உதிர்ந்த மலர்கள்
புராணங்களுக்கு மதிப்பு ஏற்பட்டதற்கு காரணம் என்னவென்றால் அவைகள் எவ்வளவு ஆபாசமாகவும் காட்டு மிராண்டித்தனமாகவும் எழுதி இருந்தாலும் முதலிலும் கடைசியிலும் “இப்புராணத்தைப் படித்தோருக்கு மோட்சம், படிக்க வைத்தோருக்கு மோட்சம், கேட்டோருக்கு மோட்சம், கேட்டவரைக் கண்டோருக்கு மோட்சம், கண்டவரைக் கண்டவரைக் கண்டால் மோட்சம் கிடைப்பதுடன் வாழ்கையில் பணமும் பொருளும் சேரு மென்றும் செத்த பிறகு இராஜாவாய் பிரபுவாய் மறு ஜன்மம் எடுக்கப்படும்” என்றும் எழுதி வைத்ததே காரணமாகும்.
* * *
எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப் பற்றிச் சொல்லும் மதக் கொள்கைகளிடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங்களும் அவைகளுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதம் வாயினால் உச்சரிக்கக் கூட யோக்கி யதை அற்றவனாவான்.
* * *
புராணங்களின் ஆபாசங்களை நன்றாய் உணர்ந்தவர்கள் எல்லாம் அவற்றை வெளியில் சொல்லுவதற்கு பயப்பட்டுக் கொண்டிருந்ததற்குக் காரணம் என்ன வென்றால் பார்ப்பனர்கள் தனக்கு நாஸ்திகன் என்று பட்டம் கட்டி ஒழித்துவிடுவார்கள் என்கின்ற பயம்தான்.
* * *
ஜாதி மத வித்தியாசங்களும் அவற்றின் உயர்வு தாழ்வு நிலைகளும் சிறிதும் அழியாமல் அப்படியே இருக்க வேண்டும் என்று சொல்லுகின்ற வர்கள் ஜாதிகளின் பேராலும் மதங்களின் பேராலும் கேட்கப்படும் விகிதாச்சார உரிமைகளை ஏன் ஆnக்ஷபிக்கின்றார்கள் என்றும் அப்படி ஆட்சேபிப்பதில் ஏதாவது நல்ல எண்ணமோ நாணயமோ நியாயமோ இருக்க முடியுமா என்றும் தான் கேட்கின்றேன்.
– ஈ.வெ.ரா.
குடி அரசு – துணுக்குகள் – 16.02.1930