கழகத்தினருடன் தொல்.திருமா
சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பெரியார் பிறந்த நாள் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தோழர்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்றனர். இராயப்பேட்டை பெரியார் பயிலகத்தில் மாலை அணிவிக்கப் பட்டது. அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாகச் சென்று அண்ணாசாலை – தியாகராயர் நகர் – ஆலந்தூர் – பெரியார் சிலைகளுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன. அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் தோழர்களோடு கலந்து கொண்டார். பெசன்ட் நகரில் புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர். கழகக் கொடி ஏற்றி கழகப் பெயர்ப் பலகையை கழகத் தலைவர் திறந்து வைத்தார். அங்கிருந்து வாகனப் பேரணி மந்தைவெளியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அங்கிருந்து வடசென்னை நோக்கி வாகனப் பேரணி புறப்பட்டது. புதுவண்ணையில் கழகக் கொடி ஏற்றி, பெரியார் பெருந்தொண்டர் பலராமன் நினைவு அரங்க வாயிலிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அங்கிருந்து புறப்பட்டு திருவொற்றியூரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பிரபா கணினி மய்யத்தின் உரிமையாளர் முத்துக் குமார் அனைவருக்கும் மதிய உணவளித்தார்.
திருவல்லிக்கேணிப் பகுதியில் துலுக்காணம் தோட்டம் பெரியார் படிப்பகத் தோழர்கள் பிறந்த நாள் கேக் வெட்டினர். காலை 9 மணியளவில் தொடங்கிய வாகனப் பேரணி, மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பேரணியில் பங்கேற்ற காட்சி எழுச்சி மயமாக இருந்தது. மாவட்டச் செயலாளர் உமாபதி, மாவட்ட அமைப்பாளர் சு. பிரகாசு ஆகியோர்முன்னின்று சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாவட்ட தலைவர் வேழவேந்தன், மாவட்ட பொருளாளர் ஜான்மண்டேலா, மாவட்ட துணை செயலாளர் சுகுமார், வடசென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் ஏசு, தெட்சிணாமூர்த்தி, துரை, இளைஞரணி பொறுப்பாளர்கள் நாத்திகன், செந்தில், அருண், தலைமைக் கழக செயலாளர் தபசி. குமரன், அன்பு தனசேகர், வழக்கறிஞர் அருண், திருமூர்த்தி ஆகியோரும் பங்கேற்றனர்.