“விஸ்வநேசன்”
திருவாளர்கள் கா. சுப்பண்ண ஆச்சாரியார் அவர்களும், ந. நல்லய்ய ஆச்சாரியார் அவர்களும் ஈரோட்டிலிருந்து ‘விஸ்வநேசன்’ என்பதாக ஒரு புதிய வாராந்திர பத்திரிகை நடத்துவதாக ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிகின்றது. அது சீக்கிரத்தில் வெளியாகலாமென்றும் நினைக்கின்றோம். அப்பத்திரிகையானது ஏனைய சில சமூகப் பத்திரிகைகள் போலவும் அரசியல் புரட்டுப் பத்திரிகைகள் போலவும் வயிற்றுப் பிழைப்புப் பத்திரிகை கள் போலவும் ‘அரைத்த மாவை அரைத்துக் கொண்டே இருக்கின்றது’ என்பது போல் ஒவ்வொரு விஷயத்திலும் பார்ப்பனர்களையும் அவர்களது சமய பழக்க வழக்கங்களையும் பின்பற்றிக் கொண்டு கண்மூடித்தனமாய் நடப்பதாக இல்லாமல், சுதந்திரத்துடன் தனது சொந்த அறிவுக்கு மரியாதை கொடுத்து தற்காலம் நமது மக்களுக்கு வேண்டியதான வழிகளில் செல்லும் என்பதாக உறுதிகொண்டு அதை வரவேற்கின்றோம். அன்றியும் அதன் பத்திராதிபராக இருக்கப்போகும் திரு. கா. சுப்பண்ண ஆச்சாரியாரவர்கள் ஒத்துழையாமை காலத்தில் ஈரோட்டில் சர்க்காரின் அக்கிரம உத்திரவை மீறி சிறை சென்றவர். இப்போதும் தொழிலாளர் விஷயமாகவும் ஈரோட்டில் சர்க்காரால் போடப்பட்ட அநியாய உத்தரவை மீறினதாக கைது செய்யப் பட்டு, திரு. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் முதலியவர்களுடன் விசாரணையிலிருப் பவர். எனவே இப்பேர்ப்பட்ட அவரது ஆதிக்கத்தில் அப்பத்திரிகை நடைபெறும் வரையில் அது பெரிதும் சுயமரியாதைக் கொள்கைகளையே ஆதாரமாய்க் கொண்டு நடைபெறும் என்பதும் நமது உறுதி. ஆதலால் இத்தகைய பத்திரிகையை பொது மக்கள் ஆதரிக்க வேண்டுகின்றோம்.
குடி அரசு – மதிப்புரை – 02.09.1928