புதிய சகாப்தம்
திரு.கோகலே, ரானடே, தாதாபாய் நௌரோஜி முதலிய தலைவர்கள் நம் இந்தியாவில் ஒரு சுதந்திர தாகத்தை உண்டுபண்ணிவிட்டார்கள் என்று பொதுவாக நாமறிவோம். இது முதற்கொண்டுதான் நம் நாட்டில் சுதந்திர கிளர்ச்சியும் ஒரு பொது உணர்ச்சியும் ஏற்பட்டது என்பதையும் மறக்கமுடியாது. ஆனால் அது செயற்கைக் கிளர்ச்சியாகவும், இயற்கைக்கு மாறுபாடானதாகவும் இருந்ததனாற்றான், இருப்பதனாற்றான் இன்று வரையில் இவ்விந்தியா சுதந்திரம் அடையமுடியாமல், பெர்க்கன் ஹெட் பிரபுவின் இழிதகையான பழிச் சொற்கட்கும், ஆதிக்க வெறிச் சொல்லுக்கும் இலக்காய் இருக்கிறது.
ஏனெனில், நம்மிடை பிரசாரத்தின் பயனாய் பரவுதல் செய்யப்பட்ட சுதந்திர உணர்ச்சியானது ‘தேசியம்’ என்று கூறப்பட்ட போதிலும்கூட ஒரு மிகக் குறுகிய வகையில் இயக்கப்பட்டு வந்தது உண்மையானதாகும். என்னை? இதுவரையில் நடைபெற்ற கிளர்ச்சி, சுதந்திரப் போராட்டம், ஒத்துழையாமை, வரிகொடாமை, பகிஷ்காரம் இவைகட்கு எல்லாம் அடிப்படையாய் இருந்தது நிறவேற்றுமை என்பதில் ஐயமில்லை.
எப்பொழுது வெள்ளையர்கள் நம்மை அதிக ஈனமாய் நடாத்துகின்றார்கள் என்று நாம் நினைக்கின்றோமோ, அப்பொழுதெல்லாம் ஒரு கிளர்ச்சி செய்வதும், பின்னர் இக்கிளர்ச்சி ஓய்ந்து விடுவதும் வழக்கமாகவே இருந்து வந்ததே யொழிய, சுதந்திரத்தாகம் தைல தாரையைப் போல் நம்மக்களின் மனத்தில் நிலவவே இல்லை.
இதுதான் நமது இந்தியாவின் பரிதாபிக்கத்தக்க நிலைமை; இதை மாற்றி நினைத்தாலும் நினைவளவில் ஏற்படும் சுதந்திரக் கனவு கூட நிலவரமாய் இருக்காது என்பதும் உண்மை.
இதற்குக் காரணம், நம்மக்களின் அறியாமையே என்று கூற வேண்டும். அறிவு உதயமாய், உச்சத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற மேனாட்டு மக்கள் கையில் சிக்குண்டிருக்கும் நாம், அவர்களிடமிருந்து நமது நாட்டை அடைய நமக்குத் தலைமையாக வேண்டியது அறிவுடைமையே தவிர சுதந்திரத் தாகமன்று, அறிவுடைய மக்கட்குச் சுதந்திரத் தாகம் ஏற்பட்டிருப்பின் அத்தாகம் நிலவரமாக ஒரேமுறையாக ஓங்கிப்படர்ந்து செழித்து சுதந்திரக் கனி உதவியிருக்கும் என்பதில் ஐயமில்லை. அறிவில்லாத மக்கள் கையில் உள்ள சுதந்திரத் தாகம், பேடி ஒருவன் மணந்த பெண்ணையே ஒக்கும். இதனாற் பயனில்லை. அதனாற்றான் தாதாபாய் நௌரோஜி காலத்தில் துவக்கப்பட்ட நமது சுதந்திரப்போராட்டம் வெள்ளையர்களின் நகைப்புக்கும் கேலிக்கும் ஏமாற்றுப் பேச்சுக்கும் இலக்காயிற்றே தவிர, ஒரு சிறிய துறையிலும் வெற்றி அளிக்கவில்லை. இச்சுதந்திர தாகம் பழைய மூட வைதிக சகாப்தத்தின் இறுதியில் எழுந்தது.
ஆனால், இப்பழைய சகாப்தம் அழிந்துவிட்டது என்றே சொல்லலாம் இனிமேல்தான் இந்தியாவின் சுதந்திர உணர்ச்சிக்கு வெற்றி ஏற்படும் காலம் அணுகிவிட்டது. இப்பொழுதுதான் மக்கள் மனதில் பண்டைய மூடப்பழக்க வழக்கங்களும், உயர்வு தாழ்வுக் கற்பனைகளும் தகர்க்கப்படுதல் அவசிய மென்றும், பகுத்தறிவுக்கு முரணாக மதம் வந்து எதிர் நின்றாலும், முதலில் அந்த மதத்தை ஒழித்துவிட்டு மறுவேலை பார்ப்பதும் என்றும் தோன்றி விட்டது. இதன் அறிகுறியாய் தென்னிந்தியாவில் சுயமரியாதை இயக்கம் என்னும் பெயர்கொண்டு ஒரு அறிவு இயக்கமும், பம்பாய் மாகாணத்தில் புரோகித எதிர்ப்பு இயக்கம் என்னும் பெயர் கொண்டு ஒரு அறிவு இயக்கமும், பஞ்சாப் மாகாணத்தில் யுக்தி வாத சங்கம் என்னும் ஒரு அறிவு இயக்கமும் தோன்றி இப்பொழுது அந்தந்த மாகாணங்களில் இவ் வியக்கக் கொள்கைகள் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன. வங்காளத்திலும் முல்லாக்கள் எதிர்ப்புச் சங்கம் என்று ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இவ்வியக்கத் தலைவர்களெல்லாம் பழுத்த தேசிய அமிதவாதிகளாய் இருப்பதும் மிகவும் குறிப்பிடற்பாலது. உதாரணமாக நமது சுயமரியாதை இயக்கத் தலைவர்களின் தேசிய உணர்ச்சியும் அவர்கள் தேசியத்திற்கு ஆற்றி வந்த தொண்டும் இம்மாகாணம் அறியும் – பார்ப்பனரறி யாவிடினும் இதேபோல் பம்பாயில் புதிதாகத் தோன்றி இருக்கும், ‘புரோகித எதிர்ப்புச்’ சங்கத்துத் தலைவராக, திரு.நாரிமன் அவர்களே இருந்து வருகின்றார். மற்றும் திரு.டயர்சி, அம்பேத்கார் முதலான முதிர்ந்த அறிவாளிகளும் இச்சங்கத்தில் சார்பு கொண்டிருப்பதும் கவனித்தற்பாலது. எனவே, இப்பொழுது இந்தியா முழுதும் அறிவு இயக்கங்கள் தோன்றி வருவதும், இவ்வியக்கங்கள் தேச பக்தி உடைய பெரியார்களையே தலைவர்களாகக் கொண்டிருப்பதும், இவ்வியக்கங்கள் தீவிரமிக்க மன எழுச்சி படைத்த இளைஞர்களைக் கவர்ந்து ர்ப்பதுவும், இந்தியாவில் உதயமாயிருக்கும் ஒரு புதிய சகாப்தத்தின் அறிகுறி களாகவே தோன்றுகின்றன. இச்சகாப்தத்தில் நமது மக்களின் சுதந்திரக் கோரிக்கை ஈடேறும் என்பதை நாம் மீண்டும் எடுத்துக்கூற வேண்டுமோ?
ஆனால், பழைய மூட மதி புதிதாகத் தோன்றிய அறிவு இயக்கத்தைப் பார்த்து, “நான் நெடுநாளாக, பன்னூற்றாண்டுகளாக கடவுள், மதம், புரோகிதம், சடங்கு, கலை இவைகளின் பேரால் இவ்விந்தியாவில் வளர்ந்து வந்தேனே; நீ தோன்றியதும்; என் விருத்தாப்பிய திசையில் என்னை மக்கள் கைவிட்டு விட்டனரே; நான் இறந்துதான் போவேன்; பழைமை பொருட்டு, கிழவன் என்று என்மீது மனமிரங்கி என்னைக் காப்பாற்ற மாட்டாயா?” என்கின்றது. நமது அறிவியக்கம் “கிழப்பிணமே! நீ இது வரையில் இழைத்த கொடுமைகளுக்கும் தீமைகளுக்கும் அறிகுறி இவ்விந்தியாவின் அடிமைத் தன்மைதான்; அதை நினைக்குந்தோறும் உன்னை ஏன் இன்றே கழுத்தை முறித்துக் கொன்று விடக்கூடாது என்று நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த சமயத்தில் உன்னைக் காப்பாற்றுவதாவது. செயற்கை மரணம் நேரிடுவதற்கு முன்பாக நீயாகவே தற்கொலை செய்து கொள்” என்கின்றது. இந்நிலையில் பண்டைய சகாப்தத்தின் பிரதிநிதிகளாய காசி கிருஷ்ணமாச்சாரி, எம்.கே, ஆச்சாரி, சத்திய மூர்த்தி, சேஷ அய்யங்கார், சங்கராச்சாரிகள் முதலானவர்களின் கதி என்னாகும் என்பதையும், உண்மைத் தேசியமும் இத்தேசியத்திற்கு உண்மை வெற்றியும் யாரால் ஏற்படக்கூடும் என்பதையும் நம்மக்களே உணர்ந்து கொள்ளக்கடவர்.
குடி அரசு – கட்டுரை – 10.11.1929