பார்ப்பனர்களும் சர்க்காரும் பங்காளிகளே யாவார்கள்

டில்லியில் நடந்து கொண்டிருக்கும் இந்திய சட்டசபைக் கூட்டத்தில் விவாதத்திற்கு வந்த “சாரதா பில்” என்னும் கல்யாண வயது நிர்ணய மசோதா நிறைவேறாமல் இருப்பதற்கு சர்க்கார் சூழ்ச்சி செய்தது மிகவும் அருவருக்கத் தக்கதும் இழி தன்மை பொருந்தியதுமான செய்கையாகும். சீர்திருத்த சம்மந்தமாக ஏதாவது ஒரு மசோதா கொண்டு வந்து சட்டசபைகளில் நிறைவேற்றப்படவேண்டுமானால் சாதாரணமாகவே அதில் அநேக விதமான கஷ்டங்களுண்டு. சர்க்காராவது அல்லது பார்ப்பனர்களாவது ஏதாவது ஒரு சிறு விஷமம் செய்ய ஆரம்பித்து விட்டாலோ அதன் கஷ்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

இந்த நிலைமையில் இந்துக்களின் கல்யாண நிர்ணய வயதைப் பற்றி சட்டம் கொண்டு வருவதற்கு எத்தனை காலமாக எத்தனை பேர்கள் கஷ்டப் பட்டு வந்திருக்கிறார்கள் என்பது சீர்திருத்த உலகில் இருப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. திரு. சாரதா அவர்கள் இந்த பில் கொண்டு வந்து அதற்கு செய்யவேண்டிய சடங்குகள் எல்லாம் செய்து அதற்காக எவ்வளவோ பணம் செலவும் செய்து கடைசியாக அது நிறைவேற்றப்படத் தக்க உறுதியான நிலையில் இருக்கும்போது அதை பழைய குப்பையில் போடுவதற்கு சர்க்கார் உடைந்தையாய் இருந்தார்களானால், சர்க்காரின் நாணயத்தையோ யோக்கியப் பொறுப்பையோ நாம் எப்படி மதிக்க முடியும்? இந்த சர்க்கார் இந்த நாட்டில் அரை வினாடியாவது இருக்க வேண்டுமென்று நாம் நினைத்திருந்தால் அது இந்த நாட்டில் உள்ள பார்ப்பனீயக் கொடு மையை அடியோடு ஒழிப்பதற்காகத்தான் ஆசைப்பட்டிருப்போமேயொழிய மற்றபடி சர்க்காரில் நடுநிலைமை தவறாத நீதியையோ அல்லது அவர் களுடைய பொதுநல உணர்ச்சியையோ மதித்தல்லவென்று திடமாய்ச் சொல்லுவோம்.

எனவே இந்த யோக்கியதையுள்ள அரசாங்கம் பார்ப்பனீயக் கொடு மைக்கு உதவி புரிவதாயிருந்தால் அதனிடத்தில் எப்படித்தான் மக்களுக்கு நல்லெண்ணம் இருக்க முடியும்? தவிர சட்டசபையில் ‘கல்யாண மசோதா’ விஷயத்தில் சர்க்கார் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டதற்கு காரணம் சம்மத வயதுக் கமிட்டி அறிக்கை வந்த பிறகு யோசிக்கலாம் என்று கருதியதுதானாம்.

இது யோக்கியமான சமாதானமல்ல வென்றே சொல்லுவோம். கல்யாண வயது நிர்ணயத்திற்கும் சம்மத வயது நிர்ணயத்திற்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது. சம்மத வயது நிர்ணயம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் எத்தனையாவது வயதில் கலவி செய்து கொள்ளலாம் என்பது; கல்யாண வயது என்பது ஒரு ஆணும் பெண்ணும் எத்தனையாவது வயதில் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்பது. கலவி என்பது ஒரு உணர்ச்சி, கல்யாணம் என்பது ஒரு ஒப்பந்தம். பார்ப்பனர்கள் சொல்லுவது போல் கலவி உணர்ச்சி பெண்களுக்கு 12-வயதிலும் ஆண்களுக்கு 14-வயதிலும் உண்டாகலாம். அவர்கள் தங்கள் தங்கள் உணர்ச்சிகளை தனித் தனியாகவே கூட தீர்த்துக் கொள்ளலாம். ஆகவே அதைத் தடுக்க சட்டம் செய்வது அவ்வளவு சாதாரணமான காரியமல்ல. எனவே அதோடு கூட கல்யாண வயது நிர்ணயச் சட்டத்தை யோசிக்கலாமென்று சொல்லுவதில் ஏதாவது பொருள் இருக்க முடியுமா?

கல்யாணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதுவும் தற்கால நிலையில், கல்யாணம் என்பது ஏற்பட்ட நாள் முதல் அவரவர்கள் சாகும்வரை கொண்டு செலுத்தித் தீர வேண்டியதான ஒப்பந்தம். அத்தகைய ஒப்பந்த காரியத்தைச் செய்து கொள்ள மக்களுக்கு எந்த வயதில் உரிமை உண்டு என்பதை யோசிப்பதற்கு ஏன் கால தாமதம் செய்ய வேண்டும்? ஒரு மனிதன் தன் சொத்தை அடையவும், ஒரு வோட்டு கொடுக்கவும்,ஒரு பதவியை ஏற்கவும் மற்றும் பல சாதாரண காரியங்களுக்கெல்லாம் வயது நிர்ணயமிருக்கும்போது ஆயுள் வரை கட்டுப்பட வேண்டிய நிபந்தனை கொண்ட ஒரு ஒப்பந்தத்திற்கு வயது நிர்ணயம் இதுவரை செய்யாதிருந்ததே மனித வர்க்கத்தின் முட்டாள் தனத்தை அல்லது அயோக்கியதனத்தை காட்டுகின்றது என்று தான் சொல்லவேண்டும். இவ்விஷயங்களில் பார்ப்பனர்கள் என்றைக்குமே எதிரிகளாய் இருக்கின்றார்கள் என்பது வெளிப்படை. அதே காரியத்திற்கு அரசாங்கத்தார் துணை இருப்பது என்பது பார்ப்பனர்களுக்கு இவர்கள் பங்காளிகள் என்பதையே காட்டுகின்றது. எப்படியெனில் பார்ப்பனர்கள் மதத்தின் பேரால் நிரந்தரமாய் வாழ நினைத்துக் கொண்டு இவ்வித அக்கிரமங்கள் செய்கின்றார்கள் என்றால் அரசாங்கத்தார் அரசாக்ஷியின் பேரால் நிரந்தரமாய் வாழ நினைத்துக் கொண்டு இவ்வித அக்கிரமங்களைச் செய்கின்றார்கள் என்பதுதான்.

குடி அரசு – கட்டுரை – 10.02.1929

You may also like...

Leave a Reply