இன்னுமென்ன சந்தேகம்?
“பிராமணா! உன் வாக்குப் பலித்தது!”
ஒரு பார்ப்பனன் தன் பெண் ஜாதியின் நடத்தையில் சந்தேகங் கொண்டு அடிக்கடி அந்தம்மாளை “விபசாரி, விபசாரி” என்று கூறிக் கொண்டே வந்தான்.
ஆனால் அந்தம்மாள் தன் புருஷனின் சந்தேகத்திற்கிடமான காரியங்களுக்கெல்லாம் அவ்வப்போது பல சாக்குப் போக்குகள் சொல்லி புருஷனை அடக்கிக்கொண்டே வந்தாள்.
இப்படி இருக்கையில், அந்த பார்ப்பான் தன் மனைவி அன்னிய புருஷனிடம் சம்பந்தப்பட்டுக் கொண்டிருக்கையில் ஒரு நாள் கைப் பிடியாய் பிடித்துவிட்டான். அப்பொழுது அந்த அம்மாள் வேறு எவ்வித சாக்குப்போக்கும், சமாதானமும் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டதால் “பிராமணா! உன் வாக்குப் பலித்து விட்டது!! அதற்கு நான் என்ன செய்யட்டும்?”என்று பதில் சொல்லி மறுபடியும் புருஷன் மீதே குற்றத்தைச் சுமத்தினாள்.
அதாவது, புருஷனைப் பார்த்து “நீ அடிக்கடி என்னை விபசாரி, விபசாரிஎன்று உன் வாயால் சொல்லிக்கொண்டே வந்ததாலல்லவா (பிராமணன் வாக்கு பொய்க்காது, அது எப்படியும் பலித்துவிடும்) என்று சாஸ்திரங்களில் சொல்லி இருக்கின்றபடி நீர் பரிசுத்தமான பிராமணரான தால் உமது வாக்குப் பலித்துவிட்டது. உமது வாக்குப் பலிப்பதற்காகவே இந்தப்படி கடவுள் செயலால் ஏற்பட்டு விட்டது. அதற்கு நான் என்ன செய் வேன்? நீர் ஏன் என்னை அப்படிச் சொன்னீர்?” என்பதாகச் சொன்னாளாம்!
அதேபோல் காங்கிரஸ் காரியக்கமிட்டியும், திரு காந்தியும் சேர்ந்து 12-7-31 ² செய்த பிரஜா உரிமை தீர்மானமானது நாம் காங்கிரசையும் அதன் தலைவர்கள் என்பவர்களையும் பற்றி, அவர்கள் எப்படிப்பட்ட அபிப் பிராயக்காரர்கள் என்று குற்றம் சொல்லி வந்தோமோ, அதே அபிப்பிராயம் இனி வேறு யாரும் வேறு எவ்வித வியாக்கியானமும், தத்துவார்த்தமும் செய்ய முடியாதபடி நன்றாய் வெளிப்படையாய் அழுத்தந்திருத்தமாய் சொல்லப்பட்டு விட்டது.
அது என்ன வென்றால்,
அரசியல் சட்டத்தில் ஜனங்களுடைய ஜீவாதாரமான உரிமை என்பது பற்றிய, விதிப்பிரிவுகளில் “இந்தியாவில் உள்ள சகல சமூகத்தாருக் கும், “அவர்களது கலைகள், சமூக நாகரீகங்கள், பாஷைகள், எழுத்துக்கள், தொழில்கள், பழக்கவழக்கங்கள், மதம், மத தர்மங்கள் ஆகியவை காப்பாற் றப்படும்” என்பதாக ஒரு உத்திரவாதம் அதாவது ஜாமீன் கொடுக்கப்படும் என்கின்ற நிபந்தனையும் சேர்க்கப்படும் என்பதாகத் தீர்மானித்திருக் கின்றார்கள். மற்றும், “ஒவ்வொரு சமூக உரிமைகளைப்பற்றிய சட்டங்களும் காக்கப்படும்”என்பதாகவும் “ஒவ்வொரு மாகாணங்களிலுள்ள சிறு பான்மை வகுப்புகளின் உரிமைகளின் அரசியல் உரிமை, மற்றும் இதர உரிமைகள் ஆகியவை காப்பாற்றப்படும் நிபந்தனையானது அரசாங்கத் தின் ஆதிக்கத்திற்குள் இருக்கும்” என்பதாகவும் தீர்மானித்து இருக்கின் றார்கள். இது அசோசியேட் பிரஸ் சேதியாகும்.
மற்றும் 13-ந்தேதி வெளியான எல்லாத் தினசரிகளிலும் காணப் படுவதுமாகும்.
அன்றியும், இத்தீர்மானங்களை ஆங்கிலத்தில் உள்ளபடியே மற் றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டு மிருக்கின்றன. ஆகவே, வாசகர்களுக்கு இவ் விஷயத்தில் இன்னுமென்ன சந்தேகம் இருக்கக் கூடும்? என்பது நமக்கு விளங்கவில்லை.
“கராச்சிக் காங்கிரசில் சமதர்மக் கொள்கை ஏற்பட்டு விட்டது” என்று வாய்த் தப்பட்டை அடித்ததெல்லாம் சுத்த “ஹம்பக்” என்பதாகவோ, அல்லது அது அதனுடைய உண்மை அர்த்தத்தை அறிந்துகொள்ள முடியாத மக்களின் கூற்று என்பதாகவோ இப்போது யாவருக்கும் நன்றாய் விளங்கி இருக்குமென்றே கருதுகின்றோம். ஏனெனில், ஒவ்வொரு வகுப்பாருடைய, அதாவது இந்தியாவில் எத்தனை சமயத்தார், வகுப்பார் உண்டோ அத்தனை வகுப்பாருடைய உரிமைகளையும் பொருத்த கலை ஆதாரங்கள், அதாவது வேதசாஸ்திர புராணங்கள், அவர்களது பாஷைகள், பாஷை எழுத்துக்கள், வகுப்பு கல்விகள், வகுப்பு தொழில்கள், அந்தந்த வகுப்பு பழக்க வழக்கத்தில் இருந்துவரும் நடவடிக்கைகள், ஒவ்வொரு வகுப்பாருடைய மதங்கள், அதாவது சமயம், உட்சமயம், புறச்சமயம், அந்தந்த மததர்மங்கள், அதாவது கோவில், கோவில்சொத்து, மடம், மடங் களின் சொத்துக்கள், மததர்மமான மற்ற காரியங்கள் செய்வதற்கு விடப் பட்டிருக்கும் தர்ம சொத்துக்கள் ஆகியவைகள் எல்லாம் காக்கப்படும் என்பதாக காங்கிரஸ் உறுதிகூறி இருப்பதோடு உத்திரவாதமுமேற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆகவே, இது சமதர்மக் கொள்கையாகுமா? அல்லது சுயமரியாதைக் கொள்கையாகுமா? அல்லது நவஜவான் பாரதசபைக் கொள்கையாகுமா? அல்லது போல்ஸ்விக் கொள்கையாகுமா? என்பதை நம்நாட்டு வாலிபர் களை யோசித்துப் பார்க்கும்படி விரும்புகின்றோம். இந்த மாதிரியான சுய ராஜியம் ஏற்படுவதற்காக வெள்ளைக்காரன் இருக்கும் அரசியல் அதிகாரத் தைப் பறித்து இந்த மாதிரிஉத்திரவாதம் ஏற்றுக்கொண்ட காங்கிரசுக் காரரி டமும் “மகாத்மா” இடமும் திரு ஜவஹர்லால் இடமும் ஒப்படைக்கலாமா? என்று நிதானமாய் யோசித்துப் பாருங்கள் என்று மறுபடியும் நினைப்பூட்டு கின்றோம். மற்றும் பார்ப்பனரல்லாத காங்கிரஸ் பக்தர்களே!இந்த உத்திரவாத மானது காரியக்கமிட்டிக்கு உயர்திருவாளர்கள் சி.ராஜகோபாலாச்சாரியார், பண்டித மாளவியா ஆகிய “பிராம்மணோத் தமர்”களால் கொண்டுவரப் பட்டு ஏகமனதாய்த் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது என்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதையும் உணருங்கள் என்றே சொல்லு கின்றோம். உலகில் வயிறு வளர்ப்பதேதான் பிரதானமான காரியம் என்று கருதி இருப்போமேயானால், மனித உருவாய் பிறந்ததற்கு வருத்தப்பட வேண்டியது தான் என்பதே நமது அபிப்பிராயம். மற்றபடி சுயமரியாதை யே பிரதானமானது என்று கருதுகின்றவர்களுக்குத் தான் மனிதனாய்ப் பிறந்ததைப்பற்றி சில சமயங்களிலாவது மகிழ்ச்சி யடைய இடமுண்டு என்று சொல்லலாம். நிற்க,
பம்பாய் காரியக்கமிட்டியின் உத்தரவாத தீர்மானத்தைக்கொண்டு காங்கிரசின் உண்மையான தன்மையை ஒரு வரியில் கூறவேண்டுமானால் “காங்கிரஸ் என்பது சுயமரியாதைக் கொள்கைக்கு நேர்மாறான முரண்பட்ட ஸ்தாபனம்” என்று சொல்லுவதை விட வேறு என்ன சொல்ல முடியும்? என்று அறிவும், நாணையமும், மானமும் உள்ள மக்களை யோசித்துப்பார்க்கும்படி வேண்டுகின்றோம். நிற்க,
காரியக்கமிட்டியின் இந்த உத்திரவாத தீர்மானத்தைப்பற்றி தேசியப் பத்திரிகை என்று சொல்லிக்கொண்டு இருக்கும் “தமிழ்நாடு” பத்திரிகை 13 ² தனது உபதலையங்கத்தில் எழுதி இருப்பதையும் இந்தச்சமயத்தில் குறிப்பிடுகின்றோம். இந்த உப தலையங்கத்தின் ஒவ்வொரு எழுத்தும் வெகு நடுக்கத்துடன் எழுதப்பட்டிருந்தாலும் கூட அதில் உண்மை ஒருவாறு வெளியாகியே விட்டது.
அதாவது:-
“இந்திய தேசிய காங்கிரசுக்கு தலைகுனியும்படியான காலம் வந்ததைக் குறித்து நாம் மிகவும் துக்கப்படுகின்றோம்”.
“காங்கிரசின் தேசீய லக்ஷியம் இப்போது பின்னடையும்படி நேர்ந்து விட்டது”.
“பிரதி வகுப்பாரின் பாஷை, எழுத்து, கல்வி, ஆசார அனுஷ் டானம், மதம், தர்ம சொத்துக்கள் ஆகிய விஷயங்களுக்குத் தக்க பாதுகாப்பளிப்பதாக (காங்கிரஸ்) காரியக்கமிட்டி கூறுவதின் கருத்து நமக்கு விளங்கவில்லை”.
“மற்ற மக்களுடைய பிரஜா உரிமை, சுயமரியாதை, மனிதத் தன்மை ஆகியவற்றிற்குப் பங்கம் விளைவிக்காத வரையில் பிரதி மனிதனுடைய மதம், ஆச்சாரம், அனுஷ்டானம் பாதுகாக்கப்படும் என்று காரியக்கமிட்டி கூறி இருந்தால் அதன் பொருள் தெளிவாக ஏற்பட்டிருக்கும்” இந்தியாவின் சமதருமத்தை நிலைநிறுத்துவதற்கு காரியக்கமிட்டியின் முடிவு முட்டுக்கட்டையாக அமையுமென்று அஞ்சுகின்றோம்”.
என்பதாகக் குறிப்பிட்டு இருக்கின்றது.
இவை எப்படி இருந்தபோதிலும் “இன்றையதினம் இந்த நாட்டில் இருந்துவரும் ஜாதிமத பேதங்களும், ஆச்சார அனுஷ்டானங்களும், மதங் களும், மத தர்ம சொத்துக்களும் காப்பாற்றுவதற்காக நமக்கு சுயராஜியம் வேண்டும் என்ற கருத்தின் மீது தான் இன்றைய “தேசீயக் கிளர்ச்சி” நம் நாட்டில் நடைபெற்று வருகின்றது என்று சொன்னவர்களின் வார்த்தைகளில் எந்த எழுத்தாவது தப்பிதமானது என்று இதிலிருந்து யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம்.
அன்றியும், காங்கிரஸ் கூட்டத்தில் இத்தனை காலம் பிரஸ்தாபிக்கப் படாத ஒரு புதிய விஷயமும் இந்த ஜவாப்தாரிதீர்மானத்தில் சேர்க்கப்பட்டு விட்டது கவனிக்கத்தக்கதாகும். அதாவது பழக்க வழக்கம், தொழில், மத தர்ம சொத்துக்கள் ஆகியவைகளும் காப்பாற்றப்படும் என்பதோடு, அதற்கு ஜவாப்தாரித்தனமும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பதாகும்.
ஆகவே, இனிமேல் இந்தியாவைக் காங்கிரஸ் பார்ப்பனீய சுயராஜிய மாக்க இனிசெய்ய வேண்டிய வேலை எது பாக்கி? என்பதாக நமக்கு விளங்கவில்லை. இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்தால், காங்கிரசும், காந்தி கோஷ்டியும் இப்பொழுது உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சமதர்ம-பொதுவுடைமை உணர்ச்சியை அழிக்க பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு சேர்ந்து கொண்டு பாமர மக்களுக்குச் செய்யும் சதியும், துரோகமும் அல்லவா என்று யோசித்துப் பார்க்கும்படி பொது மக்களை வேண்டிக் கொள்ளுகின்றோம். இந்த உண்மையை உணர்ந்துதானே ருஷிய சம தர்மக்காரர்கள் “காங்கிரஸ் பொது ஜனங்களுக்கு துரோகமான”தென்றும், “காந்தி பொதுஜன துரோகி” யென்றும் தைரியமாய்ப் பிரசாரம் செய்து வருகின்றார்கள். அன்றியும் மாஸ்கோவில் இருந்து வந்த சேதி ஒன்று “தமிழ்நாடு” வில் பிரசுரித்திருக் கின்றபடி “ருஷியாவில் “இந்தியா” என்பதாக ஒரு நாடகம் ஆடப்படுவதாகவும், அதில் பிரிட்டிஷ் ஆட்சி கொடுங்கோண்மையானதென்றும், காந்தி பொதுஜனங்களை தப்பான வழியில் ஏமாற்றி நடத்திக்கொண்டு போகின்றவர் என்றும் கருத்துவைத்துச் சரித்திரம் எழுதி நாடகம் நடைபெறுகின்றதென்பதாக குறிப்பிடப்பட்டி ருக்கின்றது.
இவற்றை யெல்லாம் பார்த்த பிறகும், நன்றாய் உணர்ந்த பிறகும், இனியும் சுயமரியாதைக்காரர்கள் காங்கிரசைப்பற்றி சிறிதுகூட தாட்சண்யம் பார்க்கவேண்டியதில்லை என்பதாகவும், அது ஒரு பெரிய ஜன சமூகத் துரோக சபையாகவும், தாழ்த்தப்பட்ட ஏழை மக்களை ஏமாற்றிக் கழுத்தறுக் கும் வஞ்சக சபையாகவும் இருக்கின்ற உண்மையைப் பொது ஜனங்களுக் குப் படும்படி விளக்க வேண்டியதையே முக்கிய கடமையாகக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது என்றும் தெரிவித்துக் கொள்ளு கின்றோம். இந்தக் கடமைக்கு யாரும் பயப்படுவது சிறிதும் மனிதத்தன்மை யாகா தென்றே தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இதற்காக நாம் யாரையும் காங்கிரஸ் கூட்டத்தில் கலகம் செய்யும் படியாகச் சொல்லவில்லை. அது மிகவும் தப்பானதும், பயங்காளித்தன மானதுமான காரியமாகும். ஆதலால் ஒவ்வொரு இடங்களிலும் இதற் கென்றே தனிக்கூட்டம் கூட்டியே பேசவேண்டுமென்று வலியுறுத்திச் சொல்லுகின்றோம்.
அப்படிப்பட்ட கூட்டத்தில் காங்கிரசுக்காரர்கள் குழப்பம் செய்தால் அதற்காக யாரும் பின் வாங்க வேண்டியதில்லை. அதன் மூலமாகவே காங் கிரசு என்பது “காலித்தனமும் உடையது”என்பதை ருஜுப்பிக்க ஒரு சந்தர்ப்பம் கூடப் பெறலாம். ஆகையால் அதற்குப் பயப்படவேண்டிய தில்லை. ஆனால், “சுயமரியாதைக்காரர்கள் என்ன செய்து விட்டார்கள்?” என்று கேட்டால், “காங்கிரசின் புரட்டை வெளிப்படுத்திக் கொண்டிருக் கின்றார்கள்” என்று சொல்லிவிடும் பதிலே அதற்குப் போதுமான பதிலாகும்.
ஏனெனில், சுயமரியாதைக் கொள்கைகளுக்கு நேர்மாறான கொள்கைகளேதான் பெரிதும் காங்கிரசில் இருப்பதை மனதார உணர்ந்தும் “சுயமரியாதையும் காங்கிரஸ் கொள்கையும் ஒன்று தான்” என்று சிலர் விஷமப்பிரசாரம் செய்வதால் அதை ஜனங்கள் அறியும்படி செய்வதன் மூலமே சுயமரியாதைக் கொள்கைகளை எடுத்துச் சொல்ல வசதி ஏற்படு கின்றது. எனவே இந்த சமயத்தில் அலட்சியமாய் இருக்கக்கூடாது என்று தெரிவித்துக் கொண்டு இதை முடிக்கின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 19.07.1931