நிர்பந்தக் கல்யாணம்
இவ்வாரம் வேறொரு பக்கத்தில் “எனது காதல்” என்பதாக சிவ கங்கை திருமதி. ஏ.எஸ். மணிபாய் என்னும் கன்னிகையின் கடிதம் ஒன்று பிரசுரித் திருக்கின்றோம். இதைப் பற்றி சென்ற வாரமும் பிரசுரித்து மிருந்தோம். இப்போது அந்தப்பெண்மணியின் கைப்படவே கடிதம் வந்ததால் பிரசுரித் திருக்கின்றோம். இது சம்மந்தமாக மற்றும் பல சொந்தக் கடிதங்களும் நமக்கு வந்திருக்கின்றன. அப்பெண்ணின் பெற்றோர்கள் அப்பெண் விரும்பும் நாயகனுக்கு மணம் செய்விக்காமல் வேறு யாரோ ஒருவருக்கு அதாவது அப் பெண்ணுக்குத் தெரியாத ஒருவருக்கு பெண்ணு டைய சம்மதமில்லாமலேயே விவாகம் செய்து கொடுக்கப் போவதாய் பெண்ணின் தாயாரும், சகோதரரும் ஒப்புக்கொண்டதாகவும், பெண் தான் அந்தக் கணவனை மணந்து கொள்ள மாட்டேன் என்று கண்டிப்பாய்ச் சொல்லியும் கேட்காமல் கல்யாணப் பேச்சுக் கள் நடப்பதாகவும் தெரிய வருகின்றது.
இம்மாதிரியாக நிர்பந்தக் கலியாணம் செய்வது என்பது மிகவும் அனாகரீகமான செய்கை என்றே சொல்ல வேண்டியிருக்கின்றதற்கு வருந்து கின்றோம். ஆகையால், இவ்விஷயங்கள் உண்மையாக இருக்குமானால் பெற்றோர்கள் தயவு செய்து மணிபாயின் திருமணத்தை அடிமை விவாக மாய் இல்லாமல் சுயேச்சை மணமாகச் செய்து கொடுக்க வேண்டுமாய் வேண்டுகின்றோம்.
குடி அரசு – வேண்டுகோள் – 08.03.1931