காரைக்குடியில் பார்ப்பனீயத் தாண்டவம் 144

காரைக்குடியில் சுயமரியாதைப் பிரசாரத்திற்கு எப்படியாவது இடை யூறு செய்யவேண்டுமென்று சில பார்ப்பன அதிகாரிகளும், பல வைதீகப் பணக்கார நாட்டுக் கோட்டையாரும் முயற்சி செய்துகொண்டுவரும் விஷயமாய் கொஞ்சநாளாக நமக்கு அடிக்கடி சேதி வந்து கொண்டிருந்தது.

“தோலைக் கடித்து, துருத்தியைக்கடித்து கடைசியாக வேட்டைக் குத் தயாராகிவிட்டது” என்ற பழமொழிபோல் எந்த எந்த விதத்திலோ தொல்லை விளைவித்தும், அது பயன் படாமல் போகவே இப்போது அதிகாரிகளின் மூலமாகவே ஏதோ ஒரு நொண்டிச்சாக்கை வைத்து உயர் திருவாளர்கள் சொ. முருகப்பா, அ. பொன்னம்பலனார், ப. சிவானந்தன் ஆகியவர்களுக்குக் காரைக்குடி முனிசிபல் எல்லைக்குள் எவ்விதக் கூட்டம் கூட்டவோ, பிரசங் கங்கள் புரியவோ கூடாதென்று 144 தடை உத்திரவு போட்டுத் தடுக்கப் பட்டி ருக்கின்றது. இது பின்னே வரப்போகும் இன்னும் கடினமான தொல்லைக்கு அரிகுறியென்றே கருதவேண்டியிருக்கின்றது. காரைக்குடியானது உண்மை யிலேயே பணக்கார ஆதிக்கமும், வைதீக ஆதிக்கமும் கொண்டது என்ப தற்கு அதன் முனிசிபாலிட்டியில் பெண்களுக்காவது மற்றும் தாழ்த்தப் பட்டவர்களுக்காவது, குறைந்த எண்ணிக்கையுள்ள சமூகத் தாருக்காவது யாதொரு பிரதிநிதி ஸ்தானமும் ஒதுக்காமல் தீர்மானம் செய்த ஏதேச்சாதிகார மனப்பான்மை ஒன்றே போதுமானதாகும். அப்படிப் பட்டவர்கள் ஆதிக்கத் தில் உள்ள அந்த நாடு சுயமரியாதையைப் பற்றியும், தீண்டாதவரின் சமத்து வத்தைப் பற்றியும், பெண்களின் உரிமையைப் பற்றியும் பேசுவது முனிசிபல் நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படு மென்று கருதி, அதிகாரிகளின் தயவைச் சம்பாதித்து 144 போடச் செய்ததில் நமக்கு ஆச்சரியமொன்றுமில்லை.

ஆனால் இந்த மாதிரி பணக்கார ஆதிக்க வாழ்வும், அதிகாரிகள் அவர்களுக்கு அடிமையாகி தலைவிரித்தாடும் பொருப்பற்ற அதிகாரவர்க்க ஆட்சியும் நமது நாட்டில் தாண்டவமாட இன்னும் விட்டுக் கொண்டிருப் பதுவே நமக்கு மிக ஆச்சரியமாகத் தோன்றுகிறது.

அதோடு நாட்டுப் போலீசாரின் யோக்கியதை நாம் அறிந்ததேயாகும். அதிலும் பார்ப்பனப் போலீசாரைப் பற்றியோ வென்றால் அறியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அதிலும் சுயமரியாதை இயக்கத்தைக் கண்டால் அவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை.

உதாரணமாக ஒரு குரங்கு கள்ளைக்குடித்து, அதைத் தேளும் கடித்து விட்டால் எப்படி அது தலை கால் தெரியாமல் கண்டதை யெல்லாம் கடிக்குமோ அது போலவேதான் நமது பார்ப்பனப் போலீசு நிர்வாகம் இருக்க முடியும். போராக் குறைக்கு இவர்களுடைய தயவை பைத்தியக்கார பணக் காரச் செட்டியார்மார்கள் எதிர்பார்த்து தூபம் போடுவதும் சேர்ந்து விட்டால் 144 உத்திரவு மாத்திரமல்லாமல் இன்னமும் என்ன வேண்டுமானாலும் செய்யப் பின் வாங்க மாட்டார்கள். இந்தக் காரியத்திற்குத் திருப்பத்தூர் டிவிஷனல் ஆபீசர் சம்மதித்துத் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததை நாம் கண்டிக்காமல் விட முடியவில்லை. ஆகையால், ராமநாதபுரம் ஜில்லா கலெக்டர் இதில் பிரவேசித்து உண்மை யை விசாரித்து, நீதியை வழங்க வேண்டியது அவருடைய கடமையென்ப தோடு, காரைக்குடியில் உள்ள பார்ப்பனீயப் போலீஸ் ஆதிக்கத்தை உடனே குறைக்க வேண்டிய காரியமும் செய்ய வேண்டுமாய் வலியுறுத்துகின்றோம். குட்டி குலைத்து பட்டி தலையில் விழாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது யோக்கியமான சர்க்கார் கடமை என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 08.03.1931

You may also like...

Leave a Reply