சுயமரியாதை இயக்க அபிமானிகளுக்கு ஒரு வேண்டுகோள்
நமது இயக்கம் மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள உயர்வு தாழ்வை வெறுக்கிறது. ஆலய உருவ வழிபாட்டை வெறுக்கிறது; மனிதனை மனிதன் மதத்தின்பேராலும், கடவுளின் பேராலும், சமயத்தின் பேராலும், சடங்குகளின் பேராலும் அடிமைப்படுத்துவதையும் ஏமாற்றிப் பிழைப்பதையும் வெறுக் கிறது. இவ்வளவும் இந்து மதத்தால் நேரிட்ட தீமை என்று கருதி மதத்திலும் சாஸ்திரங்களிலும் உள்ள ஊழல்களை வெளிப்படுத்தி வருகிறது. மனிதனை மனிதன் எவ்வழியிலும் ஏமாற்றி பிழைக்கக்கூடாது. இதுவே நமது இயக்கத் தின் முக்கிய கொள்கை. இவைகளை வருணாசிரம தருமிகள் ஒப்புக் கொள்ளா விட்டாலும் நன்கு படித்தவர்களும் உலக ஞானம் உள்ளவர்களும் ஒருவாறு ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். ஆயினும் இவர்களும் காரியத்தில் காட்ட அஞ்சுகிறார்கள், மனிதனுக்கு பிறப்பு, இறப்பு, கலியாணம் முதலியவைகளில் சடங்கு அவசியமா என்பதை நாம் சிந்திப்பதே கிடையாது. சடங்கு செய்ய வேண்டியது அவசியமானால் யார் செய்தாலும் நமக்கு ஒன்று தான். பிராமணன் நம்மால் பிழைப்பதுமன்றி நம்மை இழிவாகக்கருதி நடத்துகிறான் என்று நாம் சொல்லலாம். இதே மாதிரி நாமும் பலரை இழிவாகவே கருதி நடத்துகிறோம். நம்மவர்களில் சிலரை நாமே குரு என்று ஏற்படுத்தினால் இவர்கள் மட்டும் பிற்காலம் தாங்களே உயர்ந்தவர்களென்றும் தங்களுக்கே மத விஷயம் யாவும் தெரியும் என்று கருதி நடத்தமாட்டார்கள் என்பது தான் என்ன நிச்சயம், இவைகள் பண்டாரங்களை ஏற்று பிராமணனை நீக்கி சடங்குகள் செய்பவர்கட்கு மட்டுமே தெரிவிக்கிறேன், பண்டாரங்களிலும் பலபேர் சைவர்கள் வீட்டில் கூட சாப்பிடுவது கிடையாது. இவர்களும் நூலணிந்திருக்கிறார்கள். ஆதி சைவன் என்னும் குருக்கள் எப்படி தற்காலம் பிராமணனாக மதிக்கப் படுகிறானோ அதுபோல் இவனும் பிற்காலத்தில் பிராமணனாக மாறி விடுவான். வீணில் ஏமாறாதீர்கள். இவைகளும் நமதியக் கத்தால் ஒப்புக் கொள்ளக் கூடிய காரியமன்று, பிராமணன் சொல்லும் மந்திரங் களையும் ஏற்படுத்திய முறைகளுமே தான் இவன் ஒன்றையும் நீக்கிவிட வில்லை. நமக்கு இதனால் எவ்வகையிலும் ஆதாயம் கிடையாது, இதுவும் நம்மை ஏமாற்றும் பிழைப்பேயன்றி வேறில்லை, நமதியக்கக் கொள்கைகட்கு இவைகளும் நேர்மாறானவைகளே. இவர்களையும் நம் இயக்க கொள்கைப் படி நாம் ஆதரித்தல் அறிவுடைமையாகாது. இவர்களும் பிற்காலம் பக்கா பிராமணர்கள் ஆகிவிடுவார்கள். நமது தலைவர்கள் உண்ண உணவின்றி கஷ்டப்படும் ஏழைகட்கு உதவிபுரியுங்கள் என்று சொல்லுகிறார்கள். இப் பாழும் இந்தியாவில் ஒருவகுப்பார் தங்கள் உடலை வருத்தாமல் சாம்ப லையோ நாமத்தையோ போட்டு கொட்டையோ காவடியோ கழுத்தில் சுமந்து கையில் ஓடேந்தி சம்சாரம் குழந்தைகளுடன் பிச்சை யெடுப்பதே தொழிலாக அலைகிறார். இவர்களால் மக்களுக்கு ஏற்படும் தொல்லைகளோ அளவு கடந்தவைகள். இவர்கட்கு இடும் பிச்சையால் நமக்கோ நாட்டிற்கோ இது காறும் வந்த நன்மை என்ன. இவர்கட்கிடும் பிச்சையால் நாமே நாட்டிற்கு தீங்கு செய்தவர்களாகிறோம். இவ்வளவும் இந்துமதத்தினால் வந்த தீமை யானால் நன்மை எவையென்று நமக்கு விளங்கவில்லை. நமது கண்களுக்கு புலப்படா நன்மைகள் பண்டிதர்கட்கும் நம் எதிரிகட்கும் மட்டும் எப்படி தோன்றுகிறது என்பது தான் எமக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணுகிறது. வருணாசிரமதருமமும் இந்து மத சாஸ்திர புராணங்களும் நம்மை ஏமாற்ற எழுதப்பட்டவைகள் என்று நாம் நினைக்கையில் பிராமணனை நீக்கிமட்டும் சடங்குகள் செய்வது எதற்கு. பிராமணனை நீக்கிவிட்டதால் மட்டும் நம்மிட முள்ள மூடநம்பிக்கைகள் ஒழிந்து விட்டதா? குடி அரசிலோ திராவிடனிலோ உங்கள் பெயர் புரோகிதத்தை ஒழித்த வீரர்கள் என்று வெளிவருவதால் மட்டும் திருப்தி அடைந்து விட முடியுமா? அர்த்தமற்ற சடங்குகளில் நம்பிக்கையற்ற சடங்குகளில் நம்பிக்கையற்றவர்கள் அறவே நீக்கிவிட வேண்டும். பிராமணனை நீக்குவதால் மட்டும் முழுதும் திருப்தி அடைந்து விட முடியாது. இதனால் நீங்களும் மூட நம்பிக்கையை முற்றும் விட்டு விட்டவர்கள் என்று சொல்லிக்கொள்ளவும் முடியாது. இந்தியாவில் பிறந்து இந்து மதத்தை பின்பற்றிய எவனும் மூட நம்பிக்கையை அறவே ஒழிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல, உதாரணமாக, என்னிடத்திலே குற்றம் பல இருக்கலாம். ஒரு மனிதனுக்கு பிராமணனிடம் மட்டும் வெறுப்பிருக்கலாம், அவன் பிராமணனை மட்டும் நீக்குவான் அல்லது சடங்குகளை மட்டும் செய்யமாட்டான். கடவுளிடம் போனவுடன் அவன் மனநிலை தன்னையும் அறியாமல் மூட நம்பிக்கையென்னும் சேற்றில் சிக்கிக் கொள்ளுகிறது, குடி அரசு கடவுளை தூஷிக்கிறதே அன்றி ராஜீய விஷயங் கள் ஒன்றுமே வெளிவருவதில்லை என்று குறை கூறுபவர்களும் பலர் தற்காலம் குடி அரசின் கொள்கைக்கும் ராஜீயங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதை இவர்கள் அறிந்து கொள்வது மில்லை. உண்மை கடவுள் என்று இருந்தால் குடி அரசு அதை தூஷிக்கவே இல்லை. பிறரை ஏமாற்ற மனிதன் சூழ்ச்சியால் கண்டுபிடிக்கப்பட்ட கடவுள்களையும் ஏடுகளையுமே தூஷிக் கிறது. தூஷிக்கவேண்டியும் நேரிடுகிறது. இந்திய மக்களின் திரேகமே மூடநம்பிக்கையால் உருவாக்கப்பட்டது. இந்திய மக்களின் மூட நம்பிக் கையை ஒழிப்பதற்கும் மூளையையும் இரத்தத்தையும் சுத்தி செய்வதற்கும் மேனாட்டு மருந்துக்கள் ஏராளமாய் வேண்டும். உண்மையில் சுயமரியாதை யில் பற்றுள்ளவர்கள் யுக்தி கொள்ளாத அர்த்தமற்ற சடங்குகளை அறவே விட்டொழியுங்கள். இவர்களே நமதியக்கத்தில் பற்றும் தலைவர்களின் அன்புக்கும் பாத்திரமானவர்கள். நமது இயக்கத் தலைவர்களின் கோரிக்கை யும் இதுவே. ஆளுக்கொருநீதியும் சாதி உயர்வு தாழ்வுகளும் ஏமாற்றும் கொள்கைகளுமே இந்து மத தத்துவங்களானால் இந்து மதம் இந்தியாவை விட்டு ஒழியும் நாள் எந்நாளோ அந்நாளே மக்கட்கு நன்னாளாகும்.
<p style=”text-align: right”>குடி அரசு – கட்டுரை – 15.06.1930</p>