துன்பத்தில் துயருறும் பெண்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்
சகோதரிகளே! சகோதரர்களே! சீர்திருத்தம் என்பது பற்றி இதற்குமுன் நண்பர்கள் பேசினார்கள். அவர்கள் பிரசங்கத்தில் உற்சாக மிகுதியினால் சொன்ன மிக உயர்ந்த பொருள்களையெல்லாம் பெரும்பாலும் நீங்கள் விளையாட்டாக எண்ணக் கூடும். இதுவரையில் அவர்கள் நமதியக்கத்தின் முற் போக்கின் பொருட்டு பட்ட கஷ்டங்களையும் எடுத்துக் கொண்ட சிரமங்க ளையும் அவர்கள் எண்ணி இன்றைய சீர்திருத்த மண வைபவத்தின் உற்சாகத் தில் பேசினார்கள். அவர்கள் ஒவ்வொருவர் கூறிய சொற்பொழிவுகளிலும் மிக உயர்ந்த பொருள்கள் விளங்கியது. இவைகளை எல்லாம் கேட்ட நீங்கள் சில மாறுதல்களை அடையக்கூடும்.
இதுவரையில் பார்ப்பனனையும், அவன் கொள்கைகளையும், அவனது பழக்கவழக்கங்களையும் கண்டித்து வந்தோம். நீங்களும் பார்ப்பனனை திட்டுகிறவர்கள் என்று எங்களை எண்ணி இருந்தீர்கள். பார்ப்பனனை திட்டிய காலம் மலையேறி போய்விட்டது. ஏனெனில் முதலில் பார்ப்பனனை திட்டிய பின்பே புத்தி சொல்லக் கூடிய நிலையில் இருந்தீர்கள். பார்ப்பான் இன்னின் னவை செய்கிறான், அதில் தீது இவைகள் என்பதை எடுத்துக் காட்டி பின்பு நீங்கள் அவனது ஏமாற்றத்தில் சிக்கக்கூடாது என்பதை எச்சரிக்கை செய்ய வேண்டிய காலம் இன்றில்லாமல் போய்விட்டது.
இனிமேல் உங்கள் முட்டாள் தனத்தைப் பற்றியே பேசவேண்டும். இதுவரையில் பார்ப்பனனை எடுத்துக்காட்டாக எடுத்துக்காட்டி அதன் மூலிய மாய் சொன்னதில் உள்ள உண்மையான உங்கள் நிலையை நீங்கள் நன் குணர்ந்து விட்டீர்கள். உணர்ந்ததிற்கு உதாரணமாகவே இன்று காரியத்தில் செய்ய காலம் வந்துவிட்டது. இன்றுவரை தமது நாட்டையும் நம்மையும் பாழ்படுத்தி வந்த பார்ப்பனனைப் பற்றி நான் கூறியதற்கு, பார்ப்பனனை நான் திட்டுவதால்தான் எனக்கு பிள்ளை குட்டி இல்லை என்றும், சிலர் பிள்ளைக் குட்டி எதுவும் இல்லை, அவனுக்கு பொறுப்பேது, அதனால்தான் பார்ப்பானைத் திட்டுகிறான், சாமியை பழிக்கிறான் என்றவர்களும், நாட்டிற்குக் கெட்டகாலம் பொல்லா காலத்துக்கு பிராமண தோஷமும் ஆகாத வேளைக்கு அன்ன துவேஷமும் என்று சொல்லி வந்தவர்களும் இன்று இதுவரை நம்மால் சொல்லப்பட்டது யாவும் சரிதான் என்று ஒப்புக் கொண்டது போலவே, இத்திருமணத்தை பார்த்த பின்பும் இதுவரையில் நண்பர்கள் பேசியதின் அருமையான உரைகளைக் கேட்ட பின்பும், சில உண்மைகளை உணர்ந்திருக்க கூடும். சென்னையில் இத்திருமணத்தை நடத்த முதலில் முடிவு செய்யப் பட்டிருந்தது. ஆனால், இத்தகைய சீர்திருத்த மணம் நடைபெறுவதால் உண்டா கும் உற்சாகத்தை இங்கு உபயோகப்படுத்திக் கொள்ளக் கூடிய அளவு சென்னையில் பயன்படாது போகும் என்பதாலேயே இத்திருமணத்தை இங்கு நடத்த நேர்ந்தது.
அங்கு எத்தகைய உண்மை உணர்ச்சியையோ, உற்சாகத்தையோ, காணமுடியாது. எதுவும் வெறும் வெளி வேஷமாகத்தான் மாறக்கூடும். நகரங் களில் எழும் எந்த ஊக்கமும் மக்களுக்கு உண்மையை உணர்த்தக் கூடிய தாகவோ, நல்ல பலனை உண்டாக்கக் கூடியதாகவோ இருக்க முடியவில்லை. ஆதலால் தான் கலியாணத்தை இங்கு நடத்தினோம்.
காலையில் நடந்த திருமணத்திற்கு 50, 60 – க்கு மேற்பட்ட தந்திகளும், 150, 200க்கு மேற்பட்ட கடிதங்களும் வாழ்த்துச் செய்திகள் மூலமாய் கிடைத்தன. இதை அனுப்பியவர்கள் வேஷக்காரர்களல்ல. பொறுப்பற்றவர்களும் சாதாரண மானவர்களுமல்ல. நமது மாகாணத்தில் அறிவாளிகள் என்பவர்களாலும், பொறுப்புள்ளவர்கள் என்பவர்களாலும் அச்செய்திகள் அனுப்பப்பட்டது. உதாரணமாக திவான், மந்திரி, இவர்களிடமிருந்தும், ஜில்லா போர்டு தலைவர் கள், கட்சி தலைவர்கள் இவர்களிடமிருந்தும், இன்றைய திருமண முறையை ஆதரிக்கு முறையில் வாழ்த்துச் செய்திகள் கிட்டியது. அவைகள் காலை மணம் நடைபெறும் போது படித்துக் காட்டியதும் உங்களுக்குத் தெரியும். மைசூர் திவான் ஜனாப் மகமத் மிர்ஸா இஸ்மாயில், நமது மாகாண மந்திரிகள் கனம் எஸ்.முத்தையா முதலியார், டாக்டர் சுப்பராயன், கவர்ன்மெண்டு நிர்வாக மெம் பர் பெரியார் ஜனாப் ஸர் முகமது உஸ்மான், சௌந்திரபாண்டியன் இவர்களிடமிருந்து வாழ்த்துத் தந்திகள் கிடைத்தது. இது எதைக் காட்டுகிறது?
இதுவரையில் நாம் சொல்லி வந்த நமது லட்சியங்கள் காரியத்திலும் நடத்த ஆரம்பித்து விட்டதால் மிக பெரியவர்கள் எல்லாம் இதை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சென்றவாரம் குடி அரசில் பெண்களைப் பற்றிய வரை கூறும்போது சமூகக் கட்டால் கஷ்டப்படும் பெண்கள் தங்கள் கஷ்டத்தை நிவர்த்தித்துக்கொள்ள விரும்பினால் வீட்டைவிட்டு ஓடிப்போக வேண்டு மென்று கூறினேன். ஒன்றைப் பற்றி நன்கு சிந்தித்து அதன் லாப நஷ்டங்களை அனுபவ முறையிலும் சிந்தித்து பின் முடிவு செய்த பின் அதை அனுபவ முறையில் செய்து காட்ட பின்வாங்கக் கூடாது. காதல், காதல் என்று பேசப் படுகிறது, காதலைப் பற்றியும் அதை வளர்ப்பதைப் பற்றியும் நமது நாட்டில் உள்ள நூல்கள் அளவு கடந்ததாகும். ஆனால் காதல் என்பதில்லை. என்னைப் பொறுத்தளவில் கூறுகிறேன்; கலியாணமாகிய 5 – 6 வருடங்களுக்கு பின்பே எனது மனைவியுடன் நிற்பயமாய் என்னால் பேச முடிந்தது.
கலியாணமென்பது, வேஷ்டி தோய்ப்பது போலவும், குளிப்பது போலவும், பல் விளக்குவது போலவும் இன்று கருதப்பட்டுவருகிறது. ஆனால். இந்த அளவுக்கு அனுபவத்தில் கலியாணத்தை நடத்துபவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம் மிக அதிகமாகும். 10-18 பொருத்தங்களும், 1,8,9 -வீடு கட்டிய ஜாதகங்களும் இவைகளுக்காக பார்ப்பானுக்கும் ஜாதகக்காரனுக்கும் கொடுக் கும் பணங்களும், இவைகளுக்கெல்லாம் செலவிடப்படும் காலம், அறிவு இவைகளும் சொல்ல முடியாதனவேயாகும். இத்தகைய மனிதத் தன்மையற்ற மனப்பான்மை தொலைய வேண்டும்.
குருசாமி தனது திருமணத்தைப் பற்றி பேசும்போது கஷ்டமில்லை என்று சொன்னார். அது தவறு அவருக்கு கலப்புமணம் நடத்த வேண்டும் என்ற செய்தி வெளிவந்ததிலிருந்து வந்த கஷ்டங்கள் சொல்லக் கூடியதல்ல. கடைசியாக அவர் மணக்காலம் நெருங்க ஆரம்பித்ததும் அவரது டிரஸ்டி அவருக்கு சேர வேண்டிய இவ்வருட நெல் விற்ற பணம் அனுப்பாதிருக்குமாறு அவர் ஜாதியார்கள் தடுத்தார்கள். அவருக்கு நெருங்கிய பந்துக்களில் ஆண் களும் பெண்களும் பலர் சென்னைக்கு வந்து அவருக்கு இனியேற்பட விருக்கும் கஷ்டங்களை கூறினார்கள். அவரின் தங்கை கிணற்றிலிருந்து விழுந்து மிக அபாய நிலையில் இருப்பதாகவும், வந்தால் முகதரிசனம் கிடைக் குமென்றும் ஒரு தந்தி 7-தேதி அவருக்குகிட்டியது. இன்னும் வெளியில் சொல்வதற்கில்லாத பல கஷ்டங்களுக்கு இடையிலேயே அவர் இத் திருமணத்தை நடத்திக் கொள்ள முடிவு செய்தார்.
அடுத்தபடியாக தனக்கு தனது சமூகத்தில் தக்கபடிப்பும் ஒத்த வயதும் உள்ள பெண் கிடைக்கவில்லை என்றார். அது தவறு அவருக்கு 50 ஆயிர ரூபாய்க்கு மேல் சொத்துடன் ஒரு பெண் கிடைக்க இருந்தது. அதை அவர் விவாகம் செய்து கொண்டிருக்கலாம். பணத்துடன் ஓர் பெண் கிட்டிவிட்டால் இவர் பின் ஒத்த வயது ஒத்த படிப்பு இவைகளுக்காக கஷ்டப்பட வேண்டிய தில்லை. இதற்கு எத்தனையோ வழிகளுண்டு, இன்றைய ஜன சமூக வாழ்க்கை யில் பெரும் தனவந்தர்களில் பலர் இதற்கு உதாரண புருடர்களாகவும் விளங்கு கிறார்கள். ஒரு நாடு சுபிக்ஷமுற்று வாழ வேண்டுமானால் அந்நாட்டு மக்கள் ஒரே ஒழுக்க முள்ளவர்களாக இருத்தல் அவசியம். ஒழுக்கமென்பதோ, கற்பென் பதோ, ஆண் பெண் இருபாலருக்கும் சொந்தமானதேயன்றி பெண்களுக்கு மட்டுமல்ல. இன்றைய சீர்கேடான நிலைக்கு பெண்மக்கள் மிருகங்களிலும் கேவலமாகக் கருதப்பட்டதும், அவர்கள் பிள்ளை பெறும் இயந்திரங்களாக எண்ணப்பட்டதும், மனித ஜென்மத்துக்கும் பெண்களுக்கும் சம்பந்தமே இல்லையென ஆண்கள் மதித்து வந்ததும், இவைகளின் சவுகரியத்தினால் இவன் ஒழுக்கம் என்பதைவிட்டு நாளாவட்டத்தில் வெகு தூரம் விலகி அதற்கும் இவனுக்கும் சம்பந்தமில்லாது இன்று வாழ்வதே காரணமாகும். இவைகட்கெல்லாம் தெய்வீகம், மதக்கட்டளை என்ற விவாக முறைகள் இருந்ததே காரணமாகும். இன்று நடந்த கலியாணத்தில் பழைய பழக்க வழக்கங்கள் என்பது கூடுமானவரையில் அறவே நீக்கியே நடைபெற்றது. இதில் தெய்வீகத்துக்கு இடமில்லை. ஆனால், ஒழுக்கத்திற்கும் ஒத்த குடும்ப வாழ்க்கைக்கும் இதிலிடமுண்டு.
ஒரு கடவுளும், அதன் மதமும் அதன் மேல் பின்பற்றும் மக்களை சரிசமமாக பாவிக்க வில்லையானால், அம் மதமும் அக்கடவுளும் யோக்கிய முடையதாக இருப்பதற்கில்லை. அதைச் சொல்லி பிழைப்பவர்களும், அதை நம்பி கட்டி அழுபவர்களும் கூட யோக்கியர்களாக இருப்பார்களா? இருக்க முடியுமா? என்பதை நீங்களே யோசித்து முடிவுசெய்யுங்கள். மற்றும் கலப்பு மணங்களும், விதவா மணங்களும் நாட்டில் வரவர மிக அதிகமாகி வருவது பற்றியும், சாரதா சட்டத்தின் அவசியத்தை நன்குணர்ந்த பார்ப்பனர்கள், அது நல்லதேயானாலும் அதனால் இதுவரையில் சாத்திரத்தின் பேரால் ஏமாற்றிய மதப்புரட்டுக்கு ஆபத்து வந்துவிடுமே என்ற பயத்தினால்தான் அதை எதிர்க்கிறார்கள்.
குறிப்பு : 08.12.1929 இல் ஈரோடு காரைவாய்க்கால் கரையில் நடைபெற்ற குருசாமி – குஞ்சிதம் திருமண ஆதரவு கூட்டம் – சொற்பொழிவு.
குடி அரசு – சொற்பொழிவு – 22.12.1929