திரு. வி. கல்யாணசுந்தர முதலியார்

திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரவர்கள் தமது 20.6.28 ² ‘நவசக்தி’ பத்திரிகையில் ‘திறந்த மடல்’ என்னும் தலையங்கத்தின் கீழ் நமக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், நாம் சென்ற வாரக் ‘குடி அரசு’ பத்திரிகையில் எழுதிய விஷயங்களை தாம் ஒப்புக் கொள்ள வில்லை என்றும் ‘நவசக்தி’யில் கண்ட மற்ற – நாம் கண்டிக்காமல் விட்ட – விஷயங் களை நாம் ஒப்புக் கொண்டதாக தாம் கொள்ளுவதாகவும் எழுதி யிருக்கிறார். இதைப்போன்ற அறிவுடைமை பயித்தியக்கார ஆஸ்பத்திரியிலும் கண்டு பிடிக்க முடியாது என்றே சொல்லுவோம். மற்றவைகளைப் பற்றி நாம் பின்னர் எழுதுவோம் என்று குறிப்பிட்டது திரு. முதலியாரின் கண்களில் படாமல் போனது ஏனோ அறியோம்.

மற்றும் நமது கட்டுரையை நான்கு பிரிவாக்கி

முதலாவதாக வசைமொழி என்றும், அதை இனி நாம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், நமக்கு புத்தி சொல்லி வருகிறார். இது அவரு டைய அதிகப் பிரசங்கித்தனத்தையே காட்டுகின்றது. தற்கால பண்டித உலகத்தில் இது ஒரு அதிசயமல்ல. இதையே இவர் வசைவு என்றால் திரு. முதலியார் அவர்களின் யோக்கியதைக்கேற்ற மாதிரி அவர் போக்கை முழுதும் பின்பற்றியே எழுதியிருந்தால் அவர் அதற்கு என்ன பேர் இடுவா ரோ நாம் அறியோம். நம்மை சிற்றினம் என்று சொன்ன திரு. முதலியாரின் இனத்தை விரிக்க நாம் துணிந்திருந்தால் அதை என்ன வென்று சொல்லு வாரோ நாம் அறியோம். அன்றியும் பின்னும் ஒரு காலத்தில் திரு. முதலியார் அவர்களுடன் பழமை பாராட்ட நேரிடும் என்றே அவர் இனத்தை மனப் பூர்வமாக மூடி வைத்தோம். இதை திரு. முதலியார் ஒப்புக் கொள்ளாவிட்டால் நமக்கு கவலை இல்லை. சமயம் வரும் போது, நாம் எவ்வளவு மூடி வைத்தோம் என்பதை அவர் உணரக்கூடும் என்கிற தைரியம் நமக்குண்டு. ஆதலால் இனிமேலாவது திரு. முதலியாரவர்கள் நம் போன்றோருக்கு அறிவுறுத்தும் தன்மையை விட்டு தன்னையே அவர் திருத்திக் கொள்ள முயல வேண்டுமென்று அவருக்கு அறிவுறுத்த நமக்கு யோக்கியதை இல்லாவிட்டாலும் அந்நிலை ஏற்பட நாம் ஆசைப்பட உரிமை உண்டு என்று நினைக்கின்றோம்.

இரண்டாவதாக ‘நவசக்தி’யின் மொழிகளில் சிலவற்றை நாம் தவறாக கொண்டதாக குறிப்பிட்டு தனது கல்வித்திறன் முழுவதையும் அதற்காக செலவழித்திருக்கின்றார்.

இதைப்பற்றிய விசாரணையை வாசகர்களுக்கே விட்டு விடுகிறோம். திரு. முதலியாரவர்களின் எழுத்தையோ மொழிகளையோ பிறழக் கொள்ள வில்லை என்று ஒரு மனிதன் திரு. முதலியார் அவர்களிடம் பேர் வாங்க வேண்டுமானால் அது உலகத்தில் மக்கள் பிறவிக்கு ஆகக்கூடிய காரியமா? என்பது நமக்குப் பெரிய மயக்கமாகவே இருக்கின்றது. ஆழந்தெரியாமல் காலைவிட்டுக் கொள்வதும் பிறகு மற்றவர்கள் மீது பிறழக்கொண்டதாகக் குறை கூறுவதும் அவரோடு கலந்திருந்த முறையில் நாம் கண்டு பிடித்த ஒன்றாகும்.

மூன்றாவதாக திரு. முதலியார் பொறித்த சீர்திருத்தக் கட்டுரையை பொதுநெறி பற்றி எழுதியதாகவே திரும்பவும் எழுதி தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்கிறார்.

திரு. நாயக்கர் மீது போர்தொடுக்க ஆரம்பித்துவிட்டோம். உதவிக்கு நீ வா, நீ வா என்று கதவு வைத்த வீடுதோறும் காத்துத் திரிந்ததும், விலாசம் தெரிந்த பேர்வழிகளுக்கெல்லாம் சேதி அனுப்பினதும் திரு. முதலியாரவர்
களாலேயே சமீபகாலத்தில் மடையன், அயோக்கியன், துர்த்தன், இழிமகன் என்றும் இன்னும் இன்னோரன்ன பலவாறாகச் சொல்லிக் கொண்டிருந்த நபர்களிடமெல்லாம் உயிர்துணை எதிர்பார்த்து இறைஞ்சியதும் ‘அறப்
போர்’ தொடுக்க ஆண்டவன் அருளைத் துணை கொண்டதும் இவ்வளவும் பெற்றும் போதாமல் உயிர்விடத் துணிவு கொண்டதும் ஆகிய மற்ற காரியங் கள் எதற்காக யாரை உத்தேசித்து எது முதற்கொண்டு ஏற்பட்ட கெடுதிக்காக என்பதை கருணை கூர்ந்து திரு. முதலியாரவர்கள் திருக்கரங்கொண்டு இப் போதாவது அருளுவாரா? என்று இறைஞ்சிவிட்டு அவ்விஷயத்தை தற்கால சாந்தியாக நிறுத்தி வைக்கின்றோம்.

நான்காவது புராணக்கலையை ஒட்டியது என்று குறிப்பிட்டுவிட்டு புராணத்தைப்பற்றிய தமது அபிப்பிராயத்தை முருகன் என்னும் புத்தகத்தில் முன்னமேயே குறிப்பிட்டிருப்பதாகவும் எழுதி அதில் உள்ள விஷயத்தை எடுத்து நான்கு கலம் நீட்டி தீட்டியிருக்கிறார்.

அவற்றுள் நாம் இது சமயம் இரண்டு இடங்களை மாத்திரமே எடுத்தாளுவோம். அதாவது, ஒன்று கடவுளைப் பற்றியது; மற்றது புராணங் களைப் பற்றியது. அவற்றுள் “கடவுளைப் பற்றியதில் – சைவ, வைணவ, பௌத்த சமயவாதிகள் அறநெறி பிறழ்ந்து ஒருவரோடொருவர் போரிட்டு ஒருவரை ஒருவர் தூற்றி எழுதிய ஏட்டுச் சுவடிகள் பல………..

இச்சமய வெறியர்கள் முருகன் – என்னும் தமிழ்ப் பெயரை விரும்பா தொழியினும் இயற்கை முதற்கு வேறுபெயர் சூட்டியாதல் வழிபட்டிருக் கலாம்? இயற்கையின் உட்பொருளை எப்பெயரால் வழுத்தினால் என்ன? இயற்கை, கடவுள் முருகன் என்னும் பெயர் தாங்கினால் என்ன? அரி, அரன், அல்லா, ஜோஹோவா முதலிய எப்பெயரிட்டு அழைத்தாலென்ன?”

என்று எழுதியிருக்கும் இடத்தை முதலாவதாக எடுத்துக் கொள்ளுகிறோம்.

இங்கு திரு. முதலியாரவர்கள் தம்மை இயற்கையவாதியாகக் கொள்ளு கின்றார் என்று கொள்ளுகிறோம்.

அதாவது ஆங்கிலத்தில் நேச்சுரலிஸ்ட் (சூயவரசயடளைவ) என்று சொல்லும் மதம்.

அதோடு இயற்கையை எந்த பெயரால் அழைத்தாலென்ன என்றும் அதை முருகன் என்று அழைக்க ஒருப்படாதவர்கள் வேறு எப்பெயரால் வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.

அன்றியும் முருகனைப்பற்றி ஒவ்வொரு புராணத்தில் ஒவ்வொரு விதமாக சொல்லப்பட்டிருக்கின்றது என்றும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

எனவே பல சமயக்காரர்கள், பல புராணக்காரர்கள், பல பேர் வழிகள் முருகனைப்பற்றி பல விதமாக எழுதியிருக்கிறார்கள் என்பது போலவே திரு. முதலியார் அவர்களும் தமது மதப்படி அல்லது தான் அறிந்தபடி ஒருவாறு முருகனைப்பற்றி திரு. முதலியார் அவர்களின் முருக புராணத்தில் எழுதி இருக்கிறார் என்றே வைத்துக் கொண்டு, இவைகளில் எந்த சமயக்காரரை, எந்த புராணத்தை, எந்த நபரை ஏற்றுக் கொள்வது என்பதைப்பற்றியும், எது சரி? எது தப்பு என்பதைப் பற்றியும், எவ்வாறு வழிபடுவது, எதற்காக வழிபடுவது என்பதைப் பற்றியும் மற்றொரு சமயம் ஆராய்வோம்.

இரண்டாவதாக புராணங்களைப் பற்றி எழுதியதில் “குப்பை என்று வழங்கப்படும் சுவடுகளில் பேர் பெற்று விளங்குவன புராணங்கள். அவை ஆரிய உலகினின்றும் நம் தமிழ் நாட்டிற்குள் புகுந்தவை. புராணங்கள் தமிழ் நாட்டின் முதல் நூல்கள் அல்ல.

புராணம் என்ற சொல்லே தமிழ்ச் சொல்லன்று” என்று எழுதிவிட்டு.

“பெரிய புராணம்” என்பது (மாத்திரம்) தமிழ் நாட்டில் தோன்றியதென்றும் அது பதினெண் புராணக் கூட்டத்தில் சேர்ந்ததல்ல வென்றும், “ஒன்று அல்லது இரண்டு போக மீதி உள்ள புராணங்கள் எல்லாம் வடமொழியினின்று மொழி பெயர்த்தது” என்றும் எழுதிவிட்டு “சமய வெறியர் கள் பலர் பிறர் சமயக் கடவுளர் நிந்தனை கொண்டு போலிக் கதைகள் புனைந்து புராணம் பாடத் தொடங்கினார்கள். காமுகர் சிலரும் புராணம் பாடி இருக் கிறார்கள். இப்புராணங்களிலுள்ள வருணனைகள் இயற்கையை மறைப்பவை யாயின, கதைகளோ விலங்குகளும் வெறுக்கத் தக்கன; இப்போலிப் புhணங்களால் கடவுள் நெறிக்கும் ஒழுக்கங்களுக்கும் கேடு விளைந்தது…….” என்றும் எழுதியிருக்கிறார்.

எனவே இவை இரண்டினுள்ளும் இயற்கை தோற்றந்தான் கடவுள் என்பதாக அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றியும் புராணங்கள், குப்பைகள் என்று எழுதியதைப் பற்றியும் அவைகள் ஆரியர் களால் புகுத்தப்பட்டன என்று எழுதியதைப் பற்றியும் அவைகள் பல சமய வெறியர்கள் பலரால் பாடப்பட்டவை என்று எழுதியது பற்றியும் அவை களால் உலகில் மக்கள் ஒழுக்கங்கட்கு கேடு சூழ்ந்தது என்று எழுதியது பற்றியும் நாம் திரு. முதலியார் அவர்களோடு போர் தொடுக்க கவலை கொள்ளவில்லை என்பதை திரு. முதலியாருக்கு வணக்கமாய் தெரிவித்து விடுகிறோம்.

இனி அவற்றுள் போருக்கு நிலைக்களனாய் எஞ்சி நிற்பது பெரிய புராணமேயாகும். “இது போன்ற ஒன்று அல்லது இரண்டு” என்பது எது என்பதையும் குறிப்பிட்டு அதை எதற்காக குறிப்பிட்டு மீத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்லியிருந்தால் நலமாயிருக்கும். ஆகிலும் அவை வெளியாகும் போது பார்த்துக் கொள்வோம்.

முதலாவதாக அப்“பெரிய புராணத்தை” திரு. முதலியார் என்னமாய்க் கருதிக் கொண்டிருக்கின்றார் என்பது நமக்கு சற்று புலனாக வேண்டியிருக்கின்றது. அது திரு. முதலியார் கருதி இருக்கும் இயற்கை கடவுளால் பூலோகத்திற்கு அனுப்பப்பட்டது என்கின்றாரா?

அல்லது அதில் உள்ள விஷயங்கள் திரு. முதலியார் அவர்களின் இயற்கை கடவுளின் திருவிளையாடல்கள் என்கின்றாரா?

அல்லது அதை ஒரு வான சாஸ்திரம் என்கிறாரா? அல்லது விஞ்ஞான சாஸ்திரம் என்கிறாரா?

அல்லது உடற்கூறு சாஸ்திரம் என்கின்றாரா? உலகக் கூறு சாஸ்திரம் என்கின்றாரா?

அல்லது “வேதாந்த” சாஸ்திரம் என்கின்றாரா? சித்தாந்த சாஸ்திரம் என்கின்றாரா?

அல்லது அதை ஒரு தேச சரித்திரம் என்கின்றாரா? அல்லது அதை தெய்வ சரித்திரம் என்கிறாரா? அல்லது அதை இகத்திற்குச் சாதனம் என்கிறாரா? ‘பரத்திற்கு’ சாதனம் என்கிறாரா?

கற்புக்கு வழி என்கிறாரா? களவுக்கு வழி என்கிறாரா?

அரசியலுக்கு அறிவு என்கிறாரா? மத இயலுக்கு அறிவு என்கிறாரா?

‘கடவுள்’ தன்மைக்கு நெறி என்கின்றாரா? மனிதத் தன்மைக்கு நெறி என்கின்றாரா?

அறிவுக்கு ஆதாரம் என்கின்றாரா? ஆராய்ச்சிக்கு ஆதாரம் என்கின்றாரா?

அல்லது அது திரு. முதலியாரின் இயற்கை கடவுளை உணர்த்த உதவுகின்றதா? அன்றி செயற்கைக் கடவுளை உணர்த்த உதவுகின்றதா? அன்றியும்,

முடிவாக அதிலுள்ள தெல்லாம் திரு. முதலியாரவர்கள் சத்தியமாய் நடந்தது என்பதாக ஒப்புக் கொள்ளுகின்றாரா அல்லது ஒரு சமயத்தாரால் மக்கள் நன்மைக்காக என்று பெரியோர்களால் கற்பிக்கப்பட்ட கற்பனைக் கதைகள் என்று ஒப்புக் கொள்ளுகின்றாரா?

திரு. முதலியார் அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அதை ஏற்றுக் கொள்ளுவதினாலேயே உலகில் உள்ள மற்ற மக்கள் எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டே தீரவேண்டும் என்கின்றாரா?
அன்றியும் யாராவது ஒருவன் அதை ஏற்றுக் கொள்ள ஒருப்படா விட்டால் அதற்கு காரணம்கூட சொல்லக்கூடாது என்கின்றாரா?

இன்னோரன்ன பிறவற்றிற்கு திரு. முதலியாரவர்களின் திரு. மனதி லுதித்த திருச்சமாதானம் என்னவென்பதை திருவாய் மலர்ந்தருளுவாரா? என்று விண்ணப்பித்துக் கொள்ளுகின்றோம்.

நிற்க, திரு. முதலியார் அவர்கள் மேலே குறிப்பிட்ட 20-6-28 ² தலையங்க முடிவில் நாயக்கரை முன்னிலைப்படுத்தி, “நண்பரே! தங்கள் பொருட்டு எனது காலம் வீணே கழிகின்றது. தாங்களும் நானும் சில அறிஞர் கள் முன்னிலையில் சமய சீர்திருத்த பொருள்பற்றி வாதம் நிகழ்த்தி ஒரு முடிவிற்கு வருவது நலம். கல்வி, கேள்வி ஆராய்ச்சிகளில் வல்ல சிலரிடமே சாலும். அன்னார் இன்னார் என நாமே தெரிந்தெடுத்துக் கொள்ளலாம். தங்கள் பதிலை விரைந்து எதிர்நோக்கும் திரு. கலியாண சுந்தரன். (முதலியார்) ஆசிரியர் ‘நவசக்தி’ இராயப்பேட்டை, சென்னை.” என்று எழுதி முடித் திருக்கிறார்.

திரு. முதலியார் அவர்களுக்கு எது முதல் இந்த பஞ்சாயத்து ஞானம் உதயமாயிற்று என்று கேட்கின்றோம்? “சிற்றின”த்தினிடத்தில் அவருக்குப் பஞ்சாயத்து எதற்கு? ஆண்டவன் அருள்கொண்டு உயிருக்குத் துணிந்து போருக்குத் தொடங்கினவர்கள் போர்க்கோலத்தையும் தமது படைவீரர் களையும் களத்தே போரிட்டு வெறுங்கையோடு பஞ்சாயத்தில் புகுவதன் கருத்து யாது என்பதும்

இப்பஞ்சாயத்தில் புகுவோரின் யோக்கியதை தானா தென்னாடு எழுதிற்று, வடநாடு குசும்பிற்று, தமிழ் நாடு கதறிற்று என்று தன்னாலே நேற்று வரை இழிந்துரைக்கப்பட்ட அவைகளிடம் தஞ்சம் புகுவது என்பனவாகிய விஷயங்களும் நமக்குப் புலனாகவில்லை.

அன்றியும் இவைகளிலிருந்து, திரு. முதலியாரவர்களின் பஞ்சாயத் திற்குக் காரணமாகிய சமய சீர்திருத்தம் இன்னது என்பதும் நமக்குப் புலனாக வில்லை; அவர் எச்சமயத்தவர்? எச்சீர்திருத்தம் விரும்புகின்றவர் என்பவை களும் நமக்கு விளங்கவில்லை. இவைகள் ஒன்றும் அறியாமலே எங்ங னேயாம் பஞ்சாயத்தில் புகுவது? என்பதும் நமக்கு விளங்கவில்லை. முடி வாக திரு. முதலியாருக்கு நாம் ஒன்று சொல்ல விழைகின்றோம்.

திரு. முதலியார்வாளே! நமது சீர்திருத்தமெல்லாம் போர் எல்லாம் நமது பெரிய புராணத்தையும் அது போன்றவைகளையும் “கடவுள்” களுக்காகவும் “கடவுள்” நெறிகளுக்காகவும், அந்நெறி உணர்த்திய பெரியா ருக்காகவும், ஏற்றுக் கொள்ளுகின்றவர்கள் போன்றாரிடமும் ‘நாஸ் திகம் என்பதாக ஒன்று இருப்பதாகக் கருதி அதைச் சிலர் பரப்புவதாகவும் கருதி அதை ஒழிக்க “ஆண்டவர்” அருள் கொண்டு உயிருக்கு துணிந்து கிளம்பிய வீரர்கள் போன்றாரிடமும்தாள் பெரிதும் இருக்கின்றது. அதற்குத் தாங்கள் எப்பஞ்சாயத்தைக் குறிப்பிடுகின்றீர்கள் என்பதைத் தங்களுக்குத் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். தங்களது அருளும் வீரமும் பெற்ற நேரம் வீணாவதில் நான் பரிதாபப்படுகிறேன். ஆனாலும் வேறு வழி இல்லாமல் தங்களது நேர்மை கொண்ட பதிலை எதிர்பார்க்கின்றேன்.

இப்படிக்கு தங்கள் உளத்தை மதியைக் கொள்ளை கொண்ட
“சிற்றினம்.”


குடி அரசு – தலையங்கம் – 24.06.1928

You may also like...

Leave a Reply