சிக்கனம் சிக்கனமா? வரி குறைப்பா?

 

 

உணவுப் பொருள்களின் விலை சுமார் 30 வருஷத்திற்குமுன் இருந்தது போலவும், சிலவற்றிற்கு அதைவிட மலிவாகவும் குறைந்து போய் சர்க்காரார் வரிகட்டுவதற்கு மார்க்கமில்லாமல் குடியானவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அதிகக்கஷ்டம் ஏற்பட்டு மக்கள் புழுவாய்த் துடித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், பொதுஜனத் தலைவர்கள் என்பவர்களும், தேசீயத் தலைவர்களென்பவர்களும், தேசீய ஸ்தாபனம் என்பவைகளும் சிறிதும் ஈவு, இரக்கம் யோக்கியப் பொறுப்பு இன்றி உத்தியோகங்கள் பெறவும், பெரும் பெரும் உத்தியோகங்களை சிருஷ்டிக்கவும் முயற்சிகள் செய்வதிலும், அவற்றிற்காகப் போட்டி போடுவதிலும் காலத்தைக் கழித்துக் கொண்டு வருவது இந்திய தேசத்திற்கே பெரிய மானக்கேடானதும், குடி களுக்கு அதிகக் கஷ்டம் கொடுக்கக் கூடியதுமான காரியமுமாகும் என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.

இந்தக் கொடுமையையும், அக்கிரமங்களையும் பொதுஜனங்கள் ஒருவாறு உணர்ந்து விட்டார்கள் என்பதை அறிந்த சர்க்காராரும், ஜனத் தலைவர் ஜனப்பிரதிநிதிகள் என்பவர்களும், பொது ஜனங்களை ஏமாற்ற சிக்கனம்-சிக்கனமென்ற பல்லவியைப் பாடிக்கொண்டு, ஒரு சிக்கன நாடகத்தை ஆரம்பித்து, பொது ஜனங்கள் கண்களில் மண்ணைப் போட முயற்சித்து வருகின்றார்கள்.

இதுவரை நடந்து வந்த எல்லாப் பித்தலாட்டங்களையும் விட இந்தச் சிக்கன நாடகப் பித்தலாட்டமானது மிகவும் மோசமான பித்தலாட்டம் என்றே சொல்லுவோம்.

ஏனெனில், சர்க்காரார் ஆங்காங்கு சிக்கனம் செய்வதற்காக ஏற்பாடு செய்யும் கமிட்டிக்கு பெரிதும் பெரும் பெரும் சம்பளம் வாங்கிப் பிழைக்கும் உத்தியோகஸ்தர்களையே நியமித்து இருக்கின்றார்கள். அவர்கள் சிக்கனத்தின் பேரால் கூடிக்கூடிப் பேசிவிட்டு 100-க்கு 3ரூ. 4ரூ. 6ரூ. குறைக்கலாம் என்று சொல்லிவிட்டு, பாக்கி போறாதததற்கு புதிய வரியைப் போடவேண்டியது தான் என்னும் முடிவுக்கு அனுகூலமாய் இருக்கப் போகின்றார்கள் என்பதில் நமக்குச் சந்தேகமே இல்லை.

இப்பொழுது தேசம் இருக்கும் நிலைமையில் முதலில் சிக்கனக் கமிட்டி ஏற்படுத்துவதைவிட வரிகொடுப்போரின் நிலைமையை நன்றாய் விசாரித்தறிந்து, அவர்களது தேவைக்குப் போக மீதி எவ்வளவு வரி கொடுக்கக்கூடும் என்பதைக் கண்டறிந்து வரியைக் குறைக்க வேண்டியதே முதல் வேலையாகும். பிறகு அந்த வரிவசூல் கணக்கைப் பார்த்து நிர்வாகச் செலவை ஏற்பாடு செய்ய வேண்டியதுதான் இரண்டாவது வேலையாக இருக்க வேண்டும். ஏனெனில் நிலவரி கொடுக்க சக்தி இல்லாமல் மக்கள் திண்டாடுகின்றார்கள்.

ஆனால், காங்கிரசும், தேசீயமும், ஜனப்பிரதிநிதித்துவமும் ஏற்பட்ட நாள் முதல் முதலில் செலவை நிர்மாணித்துக் கொண்டு பிறகு அதற்குத் தகுந்தபடி வரிபோடப்படுகின்றது. அதாவது செருப்புக்குத் தகுந்தபடி காலை வளர்க்கப்படுகின்றது. இதற்கு இராஜரீகம் என்றோ, நிர்வாகமென்றோ சொல்லுவதை விட (இராஜரீகத்தின் பேரால் அடிக்கப்படும்) பகற்கொள்ளை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கொள்ளை நாளாவட்டத்தில் ஜனப் பிரதிநிதிகள் என்பவர்கள் சம்மதத்தின் பேரில் போடப்பட்டே வந்திருப் பதால் பொது ஜனங்களும் இந்தக் கஷ்டங்களை உணராமல் முட்டாள் தனமாக வைத்த பாரத்தையெல்லாம் சுமந்து கொண்டே வந்திருக்கின் றார்கள்.

உதாரணமாகக் காங்கிரசு ஏற்படுவதற்குமுன் இந்த நாட்டு அதாவது இந்தியாவின் வரியெல்லாம் வெரும் ஐம்பது, அறுபது கோடி ரூபாயாக இருந்ததானது இப்போது 150,160 கோடி ரூபாய்க்கு மேலாகப் போய்விட்டது. இதனால் காங்கிரசு ஏற்படுவதற்கு முன் அன்னக்காவடிகளாய் பிச்சைக்காரக் குடும்பமாய் இருந்தவர்கள் மாதம் 1-க்கு 500, 1000, 4000, 5000 ரூபாய் வீதம் சம்பளம் பெறும்படியானவர்களாக யானார்களே யொழிய பொதுமக்கள் நிலைமை கஷ்டப்பட்டு உழுது பயிர் செய்பவர்கள் குடும்ப நிலைமை சிறிதும் உயர்த்தப்பட்டதாகத் தெரியவில்லை.

உழுது பயிர் செய்கின்றவனுடைய குடும்பத்திற்கு எவ்வளவு தேவையோ அதைவிட 10 மடங்கு முதல் 100 மடங்குவரை அதிகமாக நிர்வாக அதிகாரிகள், சிப்பந்திகள் என்கின்றவர்களுக்குத் தேவை ஏற்பட்டு அதற்குத் தக்கவிதமாக நிர்வாகச் செலவு அதிகப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதுபோலவே நிர்வாக உத்தியோகங்களும் அதிகப்படுத்தப்பட்டு வந்து விட்டது.

இந்திய மக்களின் மொத்த சராசரிவரும்படி ஆள் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு 0-1-7 என்று கணக்குக் கண்டுபிடித்த பிறகும் பொது ஜன சிப்பந்திகளுக்குக் கொள்ளை கொள்ளையாய் அதாவது, நாள் ஒன்றுக்கு 1-8-0 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை அள்ளிக் கொடுப்பதென்றால் இது எவ்வளவு கொடுங்கோன்மையான ஆக்ஷி என்பதையும், அயோக்கியத் தனமான ஜனப்பிரதிநிதித்துவம் என்பதையும் நாம் எடுத்து காட்ட வேண்டுமா? என்று கேட்கின்றோம்.

நாட்டின் நலத்திற்குப் படித்தவர்கள் என்பவர்கள் எப்பொழுது முதல் ஜனப்பிரதிநிதியாகக் கூடிய அக்கிரம நிலைமை ஏற்பட்டதோ அன்று முதலே பாட்டாளிகள் பணம் கொள்ளைபோக மார்க்கம் ஏற்பட்டுவிட்டது.

இந்த நிலைமையில் இனி இந்திய மக்கள் இவ்வளவு வரிகொடுப்ப தென்பது கண்டிப்பாய் முடியவே முடியாது. பகல் கொள்ளைக்குச் சமமான சுயராஜியப் புரட்டில் மக்கள் முட்டாள்தனமாகச் சிக்குண்டு வரிக்கஷ்டம் அனுபவிப்பதை விட வரிக் கொடுமையிலிருந்து தப்புவதற்கு முயற்சிப்பது தான் முதன்மையான வேலையாய்க் கருத வேண்டியிருக்கிறது.

ஆகவே, இனி கண்டிப்பாகப் படித்த கனவான்கள்-உத்தியோகத் திற்கு ஆசைப்படும் நபர்கள் ஜனப்பிரதிநிதிகளாவதை விடப் பாடுபடும் குடியானவர்களே பிரதிநிதிகளாகத் தகுந்த முயற்சி செய்ய வேண்டியதுதான் தேசீய வேலையாய்ச் செய்ய வேண்டியிருக்கின்றது. இந்த நிலைமை அடையாத இராஜரீகம் மக்களுக்கு இனி பெருத்த கஷ்டமாகத்தான் முடியும்.

நிற்க, இப்போதைய சிக்கனக் கமிட்டிகள் சென்னை, பம்பாய் முதலிய மாகாணங்களில் அந்தந்த மாகாண நிர்வாகத்திற்கு வசூலாகும் வரிப் பணத்தைக்கொண்டு சரிசெய்யும்படி ஏற்பாடு செய்யவே நியமிக்கப் பட்டும் அவர்களாலும் வரவு செலவு சரிக்கட்டமுடியாமல் கஷ்டப்படுவதாக தெரிய வருகின்றது. இதனால் அவர்கள் சிறிதும் நாணையமாய், யோக்கியமாய் வேலைச் செய்யவில்லை என்று தைரியமாய்ச் சொல்லுவோம்.

ஏனெனில், உத்தியோகங்களை குறைக்கும் வகையில் அவர்கள் சிறிதும் கவலை செலுத்தவே இல்லை. இப்போது சம்பளத்தைக் குறைப்பதை விட அனாவசிய உத்தியோகங்களைக் குறைத்தால் நிர்வாகத் திற்கு குறைவு படும் துகை சுலபத்தில் மீதியாகிவிடும். பிறகு சம்பளத்தைக் குறைத்தால் வரிப்பளுவை தாராளமாய்க் குறைத்து விடலாம்.

உத்தியோகங்களை குறைக்கும் விஷயத்தில் முதலாவது யாதொருக் கஷ்டமும் இல்லாமல் மந்திரிகளையும், நிர்வாகசபை அங்கத்தினர்களை யும், இப்போது இருப்பதில் பகுதி ஆக்கி விடலாம். ஏனெனில் இவர்கள் தங்களை ஜனப்பிரதிநிதிகளே யொழிய, சர்க்காரார் உத்தியோகஸ்தர்கள் அல்லவென்று சொல்லிக் கொள்ளுபவர்கள்.

ரெவினியூ போர்டு ஆபீசை அடியோடு எடுத்துவிடலாம்.

சிவில் இலாகாவிலோ ஹைகோர்ட் ஜட்ஜுகளில் பகுதியை குறைத்து விடலாம்.

சப் ஜட்ஜுகளையும், முன்சீபுகளையும் மூன்றில் இரண்டு பாகம் குறைத்து விடலாம். இல்லாவிட்டாலும் பகுதியைக் குறைத்துவிடுவதில் எவ்வித குந்தகமும் வராது. அதுபோலவே ரெவினியூ இலாகாவில் டெபுட்டி கலக்டர்கள் என்கின்ற உத்தியோகத்தையே அடியோடு எடுத்து விடலாம்.

டெபுட்டி கலக்டர் உத்தியோகம் வெரும் தபாலாபீசு போலவேதான் இருந்து வருகின்றது. இவர்களுக்கு ஆதியில் இருந்த வேலைகள் எல்லாம் குறைந்தும், சில அடியோடு எடுபட்டும் போய்விட்டன.

  1. இன்கம்டாக்ஸ் வேலை இல்லை.
  2. ஸ்தல ஸ்தாபன மேல் பார்வை வேலை இல்லை.
  3. ரெவின்யூ வேலை மிகமிகக்குறைந்து விட்டது. தாசில்தார் இடம் இருந்த மேஜிஸ்ட்ரேட் வேலை எடுபட்டு போனதால், அவரே எல்லா வேலையும் பார்க்கிறார்.
  4. பெஞ்சு கோர்ட்டுகள் ஏற்பட்டுவிட்டதால் கிரிமினல் வேலையும், அப்பீல் வேலையும் 100-க்கு 80பாகம் குறைந்து விட்டது. மீதியிருப்பதற் கும் இப்போது தாசில்தாருக்கு முதல் வகுப்பு மேஜிஸ்ட்ரேட் பவர் இருப்ப தால் அவர் பார்த்துக் கொள்ளக்கூடும்.

இன்னும் மற்ற இலாகாக்கள் வேலையும், அதாவது சிவாஜிநாமா என்குரோச்மெண்டு முதலிய வேலைகள் கீழ் அதிகாரிகள் மூலமே முடிவு செய்யப்பட்டு கடைசி உத்திரவுக்குத்தான் டெபுட்டி கலக்டர் ஆபீசு முத்திரை போட்டு ஜில்லா கலக்டருக்கு அனுப்பப்படுகின்றது. டெபுட்டி கலக்ட் டருக்கு என்று யாதொரு அசல் (டிசபைiயேட) வேலையும் கிடையாது. ஆகவே இந்த உத்தியோகத்தை எடுத்து விட்டு கலக்டருக்கு இன்னமும் ஒரு பெர்ச னல் அசிஸ்டெண்ட் அதுவும் ஒரு தாசில்தார் யோக்கியதையில் உள்ளவ ராய் வைத்து விட்டால் இதன் மூலம் அதாவது டெபுட்டி கலக்டர்கள் எடுத்து விடுவதும் அவர்கள் ஆபீசு எடுத்து விடுவதும் ஆகிய வகையில் வருஷம் 1-க்கு 3500000 முப்பத்தி ஐந்து லக்ஷ ரூபாய் மீதியாகக்கூடும்.

பொது ஜனங்களுக்கும் இந்த இலாகாவுக்கு என்று கொடுக்கப்படும் லஞ்சம், சப்ளை வக்கீல் பீசு, பிச்சைக்காசு முதலிய செலவு தொல்லைகள் ஒழியும்.

போலீசு

இதுபோலவே போலீசு இலாகாவிலும், டிப்டி சூப்ரெண்டு என்கின்ற ஒரு சிறிதும் உபயோகமும், பயனுமற்ற உத்தியோகம் எடுபட்டு விடத் தகுந்ததாகும். அதற்கும் யாதொரு அசல் வேலையும் கிடையாது.

  1. போலீசுகாரர்.
  2. ஏட்டு.
  3. சப் இன்ஸ்பெக்டர்.
  4. சர்க்கிள் இன்ஸ்பெக்டர்.
  5. டிப்டி சூப்ரெண்டு.
  6. ஜில்லா சூப்ரெண்டு.
  7. டிப்டி இன்ஸ்பெக்டர் ஜனரல்.
  8. இன்ஸ்பெக்டர் ஜனரல்.
  9. கவர்ன்மெண்ட்.(போலீசுபோர்ட்போலியோ)நிர்வாகசபை மெம்பர்.

இந்த மாதிரி ஒவ்வொரு இலாகாவுக்கு ஒன்பது படிகள் இருக்கின் றன. இதை கவனித்துப் பார்த்தால் நாளைக்கே டிப்டி சூப்ரெண்டுகளை எடுத்து விட்டாலும் எவ்வித ஆபத்தும் வந்து விடாது. இதுவும் அநேகமாய் ஒரு தபாலாபீசே யொழியே வேறில்லை. ஆகவே இதை எடுப்பதின் மூலம் இந்த இலாகாவிலும் வருஷம் ஒன்றுக்கு சுமார் பத்து லக்ஷ ரூபாயுக்கு குறையாமல் மிகுதிப்படுத்தலாம். இப்படியே கலால் இலாகா முதலிய அநேக இலாகாக்களில் இலாகா ஒன்றுக்கு ஒருபடியை மாத்திரம் எடுத்து அதை மேல் கீழ்படிகளுக்கு பங்கிட்டு அமைத்து விட்டால் கோடிக்கணக்கான ரூபாய்கள் மீதப் படுத்தப்பட்டு வரிசெலுத்து வோருக்கு உதவியும், நன்மையும் செய்யலாம். முக்கியமாக கல்வி இலாகாவும் மிகுதியும் திருத்தி அமைப்பதின் மூலம் எவ்வளவோ பணத்தை மீதம் செய்து கல்வியை இப்போதையைவிடப் பல மடங்கு அதிகமான நன்மையும் பயனும் படக்கூடியதாகச் செய்யலாம். கல்வி அதிகாரிகளுக் குக் கொடுக்கும் சம்பளம் கொள்ளை கொள்ளை என்றே சொல்லவேண்டும். அதிகாரிகள் எண்ணிக்கையும் அதிகம். அது போலவே உபாத்தியாயர்கள் சம்பளம் இரட்டிப்புக் கொள்ளை என்றுதான் சொல்லுவோம்.

அவசியமான கீழ்தரப் படிப்புச் சொல்லிக்கொடுக்கும் உபாத்தியா யருக்கு 15, 20, 25 ரூபாய் சம்பளம் கொடுத்துவிட்டு, மத்திய தரப்படிப்பு, மேல்தரப் படிப்பு, கலாசாலைப் படிப்பு என்பவற்றிற்கு 70, 80 முதல் 1000 ரூபாய் வரை கொடுப்பது என்றால் இது தீவத்திக் கொள்ளையா? அல்லவா? என்று கேட்கின்றோம்.

உபாத்தியாயர்களுக்கு இந்தச் சம்பளம் கொடுப்பதால் பிள்ளை களின் பெற்றோர்களிடம் அதிகச் சம்பளம் வாங்க வேண்டியிருக்கிறது. அதனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடிவதில்லை.

இப்படி எல்லாம் இருந்தும், இன்று பி.ஏ. எல்.டி. பாசு செய்தவன், உபாத்தியாயருக்குத் தகுதியானவன், 40 ரூபாய் சம்பளத்திற்கும், எம்.ஏ பாசு செய்தவன் 35 ரூபாய் சம்பளத்திற்கும் வரக் கெஞ்சுகின்றான். இப்படியிருக்க இவர்களுக்கு 100, 200, 500, 1000 என்பது எவ்வளவு அக்கிரமமானதும் மக்களைப் படிக்கவிடாமல் தடுப்பதுமானதுமான காரியம் என்பதை யோசித்தால் விளங்காமல் போகாது.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் சர்க்காரார்நிர்வாக அதிகாரிகளுக்கு மாதம் 1000 ரூபாய் சம்பளத்திற்கு மேல் போகக்கூடாது என்று சுயமரியாதை மகாநாடு தீர்மானித்துக்கூட இப்போது அதிகம் என்று தோன்றும்படியாக நாட்டின் நிலைமை அதாவது, உணவுப் பொருள்கள், ஆடைப்பொருள்கள் விலை மிகவும் மலிந்து விட்டது.                     ஆகவே சம்பளத் திட்டத்தில் மனிதன் தேவையை நிர்ணயிக்கும்போது பொது ஜனங்களின் நிலைமை அதாவது 100க்கு 75பேர்கள் இருக்கும் நிலைமை அனுபவிக்கும் சௌகரிய நிலைமை ஆகியவைகளைப் பார்த்தேதான் நிர்வாகஸ்தர்களை நிர்ணயித்து சம்பளத் திட்டம் போடப்பட வேண்டுமே தவிர கனவு காண்கின்ற நிலைமையை யுத்தேசித்து இந்திய மக்களில் 1000க்கு ஒருவன் கூட அனுபவிக்கச் சாத்திய மில்லாத நிலைமைப்படி சம்பளம் போடுவது என்பது யோக்கியமான இராஜரீகமாகாது.

கடைசியாக ஸ்தலஸ்தாபனங்களிலும், ஜனங்கள் வரிகொடுக்கச் சக்தி இல்லாமல் கஷ்டப்படுகின்றார்கள். ஸ்தலஸ்தாபனப் பணமெல்லாம் சிப்பந்திகளும், கன்றாக்டர்களுமே கொள்ளை கொண்டு கல்வி, சுகாதாரம், போக்குவரத்து வசதி முதலிய காரியங்களுக்குப் பணம் போறாமல் திண்டாட வேண்டி இருக்கின்றது. அவைகள் செய்ய வேண்டிய அளவும் செய்ய முடியாமல் இருக்கின்றன.

ஆகவே இந்தப்படி வரியும் பளுவாகவும், சரியான பலனும் இல்லா மலும் போனதற்குக் காரணம் அந்த ஸ்தாபனங்கள் ‘பொதுஜனப் பிரதி நிதிகள்’ என்பவர்கள் கைக்கு வந்ததேயாகும்.

அவர்களுக்குக் கண்டிப்பாய் பொறுப்பே கிடையாது. 100க்கு 90பேர்கள் கொள்ளையடிப்பவர்களும், கூட்டுக்கொள்ளைக்காரருமேயா வார்கள். சிலர் அனுபவ ஞானமற்றவர்களும், அன்னியர் கை ஆயுதங்               களுமாயிருப்பவர்களுமாவார்கள்.

இவர்களால் ஏற்படும் வீண்செலவு, தாக்ஷணியச் செலவு ஆகியவை களைக் கழித்துப் பார்த்தாலே 100க்கு 25 வீதம் வரியையும் குறைத்து நல்ல வேலையையும் செய்யலாம். தனிக் கொள்ளையும், கூட்டுக்கொள்ளையும் எடுபட்டால் 100 க்கு 50 வீதம் வரி குறைக்கலாம். ஆகவே ஸ்தல ஸ்தாபன தற்கால சுயாக்ஷி முறையை எடுத்துவிட்டு, நிர்வாக அதிகாரி ஒருவரை ஒவ்வொரு ஸ்தல ஸ்தாபனத்திற்கும் போட்டு, வேண்டுமானால் அவர்களுக்கு ஆலோசனை சபை ஏற்படுத்தி நிர்வாக முறையை மாற்றி னால் அதிலும் எவ்வளவோ பணம் மீதியாகி மக்களுக்குப் பலன் அதிக முண்டாகும். இந்தக் காரியங்கள் செய்ய வெள்ளைக்காரர்கள் முட்டுக் கட்டையாக இருக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது. இந்தியர்கள், இந்தியப் பிரதிநிதிகள், இந்திய தேசீயவாதிகள், இந்திய பூரண சுயேச்சை வாதிகள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்கள் உண்மையானவர்களாக வும், யோக்கியமானவர்களாகவும் இருந்தாலுமே போதும். பிறகு வெள்ளைக் காரர்களைப் பார்த்து நாம் “போடு கரணம்” என்றால் அவர்கள் “எண்ணிக் கொள் போடுகின்றேன்” என்று சொல்லுவார்கள். இப்படிக்கில் லாமல் இப்பொழுது சிக்கனம், சிக்கனம் என்றுபேசுவதெல்லாம் நமது படித்த மக்கள், “தேசீய” மக்கள் கொள்ளையடிப்பதைக் காப்பாற்றவும், வெள்ளைக்காரன் மேல் மாத்திரம் பழி சொல்லி தப்பித்துக் கொள்ளவும் செய்யும் சூக்ஷியே தவிர வேறில்லை.

ஆகவே ஒவ்வொரு மாகாணங்களிலும் அடுத்த சட்டசபை கூடும் கூட்டங்களில் ‘சர்க்காரார் நிர்வாகத்தில் ஒரு வெள்ளைக்கார நிர்வாக சபை மெம்பரையும், ஒரு இந்திய நிர்வாக சபை மெம்பரையும், 2 மந்திரிகளையும் தேவையில்லை’ என்று தீர்மானம் கொண்டு வருவதுடன், ‘மீதி இருக்கும் நிர்வாக மெம்பர் சம்பளமும், மந்திரி சம்பளமும் தாராளமாய் குறைக்கப்பட வேண்டும்’ என்றும் தீர்மானங்களும் கொண்டு வந்தார்களேயானால் பொதுஜனப் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ள அருகதையாவார்கள். பிறகு மற்ற பெரிய சம்பளக்காரர்கள் இந்த வருஷத்திலேயே 100க்கு 50 வீதம் தானாகவே குறைத்துக் கொள்ள வருவார்கள். அதில்லாமல் மற்ற சம்பளங்களில் ஒரு காசு குறைத்தாலும் ஒரு உத்தியோகம் எடுத்தாலும் அது வஞ்சகமும், வஞ்சனையுமாகவுமே கருதப்படும்.

ஏனெனில், கீழ்தர சம்பளக்காரர்கள் தங்களுக்கு சம்பளம் போத வில்லை என்று சொல்லுவதின் காரணமே இதர சிப்பந்திகள், நிர்வாக அதி காரிகள் ஆகியவர்கள் சம்பளங்களைப் பார்த்தே யொழிய ‘சாப்பாட்டுக்குப் போதவில்லை, துணிக்குப் போத வில்லையென்றல்ல’ என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன் இதை முடிக் கின்றோம்.

மற்றபடி நிர்வாக முறையையும், சம்பளத் திட்டத்தையும் சர்க்காரார் நிலவரித் திட்டத்தையும் பற்றி மற்றொரு சமயம் நமது அபிப்பிராயத்தை வெளியிடுவோம்.

குடி அரசு – தலையங்கம் – 02.08.1931

You may also like...

Leave a Reply