பெரியாரும் தமிழ்த் தேசியமும்
பெரியாரின் 136ஆவது பிறந்த நாளையொட்டி ‘இளந்தமிழகம்’ இயக்கம், ‘பெரியாரும் தமிழ்த் தேசியமும்’ என்ற தலைப்பில் சென்னையில் நடத்திய கருத்தரங்கில் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு ‘பெரியாரும் தமிழ்த் தேசியமும்’ என்ற தலைப்பில் நூலாக வெளி வந்திருக்கிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழேந்தி, தியாகு, செந்தில் ஆகியோர் கருத்தாழமிக்க உரைகளும், அவையில் எழுப்பிய வினாக்களுக்கு அளிக்கப்பட்ட விடைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. பெரியார் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு தெளிவான பதில்களை முன் வைக்கும் கருத்துப் பெட்டகமாக நூல் வெளி வந்திருக்கிறது. நூலின் நோக்கத்தை இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் செந்தில் கீழ்க்கண்டவாறு சரியாகவே விளக்குகிறார்.
“தமிழ்த் தேசியம் என்பது சாதி நாயகத்திற்கு எதிராக சனநாயகத்தை முன்னிறுத்துவ தாகும். சாதிய ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரானப் போராட்டமே நேர்வகைத் தமிழ்த் தேசியம் ஆகும். பெரியாரின் வாழ்வின் சாரமாகப் பெறப்படுவது சாதி ஒழிப்பு. எனவே, பெரியாரும் தமிழ்த் தேசியமும் ஒன்றுபடும் புள்ளி சாதி ஒழிப்பு அரசியலாகும். தமிழ்த் தேசிய அரசியல் ஆற்றல்களும் பெரியாரிய அரசியல் ஆற்றல்களும் ஒன்றுபடுவதற்கான புள்ளியை அடையாளம் காட்டும் பணியை இந்நூலில் உள்ள கட்டுரைகள் மேற்கொள்ளும் என்று நாம் உறுதிபட நம்புகிறோம்.”
பெரியாரியத் தோழர்கள் ஒவ்வொரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
வெளியீடு : ‘சிற்றுளி’ – நூல் விலை : ரூ.50 – தொடர்புக்கு : 9941906390
பெரியார் முழக்கம் 19112015 இதழ்