தென்னிந்திய சீர்திருத்தகாரர் மகாநாடு
தென்னிந்திய சமூகச் சீர்த்திருத்தக்காரர்கள் மகாநாடு இந்த மாதம் 26,27 தேதிகளில் திரு. ஈ. வெ. ராமசாமி நாயக்கர் தலைமையில் சென்னையில் கூடப்போகிறது. இம் மகாநாடானது தென்னிந்திய சமூகத் தொண்டர் சபையாரால் கூட்டப்படுவதாகும். தென் இந்தியாவில் இருந்து வரும் சமூக ஊழல்களை நினைக்கும் போது இம்மாதிரி மகாநாடுகள் தினமும் கூட்டப்பட வேண்டும் என்றும், சுயநலப்பிரியர்களாக மாத்திரம் இருந்து செத்தால் போதும் என்ற கொள்கைக்கு அடிமையாகாத மனிதர்களும் கடுகளவு உண்மையான ஜீவகாருண்யமுடையவர்களும் தங்கள் வாழ்நாட்களை இதற்காகவே செலவிட வேண்டியது மனிதத் தன்மையில் முக்கியமான கடனென்றும் சொல்லுவோம்.
நிற்க, சீர்திருத்த மகாநாடென்று, ஒன்றைக் கூட்டி சிலர் மாத்திரம் முன்னணியில் நின்று வெறும் வாய்ப்பந்தல் போட்டு வேஷத் தீர்மானங்கள் செய்து தங்கள் தங்கள் பெயரை விளம்பரஞ்செய்து தங்களை அன்னியர் பெரிய தேசாபிமானியென்றும் சமூக சீர்திருத்தக்காரன் என்று சொல்ல பெயர் பெற்றுக் கொண்டு காரியத்தில் வரும்போது மதத்தின் பேராலும் சாஸ்திரத்தின் பேராலும் சமயத்தின் பேராலும் மதத்தின் பேராலும் வருணாசிரமத்தின் பேராலும் சங்கராச்சாரிகளின் பேராலும் “மதத்தில் சர்க்கார் பிரவேசிக்கக் கூடாது” என்பதான திருட்டு தேசியத்தின் பேராலும் நாணயப் பொறுப்பில் லாமலும் போக்கிரித்தனமாகவும் கிளம்பி முட்டுக்கட்டை போடுவதும், வெளிக்கு யோக்கியர்கள் போல் காட்டிக் கொண்டு உள்ளுக்குப் பணச் செலவு முதலியவைகள் செய்து தடங்கல் செய்யச் செய்வதும், லஞ்சமும் கூலியும் கொடுத்து ஆட்களைச் சேர்த்து தேசீயத்தின் பேராலும் சமயத்தின் பேராலும் கூப்பாடு போடச் செய்வதுமான காரியங்கள் நடந்து வருகின்றன. இக்கொள்கைகளுடனேதான் இதுவரை அநேக சீர்திருத்த மகாநாடுகள் கூட்டப்பட்டிருக்கின்றன.
உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் தென்னிந்தியாவில் சீர்திருத்தத் தலைவர்களுக்குள் மிகவும் சிறந்து விளங்குபவர்களில் திருவாளர்கள் எ°.சீனிவாசய்யங்கார், சர்.சி.பி. ராமசாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி,. சி.ராஜகோபாலாச்சாரி, டாக்டர் எஸ்.எஸ். ராஜன் முதலியோர்களான இவர்கள் பெரிதும் சீர்திருத்த ஸ்தாபனத் தலைவர்களும் சீர்திருத்த மகாநாடுகளுக்குத் தலைமைவகித்தவர்களும் சீர்திருத்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளு பவர்களுமே ஆவார்கள். இவர்களின் சீர்திருத்தக் கொள்கைகள் எல்லாம் பெரிதும் எதையும் குடித்தால் சீர்திருத்தக்காரர்கள் ஆகிவிடலாம் என்பதும், எதையும் சாப்பிட்டால் சீர்திருத்தக்காரர் ஆகிவிடலாம் என்பதும், யாருடனும் சுகித்தால் சீர்திருத்தக்காரர் ஆகிவிடலாம் என்பதும் எங்கும் சாப்பிடுவதாக காட்டிக் கொண்டால் சீர்திருத்தக்காரர்களாகி விடலாம் என்பதுமான கொள் கைகள் என்றுதான் சொல்ல வேண்டுமேயொழிய மற்றபடி உண்மையான சீர்திருத்தக் கொள்கைகள் அமுலில் வருவதானால் தங்களால் கூடியவரை முட்டுக்கட்டை போடுகின்றவர்கள் என்றுதான் சொல்லி ஆக வேண்டும்.
உதாரணமாக சமூக சீர்திருத்த சங்கத் தலைவரும் சர். சங்கரன் நாயருடைய சிஷ்யர் என்று சொல்லிக் கொள்பவருமான திரு. சீனிவாசய்யங்கார் பொதுப் பணத்தில் நடந்ததும் பொது ஸ்தாபனமாக இருந்ததுமான குருகுல விவகார சம்பந்தமான விஷயத்தில் பார்ப்பனனேதான் சமையல் செய்தாக வேண்டும் என்று சொன்னதும், பார்ப்பனக் குழந்தை சாப்பிடுவதை பார்ப்பனரல்லாத குழந்தை பார்க்கக் கூடாது என்பதற்கு வக்காலத்து வாங்கிப் பேசினதும், பிரபலமும் பிரக்யாதியும் பெற்ற தேசீயவாதியும் சமூக சீர்திருத்தக்காரரும், சீமைசென்று வந்தவரும் மற்றும் பல சீர்திருத்தப் பெருமைகள் படைத்தவருமான திரு. சத்தியமூர்த்தி அய்யர் என்பவர் கோவிலில் சுவாமிகள் பேரால் விபசாரத்திற்கு சிறு பெண்களுக்கு முத்திரை போடக்கூடாது (பொட்டு கட்டக் கூடாது) என்பதையும் நகரத்தில் விபசாரிகளின் தொல்லையை ஒழிக்கவேண்டும்-என்பதையும் முக்கியமாகக் கொண்டதான சட்டங்களை எதிர்த்ததும், அவ்விழிதொழில் காரியங்களுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு எதிர்பிரசாரம் செய்ததுமே போதுமான சாட்சியாகும்.
மற்றும் தென்னாட்டு காந்தி என்றும் காந்தியடிகளின் சிஷ்யர்களுக்கு சட்டாம் பிள்ளை என்றும் திரு. காந்திக்கு அடுத்த வாரிசுதாரர் என்றும் சீர்திருத்தமே உருவாய் வந்தவர் என்றும் சொல்லப்பட்டு வந்த
வரான திரு. ராஜகோபாலாச்சாரியாரும் அவரது உற்ற நண்பரும் பின்பற்று வோருமான திரு. திருச்சி டாக்டர் ராஜனும் தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் – தேசீய சம்மந்தப்பட்ட வரையிலாவது மக்கள் பிறவியால் உயர்வு தாழ்வு பாராட்டக் கூடாது – என்கின்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் அக்கமிட்டியிலிருந்து ராஜீனாமாக் கொடுத்து விட்டதும், மற்றும் சில சமரச சன்மார்க்கிகளும் அவர்கள் போன்றவர்களும் இதற்கு விரோதமாய் ஓட்டுக் கொடுத்ததுமான காரியங்களே நாம் முன்குறிப்பிட்டவைகளுக்கு தக்க சான்றாகும். ஆனால் மேல்கண்டவர்கள் மேல்கண்ட விஷயத்தில் நடந்து கொண்ட மாதிரிகள் தங்கள் பகுத்தறிவுக்கும் மனச் சாக்ஷிக்கும் சரி என்று பட்டமுறையில் அந்தப்படி நடந்து கொண்டிருப்பார்களானால் நாம் குற்றம் சொல்ல இடமிருந்திருக்காது. ஆனால் தங்கள் தங்கள் சுயநலத்தையும் வகுப்பு நலத்தையும் முக்கியமாகக் கருதி நடந்தவர்கள் என்று சொல்லும்படியாகவே இவர்கள் நடந்து கொண்டார்கள் என்று தைரியமாய் சொல்லலாம்.
எனவே சமீபத்தில் சென்னையில் கூட்டப்போகும் சீர்திருத்தக் காரர்கள் மகாநாடும் சீர்திருத்த வேஷக்காரர் மகாநாடு போலல்லாமல் உண்மையான பலனைக் கொடுக்கும் உண்மையான மகாநாடாக இருக்க
வேண்டும் என்று ஆசைபடுவதுடன் தென் இந்தியாவின் நாலா பக்கங்
களிலுமுள்ள உண்மைத் தொண்டர்கள் தவறாமல் வந்து தாராளமாய் கலந்து வேண்டிய உதவி செய்யக்கோருகின்றோம். அம்மகாநாட்டை நடத்தும் பொறுமையை மேற்போட்டுக் கொண்டிருக்கும் திரு. ஆரியா, திரு. எம்.கே. ரெட்டியார் மற்றும் சில நண்பர்கள் ஆகியோர்கள் தாராள நோக்க முடையவர்களும் இவ்வேளையில் உள்ளும் புறமும் ஒத்தவர்கள் என்பதும் நாம் சொல்லித் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயமல்ல. மற்றும் இம்
மகாநாட்டுக்கு கொடியேற்றம் செய்யும் அம்மையார் திரு. தேவி கமலாக்ஷி பண்டலே அவர்கள் மிகவும் தாராள நோக்கமும் பரிசுத்த மனமும் கொண்டவர்கள். மகாநாட்டை திறந்து வைக்கும் சென்னை அரசாங்க மந்திரி கனம் திரு. எஸ். முத்தையா முதலியாரவர்களும் சமூக சீர்திருத்த விஷயத்
திலும் மக்கள் எல்லோருக்கும் சமசுதந்திரமும் சமசந்தர்ப்பமும் இருக்க
வேண்டும் என்கிற விஷயத்திலும் உண்மையான கருத்தும் உழைப்பும் கொண்டவர். மகாநாட்டுக்கு தலைமை வகிப்பவரைப் பற்றி நாம் ஒன்றும் இங்கு எழுத வரவில்லை. அன்றியும் இவ்விஷயத்தில் எழுதவேண்டிய அவசியமும் இல்லை. ஆதலால் இம்மகாநாடானது தென் இந்தியாவின் அவசியமான சீர்திருத்தத்திற்கு வழிகாட்டியாகவும் அஸ்திவாரம் போடுவ தாகவும் இருப்பதோடு நமது நாட்டின் நிலையையும் தேவையையும் அறிவ தற்கென்று அரசியலின் பேரால் சீமையிலிருந்து வரும் பார்லிமெண்ட் கமிட்டியாகிய சைமன் கமிஷனுக்கும் உண்மையான நிலையையும் தெளி வையும் தெரிவிக்கக் கூடியதான ஒரு அறிக்கையாகவும் ஆகலாம் என்றும் நினைக்கின்றோம். நம்நாட்டுசெல்வந்தர்களும் சீர்திருத்த அபிமானிகளும் இம்மகாநாடு விமரிசையாயும் செவ்வையாயும் நடைபெற தங்கள் தங்களால் கூடிய பொருளுதவியும் செய்ய வேண்டுமென ஞாபகப்படுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 18.11.1928