ஸ்தல ஸ்தாபனங்களுக்கு நிர்வாக உத்தியோகஸ்தர்
இன்று நமது நாட்டில் நடைபெற்று வரும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகங் கள் சிறிதாவது நாணைய லட்சியத்தின் பேரிலோ, நாகரீக மக்களைக் கொண்ட நாடு என்ற தத்துவத் தன்மையிலோ நடைபெறுவதாகச் சொல்ல முடியாது என்பதே நமது அபிப்பிராயம்.
சில இடங்களில் நாகரீகமாயும் நாணையமாயும் நடக்கின்றது, நடந்தது, நடக்கலாம் என்பதையும் மறுக்கவில்லை. ஆனால் பெருவாரி யாக 100க்கு 75க்கு மேலாக நடைபெறும் நிர்வாகங்கள் பெரிதும் மோசனமானவைகளே யாகும். இதற்கு முழு பொறுப்பும் அவ்வவ்விடத் திய மக்கள் பேரிலேயோ, அல்லது ஸ்தாபன அங்கத்தினர்கள் மீதிலேயோ மாத்திரம் போடத்தகுந்தது அல்லவென்றும் சொல்லுவோம். இன்னமும் வெளிப்படையாய்ச் சொல்ல வேண்டுமானால் அநாகரீகமும் ஒழுக்கக் குறைவானதுமான ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களுக்குப் பெரிதும் அந்த இலாகா மாற்றப்பட்ட இலாகாவாக இருப் பதும், ஸ்தல ஸ்தாபனங்களே மந்திரிப் பதவிக்கு படிகளாய் இருப்பதும், ஸ்தல ஸ்தாபனங்களே மந்திரிகளைக் காப்பாற்றத்தக்க ஆதரவுகளாய் இருப்பது மான ஒரு முறை முக்கிய காரணம் என்று சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகின்றோம். மற்றும் வெரும், வெரும் ஆள்கள் எல்லாம் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் மாதம் 2000, 3000, 4000, 5000 கணக்காக பணம் சம்பாதிக்கத் தகுந்த உத்தியோகங்களை அடைந்து லாபம் அடைவதைப் பார்த்தே அதற்கு உதவி செய்தவர்கள், செய்யத் தகுந்தவர்கள் செய்பவர்களுக்குச் செய்ப வர்கள் ஆகியவர்களும் அதுபோல் சம்பாதிக்க ஆசைப்படுகின்றார்கள். ஆனால் இவர்கள் அந்தப் படி அடைவதற்கு சட்டத்தின் சாக்கால் யாதொரு மார்க்கமும் இல்லாமலி ருப்பதால் சட்டத்தின் சாக்கால் அதிகாரமிருக்கின்ற வர்களின் தைரியத்தால் சட்டத்தையோ, நாணையத்தையோ, ஒழுக்கத் தையோ லட்சியம் செய்யாமல் கொள்ளையடிக்க வேண்டியவர்களாகவும், கொள்ளையடிப்பவர்களை அனுமதிக்க வேண்டியவர்களாகவும் ஆகி விடுகின்றார்கள்.
ஆகவே இவ்வக்கிரமங்கள் இன்றைய சுயராஜியத்தினுடையவும், அரசியல் சீர்திருத்தத்தினுடையவும் பலன் என்றே சொல்லுவதோடு, பணக்காரர்களுக்கும் ஆங்கிலம் படித்தவர்களுக்குமே இவை போகக் கூடியதாகவும் இருப்பதால் ஏற்படுபவைகளேயாகும். இவற்றை அடியோடு மாற்றி யோக்கியமான நிலைக்கு கொண்டு வருவதானால் இன்றைய போக் கைப்பார்க்கும்போது சுலபமான காரியம் என்று நமக்குத் தோன்றவில்லை.
ஆயினும் எவ்வளவு தூரம் இவ்வித அக்கிரமங்களை குறைக்க முயற்சிக்கலாமோ அவ்வளவு காரியத்தை தற்கால சாந்தியாகச் செய்யக் கூடியதைச் செய்யலாம் என்று நமக்குத் தோன்றுகின்றன. அதாவது நாம் சில வருஷமாய் சொல்லிக்கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்தல ஸ்தாபனத் திற்கும் ஒவ்வொரு எக்ஸிகூட்டிங் ஆபீசர் (நிர்வாக உத்தியோகஸ்தர்) என்பவரை அரசாங்கத்தார் நியமிப்பது என்பதேயாகும். இன்றும் சென்னை கார்ப்ப ரேஷன் முனிசிபல் கவுன்சிலில் இருக்கும் கமிஷனர் எனும் உத்தி யோகஸ்தர் சென்னை முனிசிபாலிட்டியின் நிர்வாக உத்தியோகஸ்தரேயாவார். அவருக்குத்தான் அம்முனிசிபாலிட்டி நிர்வாக பொருப்பு ஒப்படைக்கப்பட்டி ருக்கின்றது. உத்தியோக நியமனம், உத்தியோகஸ்தர் களின் மீது ஆதிக்கம் முதலியவைகளும், முக்கியமான வேலைகள், கன்ட்றாக்ட்டுகள் முதலியவை கள், கொடுக்கல் வாங்கல் ஆதிக்கம் முதலியவைகளும் அந்நிர்வாக உத்தியோகஸ்தரிடமே ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன. அதனால் அம் முனிசிபல் நிர்வாகம் (யாதொரு தடங்கலுக்கு இடமில்லாமலும், தயவு தாட்சண்யத்திற்கு இடமில்லாமலும் நடந்து வர அனுகூலமாய் இருக்கின்றது. சென்னை முனிசிபாலிட்டி என்பது சுமார் 5 லட்சத்திற்கு மேல்பட்ட ஜனத் தொகை கொண்டதும், சுமார் 50 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளதும், முக்கிய மானவர்களும், நாகரீகமும், படித்தவர்களும், பெருத்த வியாபாரிகளும் தேசீயவாதிகளும் என்பவர்கள் இருக்கின்றதான இம்மாதிரி முக்கிய பட்டண நிர்வாகத்தை கவுன்சிலர்களின் ஆதிக்கத்திற்கு அடங்காத ஒரு தனி நபரிடம் நிர்வாகம் ஒப்புவிக்கப்பட்டு இருக்கும் போதும் அதனால் எல்லாம் சுய ஆட்சித்தன்மைக்கு கேடு இல்லாமல் இருக்கும்போது மற்றபடியான வெளி இடங்களில் மாத்திரம் அதுபோல் நிர்வாக உத்தியோகஸ் தர்களை நியமிப்ப தில் எந்த விதத்தில் சுய ஆட்சித் தத்துவம் கெட்டுப்போகும் என்பது நமக்கு விளங்கவில்லை. கவுன்சிலர்களோ போர்டார்களோ செய்யும் தீர்மானத்தை தீர்மானத்தின் தத்துவப்படி நடத்துவிக்க ஒரு நிர்வாக அதிகாரி இருந்தால் அவரால் என்ன கெடுதி ஏற்படக்கூடும் என்பது விளங்கவில்லை.
ஓட்டர்கள் தயவைக் கோறும் கவுன்ஸிலர்களும், கவுன்சிலர்களின் தயவைக்கோரும் சேர்மெனும் ஞாயமாய் நடந்துகொள்ள முடியாது என்ப தற்கு ஆயிரம் உதாரணம் சொல்லலாம். எஜமானனும் அவனது குமாஸ் தாவும் ஒரு கவுன்சிலில் இருக்கக்கூடாது என்று எதற்காக சட்டம் செய்யப் பட்டிருக்கின்றது? ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு நீதிபதியிடம் அந்த வீட்டுக்காரன் மீது வியாஜ்யம் இருந்தால் வியாஜ்யக்காரன் வீட்டில் குடியிருக்கும் காரணத்தைச் சொல்லி நீதியில் சந்தேகப்பட்டு வேறு கோர்ட்டுக்கு மாற்றிக் கொள்ளுகிறான். நியாயாதிபதியும் ஒரு கட்சிக்காரனும் ஒரே தாசி வைத்திருந்ததற்காக மற்ற கட்சிக்காரன் பயந்து கேசை மாற்றிக் கொண்டிருக்கிறான்.
இப்படி சாதாரண விசயங்களில் எல்லாம் நியாயம் தவறும் என்கின்ற பயம் இயற்கையாய் இருக்கும்போது அநேக மக்களின் நன்மையை, அநேக ரின் வரியை இம்மாதிரி பாமர மக்கள் தயவில் தொங்கிக் கொண்டி ருக்க வேண்டியவர்களிடம் ஒப்புவிப்பது, ஸ்தல ஸ்தாபனத் தலைவர் களையும், மற்ற பொதுமக்களையும் வேண்டுமென்றே ஒழுக்க ஈனமாய் நடக்கும்படி தூண்டுவதேயாகும்.
அன்றியும் மாதம் 4000, 5000 ரூபாய் சம்பளம் வாங்கும் மந்திரிகள், நிர்வாக சபை மெம்பர்கள் முதலியவர்கள் இடமிருந்த சில அதிகாரங்களை அதாவது அந்தந்த இலாக்காவுக்கு உத்தியோகஸ்தர்களை நியமிக்கும் அதிகாரத்தைப் பிடுங்கி இப்போது பப்ளிக் சர்வீஸ் கமீஷனர்கள் என்பதாக சிலரை நியமித்து அவர்களிடம் ஒப்புவிக்கப்பட்டு விட்டது யாவருக்கும் தெரியும். இந்தப்படி ஏன் செய்யப்பட்டது? என்று பார்த்தால் மந்திரிகளிடம் இந்த அதிகாரங்கள் இருந்தால் அந்தக் காரியங்கள் நியாயமாய் நடைபெறா மல் போக அநேக மார்க்கங்கள் இருக்கின்றன என்றும், மந்திரிகள் பலர் தாக்ஷண்யத்துக்குக் கட்டுப்பட்டவர்களாகையால் பல கஷ்டங்கள் ஏற்படும் என்றும் நினைத்தே இந்தப்படிச் செய்ய வேண்டியே வந்தது. மனிதன் சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் விரும்புவது எவ்வளவு அவசியம், இயற்கை யென்று கருதுகின்றோமோ அதுபோலவே சுதந்திரங்களும் அதிகாரங்களும் நீதியாய் நடைபெறுவதற்கு பத்திரங்கள் செய்ய வேண்டிய தும் அவசியத்திலும் அவசியமாகும். சுருக்கமாக ஒரே ஒரு காரணம் சொல்லு கின்றோம். அதிலிருந்து மற்றதை ஒருவாறு யூகித்தறியலாம். அதாவது இன்று முனிசிபாலிட்டி, தாலூகாபோர்டு முதலியவைகளுக்கு நிர்வாக அதிகாரி ஒருவர், கவுன்சிலர்களுடைய சலுகைக்கும் தயவுக்கும் தொங்கிக் கொண்டி ருக்க வேண்டியவர் அல்லாதவறாய் இருந்திருப்பாரானால் அந்த ஸ்தாபனங் களின் சிப்பந்திகள் இருப்பவர்களைவிட 10 மடங்கு யோக்கியர்களாகவும் யோக்கியதாபக்ஷம் உடையவர்களாகவும் இன்று இருக்கும் சம்பளத்தைவிட பகுதி அளவு சம்பளத்தில் நியமிக்கப்பட்டவர் களாகவும் குறைந்தது 3ல் 1 பாகம் குறைந்த எண்ணிக்கையுள்ள சிப்பந்திகளுடனும் அந்தந்த ஸ்தாபனங் கள் இன்றைய நடப்பைவிட நல்ல நடப்பிலும் நடந்துகொண்டு வரும்படி யானவைகளாய் இருக்கும் என்பதில் நமக்கு அதிகமான நம்பிக்கை இருக்கிறது. மற்றபடி கன்ட்றாக்ட் விஷயத்திலும் ஸ்கீம்கள் விஷயத்திலும் அதிகமான நன்மைகளை வரிசெலுத்தும் ஜனங்களும் பிரதேசமும் அடைந் திருக்கக் கூடும் என்றும் சொல்லுவோம். அன்றியும் சில ஸ்தாபனங்களில் இருக்கும் நல்ல நாணையமும் பொருப்பும் நேர்மையும் உள்ள தலைவர்கள் கூட இன்று தங்கள் பொருப்புகளை, நிர்ணயமாய் நடத்தமுடியாமல் இருப்பதற்கும் தாங்கள் பாமரமக்கள் தயவில் இருக்க வேண்டிய நிலைமையும் தாங்கள் அநாவசியமான தாட்சண்யத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள வேறொரு சாக்கு இல்லாமல் இருப்பதும் ஆகும். இந்தப்படி ஒரு நிர்வாக உத்தியோகஸ்தர் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு நியமித்துவிட்டால் நாணையமாய் நடக்கும் தலைவர்களுக்கும் நல்ல நிர்வாகத்தில் ஆசையிருக் கும். தலைவர்களுக்கு எவ்வளவோ விதத்தில் அனுகூலமாய் இருக்குமே தவிர அவர்களுக்கு நஷ்டம் ஒன்றுமே ஏற்பட்டுவிடாது. பல நல்ல தலைவர் களும் இந்தப்படி சொன்னதும் இந்தப்படி நியமிக்க ஆசைப்பட்டதும் நமக்கு நன்றாய் தெரியும், அன்றியும் இம்மாதிரி நிலைமை ஏற்பட்டு விட்டால் நிர்வாகத் தலைவருக்கு நேரமில்லை, சாவகாசமில்லை என்கின்ற கஷ்டம் நீங்கிவிடும். அது மாத்திரமல்லாமல் தேர்தல்களுக்கு 1000, 2000, 5000, 10000 ரூபாய்கள் வீதம் செலவுசெய்து ஓட்டர்களுக்கு பணம் கொடுத்து, கவுன்சிலர் களுக்கும் போர்டு மெம்பர்களுக்கும் பணம் கொடுத்து ஸ்தானம் பெற ஆசைப்பட மாட்டார்கள். அதிலும் ஸ்தல ஸ்தாபன புது சட்டத்தின்படியும், வரப்போகும் புதிய சில திருத்தத்தின்படியும் கண்டிப்பாய் நிர்வாக உத்தி யோகஸ்தர் இல்லாவிட்டால் தீவட்டிக் கொள்ளை ஸ்தலமாக மாறிவிடும். ஆகவே அடுத்த கவுன்சிலில் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு நிர்வாக உத்தி யோகஸ்தர்களை நியமிக்க ஒரு தீர்மானம் கொண்டுவர வேண்டியது அவசி யம் என்று சட்டசபை அங்கத்தினர்களுக்கு ஞாபக மூட்டுகின்றோம். அந்த நிர்வாக அதிகாரியும் ஒரு டிப்டி கலெட்டர் உத்தியோக முள்ளவராகவே இருக்க வேண்டும். ஏனெனில் அவர் கவுன்சிலர்களுக்கு பிடிக்கவில்லை யானால் மறுபடியும் கவுரமான உத்தியோகத்துக்கு போகக்கூடியவராய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரால் தன் மனச்சாக்ஷிப்படி நடக்க முடியாமல் போய் விடும். ஆகவே சுதந்திரத்துடன் நியாயமாய் நடக்கத்தகுதி யுள்ளவர்களைப் பார்த்து நியமிக்க வேண்டியது அவசியமாகின்றது.
நிற்க இதைப்பற்றி யாராவது பரிகாசம் செய்வார்களானால் அவர் களுக்கு ஒரே ஒரு பதில் சொல்லிவிடும்படியும் குறிப்பிடுகின்றோம். அதாவது சேர்மென்கள் மீதும் பிரசிடெண்டுகள் மீதும் சட்டசபைப் பிரதிநிதி களுக்கு நம்பிக்கையில்லாத காரணங்களாலேயும் அவர்கள் பெரும்பான்மை யோர்கள் தேர்தல்களில் நடந்துகொண்ட மாதிரியாலேயும் கேவலம் எலக் ஷன் நடத்துகின்ற அதிகாரங்களைக்கூட அவர்களிடம் இருந்து பிடுங்கப் பட்டாய் விட்டதே. இதில் அவமானம் இல்லையா? என்று கேட்கின்றோம். இன்னம் ஸ்தல ஸ்தாபனங்களில் நடக்கும் காரியங்களை விளக்கிச்சொல்ல வேண்டுமானால் வெட்கப்பட வேண்டியதாகும். ஆனாலும் அவற்றையும் அவசியம் வந்தால் வெட்கத்திற்கு பயந்து கொண்டு சொல்லாமல் விடப் போவதில்லை என்றே கருதிக் கொண்டிருக்கின்றோம். ஆதலால் அந்த அவசியம் இல்லாமலே இந்த ஏற்பாட்டைச் செய்துவிடுவது சுயமரியாதை உலகத்திற்கு நலம் என்று தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 11.01.1931