விநாயகனை’ அரசியலாக்காதே! பெரியார் கைத்தடியுடன் திரண்டனர் கழகத் தோழர்கள்
விநாயகனை மதவெறி அரசியலுக்குப் பயன்படுத்துவதைக் கண்டித்து, சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் கைத்தடி ஊர்வலம் எழுச்சியுடன் நடைபெற்றது. செப்டம்பர் 20ஆம் தேதி நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களில் பிள்ளையார் சிலைகளை ஏற்றி கடலில் கரைக்க காவல்துறை அனுமதித்த அதே நாளில் கழகம் பெரியார் கைத்தடி ஊர்வலத்தை நடத்தியது. பிற்பகல் 3 மணியளவில் கழகத் தோழர்கள் கழகக் கொடிகள் – பெரியார் கைத்தடி – விநாயகனை அரசியலாக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளுடன் ஏராளமாகக் கூடினர். கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமையில் தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன் முன்னிலையில் நடந்த இந்த கண்டன ஊர்வலத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
“மதத்தின் பெயரால் அரசியல் நடத்தாதே; வீட்டில் வணங்கும் பிள்ளையாரை ‘ரோட்டுக்கு’ இழுத்து வந்து அரசியலாக்காதே; இரசாயனக் கலவையை கடலில் கரைத்து மாசு படுத்தாதே; மதவெறியைத் தூண்டிவிடும் இராம. கோபாலனை கைதுசெய்” என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. 200க்கும் மேற்பட்ட தோழர்களும் பெண்களும் பங்கேற்றனர். குழந்தைகள், பெரியார் முகமூடி அணிந்து கலந்து கொண்டது அனைவரையும் கவர்ந்தது. தோழர் கொளத்தூர் மணி, கைத்தடி ஊர்வலத்தின் நோக்கத்தை செய்தியாளர்களிடம் விளக்கினார்.
“சரக்கு வாகனங்களில் சட்டவிரோதமாக அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றி வருகிறார்கள். போக்குவரத்து விதிகளை மீறி ஊர்வலங்கள் வருகின்றன. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள உயரத்துக்கு அதிகமாக விநாயகன் சிலைகள் கொண்டு வரப்படுகின்றன. மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தடையை மீறி இரசாயனத்தில் செய்யப்பட்ட விநாயகன் சிலைகள் கடலில் கரைக்கப்படுகின்றன. மதவாத அரசியலுக்கு ஆதரவாக சட்ட மீறல்களும் விதி மீறல்களும் அனுமதிக்கப்படுகிறது. காவல்துறை எந்த கெடுபிடியையும் காட்டுவது இல்லை. மாறாக பெரியாரின் பகுத்தறிவு கருத்துகளை பரப்பிடும் கூட்டங்கள், மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிகள் என்றால் காவல்துறை அனுமதி மறுக்கிறது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை பறிக்கிறது.
வீட்டிற்குள் நடத்தினால்தான் பிள்ளையார் வழிபாட்டை மத நம்பிக்கை என்று கூறலாம். அந்த மூடநம்பிக்கைகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும், மதத்தின் உரிமைகளுக்கு நாங்கள் தடை கேட்கவில்லை. மாறாக, மத உணர்வை அரசியலாக்கி, இ°லாமியர்களுக்கு எதிரான பகையை வளர்க்கவும், இந்து மதத்தை அரசியலாக்கவுமே நடத்தப்படும் இந்த விநாயகன் ஊர்வலத்தை காவல்துறை அனுமதிக்கக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கை. மிலாது நபி ஊர்வலத்தை சென்னையில் இ°லாமியர்கள் அமைதியாக நடத்தி வந்தார்கள். அதற்கு போட்டியாக மதவெறி சக்திகள் விநாயகன் ஊர்வலத்தைத் தொடங்கின. இரண்டு ஊர்வலங்களையும் நிறுத்துமாறு தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று, இ°லாமியர்கள் மிலாது நபி ஊர்வலத்தை நிறுத்தி விட்டார்கள். ஆனால், இந்து முன்னணி போன்ற மதவாத அரசியல் அமைப்புகள், விநாயகன் ஊர்வலத்தைத் தொடர்ந்து நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல், திருவல்லிக்கேணி மசூதி வழியாகவே செல்வோம் என்று ஒவ்வொரு ஆண்டும் மிரட்டுகிறார்கள். இதைச் சுட்டிக்காட்டி கண்டிப்பதற்கே ஒவ்வொரு ஆண்டும் பெரியார் கைத்தடி ஊர்வலங்களை நடத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்” என்று விளக்கினார்.
200 தோழர்கள் கைது செய்யப்பட்டு, இராயப்பேட்டை பி.எ°.என்.எல். ஊழியர் குடியிருப்பு வளாகத்திலுள்ள சமூகக் கூடத்தில் வைக்கப்பட்டனர். மண்டபத்தில் தோழர்கள் திட்டமிட்டப்படி அரங்கிற்குள் ஒலிபெருக்கி வசதியுடன் மதவாத எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் உமாபதி தொடக்க உரையாற்றி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
கழகத் தோழர்கள் அன்பு தனசேகர், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவா, விழுப்புரம் ராமர், சேலம் விசு, காஞ்சிபுரம் ரவிபாரதி, வழக்கறிஞர் துரை அருண், வேலூர் சிவா, புதுவை பெரியாரியல் முன்னணி தீனா ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நீண்ட உரையாற்றினர்.
அஜந்தா பிரியாணிக் கடை உரிமையாளர் கன்னியப்பன், இளம் திராவிடர் அமைப்புத் தோழர் செந்தில் ஆகியோர் தோழர்கள் அனைவருக்கும் இரவு உணவாக பிரியாணி வழங்கினார். 8 மணியளவில் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
பங்கேற்ற கழகப் பொறுப்பாளர்கள்:
தென் சென்னை : மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, மாவட்ட அமைப்பாளர் சு.பிரகாசு, மாவட்ட பொருளாளர் ஜான் மண்டேலா, துணை செயலாளர் சுகுமார் மற்றும் இளைஞரணி பொறுப்பாளர்கள் நாத்திகன், செந்தில், அருண்.
வடசென்னை : மாவட்ட தலைவர் ஏசு குமார், மாவட்ட செயலாளர் தட்சணாமூர்த்தி.
காஞ்சிபுரம், கடலூர், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களிலிருந்தும் புதுவையி லிருந்தும் தோழர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற கழகப் பொறுப்பாளர்கள் விவரம்:
காஞ்சிபுரம்: மாவட்ட தலைவர் சு. செங்குட்டுவன், மாவட்ட செயலாளர் மு. தினேஷ் குமார், மாவட்ட அமைப்பாளர் செ.கு. தெள்ளமிழ்து.
கடலூர்: மாவட்ட செயலாளர் நட. பாரதிதாசன், மாவட்ட அமைப்பாளர் பா. பாலமுருகன், பாரி சிவா.
வேலூர் : மாவட்ட அமைப்பாளர் சிவா.
விழுப்புரம் : மாவட்ட தலைவர் தமிழ்குமரன், மாவட்ட செயலாளர் ச.கு. பெரியார் வெங்கட், மாவட்ட அமைப்பாளர் செ.நாவாப்பிள்ளை, மாவட்ட துணை செயலாளர் குப்புசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வேலாயுதம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு. நாகராஜ், க. இராமர் அரசு மற்றம் கு. அன்பு தனசேகர் வழ. துரை அருண், குகன், மோகன், விழுப்புரம் அய்யனார்.
பாண்டிச்சேரி – பெரியாரியல் முன்னணி தீனா
பெரியார் முழக்கம் 24092015 இதழ்