திரு.வேணுகோபால் நாயுடுவின் மரணம்
பட்டுக்கோட்டையில் திரு, வேணுகோபால் நாயுடு அவர்கள் இறந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் எமது மனம் துடித்த துடிப்பைச் சொல்லிவிட முடியாது. சில நிமிஷங்கள் வரை நிம்மதியில்லாமல் மனது தத்தளித்துக் கொண்டிருந்தது. இப்போதும் இச்சம்பவத்தை நினைக்குந் தோறும் மனம் திடுக்கிடுகிறது. திரு.வேணுகோபால் நாயுடு அவர்கள் பார்ப்பனீயம் நிறைந்த பட்டுக்கோட்டையில், நமது மக்களுக்கு, அதுவும் முக்கியமாக இளைஞர்களுக்கு எவ்வளவு ஆதரவாகவும் உதவியாகவும் இருந்தார்கள் என்பது அவ்விடத்தில் இன்று இளைஞர்கள் படும் துயரத்தை நேரில் பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும். மாணவர்களுக்கு நற்புத்தி புகட்டக்கூடிய பிதாவும், ஏழைமக்களுக்கு வேண்டுவன அளித்து அவரது துயர்நீக்கி வந்த அண்ணலும், பார்ப்பனீயமும் புரோகிதப்புரட்டு கண்டு அஞ்சும்படியான சுயமரியாதை வீரரும், வக்கீல் தொழிலில் ஒரு பிரபலஸ் தரும், பொதுவாக, பார்ப்பனரல்லாதார்களுக்கே தஞ்சை ஜில்லாவிற்கு ஒரு தலைவருமாக விளங்கிய திரு. வேணுகோபால் அவர்களை இழந்தது நமக்கு ஒரு பெரிய நஷ்டம் என்றே சொல்வோம். அவர்களது முற்போக்கான கொள் கைகளும், தன்னலமற்ற சமூகத்தொண்டும், தைரியமாய் தனது அபிப்பி ராயத்தை யாரிடத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் வெளியிடக்கூடிய தைரியமும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வளவு பக்க பலமாயிருந்தது என்பதை நினைக்குந்தோறும் அற்றொணாத் துயரம் மேலிடுகிறது. இனி பொதுவாக தஞ்சை ஜில்லாவாசிகளும் குறிப்பாக பட்டுக்கோட்டைவாசிகளும் செய்ய வேண்டியது யாதெனில், காலஞ்சென்ற நமது அன்பர் திரு.வேணுகோபால் அவர்களைப் பின்பற்றி, அவர்கள் செய்துவந்த வேலையை நாமும் செய்வ தோடு, அவர்களது ஊக்கமும் உற்சாகமும் என்றும் நமக்கும் இருக்குமாறு நமது சமூகத் தொண்டை செய்வதுதான். திரு.வேணுகோபால் அவர்களின் குடும்பத்தாருக்கும், இதர பார்ப்பனரல்லாத சமூகத்தார்களுக்கும் நமது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 29.12.1929