சுயமரியாதை மாகாண மகாநாடு
சுயமரியாதை மாகாண மகாநாடு முதல் முதலாக சென்ற வருஷம் செங்கல்பட்டில் கூடியதும் அதை அடுத்த வருஷத்திற்கு ஈரோட்டிற்கு அழைக்கப்பட்டதும் யாவரும் அறிந்த விஷயமாகும்.
சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒன்று தோன்றி 4, 5 வருஷ கால மானாலும் அது ஒரு விதமாக அதாவது சாதகமாகவோ அன்றி பாதக மாகவோ எப்படியோ ஒரு விதத்தில் பொது மக்களின் கவனத்தை இழுத்து எங்கு பார்த்தாலும் இவ்வியக்கத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் படியான நிலைமையை பெற்றுவிட்டது.
மற்றும் இவ்வியக்கம் வேகமானது. இன்றையதினம் அரசியல் விஷயங்களிலும் மத விஷயங்களிலும் சமூக விஷயங்களிலும் புகுந்து அவைகளையெல்லாம் சற்று ஆட்டி விட்டதோடு இதன் பேரால் பிழைத்து வந்தவர்களின் பிழைப்பில் மண் போடும்படியான நிலைமை ஏற்பட்டு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இவைகளுக்கு ருஜுவு வேண்டுமானால் நமது எதிரிகளின் வாக்கு மூலங்களிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். அதாவது சட்ட சபைகளில் திரு. முத்துரங்க முதலியார் போன்றவர்கள் மூலமாய் சுயமரியாதை இயக்க விஷயமாய் கேட்கும் கேள்விகளாலும், வெளியில் திருவாளர் சத்தியமூர்த்தி, பி.வரதராஜுலு போன்றவர்கள் தேசியத்திற்கு ஆபத்து என்னும் பேரால் பிரசவ வேதனைப்படுவதாலும், இந்து கிறிஸ்தவ மகமதிய முதலிய மதப் புரோகிதர்கள் இதைப் பற்றி ஆவலாதி கூறுவதாலும், சைவ சமாஜக்காரரும், வைஷ்ணவ மண்டலக்காரர்களும் கூடிக் கொண்டு மூலை மூலையாய் ஒப்பாரி வைத்து அழுவதாலும், பண்டிதர்கள் சாஸ்திரிகள் தங்களுக்கு மரியாதை இல்லாமல் பரிதபிக்கின்றதாலும் பல மடாதிபதிகள் இதை எதிர்க்க பணம் கொடுத்து கூலிகளைப் பிடித்து உளரச் சொல்லு வதாலும், சில அதாவது சிருங்கேரி போன்ற பெரிய மடாதிபதிகள் நம்மையே ராஜி பேச “ஸ்ரீ முகத்தின்” மூலம் கூப்பிடுவதாலும் மற்றும் சனா தன மகாநாடுகளும், ஆஸ்திகர்கள் மகாநாடுகளும் தினமும் நடப்பதாலும், கோவில் அதிகாரிகள் தங்கள் கோவில்களுக்கு ஆபத்து என்றும் வரும்படி குறைந்து விட்டதென்றும் “கோவிலுக்குள் தாழ்ந்த வகுப்பார் பிரவேசித்து விடுவார்கள்” என்று சொல்லி நாம் போகின்ற ஊர்களில் எல்லாம் போலீஸ் உதவியுடன் கதவுகளைச் சாற்றிக் கொண்டிருப்பதாலும் ஒருவாறு இதன் வேகத்தை உணரலாம். மற்றும் ஆங்காங்கு நடைபெறும் சடங்கு புரோகிதம் பகிஷ்காரத்தாலும், கலப்பு மணம் விதவை மணம் ஆகியவைகளின் மலிவா லும் கூட உணரலாம். அன்றியும் இவ்வியக்கம் நமது நாடு மாத்திரமல்லாமல், வெளிநாடுகளிலும் கானலில் நெருப்பு பிடிப்பது போல் படர்ந்து கொண்டே யும் போகின்றது.
உதாரணமாக நாம் இவ்வியக்க விஷயமாய் மலாய் நாட்டுக்குப் போகும் போது தமிழ்நாடு பத்திரிகை செய்த விஷமம் யாவருக்கும் தெரிந் திருக்கும். மலாய் நாட்டிலுள்ள இவரது கூலிகளையும் மருந்து விற்கும் ஏஜண்டுகளையும் ஏவிவிட்டு விஷமம் செய்ததும் தெரிந்திருக்கலாம். நாம் மலாய் நாடு போகின்றோம் என்று தெரிந்ததும் நம்மை “தடுத்து விட்டார்கள்” “நாயக்கர் கோஷ்டி பகிஷ்காரம்” என்றும் “நாயக்கருக்குத்தடை உத்தரவு” என்றும் அது பலவிதமாய் எழுதி வந்ததும் யாவரும் அறிந்ததே. ஆனால் நாம் மலாய் நாடு போய் வந்த பிறகு அதே தமிழ்நாடு பத்திரிகையும் அதன் பத்திராதிபரான திரு. வரதராஜுலுவும், அதன் கூலிகளும் பொறாமைப்படும் அளவையும் தன்னை அடியோடு ஒழிக்க முயற்சித்த ஆட்களின் காலுக்குள் புகுந்து கூலி கொடுத்துக் கூட்டிவைத்து அழுகும் ஒப்பாரி அழுகையும் ஆத்திரப்படும் மாதிரியும் அவர் பத்திரிகையில் பார்த்தாலே குடியேற்ற நாடு களிலும் இவ்வியக்கத்தில் மக்களுக்குள்ள ஆர்வம் இன்னதென விளங்கும்.
இவற்றிற்குக் காரணம் என்னவென்றால் எவ்வளவு எதிர்ப்பு ஏற்பட்ட காலத்தும், எவ்வளவு சூழ்ச்சி ஏற்பட்ட காலத்தும் அவைகளையெல்லாம் லட்சியம் செய்யாமல் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆரம்பித்த கொள்கை களிலிருந்து ஒரு சிறிதும் பின் வாங்காமல் உறுதியாய் நின்றதோடு மேலும் மேலும் முன்போகவே முயர்ச்சித்ததாலுமே தான் எவ்வித குறைவோ தடையோ இல்லாமல் இவ்வியக்கம் முன்னேறிக் கொண்டுபோகின்றது.
நிற்க, எப்படி எல்லா இயக்கங்களையும் ஒரு கூட்டம் தங்கள் சுய நலத்துக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் சோம்பேரி வாழ்வுக்கும் உபயோகப் படுத்தி வாழ்வது போலவே இவ்வியக்கத்தையும் சிலர் தங்கள் வாழ்வுக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் உபயோகப்படுத்திக் கொண்ட முறையில் ஏதாவது சிறு சிறு தடையோ பொது ஜனங்களுக்கு சிறு அதிருப்தியோ உண்டாகும் படியான காரியங்கள் சில சந்தர்ப்பங்களில் ஏற்பட்டிருக்கக் கூடும் என்பதை நாம் ஆட்சேபிக்கவில்லை. உதாரணமாக ஈரோட்டில் நடந்த இரண்டொரு காரியங்களைச் சொல்லலாம். ஆனாலும், அவைகளைக் கண்டு நாம் பயப்படாமலும் சளைக்காமலும் அதற்குத் தகுந்த பரிகாரங்களைச் செய்து விட்டு மேல் போக வேண்டியது அறிவுடைமையே ஒழிய, அதற்காக இயக் கத்தை குற்றம் சொல்லிவிடக் கூடாது. இப்போதும் கூட வயிற்றுப் பிழைப்புக் காக சுயமரியாதை இயக்கத்தின் பேரை வைத்துக் கொண்டு திரிபவர்களில் சிலர் திருடுவதையும், நம்பிக்கை துரோகம் செய்வதையும், பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதையும், சிறு பிள்ளைகளை வஞ்சிப்பதையும், சமயத்திற் குத் தகுந்தபடி வேஷம் போட்டு பேசி மக்களை ஏமாற்றிப் பொருள் பறிப்பதை யும், துர்செய்கைகளையும் செய்துவிட்டு சுயமரியாதை என்று சொல்லிக் கொண்டு திரிந்து வயிறு வளர்ப்பதையும் நாம் பிரத்தியட்சத்தில் பார்க்கின் றோம். இதற்காகவும் நாம் இயக்கத்தை குற்றம் சொல்லவோ நிறுத்தி விடவோ முயற்சிப்பதும் மடமையேயாகும். வேண்டுமானால் எதிர்காலத்தில் இவ்வித மான காரியங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியதை முன்னிட்டு சற்று ஜாக்கிரதையாயும் கண்டிப்பாகவும் இருக்க வேண்டும் என்பதை நாம் மனப்பூர்த்தியாய் ஒப்புக் கொள்ளுகின்றோம். இவ்வியக்கம் ஏற்பட்டு இன் றைக்கு 4, 5 வருஷகாலம் ஆகியிருந்தாலும் இதன் பேரால் நம்மால் வெளிப்படுத்தப்படும் பத்திரிகைகளுக்கும் கொள்கைகளுக்கும் நாமே பொறுப்பாளியாயிருந்து வந்ததோடு பொது ஜனங்களிடமிருந்தோ அல்லது வேறு நண்பர்களிடமிருந்தோ இன்றைய வரையில் ஒரு சின்னக் காசாவது இவைகளுக்காக நாம் வாங்கவில்லை என்பதையும் இந்த சமயத்தில் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். இவ்விஷயத்தில் நாம் வேண்டுமென்றே ஜாக்கிரதையாய் இருந்து வந்திருக்கிறோம். ஏனெனில் பணம் கொடுத்த காரணத்தாலோ அல்லது வேறுவித உதவி செய்த காரணத்தாலோ நமது அபிப்பிராயத்தின் மீது அதிகாரம் செலுத்த ஏற்பட்டு விட்டால் அது நமது இயக்கத்திற்கு தொல்லை விளைவிக்கக் கூடியதாகி விடக் கூடுமென்று பயந்தே, நமது அபிப்பிராயத்தை ஏற்றுக் கொள்பவர்கள் எல்லாம் நமக்கு வேண்டியவர்கள் என்றும், ஏற்றுக் கொள்ளாதவர்களானால் அவர்களிடத்தில் நமக்கு வேலையில்லை என்றும் மாத்திரம் முடிவு செய்து கொண்டு நடந்து வந்திருக்கின்றோம். இந்த முறையில் இன்றையதினம் வேண்டாதவர்களாயிருப்பவர்கள் நாளை வேண்டியவர்களாகலாம்; வேண்டி யவர்களாயிருப்பவர்கள் நாளை வேண்டாதவர்களுமாகலாம். ஆதலால் அப்படிப்பட்ட சமயங்களில் நாமும் மற்ற யாவரும் மனவருத்தப்படாமல் இருப்பதற்கு எவ்வித உதவியும் யாரிடமிருந்தும் பெறாமலிருந்தால்தான் முடியும். அன்றியும் இந்தப்படி தைரியமாயும் உறுதியாயும் இருக்க வசதி இருந்தால்தான் நமது அபிப்பிராயத்தை நிலைநிறுத்தப் பாடுபடமுடியுமே ஒழிய தாட்சண்ணியம் இருந்தால் முடியவே முடியாது.
இவ்வியக்கத்தை ஆரம்பிக்கும் போதும் கூட நாம் “என்னையே எண்ணி இப்பெரும் பழி ஏற்றேன்” என்று ஒரு பாட்டில் சொல்லப்படுவது போல் நம்மையே நாம் பொருப்பாளியாகவும் உதவியாளனாகவும் எண்ணி யும் நம்பியுமே தான் இக்காரியத்தில் இறங்கினோமே யொழிய நமக்கு “தொண்டர்கள் உண்டு, தலைவர்கள் உண்டு, சினேகிதர்கள் உண்டு பண உதவி செய்பவர்கள் உண்டு” என்று நினைத்து அவர்கள் உதவி கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்து இவ்வியக்கத்தில் நாம் இறங்கவில்லை. ஆதலால் நமது கொள்கைகளை உத்தேசித்து வருகின்றவர்களை வரவேற்க வேண்டி யதும் போகிறவர்களைப் போகச் சொல்ல வேண்டியதும், ஒழுக்கமற்றவர்கள் என்று கருதப்பட்டவர்கள் தள்ளப்பட வேண்டியதும் இவ்வியக்கத்தின் கடமையாகிவிட்டது. இவ்விஷயத்தில் நமக்கு உள்ள உறுதிதான் இவ்வியக் கத்திற்குச் சொத்தும் அஸ்திவாரமுமேயொழிய வேறொன்றுமில்லை. இது சமயத்தில் இதை ஏன் எழுதவேண்டி வந்ததென்றால் சில தலைவர்களும் சில தொண்டர்களும் எதிரிகளாயும் எதிரிகளின் ஆள்களாயும் இருக்கின்ற இந்த சமயத்தில் மகாநாடு நடத்துவது சற்று கஷ்டமாயிருக்காதா? என்று சில நண்பர் கள் கவலைப்படுவதால் இதை எழுத வேண்டி வந்ததே தவிர வேறில்லை.
செங்கல்பட்டில் சிலர் ஏற்றுக் கொண்டபடி, மகாநாடு இவ்வருஷம் மார்ச்சு அல்லது ஏப்ரலில் நடத்த வேண்டியது அவசியமானது. அதற்கு இது வரை ரூ. 3000 போல் வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருக்கின்றது. இனியும் இரண்டாயிரம் ரூபாய் ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் கிடைத்து விடலாம். இது ஆனதும் மகாநாட்டின் வேலை துவக்கமாகிவிடும். பிறகு மேல் கொண்டு கிடைப்பதையும் வெளி வசூல்களையும் உத்தேசித்தே மகாநாட்டை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது பற்றி யோசிக்கப்படும். ஏனெனில் சென்ற மகாநாடு 10-ஆயிர ரூ. வரை செலவு செய்து இரண்டு நாளில் முடித்து விட்டதானது பலருக்கு ஏமாற்றமாயும் பொசுக்கென்றும் போயிருக்கும். ஆதலால் ஈரோட்டில் ஒரு வாரமாவது மகாநாடு நடத்த வேண்டும் என்று கருதுகின்றோம். ஏனெனில் ஒவ்வொரு தினமும் இயக்க சம்மந்தமான வேறு மகாநாடுகளும், தனித்தனி உபன்னியாசங்களும், கண்காட்சிகளும், நாடகங் களுமாக நடத்திக் காட்ட வேண்டுமென்று சில நண்பர்கள் ஆசைப்படுகின் றார்கள். அதுபோலவே சில வடநாட்டுப் பெரியார்களை இங்கு வரவழைக் கவும் உத்தேசித்திருக்கின்றோம். அநேகமாய் இம்மாதக் கடைசி வாரத்தில் இங்கு சுயமரியாதை மகாநாடு ஆபீசு ஒன்று திறக்கப்படும். திரு ராமநாதன் அவர்கள் அதன் முக்கிய நிர்வாகஸ்தராய் இருப்பார். அது சம்பந்தமான கடிதப் போக்குவரத்துகள் அவ்வாபீசுக்கே வைத்துக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்வதோடு மகாநாட்டில் வேலை செய்ய இஷ்டமுள்ள கட்டுப் பாட்டில் நிலை உள்ளவர்களும், உண்மையிலும் ஒழுக்கத்திலும் லட்சியமுள் ளவர்களுமான தொண்டர்கள் கடித மூலமாய் இப்போதே தெரிவித்துக் கொள்ளக் கோருகிறோம். அநேகமாய் மார்ச்சு முதல் வாரத்தில் தொண்டர் களுக்கு அழைப்பு வந்து விடும். உடனே வரத் தயாராய் இருப்பவர்களே எழுதவும்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 16.02.1930