திரு. கண்ணப்பர்

“திராவிடன்” பத்திராதிபர் திரு. கண்ணப்பர் அவர்கள் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு அனுதாபம் காட்டியது பற்றி கைது செய்யப்பட்ட விபரம் முன்னமேயே தெரிவித்திருக்கின்றோம். திரு. கண்ணப்பர், பார்ப்பனரல்லாதார் மக்களின் நலத்திற்கு என்று இத்தமிழ்நாட்டில் திருவாளர் நாயர் பெருமானும், தியாகராய வள்ளலும் தோற்றுவித்த “தென் இந்தியர் நல உரிமைச் சங்கம்” என்னும் பார்ப்பனரல்லாதார் சங்கம் துவக்கப்பட்டது முதல் சுயநலம் கருதாது தொண்டாற்றி வருபவர்.

அச்சங்கத்தில் உழைத்து வந்த மக்களில் திரு. கண்ணப்பர் போன்று தன்னலம் கருதாமலும் உழைத்ததற்காக கூலி கேட்காமலும் உழைத்தவர்களைக் காண்பது மிகவும் கஷ்டமான காரியம் என்பது நாம் சொல்லாமலே விளங்கும். திரு. கண்ணப்பர் வெலம நாயுடு வகுப்பைச் சேர்ந்தவராயினும் அவருக்கு ஜாதிமத பேதமோ மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு என்கின்ற உணர்ச்சியோ ஒரு சிறிதுமில்லாத சமரசவாதியாவார். அவருக்கு இன்றைய வயது முப்பத்துஒன்றேயாகும். உறுதியும் தைரியமும் பெற்ற வீரர். தமிழிலும், ஆங்கிலத்திலும் பயிற்சியுள்ளவர். அவரது 22, 23 வது வயதிலே பிரசாரத்தில் புகுந்தவர். ஒத்துழையா இயக்கம் என்பதாக நமது நாட்டில் 7, 8 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கோடி ரூபாயை மூலதனமாகக் கொண்டு மேளதாளம், ஊர்வலம், பூமாலை, ஜே கோஷம் முதலியவைகளோடு பார்ப்பனரும் பார்ப்பனரல்லாத சிலரும் பாமர மக்களிடையில் பெரிதும் செல்வாக்குப் பெற்று பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய் பிரசாரம் செய்து கொண்டிருக்கையில் திரு. கண்ணப்பர் கல்லடியும் மண்ணடியும் பெற்றுக் கொண்டதுடன் காலிகளின் உபத்திரவங்களையும் சமாளித்துக் கொண்டு வெகு தீரத்துடன் பார்ப்பனரல்லாதார் நலத்தின் பொருட்டு காங்கிரஸ் புரட்டை யும் பார்ப்பனப் புரட்டையும் அவர்களது கூலிகளின் யோக்கியதையையும் வெளியாக்கி வெற்றிமாலை சூடிக்கொண்டு வந்தவர். சுமார் 4, 5 வருஷ காலமாக “திராவிடன்” பத்திரிகைக்கு யாதொரு ஊதியமும் இல்லாமல் தனது வாழ்க்கைக்கு மாத்திரம் வேண்டிய ஒரு சிறு அலவுன்சைப் பெற்றுக் கொண்டு இரவும் பகலும் இடைவிடாமல் உழைத்து வந்தவர்.

திரு. கண்ணப்பர் “திராவிடன்”பத்திரிகை ஆசிரியத் தன்மையை ஏற்றுக் கொள்ளும்போது அப்பத்திரிகை ஆயிரம் பிரதிகளுக்கு கீழாகவே வெளியாகிக் கொண்டிருந்ததோடு அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு பிரதிகளைப் பிரித்துக் கூடப் பார்ப்பவர்கள் இல்லாமல் குப்பைக்கு போய்க் கொண்டேயிருந்தது என்று சொல்வது ஒரு சிறிதும் மிகையாகாது. அப்பேர்ப்பட்ட “திராவிடன்” இன்று தினம் 6000 பிரதி வெளியாவதும் அதுவும் ஒவ்வொரு பத்திரிகையை 5, 10 பேர்கள் கூடி வாசிப்பதும் “திராவிடன்” பத்திரிகை படிக்குமிடங்களில் தெருக்கூத்துபோல் ஜனங்கள் கூடிக் கேட்பதும் ஆகிய இன்றைய நிலைக்கு திரு. கண்ணப்பர் அவர்களின் அஞ்சா நெஞ்சமும், பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு உயிரை ஒப்படைத்திருக்கும் தியாக உணர்வுமே பெரிதும் காரணமானது. அதுமாத்திரமல்லாமல் அவர் டைரக்டராகவும் முக்கிய மெம்பராகவும் இருக்கும் ஜஸ்டிஸ் கக்ஷி தலைவர்களின் அபிப்பிராய பேதங்களுக்கும் ஒரு சிறிதும் பயப்படாமல் சுயமரியாதை இயக்கக் கொள்கையையே தமது கொள்கையாகவும் தமது “திராவிடன்” பத்திரிகையின் கொள்கையாகவும் கொண்டு அரசாங்கத்
திற்கும் சட்டத்திற்கும் சமய சமூக கட்டுப்பாட்டிற்கும் தனது கக்ஷிக்கும் தனது மனச்சாக்ஷியையோ கொள்கையையோ ஒரு சிறிதும் விட்டுக் கொடுக்காது மனிதத்தன்மையோடு போர் முனையில் நின்று கொண்டிருக்கின்றவர். இப்பேர்ப்பட்ட ஒரு சுயமரியாதை வீரர் இன்றையதினம் பார்ப்பனரல்லாத ஏழைத்தொழிலாள சகோதரர்களின் நெருக்கடியான சமயத்தில் தனது கடமையைச் செலுத்தியதன் மூலம் சிறைவாசம் செய்ய ஏற்பட்டது அவரது பாக்கியமேயாகும். அவர் அடைந்த இவ்வொப்பற்ற பாக்கியத்திற்காக தமிழ் மக்கள் அவரைப் பாராட்டாமலிருக்க முடியாது. அவரை 5 நாள் சிறையில் அடைத்து வைத்திருந்து ஜாமீனில் விட்டுச் சென்ற 6 தேதி அவர் மீதுள்ள இன்டியன் பினல் கோட் 143, 188(2) பிரிவுப்படி கேஸ் விசாரணை நடந்தது. விசாரணையில் நடந்த பல ஊழல்களாலும் அதிகாரிகளின் மனோபாவத் தாலும் பார்ப்பன ஆதிக்கமே இக்கேசுக்கு ஆதாரம் என அவர் உணர்ந்த தாலும் இதை வேறு கோர்ட்டுக்கு மாற்ற விண்ணப்பம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இம்மாதம் 22 தேதி வரை வாய்தா கொடுக்கப்பட்டி ருக்கிறது.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 12.08.1928

You may also like...

Leave a Reply