ஸ்தல ஸ்தாபன அரசாங்கம் கவனிக்குமா?
ஸ்தல ஸ்தாபன புதிய சட்டப்படிக்கு தீண்டாதார், பெண்கள், சிறு வகுப்பார் முதலியவர்களுக்கு ஸ்தானங்கள் ஒதுக்கப்பட்டிருந்தும் அநேக ஸ்தலஸ்தாபனத் தலைவர்கள் அச்சட்டத்திற்கு சரியானபடி மரியாதை கொடுக்காமல் தாங்கள் ஏகபோக ஆதிக்கத்தின் மனப்பான்மையையே காட்டி இருக்கின்றார்கள் என்பதாக தெரியவருகின்றது. ஆகையால் அரசாங்கத்தார் இதுவிஷயத்தில் சற்று கவலை எடுத்து ஒவ்வொரு ஸ்தல ஸ்தாபனங்களிலும் சரியானபடி பெண்களுக்கும், தீண்டப்படாதார் என்பவர்களுக்கும் சரியான படி ஸ்தானங்கள் ஒதுக்கியிருக்கின்றதா என்று பார்த்தே முடிவு செய்ய வேண்டுமாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
மற்றொரு விஷயம்
லோக்கல் போர்டுகளில், தாலூக்கா போர்டுகள் பிரிக்கப்படுவதிலும் ஒவ்வொரு தாலூக்காவுக்கு ஒவ்வொரு போர்டு இருக்க வேண்டுமென்று சட்டத்தில் தெளிவாய் இருந்தும் சில இடங்களில் 2, 3 தாலூக்காக்கள் ஒரே போர்டாக இருந்து வருகின்றதாகத் தெரியவருகின்றது. ஆதலால் ஆங்காங் குள்ள பொதுஜனங்கள் இதைக் கவனித்துத் திருத்துப்பாடு செய்யாத வரை யில், கவர்ன்மெண்டாராவது கண்டிப்பாய் கவனித்து ஒவ்வொரு தாலூக்கா வுக்கு ஒவ்வொரு போர்டாக ஏற்படுத்துவதில் சற்று கண்டிப்பாய் இருக்க வேண்டுமென்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 29.03.1931