“ரிவோல்ட்” ஆரம்ப விழா

ஈரோட்டில் என்றுமில்லாத குதூகலமும் உணர்ச்சியும்

சகோதரர்களே! நம் பிராமணரல்லாதார் கக்ஷி எவ்வளவோ முக்கிய அடிப்படையான நோக்கங்களைப் பற்றி ஆரம்பிக்கப்பட்டிருப்பது நம் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு நன்கு தெரிந்ததே. ஆனால் வடநாட்டில் உள்ளவர்களுக்கு இந்த இயக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள போதிய ஏது இல்லாததும் வட நாட்டினர் இவ்வியக்கத்தைப் பற்றிச் சிறப்பாக அறிந்து கொள்ளாமலிருப்பதும் அவ்வளவு ஆச்சரியமல்ல. சிறிது நாட்களுக்குமுன் இப்பக்கங்களுக்கு வந்திருந்த வடநாட்டுத் தலைவரில் ஒருவராகிய திருவாளர் கோஸ்வாமி அவர்கள் சில நண்பர்களுடன் பேசிகொண்டிருக்கும்
பொழுது திரு. கோஸ்வாமி கேட்டதாவது:- “என்ன, இம் மாகாணத்தில் முக்கியமாக 2,3 பேர்கள் சேர்ந்துகொண்டு, பிராமணரல்லாதார் கக்ஷி என்று வைத்துக் கொண்டு இருக்கிறார்களாமே? அதன் அர்த்தமென்ன? அது வேண்டியது அவசியம் தானா” என்று கேட்டார். ஏனென்றால் அவருக்கு தென்னாட்டின் சமாச்சாரமே தெரியாது.

உடனே நான் (ஈ.வெ.ரா) திரு. ஷண்முகம் செட்டியார் எம்.எல்.ஏ. அவர்களைக் காட்டி “இவர்களை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர் “ஆகா! நன்றாகத் தெரியும். நானும் அவரும் ஒரே கவுன்சிலில் மெம்பராக இருக்கின்றோம். தென்னிந்தியாவிலிருந்து வரும் கவுன்சிலர்களில் பேச்சு வன்மையிலும், அரசியல் ஞானத்திலும் திறமை பெற்றவர்” என்றார்.

நான் உடனே கோஸ்வாமியிடம் “இவர், இப்பக்கங்களில் உள்ள சில கோயில்களில் உள்ளே செல்லமுடியாத ஒரு தீண்டாதவராக கருதப்பட்டவர்” என்று சொன்னேன்.

உடனே கோஸ்வாமி பிரமித்து விட்டார்கள். இது உண்மைதானா வென்றும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். பிறகு எல்லா விவரங்களையும் நம் இயக்கத்தின் நோக்கத்தையும் சொன்னோம். அவர்களும் அதை அங்கீகரித்தும் தங்களுக்கு இவ்விவரங்களெல்லாம் தெரிய வராது என்றும் எங்கள் வடநாட்டில் இப்படி எல்லாம் இல்லையென்றும் இவ்வியக்கம் அவசியம் என்றும் தாங்களும் ஒத்துழைப்பதாகவும் சொன்னார்கள். வட நாட்டிலுள்ளவர்களுக்கு நம்மியக்கம் இன்னதென்று தெரியமுடியாமல் இருப்பதால் நம் இங்கிலிஷ் வாரப்பத்திரிகை அவர்களுக்கு நம்இயக்கத்தின் நோக்கத்தை ஊட்டும், அந்த நோக்கமாகவே ‘ரிவோல்ட்’ வெளியாகிறது.

நமது எதிரிகள்
முக்கியமாக நமக்கு எதிரிகள் பிராமணர்கள் என்று எண்ணி
யிருந்தோம். ஆனால் அவர்கள் கூடுமானவரை எதிர்த்துப் பார்த்தார்கள், பின் தங்கள் பித்தலாட்டக் காரியம் இங்கே செல்லாது என்று கண்டு அவர்களே இவ்வியக்கம் அவசியம் வேண்டியது தான் என்று வெளியள
விலாவது சொல்லிக் கொள்ளுகிறார்கள்.

ஆனால், நமக்கு எதிரிகள் நமக்குள்ளாகவே இருக்கிறார்கள். ஏறக்குறைய தென்னாட்டிலும், முக்கியமாக தமிழ் மக்களிடை நமது நோக்கம் எல்லாருக்கும் பிடித்திருக்கும். ஆனால் இது பிடியாதது யாருக்கு என்றால், நம்மவர்களிலே மதப் பைத்தியம் பிடித்தவர்களுக்கும், பண்டிதர் என்பவர்களுக்கும் 100 க்கு 90 பங்கு பிடியாது.

ஆனால் இப்பொழுது பிராமணர்கள் எவரும் நம்மை எதிர்க்க நேரில் வருவதே கிடையாது. ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள சில பிரமுகர்களும், தங்கள் கக்ஷியானது பிராமணர்களை உத்தியோகத்துக்கு வரவொட்டாமல் தடுத்து அந்த உத்தியோகங்களை நாம் வகிக்க வேண்டும் என்ற நோக்கங் கொண் டிருக்கின்றது என்று நினைக்கிறார்கள். அது மாதிரியே திரு. ஏ. ராமசாமி முதலியார் அவர்களும் தனக்கு ஒரு உத்தியோகமும், தன்னால் சிலருக்கு உத்தியோகவும் வாங்கிக் கொடுக்கக்கூடிய யோக்கியதையும் செல்வாக்கும் வந்தவுடன் தம் கக்ஷியின் முக்கிய நோக்கமாகிய வகுப்புவாரிப் பிரதிநிதித் துவமே (தனித்தொகுதியே) வேண்டாம் என்கின்றார்கள். நம் இயக்கத்தின் முக்கிய நோக்கமானது பழைய மூடபழக்க வழக்கங்களை அடியோடு ஒழிப்பது, வேதம், புராணம், இவைகளின் புரட்டுகளை வெளியிடுவது, நம் பகுத்தறிவை உபயோகித்து மேல் நாட்டார்களைப் போல் அநேக முன்னேறத் தக்க அற்புதங்களை கண்டு பிடிப்பதுமேயாகும். இந்த நோக்கத்தோடேயே இன்று ரிவோல்ட் பத்திரிகையைத் திறப்பதற்கு நம் இயக்கத்துக்கு ஒரு மணியாகிய திரு. நாடார் அவர்கள், அவர்களுடைய அநேக சிரமங் களுக்கிடையே இவ்விடம் விஜயம் செய்திருக்கிறார்கள். அவர்களைப்பற்றி நான் முன்பே முனிசிபல் வரவேற்பின் போதே சொன்னேன். அத்துடன் இவ்விழாவை நடத்திக் கொடுப்பதற்கு தலைமை வகிக்கும்படி நமது ஜில்லா தலைவரும் நம் நண்பருமான திரு. சி.எஸ். ரத்ன சபாபதி முதலியார் எம்.எல்.சி அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

குறிப்பு : 06.11.1928 ஆம் நாள் ஈரோட்டில் ‘ரிவோல்ட்’ ஆரம்ப விழா சொற்பொழிவு.


குடி அரசு – சொற்பொழிவு – 18.11.1928

You may also like...

Leave a Reply