். ஆகவே முதலாளிகளின் தத்துபுத்திரரும், வருணாச்சிரம தர்மியும் இராம இராஜியத்தை விரும்பும் புராண மரியாதைக்காரரும், ஒரு சரியான “ஹிந்து” வுமான திரு. காந்தி அவர்கள் பயணத்தில் இதற்குமேல் நாம் வேறு என்ன எதிர்பாக்க முடியும்?

குடி அரசு – தலையங்கம் – 05.04.1931

You may also like...

Leave a Reply